அன்னை குருமாய்  சாந்தம்மா
சாந்திப்பிரியா

1940 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதியன்று திரு ரங்கசாமி ஐயங்கார் மற்றும் கனகாம்பாள் என்ற தம்பதியினருக்குப் பிறந்தவரே குருமாயி சாந்தம்மா என இன்று போற்றி வணங்கப்படும் அன்றைய செல்வி சௌந்திரம் அவர்கள். சேலத்தில் அவருடைய தாயார் வழி பாட்டனார் என்பவர் சௌந்தரவல்லி என்ற தேவி ஆலயத்தின் நிர்வாகியாக இருந்தவர். அவருடன் அடிக்கடி சௌந்திரத்தின் தாயார் பல ஆலயங்களுக்கும் செல்வது உண்டு. அப்படி சென்ற பொழுது ஒரு ஆலயத்தில் பிறந்தவரே செல்வி சௌந்திரம். திரு ரங்கசாமி ஐயங்கார் சீரடி சாயி பாபாவின் பக்தர். அவருக்கு சாயி பாபா தன்னுடைய ‘குர்மி’ எனப்படும் மேலாடை ஒன்றையும். பாதுகைகளையும் கொடுத்து இருந்தார். அவற்றை திரு ரங்கசாமி ஐயங்கார் தன்னுடைய மகனிடம் தந்து வைத்து இருந்தார் . திரு ரங்கசாமி ஐயங்கார் நல்ல செல்வம் படைத்தவராக இருந்தாலும் தானம், நன்கொடை என தமக்கு வந்தவற்றைக் மற்றவருக்கு கொடுத்து வந்ததினால் சௌந்திரம் பிறந்த பொழுது அவருடைய வசதி குறைந்து போயிற்று. போதாத வேளைக்கு ஒரு கட்டத்தில் அவர் தம்முடைய வேலையையும் இழக்க நேரிட்டது. அவருடைய பெற்றோர்கள் வைஷ்ணவத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும் செல்வி சௌந்திரம் மட்டும் சிவனிடம் ஈடுபாடு கொண்டு இருந்தார். அதை அவருடைய தாயார் விரும்பவில்லை.
அவர்கள் வீட்டில் அனுதினமும் நல்ல நறுமணத்துடன் கூடிய வாசைன வருவது உண்டு. அதை அவருடைய தந்தை சாயி பாபா என்பார். ஒருமுறை அவளுடைய தந்தை திருவண்ணாமலைக்குச் சென்று ரமண மகரிஷியை சந்தித்த பொழுது அவருடன் சென்றிருந்த செல்வி சௌந்தரத்திற்கு ரமண மகரிஷி சாக்லெட் கொடுத்தாராம். ரமண மகரிஷி அதுவரை தம்மை தரிசிக்க வந்த எந்த ஒருவருக்குமே அப்படி அவர் எதுவும் கொடுக்காததினால் அந்த செயல் ஒரு அதிசயமான நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.

செல்வி சௌந்திரம் பத்து வயதான பொழுது பள்ளியில் சேர்ந்தார். கிருஸ்துவக் பள்ளியில் படித்தாலும் மிகவும் உயர்ந்த கொள்கைகளைக் கடை பிடித்து வந்த செல்வி பள்ளி ஆசிரியர்களிடம் நல்ல பெயர் பெற்று இருந்தார். அவர் படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார். எவருக்கும் தீங்கு வருவதை விரும்பியது இல்லை. யாராவது தவறு செய்து விட்டால் அந்த தவறை தானே செய்ததாக கூறி தன் மீது பழியைப் போட்டுக் கொண்டு அவர்களை காப்பாற்றியவர். அவளுடைய தந்தையிடம் இருந்தே இப்படிப்பட்ட பல நற்குணங்களை செல்வி சௌந்திரம் கற்றறிந்து அவற்றை தம் வாழ்விலும் கடை பிடித்து வந்தாராம்.

செல்வி சௌந்திரத்திற்கு 20 வயதான பொழுது திருமணம் ஆகி விட தமது கணவருடன் பெங்களூரில் இருந்து கிளம்பி டெல்லி சென்று விட்டார். அங்கு சுமார் 35 வருட காலம் தமது திருமணமான வாழ்க்கையை கழித்தார். அவர் டெல்லிக்குச் சென்ற பொழுது அவருடைய தந்தையிடம் பாபா அறிவுறுத்தியிருந்தபடி அவர் வைத்து இருந்த பாபாவின் நினைவுச் சின்னங்ளை தனது மகளான சௌந்திரத்திடம் கொடுத்து அனுப்பினார். ஆனால் சௌந்திரம் அதை விரும்பவில்லை. சாயி பாபா மீது நம்பிக்கையே வரவில்லை. உண்மையைக் கூறினால் சாயிபாபா மீது அவருக்கு வெறுப்பே இருந்தது. டெல்லிக்குச் சென்றவர் பாபாவின் மீது இருந்த வெறுப்பினால் ஒரு நாள் தமது தந்தை தம்மிடம் கொடுத்திருந்த பாபாவின் நினைவுச் சின்னங்களை அழிக்க நினைத்த பொழுது அவருடைய கழுத்தை எவரோ இறுக்கப் பிடித்திருந்தது போல உணர்ந்ததினால் அவற்றை அப்படியே போட்டு விட்டு பயந்து ஓடி விட்டாராம்.

 ஆலயத்தின் ஒரு சன்னதி 

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சில காலம் கழிந்தது . திருமதி சௌந்திரம் தமது வீட்டில் பஜனை செய்வது உண்டு. அப்பொழுது பலரும் அவர் வீட்டிற்கு வருவது உண்டு. அவருடைய குரலும் இனிமையாகவே இருந்தது. 1978 ஆம் ஆண்டில் ஒரு நாள் அவருடைய கனவில் சாயிபாபா தோன்றி ‘நீ இன்னமும் என்னை நம்பவில்லை சீரடிக்கு வந்து என்னை தரிசித்து விட்டுப் போ’ என்றார். அவர் அதை அவர் பொருட்படுத்தவில்லை என்றாலும் அந்த கனவு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
அந்த நிலையில் ஒரு நாள் அவர் தமது வீட்டில் தனியாக அமர்ந்திருந்தபடி சாலையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது சாலையின் ஒருபுறத்தில் குரங்கை வைத்துக் கொண்டு ஒருவன் வேடிக்கை காட்டிக் கொண்டு இருந்தான். அதை பார்த்துக் கொண்டு இருந்த அவருடைய வீட்டில் அவர் அழைக்காமலேயே ஒரு வயதானவர் வந்து தனக்கு உணவு ஏதும் தர முடியுமா எனக் கேட்டார். ஆனால் தருவதற்கு வீட்டில் எதுவும் இல்லை என சௌந்தரம் கூறவும் குளிர் சாதனப் பெட்டியில இனிப்பு உணவு உள்ளது, அதை தருவாயா எனக் கேட்க குளிர் சாதனப் பெட்டியில இனிப்பு உணவு உள்ளது அவருக்கு எப்படித் தெரியும் என வியந்தாள் ? அவர் விடவில்லை அதை வாங்கி உண்ட பின் தனது வாயில் தண்ணீர் ஊற்றுமாறு அவளிடம் வேண்டிக் கொள்ள மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல அதையும் அவர் செய்தார். தண்ணீரை அருந்தியவர். அவளிடம் ஒரு கவரை தந்து விட்டு வீட்டில் ஜாக்கிரதையாக இருக்குமாறு கூறி விட்டுச் சென்று விட்டார்.

 ஆலயத்தின் ஒரு சன்னதி

அவர் எங்கு சென்று விட்டார் என்பது அவளுக்குத் தெரியவில்லை. அவர் சென்றதும் பயந்து போனவள் கதவைப் பூட்டிக் கொண்டு பூஜை அறைக்குச் சென்று கண்களை மூடிக் கொண்டு அமர்ந்து விட்டாள். வேலைக்காரி வந்து கதவைத் தட்டினாள். குருமாயி ஒருவிதமான மயக்கத்தில் இருந்ததினால் கதவை திறக்க முடியவில்லை. வெகு நேரம் ஆகியும் கதவு திறக்கபடாமல் இருந்ததினால் வேலைக்காரி பயந்து போய் மற்றவர் உதவியுடன் அவள் விட்டுக் கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் குருமா மயக்கத்தில் இருந்ததைக் கண்டார்கள். அவள் முகத்தில் நீர் தெளித்து அவளை தன்னிலைக்குக் கொண்டு வந்தனர். நடந்த அனைத்தையும் குருமா கூற அவள் கூறியதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்து அந்த மனிதர் வைத்து விட்டுச் சென்ற கவரைத் தேடி எடுத்தனர். அதில் முன்னூறு ரூபாய் பணம் இருந்தது. அன்று இரவு பாபா மீண்டும் அவள் கனவில் தோன்றி அவளுக்கு சீரடி பயணத்திற்குத் தேவையான பணத்தை தாம் வைத்துள்ளதாகக் கூற அவள் அது குறித்து மற்றவர்களிடம் விவாதித்தப் பின் மனம் மாறி சீரடிக்குப் பயணம் செய்தார். அங்கு காலை ஆரத்திக்குச் சென்றவர் தம் தந்தையின் உருவை பாபாவின் சிலையில் கண்டு பூரித்து போனாள். அது போல பாபாவைப் போலவே தோற்றம் தந்த ஹோமிபாபா என்பவரையும் ஆரத்தி சமயத்தில் சந்திக்க நேரிட்டது. அங்கு இருந்த அவர் அவளை ஒரு பாடலைப் பாடுமாறுக் கூற அவளும் ஒரு பாடலைப் பாடிய பின் அவர் நெஞ்சின் மீதே மயங்கி விழுந்து விட்டார். அப்போது அவருடைய நெஞ்சில் இருந்து சாயிபாபா வெளி வந்ததைப் போல காட்சி வந்தது. அது மட்டும் அல்ல ஹோமிபாபாவின் நெஞ்சில் இருந்து வெளிவந்த சாயி பாபா அவளுக்கு எதோ மந்திர உபதேசம் செய்ததைக் கேட்டாள். அதன் பின் ஹோமி பாபாவுடன் அந்த அன்னைக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட அன்று முதல் குருமா அவருடைய சிஷ்யையாகவே மாறினார்.

அதன் பின் பல முறை குரு மாவை ஹோமி பாபா சீரடியில் இருந்த தன் ஆசிரமத்திற்கு அழைத்து அவருக்கு சில கட்டளைகளைத் தந்தார். அவரை தரிசனம் செய்து வந்தவர் அவர் கூறியபடி ஒரு முறை சோளத்தை மட்டும் சாப்பிட்டவாறு ஒரு வருடம் இருக்க வேண்டி இருந்தது. மற்றொரு முறை ஒரு வருடம் மாதுளம்பழ ஜுஸ் மட்டும் அருந்தியும், கங்கை நதிக் கரையில் சென்று மூன்று நாட்கள் கழுத்தளவு கங்கை நதியில் மூழ்கி இருந்தபடித் தவம் செய்தபடியும், ரிஷிகேசத்தில் ஒரு வாரம் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி முப்பது நிமிடம் வரை கடும் குளிரில் தொடர்ந்து தவம் செய்தவாறும் இருந்தார். இப்படியாக அவர் பல விதமான கடுமையான விரதத்தை அனுசரித்து தபம் இருக்க வேண்டி இருந்தது. மற்றொரு முறை முப்பது நாட்கள் பூமியில் இருந்து பிடுங்கி எடுத்த புல்லைப் பிழிந்து அதில் இருந்து எடுத்த சாறை குடித்தும், 45 நாட்கள் காலையில் கோதுமைப் புல்லில் இருந்து பிழிந்தெடுத்த சாறு, மதியம் மோர், இரவு எலுமிச்சை பழ ஜுஸ் என குறைந்த அளவு உணவையே அருந்திக் கொண்டு கடுமையான தவம் இருந்தார். அவர் கங்கையில் கழுத்தளவு மூழ்கி தவம் இருந்த பொழுது கங்கை நதிக்குள் இருந்து ஒரு வினாயகர் சிலை அவர் மடியில் வந்து விழுந்ததாம்.

இப்படி எல்லாம் கடினமான தபத்தை அனுஷ்டித்தபடி இருந்தவர் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் எங்கோ சென்று விட்ட தனது தாயாரை தேடிக் கொண்டு இருந்தாள். 1972 ஆம் ஆண்டு தொலைந்து போன அவருடையத் தாயாரைக் கண்டு பிடித்தார். அவரை தன்னுடன் அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்தார். உடல் நலம் இன்றி இருந்த தாயாருக்கு தானே பணி விடை செய்து தன் அன்பைக் காட்டினார். இறுதியில் அவருடைய தாயார் மரணம் அடைந்த பொழுது இறுதிக் கடன்களை செய்ய எந்த உறவினரும் முன்வராத நிலையில் தானே அவருடைய உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று உடலை தகனம் செய்து புரட்சி செய்தார்.

 ஆலயத்தின் ஒரு சன்னதி 

அதற்கு இடையே சாயிபாபாவின் அருளினால் அவருக்கு பல அறிய சக்திகள் கிடைத்தன . அப்படி அவர் பெற்றிருந்த சக்தியினால் அவரிடம் வந்த பக்தர்களின் துயரை பல வகைகளிலும் துடைத்தார். பலர் அற்புத அனுபவங்களை அடைந்தனர்.அவர் பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். பக்தர்கள் அவருடைய அருளினால் பல நன்மைகளை அடைந்துள்ளனர். பலருடைய நோய்களும் பிரச்சனைகளும் பனி போல விலகி உள்ளன ஒரு முறை உடல் நலம் இன்றி மரணம் அடைந்த தனது பக்தரின் நோயின் கடுமையை தானே தன் உடலில் எடுத்துக் கொண்டு அந்த பக்தரை அமைதியாக மரணம் அடைய வைத்தார். அவரால் நினைத்தபோது தன் உடலில் இருந்த ஆத்மாவுடன் வெளியேறி சுற்றித் திரிய முடிந்தது. மற்றொரு முறை பக்தர் ஒருவரின் புற்று நோயை தாம் எடுத்துக் கொண்டார். இன்னொருவருக்கு தனது கண் ஒளிளைத் தந்து பார்வைப் பெற வைத்தார். இப்படியாகப் பல அற்புதங்களை செய்து கொண்டு இருந்தவர் 1988 ஆம் ஆண்டு அவருடைய கணவர் அரசு ஊதியத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் பெங்களுர் நகரின் அருகில் இருந்த ஹோசூர் என்ற இடத்திற்குச் சென்று அங்கு பாபாவின் ஆசிரமம் ஒன்றை அமைத்தார். 1996 ஆம் அண்டு சன்யாச தீட்சைப் பெற்றவர் பக்தர்களுக்கு தரிசனம் தர தமக்கு ஒரு இல்லம் வேண்டும் என நினைத்து அந்த இடத்தை தேர்வு செய்தார். 1988 ஆம் ஆண்டு அவர் வாங்கி இருந்த நிலத்தில் ஒரு பெரிய பாம்புப் புற்று இருந்தது. ஆகவே பயத்தினால் கட்டிடம் கட்டுவதற்கு தேவையான அந்த நிலத்தை தோண்ட எவரும் முன் வரவில்லை. ஆகவே குருமா அங்கு சென்று அந்த நிலத்தின் மத்தியில் அமர்ந்து கொண்டு தபம் செய்ய மறு நாள் பாம்புப் புற்றே காணாமல் போய் விட்டது.
குருமா ஹோசூரில் கட்டி உள்ள சாயி தர்ஷன் என்கின்ற கருணை இல்லம் 1996 ஆம் ஆண்டு துவங்கியது. அன்பையே அனைவருக்கும் தரவேண்டும் என்ற சாயி பாபாவின் தத்துவத்தை பரப்பும் விதத்தில் அது அமைக்கப்பட்டு உள்ளது. துயரம் என்பது என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர் குரு மாய் எனப்படும் சாந்தம்மா. அதனால்தான் ஏழைகளுக்கும், பெண்களுக்கும், வயதானோர்களுக்கும் ஆதரவு அளிக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்து வருகின்றார்.

 ஆலயத்தின் ஒரு சன்னதி 

டெல்லியில் இருந்த பொழுது அவர் தன்னிடம் வைத்து இருந்த பாபாவின் சிறிய சிலையை வீட்டில் புதைத்து வைத்து இருந்தார். அங்கிருந்து ஹோசூருக்கு வந்தபோது அந்த சாயி சிலையை உடைக்காமல் எப்படி எடுத்து வந்து அதை சாயி ஆலயத்தில் வைப்பது என்ற பிரச்சனை வந்த பொழுது அன்று இரவு அவருடைய வீடு சிறிது குலுங்கியது. சிலையை அடிப்பாகம் தாமாகவே வெளியில் வந்து விட அதை பூமியில் இருந்து எளிதாக எடுக்க முடிந்தது. 1988 ஆம் ஆண்டு பெங்களூரில் அவர் சாயி கிருபா என்ற ஆலயத்தையும், அதைப் போலவே 1999 ஆம் ஆண்டு சென்னையில் சீரடி சாயி பாபாவிற்கு ஒரு ஆலயமும் அமைத்து உள்ளார். 2001 ஆம் ஆண்டு சீரடியில் உள்ளது போன்றே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு அறை எனப்படும் துனி துவக்கப்பட்டது. அன்றைய தினம் பௌர்ணமி ஆகும்.

அப்போது பலரும் அங்கு கூடி இருந்தனர். குரு மாய் சாந்தம்மா அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்த பொழுது கூடத்தின் ஒரு மூலையில் தாமிரத் தட்டின் மீது வைக்கப்பட்டு இருந்த சில விறகுக் கட்டைகளில் தாமாக தீ மூண்டது. அதுவே சாயிநாதர் தனக்கு தந்த சமிக்கை என்பதை உணர்ந்த குருமா துனியை அங்கு துவக்கினார். சென்னையில் குரு மாயி சாந்தம்மா கட்டி உள்ள ஆசிரமம் அமைதியானது. இயற்கை அழகு கொண்ட சூழ்நிலையில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஆஸ்ரமத்தின் முகவரி
Sri Sai Darshan Trust
594, Sai Nagar
Kannikapuram Village
Alamadhi Post
Off Redhills – Thiruvallur High Road
Chennai – 600052

ஆஸ்ரமத்தின் தொலைபேசி எண்
91 44 26320237
91 44 26322237
Contact E Mail Id for all queries and comments:
srisaidarshan@yahoo.com

ஆலய   நிகழ்ச்சிகள்
5 :15 AM – 5 :45 AM – காக்கட் ஆர்த்தி
12:00 noon-12:30 PM- மத்யான்  ஆர்த்தி
6:00 PM – 6:30 PM -தூப் ஆர்த்தி
8:45 PM – 9:15 PM – சேஜ் ஆர்த்தி

ஆலய நேரம்
Morning – 5:15 AM – 12:30 PM
Evening – 5:00 PM – 9:15 PM