ஆலமரத்து அடியில் கேட்ட சக்தி தேவியின் கதைகள் -26

விந்த்யாவாசினி தேவி
சாந்திப்பிரியா
உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பெரிய நகரமே மிர்ஜாபூர் என்பது. அது பார்லிமென்ட் தொகுதியாகும். அங்கிருந்து ஏழு கிலோ தொலைவில் உள்ளது விந்தியாச்சல் என்ற இடம். அந்த இடத்திற்கு வாரணாசியில் இருந்து போகலாம். விந்த்யாச்சல் ரயில் நிலையம் கூட உள்ளது. அந்த விந்தியாச்சல் நகரின் உள்ளே ஓடும் கங்கை நதியின் கரை அருகே உள்ளதே விந்தாவாசினி தேவி என்ற சக்தி தேவி ஆலயம் . அந்த தேவி துர்கையின் அவதாரமாம். தக்ஷ யாகத்தில் தற்கொலை செய்து கொண்ட பார்வதியின் உடலை சிவபெருமானின் கோபத்தை அடக்க விஷ்ணு துண்டு துண்டுகளாக்கியபோது அதில் இருந்து இடது கட்டைவிரல் விழுந்த அந்த இடத்தில் ஒரு சக்தி ஆலயம் எழுந்தது.

விந்தியாவாசினி தேவி
தேவி மகிஷாசுரமர்தினி மகிஷாசுரனை வதம் செய்தப் பின் அங்கு வந்துதான் ஓய்வு எடுத்துக் கொண்டாளாம். அது மட்டும் அல்லாமல் அங்கு இருந்தபோது அந்த இடங்களில் தொல்லை தந்து கொண்டு இருந்த பல அசுரர்களையும் அவள் வதம் செய்தாளாம். ஆகவே அந்த இடத்தில் வந்து அமர்ந்த அவளுக்கு விந்த்யாவாசினி தேவி எனப் பெயர் ஏற்பட்டது. அது உலகில் உள்ள நூற்றி எட்டு சக்தி பீடங்களில் ஒன்று என்றாலும், பார்வதியும் மகிஷாசுரமர்தினியும் ஒருவரே என்றாலும் இருவரும் வேறு வேறு அவதாரங்களில் உள்ளவர்கள் என்பதினால் சிங்கத்தின் மெது அமர்ந்துள்ளபடி காட்சி தரும் அந்த தேவியின் ஆலயம் மகிஷாசுரமர்தினிக்குப் பெருமை தரும் வகையில் விந்த்யாவாசினி தேவி ஆலயம் என ஆயிற்று . அவளை கஜானா தேவி எனவும் அழைகின்றனர். ஆலயத்திற்கு நவராத்தரி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பூஜிக்கின்றனர்.