அன்னை மீரா

தெய்வீக பெண்மணி

-சாந்திப்பிரியா-

அன்னை மீரா என அழைக்கப்படும்  தெய்வீக பெண்மணி, தெய்வீக அவதாரம் எடுத்து பூமியில் வந்து மானிடராக பிறந்தவர். தாம் இன்ன  தெய்வீக அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் மற்றவர்களை போல இல்லாமல் அவர் தன்னை குறிப்பிட்ட எந்த தெய்வத்தின் அவதாரமாகவும் கூறிக் கொள்ளவில்லை. தான் பரமாத்மாவின் அவதாரம் என்றும் பரமாத்மன் ஒளியை பூமிக்கு கொண்டு வந்து  மனித எண்ணங்களை தூய்மைப்படுத்தி, அவர்களை மென்மையான ஆன்மீக வாழ்க்கையில் தம்மை  இணைத்துக் கொள்ளும் வகையில் உலக வாழ்வை மாற்றி அமைக்க வந்தவர் என்று கூறிக் கொள்கின்றார். தெய்வீக அவதாரங்களும் பூமியிலே பிறந்து தெய்வங்களை வழிபட்டு தவப் பயன்களினால் ஞானம் அடைந்துள்ள குருமார்களும் வெவ்வேறானவர்கள் என்பதாக கூறுகின்றார். அதன் காரணம் குருமார்கள் தெய்வத்தை வழிபட்டு ஞானத்தை அடைகின்றார்கள், ஆனால் அவதாரங்களோ தெய்வங்களின் ரூபங்கள் என்கின்றார்.

தெய்வீக அன்னை மீரா என்பவர் யார்? ஆந்திராவில்  சாந்திபள்ளி எனும் கிராமத்தில் இருந்த திருமதி அனந்தம்மா மற்றும் திரு வீரா ரெட்டி என்பவர்களுக்கு  1960  ஆம் ஆண்டு டிசம்பர்   மாதம் 26  ஆம் தேதியன்று பிறந்தவர். சிறு வயது முதலே வித்தியாசமாக வளர்த்தவர். அவருடைய பெற்றோர்கள் ஆன்மீக ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள் அல்ல, பழைய சம்பிரதாய முறையில் வாழ்ந்தவர்கள் என்றாலும் தெய்வீக அன்னை மீரா வித்தியாசமான குழந்தையாக வளர்ந்து வந்ததினால் அவரை பண்டைய வாழ்க்கை முறையில் வளர்க்க விரும்பவில்லை.   சிறு வயதிலேயே பல முறை அன்னை மீரா சமாதி நிலையில் சென்று உள்ளாராம். பெற்றோர்கள் நினைத்ததை  போலவே, அன்னை  மீரா மற்ற குழந்தைகளை போல வளராமல் வித்தியாசமாகவே வாழ்ந்து வந்தாராம். 

தெய்வீக அன்னை மீராவுக்கு பன்னிரண்டு வயதானபோது ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அவருடைய தாய் மாமன் திரு புல்கூர் வேங்கட ரெட்டி என்பவர்  முதன்முறையாக அவளை பார்த்தபோது தனக்கு ஒருமுறை கனவில் காட்சி அளித்த தெய்வத்தைப் போலவே அன்னை மீரா இருந்ததினால், அன்னை மீரா தெய்வீகப் பிறவியாகவே இருக்க வேண்டும் என்பதாக  உணர்ந்தார். ஆகவே அவள் மீது அதிக அக்கறை செலுத்தி  அவளை பாண்டிச்சேரியில் இருந்த அரபிந்தோ ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்லலானார்.  அவளும் அங்கு சென்ற நாட்களில் பாண்டிச்சேரி அன்னை மற்றும் அரபிந்தோ இவருடைய சமாதிகளில்   சூஷ்ம ரூபங்களில் இருந்த அவர்களுடன் எதோ சில காரணங்களுக்காக நேரடி தொடர்ப்பு கொண்டாராம். மேலும் தெய்வீக அன்னை மீராவுக்கு தான் தெய்வமாக பிறக்க இருந்த உண்மை அவர் பிறப்பதற்கு முன்பாகவே தெரியுமாம். இந்த நிலையில் பாண்டி ஆஸ்ரமத்திற்கு அடிக்கடி சென்று கொண்டிருந்த அன்னை மீராவின் தெய்வீகத்  தன்மை முதலில் வெளிநாட்டவர்களுக்கே தெரிய வந்ததாம். தெய்வீக  அன்னை மீரா இன்று அரபிந்தோ ஆஸ்ரமத்துடன் சேர்ந்து தெய்வீகத்தை பரப்பவில்லை என்றாலும், அவர்களுடன் சூஷ்ம உருவில் தொடர்ப்பு கொண்டுள்ளதாக அவரே கூறி உள்ளார்.

அவருடைய தெய்வீகம் மெல்ல மெல்ல வாய் மொழி வார்த்தைகளினால் மட்டும்  அங்கங்கே பரவலாயின.  அரபிந்தோ ஆசிரமத்து பக்தர்கள் தத்தமது குறிப்பிட்ட வட்டத்துக்குள்  மட்டுமே அவர் புகழை பரப்பினார்கள். இந்த நிலையில்  1979 ஆம் ஆண்டில் அவரை கனடா நாட்டிற்கு வருமாறு அவருடைய பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தெய்வீக அன்னை மீரா அவர்கள் கனடா நாட்டிற்கு சென்றார். முதன் முதலில் மாண்ட்டேல் எனும் நகரில்  சுமார் 300 பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இப்படியாக அவர் தெய்வீகம் மேற்கத்தைய நாடுகளில் பரவத் துவங்கியது.

1981 ஆம் ஆண்டில் அவருடைய மாமா மற்றும் ஸ்ரீமதி ஆதிலட்சுமி என்பவருடன் ஜெர்மனிக்கு  சென்றவர் அதற்கு அடுத்த ஆண்டிலேயே அங்கு நிரந்தரமாக தங்கி விட்டார். 1982 ஆம் ஆண்டு அன்னை ஒரு ஜெர்மானியரை மணந்து கொண்டு அவருடன் ஜெர்மனியில் உள்ள சிறு கிராமமான தெல்ஹெயம் என்ற இடத்தில் நிரந்தரமாக  தங்கி விட்டார்.

தத்தமது மதங்களைக் குறித்த எந்த ஒருவரது தனிப்பட்ட  எண்ணங்களையே, நம்பிக்கையையோ மாற்ற அன்னை விரும்புவது இல்லை.  அவர்கள் யாரை விரும்புவார்களோ அந்த தெய்வத்தை ஆராதிப்பது அவர்கள் தனிப்பட்ட விருப்பம் என்பதினால், அதில் தலையிடுவதில்லை.   அவளை பொறுத்தவரை அவரிடம் நம்பிக்கையோடு வருபவர்கள் எவராக இருந்தாலும், எந்த மத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் அவள்  ஒரு அன்னையாகவே  காட்சி அளிக்கிறாள். தன்னிடம் வேண்டுகோளை வைப்பவர்களது பக்தி உண்மையாக இருந்தால்  அந்த  நியாயமான பிரச்சனைகளை பரந்தாமனின் ஒளிக்கதிர்கள்  மூலம் நிவர்த்தி செய்கின்றாள். இந்த உலகில் அவள் அவதரித்து உள்ளத்தின் நோக்கமே மனிதகுல மேம்பாட்டிற்காகவே  என்பதினால் ஜாதி, மத, பொருளாதார ரீதியிலான ஏழை பணக்காரன் என்கின்ற  பேதங்களை அவள் முற்றிலும் தவிர்த்து வருகின்றார்.

ஆரம்ப காலங்களில் அன்னை மீரா தனி நபர்களுடனோ, குழுக்களுடனோ பேசுவதை தவிர்த்து வந்தார். ஆனால் வெளி நாடுகளில் வசித்த இந்துக்கள் அல்லாத பெரும்பாலான அந்நிய மதத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தரிசனம் கொடுக்கச் சென்ற இடங்களில் தரிசன நிகழ்ச்சிக்கு முன்னதாக  பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து வரத் துவங்கினார். ஆனால் எந்த நிலையிலும் அவர் தரிசனம் நிகழ்ச்சி துவங்கியதும், மெளனமாக ஆசிர்வாதிப்பதை தவிற பேசுவதில்லை. அவர் பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி கொடுப்பது இல்லை.  பக்தர்களின் சந்தேகங்களுக்கு ‘அன்னை மீரா வினா விடை’ (புத்தகம்) மூலம் பதில் அளித்துள்ளார். அவர் பக்தர்களின் சந்தேகங்களுக்கு அளித்த பதில் மற்றும் தரிசன முறையை கீழ் காணும் You Tube   தளங்களில் பார்க்கலாம்.

https://www.youtube.com/watch?v=XY0nBrf8c2E&vl=en

https://www.youtube.com/watch?v=ixF-vp0A8Qk

https://www.youtube.com/watch?v=_VPEXbokpHQ&t=219s

https://www.youtube.com/watch?v=F6iK3DejNbw

https://www.youtube.com/watch?v=Jj7IVI8kb68

https://www.youtube.com/watch?v=uyfwEXkuQfc

அன்னை மீரா யாரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பது இல்லை. தத்தமது சொந்த பிரச்சனைகளையும் விவாதிப்பது அனுமதிப்பது இல்லை. யாருக்கு என்ன பிரச்சனை உள்ளதோ அதை நிவர்த்தி செய்து கொள்ள அவர்கள் தரிசனத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். தரிசன நிகழ்ச்சி விவரங்களை  ஒரு குறிப்பிட்ட அட்டவணைப்படி அவருடைய உதவியாளர்களும், குடும்பத்தினரும் தயாரித்து வெளியிடுவார்கள்.  அவருடைய தரிசனம் முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக உள்ளது.  ஒரு வார்த்தைக்கு கூட பேசாமல் மெளனமாக இருந்தபடி தன்னை தரிசிக்க வருபவர்களுக்கு பரமாத்மனின் ஒளியை செலுத்தி, அவர்களுடைய துயரங்களை நீக்குகின்றாராம்.  ஆண்டு முதல் இன்றுவரை அன்னையின் தரிசன முறையில்  எந்த மாற்றமும் இல்லை என்பது அவருடைய பக்தர்களின் கருத்தாகும்.

தரிசனம் எப்படி நடைபெறுகின்றது? அன்னை மீராவை தரிசிக்க விரும்புபவர்கள் எந்த தரிசனத்தில்  தாம் கலந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த  தரிசன நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த விதமான கட்டணமும் கிடையாது.  முன்பதிவு செய்து கொள்வதை கட்டாயமாக வைத்து உள்ளத்தின் காரணம், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே. ஒருவர் கொடுக்கும் தனிப்பட்ட முறையிலான எந்த விதமான பரிசுப் பொருட்களையும் அன்னை மீரா ஏற்றுக் கொள்வது இல்லை. . மிக எளிமையான தோற்றத்தில்தான் தரிசனமும் தருகின்றார்.  அவள் முகத்தில் எந்தவிதமான சலனத்தையும் காட்டாமல், கோபம், வெறுப்பு, சிரிப்பு போன்ற எவற்றையும் வெளிப்படுத்தாமல், படோபகாரம், தான் என்ற அகம்பாவம் என எதையும் காட்டாமல்  தரிசனம் தருகின்றார்.  இந்த நிலைதான் உண்மையான தெய்வீக நிலை என்பது.

தரிசன நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சற்று முன்னதாகவே வந்து அமைதியாக, யாருடனும் யாரும் பேசாமல் அவரவர் ஆசனங்களில் அமர்ந்து விடுவார்கள். அன்னை மீரா மேடையில் நுழையும்போது அமைதியாக யாரையும் பார்த்து கை ஆட்டியபடியோ சிரித்துக் கொண்டோ, வணக்கம் கூறிக்கொண்டோ வருவது இல்லை. முற்றிலும் அமைதியாக, முகத்தில் எந்த விதமான சலனத்தையும் வெளிப்படுத்தாமல் அனைவரையும் பார்த்தபடி ஆசனத்தில் வந்து அமர்வார். அதன் பின் ஒருவர் ஒருவராக வரிசைப்படி  அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அன்னை முன்பு சென்று மண்டி இட்டு தலையை குனிந்தபடி அமர்வார்கள். அதன் பின்னர் அன்னை மீரா அவர்கள் தலை மீது தனது கையை வைத்து சில வினாடிகள் ஆசி கொடுப்பார். அவர் கையை எடுத்ததும் தலையை நிமிர்ந்து அவர் கண்களை பார்க்க வேண்டும். சில வினாடிகள்தான். அந்த நேரத்தில்தான் அன்னை அவர்களுடைய துயரங்களைத் தீர்க்க அவர்களுக்குள் பரமாத்மாவின் ஒளியை அனுப்புகிறாள்.  பக்தர்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் எழுந்து சென்று தமது இருக்கையில் அமர்ந்து கொண்டு விட வேண்டும்.  இப்படியாக அங்கு வந்துள்ள அனைத்து பக்தர்களையும் தனித்  தனியே ஆசிர்வதித்தப் பின்னர், அன்னை மீரா ஒரு சில  நிமிடங்கள் அப்படியே அனைவரையும் பார்த்தபடி அமர்ந்து கொண்டு இருப்பார். அதன் பின் அவர் எழுந்திருக்க, அனைவரும் எழுந்து நின்று அப்படியே தலை குனிந்து மெளனமாக  வணங்க,  அன்னை மீரா உள்ளே சென்று விடுவார். எந்த நிலையிலும் அங்கு நிலவும் அமைதி கெடும் வகையில் யாரும் ஒரு வார்த்தைக்கு கூட பேசுவதில்லை. இதுதான் தரிசன முறை.

அன்னை மீரா பல நாடுகளுக்கும் விஜயம் செய்தபடி இருக்கின்றார். அவருடைய பயணங்கள் அனைத்துமே வெளிப்படையாக நேர கால அட்டவணையாக பல நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்படுகின்றது. பெரும்பாலும் அன்னை மீராவின் பயணங்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளையே சுற்றியே உள்ளன. இந்தியாவில் அவருடைய சொந்த ஊரான மதனப்பள்ளியில்  உள்ள அவருடைய ஆசிரமத்தில் மட்டுமே தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.    

2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது சொந்த ஊரான மதனப்பள்ளியில் பெற்றோர்களால் பராமரிக்க இயலாத ஆனாதை மற்றும் ஆதரவற்ற  குழந்தைகள்  தங்க ஒரு ஆசிரமத்தை நிறுவினார். அவர்கள் வெகு தொலைவில் இருந்த பள்ளிக்கு சென்று பயின்றதை கண்டவர்  ஏழை எளியவர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக 2010  ஜூன்  மாதம்  மேலை நாட்டு கல்விக்கு இணையாக இருக்கும் வகையில்  ஒரு பள்ளியினை தமது ஆஸ்ரமத்தின் அருகில் துவக்கினார்.  இன்று அவர் நிறுவி உள்ள பள்ளிகளில் பல்வேறு நிலைகளில் 1000 குழந்தைகள்  கல்வி பெறுகின்றார்கள்.