ஸ்ரீமத் பஞ்சதசாக்ஷரி
சாந்திபிரியா

இது ஒரு புராணக் கதையில் வரும் செய்தி . பராசக்தியை ‘பஞ்சதசாஷரி ‘ என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அவளை பூஜிப்பதின் மூலம் உண்டாகும் நன்மையைப் பற்றி எடுத்துரைக்கும் கதை.
முன்னொரு காலத்தில் தேவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டு இருந்த திரிபுராசுரனை சிவபெருமான் வதம் செய்த பின்னரும் அவர் கோபமாகவே இருந்தார். அந்த அசுரனை வதம் செய்ய ஏற்படுத்திக் கொண்ட கோபம் மறையவே இல்லை. அது நீடித்தால் பரசுராமர் ஷத்ரியர்களை அழிக்கக் கிளம்பியது போல தமது இனத்தையே சிவபெருமான் அழித்து விடுவார் எனக் கலங்கினார்கள் அசுரர்களிலும் இருந்த பல நல்லவர்கள். ஆகவே அந்த அசுரனின் சந்ததியினர் விஷ்ணுவிடம் சென்று சிவபெருமானின் கோபம் தணிய என்ன செய்யலாம் எனக் கேட்டனர். அவருக்கும் ஒன்றும் வழி தெரியாமல் நாரதரையே அழைத்து அதற்கு ஒரு உபாயம் கூறுமாறு கேட்டார். நாரதர் யோசனை செய்தார். அவர் கூறினார் ‘ பிரபோ, இதற்கு ஏன் கவலைப் படவேண்டும், ஸ்ரீ தேவியின் மகா மந்திரத்தை உச்சரித்து ஸ்ரீ சக்கர பூஜையை செய்து விட்டால் நீங்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொள்ள முடியுமே’ என்றார். ஆகவே மகாவிஷ்ணு தனக்கு அந்த மந்திரத்தையும் பூஜையையும் உபதேசிக்க யாரைப் பிடிக்கலாம் என எண்ணியபடி தேவியை எண்ணி தியானித்தார். அடுத்த கணம் அந்த தேவியே அவர் முன்னால் வந்து அவருக்கு ‘பஞ்சதசி ‘ என்ற மகா மந்திரோபதேசம் மற்றும் ஸ்ரீ சக்கர பூஜையின் கிரமங்களையும் உபதேசம் செய்துவிட்டுப் போனார். அதை சித்தி பண்ணி வந்ததினால்தான் மகாவிஷ்ணுவினால் தான் நினைத்த எந்த ரூபத்தையும் எடுக்கும் சக்தி கிடைத்தது.
அதை பிரயோகித்தே விஷ்ணுவானவர் தேவர்களுக்கு அமிருதம் கடைந்தபோது ஏற்பட்ட பிரச்சனைகளை மோகினி அவதாரம் எடுத்து தீர்க்க முடிந்தது. ஸ்ரீவித்யா உபாசனை செய்ததினால்தான் அப்படிப்பட்ட கலையை விஷ்ணுவினால் பிரயோகிக்க முடிந்ததாம். அவர் மட்டும் அல்ல தேவியை அப்படி பூஜித்து அப்படிப்பட்ட சக்தியை பெற்றவர்களில் மன்மதனும் ஒருவராம். அதனால்தான் அவர் தமது ரூபத்தை எப்போதுமே அனைவரையும் மயக்கும் விதத்தில் வைத்து இருந்தாராம். ஆகவே ஸ்ரீமத் பஞ்சாஷரி மற்றும் ஸ்ரீ சக்கர மந்திரத்தை முறைப்படி குருவிடம் இருந்து கற்றறிந்து, உபதேசம் பெற்று அதை செய்து வந்தால் அனைத்து சித்திகளும் கைகூடும் என்பது நம்பிக்கை ஆயிற்று. ஸ்ரீ சக்கரத்தில் நாற்பத்தி நான்கு கோணங்கள் உள்ளன. அவற்றை தேவியின் சரண கோணங்கள் என்று கூறுவார்கள். ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி விளக்கும் மந்திரம் இது.
ஸ்ரீதேவியானவள் சக்கரத்தின் மத்தியில் பிந்துவாக அமர்ந்திருக்கிறாள். சக்கரத்தை சுற்றி ஒன்பது விதமான ஆவரண தேவதைகள் அமர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் சித்தி பெற்ற தேவதைகள். சுத்த சக்திமாலா மந்திரம் என்பது ஆவரண தேவதைகளைப் பற்றி எடுத்துரைக்கும் மந்திரம். அவர்களில் ஒன்பதாவது தேவதையான பரமேஸ்வரியே ஸ்ரீ சக்கரத்தின் மத்தியில் ஸ்ரீ சக்கர தேவியாக உள்ளாள். ஆகவேதான் ஸ்ரீ சக்கர பூஜையை செய்யும்போது பரமேஸ்வரியின் அனுகிரகத்தைப் பெற்றிட நடுவில் உள்ள பிந்துவில்தான் பூக்களையும், குங்குமத்தையும் போட்டு பூஜிக்க வேண்டும் என்பார்கள்.