ஸ்ரீ ராம்தேவ் பாபா –
அற்புத சித்தர்
சாந்திப்பிரியா
(இவரைப் பற்றி நான் எழுதிய இந்தக் கதை எந்த இதழில் வெளியாயிற்று என நினைவில்லை. பாபாஜி சித்தர் ஆலயம் அல்லது ஆன்மீக ஆலயம் அல்லது ஓம் சரவண பவா போன்ற பத்திரிகையின் என்ற எதோ ஒரு மாத இதழில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான அந்த பத்திரிகையின் பிரதி தொலைந்து விட்டது)
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக வடநாட்டில் முகமது கோரி மற்றும் அல்லாவுதின் கில்ஜீ போன்றவர்கள் ஆண்டு வந்த நேரத்தில் இராஜஸ்தான் மானிலத்தில் அவதரித்தவர் ஸ்ரீ ராம்தேவ் பாபா என்ற அற்புத சித்தர். அவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான். இராஜபுத்திர வம்சத்தில் பிறந்த அவர் தோமர் என்ற இனத்தை சார்ந்தவர். அவருடைய கதையே தனியானது.
முன்னொரு காலத்தில் வடநாட்டில் இராணாஜீ என்ற தெய்வசக்தி மிக்க மன்னன் இருந்தார். அவரை ஒரு முறை ஒரு முஸ்லிம் சிறை பிடித்து வந்து கண்டதுண்டமாக வெட்டி எறிந்தான். ஆனால் ஆச்சர்யமாக அந்த வெட்டுப்பட்ட உடல் பகுதிகளில் இருந்து எந்த இரத்தமும் சிந்தவில்லையாம். அதற்குப் பதில் அது பாலாறாக உடலில் இருந்து வெளி வந்து ஓடிற்றாம். அந்த இராணாஜிக்கு எட்டு மகன்கள் இருந்தனர். அதில் ஆறு மகன்கள் மொகலாயர்கள் வந்து படை எடுத்தபோது மடிந்து விட்டனர். மீதம் இருந்த இருவரும் தப்பிச் சென்று இராஜஸ்தானில் இருந்த புஷ்கர் என்ற இடத்திற்குச் செல்ல அவர்களைத் தேடி வந்த மொகலாயர் படை அவர்களை அங்கும் வந்து துரத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்தும் தப்பி ஓடி காஷ்மீரில் இருந்த உண்டா காஷ்மீர் என்ற இடத்திற்குச் சென்று அங்கு வசித்தனர். அவர்களின் பெயர் அஜ்மல்ஜி மற்றும் தன்ரூப்ஜி என்பது. அவர்கள் அங்கிருந்தபடி மக்களுக்குப் சேவை புரிய அவர்கள் பிரபலமாகி மக்களின் அன்புக்குப் பாத்திரம் ஆயினர்.
இந்த நிலையில் ஜெய்சல்மீர் என்ற இடத்தை ஆண்டு வந்த ஜெய்சிங் என்ற மன்னன் தன்னுடைய குருடு மற்றும் முடமாகி இருந்த தன்னுடைய பெண்ணை எவருக்கு மணமுடிப்பது என்ற கவலையில் இருந்தார். அவர் தற்செயலாக அங்கு இருந்த அஜ்மல்ஜியிடம் அவளை மணமுடிக்க முடியுமா எனக் கேட்க அவரும் சம்மதம் தெரிவித்தார். நல்லதொரு நாளில் அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. என்ன ஆச்சர்யம். திருமணத்தன்று அஜ்மல்ஜீயின் கரத்தை ஜெய்சிங்கின் மகள் தொட்டதுதான் தாமதம், அவளுடைய குருடான கண்ணில் பார்வை வந்து முடமாகி இருந்த அங்கங்கள் சரியாகி விட்டன. அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது அஜ்மல்ஜி தெய்வசக்தியைப் பெற்று இருக்கின்றார் என்பது. காலம் உருண்டது. ஆனால் திருமணம் ஆகிய அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆகவே அவர்கள் சிவபெருமானை வேண்டித் துதித்தனர். சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி அவர்களை துவாரகைக்குச் சென்று கிருஷ்ணரை துதிக்குமாறு கூறினார். அதன்படி அஜ்மல்ஜியும் துவாரகைக்குச் சென்று அங்கிருந்த கிருஷ்ணர் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு தியானம் செய்தார். பல நாட்கள் தியானம் செய்தும் கிருஷ்ணரின் கருணை கிடைக்காமல் போக கோபமுற்றவர் தனது கையில் இருந்த பூ, பழங்கள் போன்ற அனைத்தையும் கிருஷ்ணர் மீதே வீசி எறிந்துவிட்டு திரும்பிச் செல்கையில் வழியில் அவரை சந்தித்த பண்டிதர் எதற்காக கிருஷ்ணர் மீது கோபப்பட்டு திரும்பிச் செல்கிறாய் எனக் கேட்டுவிட்டு உண்மையிலேயே கிருஷ்ணரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தால் துவாரகை நகக்குச் சென்று அங்கு கடலுக்கு அடியில் உள்ள கிருஷ்ணரை ஏன் சந்திக்கக் கூடாது என்றார். ஆத்திரம் கண்ணை மறைப்பது போல அம்பாஜியும் தன் மனைவியுடன் துவாரகைக்குச் சென்றார். கடலுக்குள் இறங்கி உள்ளே முழுக எதோ சாலையில் நடப்பது போல நடந்து கடலுக்கு அடியில் இருந்த துவாரகையை அடைந்து கிருஷ்ணர் முன் சென்று நின்றார். அவரைக் கண்ட கிருஷ்ணர் அவரிடம் கூறினார் “கவலைப் படாமல் ஊருக்குச் செல். நானே உன் குழந்தையாக விரைவில் பிறப்பேன்” என ஆசிகள் கூறிய பின் தான் பிறக்கும்போது ஆலய மணிகள் தானாகவே அடிக்கும். ஊர் மத்தியில் பெரிய ஜ்வாலை தோன்றும். அஜ்மலின் வீட்டில் இருந்து அனைத்து நீரும் பாலாகி ஓடும் என்று கூறினார். கிருஷ்ணர் கூறியது போலவே சில மாதங்களில் அம்பாஜிக்கு மகனாக அவர் பிறந்தார். அவரே பின் நாளில் இராம்தேவ் பாபா என அழைக்கப்பட்டவர்.
குழந்தை இராம்தேவ் பாபாவின் ஆற்றல்கள் சிறு வயது முதலேயே தெரியத் துவங்கின. ஒரு நாள் அவருடைய தாயர் அடுப்பில் பாலை வைத்துவிட்டு குழந்தைக்கு பாலுட்டத் துவங்கினாள். பால் பொங்கி வழியத் துவங்கியது. தாயின் மடியில் படுத்திருந்த குழந்தை தன் கையை அடுப்பை நோக்கி நீட்ட கை நீண்டு கொண்டே சென்றது. அடுப்பில் பொங்கி வழிய இருந்த பாத்திரத்தை தூக்கி கீழே வைத்தது. திக்கிட்டாள் தாயார். இது எப்படி சாத்தியம் ஆகும் என அவளுக்குப் புரியவில்லை.
குழந்தை வளர்ந்து பெரியவன் ஆயிற்று. சிறுவனாக இருந்த இராம்தேவ் பாபா தனக்கு விளையாட குதிரை வேண்டும் என அடம் பிடிக்க எங்கிருந்து கொண்டு வருவது குதிரையை என யோசனை செய்த அஜ்மல்ஜி கிழிந்த துணிகளை அடைத்து வைத்திருந்த விளையாட்டு பொம்மை குதிரையை வாங்கி வந்துத் தந்தார். அந்த குதிரை மீது சிறுவன் இராம்தேவ் பாபா ஏறி அமர சிறிது நேரத்தில் அது ஆகாயத்துக்கும் பூமிக்குமாகத் தாவத் துவங்கியது. அனைவரும் அதிர்ந்து நின்று நிச்சயமாக குழந்தை தெய்வாம்சம் பொருந்தியதே என்பதை உணர்ந்தனர். அந்தக் குதிரைக்கு நீலக் குதிரை எனப் பெயரிட்டு தன்னுடனேயே வைத்துக் கொண்டார். அது போன்ற பல மகிமைகளை அவர் அவ்வப்போது செய்து கொண்டு இருக்க மெல்ல மெல்ல அவருடைய புகழ் பல இடங்களிலும் பரவியது.
அவர் புகழைக் கண்டு பொறாமை கொண்ட மந்திரவாதி ஒருவன் அவரைக் கொல்ல பூதகணங்களை அனுப்பினான். அந்த காலங்களில் மந்திர தந்திர வேலைகள் மிகப் பிரசித்திப் பெற்றவை. சிறுவனைக் கொல்ல வந்த பூதமோ அவர் சந்தேகப் படக்கூடாது என எண்ணி அவருடன் முதலில் விளையாடிக் கொண்டு இருக்க ஆரம்பித்தது. விளையாட்டின் நடுவே சட்டென்று இராம்தேவ் பாபாவின் சகோதரரை தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறக்கத் துவங்கியது. விடுவாரா இராம்தேவ் பாபா. நீலக் குதிரை மீது ஏறி அமர்ந்தார். ஆகாயத்தில் அந்தக் குதிரை பறந்து பூதத்தைப் பிடிக்க ஆகாயத்திலேயே பூதத்தை பஸ்பமாக்கி தனது சகோதரனை மீட்டு வந்தார். அது மட்டும் அல்ல பாலிநாத் என்ற இடத்தில் இருந்த மடத்தின் முனிவரின் வேண்டுகோளை ஏற்று அங்கு உலவி வந்த துர் தேவதைகளையும் பிடித்து அழித்தார்.
அவர் மேலும் மேலும் புகழ் பெற்று வந்ததைக் கண்ட சில முஸ்லிம் மன்னர்கள் உண்மையிலேயே அவருக்கு தெய்வீகத் தன்மை உள்ளதா எனக் கண்டறிய ஐந்து புகழ் பெற்ற பீர்கள் என அழைக்கப்படும் முஸ்லிம் குருமார்களை அவரை சோதனை செய்ய அனுப்பினார்கள். அந்த குருமார்கள் எவருடைய வீட்டிலும் சென்று சாப்பிடுவது இல்லை. சில விதி முறைகனைக் கடைபிடித்தே சில பதார்தங்களையே உண்டனர். ஆகவே அவர்கள் ஊரின் எல்லைக்கு வந்து உணவு அருந்த ஒரு மரத்தடியைத் தேடினார்கள். அவர்களுக்கு நன்கு இளைப்பாற பெரிய மரம் எதுவும் இல்லை. அதைக் கண்ட இராம்தேவ் பாபா அவர்கள் அமர்ந்து இருந்த மரத்தை சில வினாடிகளிலேயே பெரிய மரமாக்கி விட்டார். அவர்கள் முதலில் வியந்தாலும் அடுத்து உள்ள10ரில் இருந்த ஒருவனை தமது மகன் பாம்பு கடித்து இறந்து விட்டதாகக் கூறி அவரிடம் அனுப்பினார்கள். இராம்தேவ் பாபாவோ இறந்து விட்டவனை எடுத்து வரச் சொல்லி அவன் இறந்துவிட்ட உடலில் இருந்த விஷத்தை நீக்கி விட்டு அவனை மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார்.
அவர்கள் தமது எண்ணத்தை வெளிப்படுத்தாமல் இராம்தேவ் பாபாவிடம் சென்றனர். அவர்களுக்கு பாபா உணவு தர அவர்களோ தாம் தமது உணவு அருந்தும் தட்டை பல மைல்கள் தொலைவில் இருந்த முல்தான் நகரில் மறந்து போய் விட்டுவிட்டு வந்து விட்டதாகவும், ஆகவே அவர்களால் உணவு அருந்த இயலாது எனக் கூறிவிட்டனர். கவலைப்படாதீர்கள் உங்கள் பாத்திரங்கள் உங்களிடம் வந்து சேரும் எனக் கூறிய பின் மூன்றடிக்கு மூன்றடி பாயை வரவழித்து அதன் மீது அவர்களை அமரச் சொன்னார். அவர்கள் அது மிகச் சிறியதாக உன்ளதே எனக் கூற அடுத்த வினாடி அந்தப் போய் பெரியதாகிக் கொண்டே போய் மூவரும் அமரும் விதத்தில் அதை பெரியதாக்கியது. யோசனை செய்து கொண்டே இருந்த அவர்கள் அதன் மீது அமர ஆகாயத்தில் சென்று அது மிதந்தது. அடுத்த வினாடி முல்தான் நகரில் இருந்த அவர்களின் தட்டுக்களும் பாத்திரங்களும் அதில் வந்து இறங்கின. அவர்களும் அதை சோதனைப் போட்டு அவை தம்முடைய பொருட்களே என உறுதி செய்து கொண்டனர். அதன் பின் அவர்கள் இராம்தேவ் பாபா உண்மையிலேயே சக்தி பெற்றவரே என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அவலை கௌரவித்து அவருக்கு ராம்ஷாபீர் என்ற பட்டத்தையும் தந்துவிட்டுச் சென்றனர்.
இன்னொரு சம்பவம். மத்தியப் பிரதேசத்தில் இருந்த வியாபாரி ஒருவன் கல்கண்டுகளை மூட்டையாகக் கட்டி வெளியூருக்கு விற்பனைக்கு எடுத்துக் கொண்டு சென்றான். வழியில் அவனை சந்தித்த இராம்தேவ் பாபா மூட்டையில் என்ன உள்ளது எனக் கேட்டார். அவனோ இராம்தேவ் பாபாவை எதோ ஒரு அரசாங்க அதிகாரி எனவும் தான் உண்மையைக் கூறினால் அதிக வரி விதித்து விடுவார் என பயந்து கொண்டு அவை அனைத்தும் உப்பு மூட்டைகள் எனப் பொய் கூறிவிட்டான். சந்தைக்குச் சென்று மூட்டைகளை இறக்கி விற்பனை செய்ய வண்டியைத் திறந்தால் அதில் இருந்தது அனைத்துமே உப்பு மூட்டைகளே. உடனேயே ஓடிச் சென்று பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.
இப்படியாகப் பல மகிமைகளையும் செய்து கொண்டு இருந்தவர் தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டு தன் ஊருக்குச் சென்று ஒரு இடத்தில் ஒரு ஆள் அமரும் வகையில் பெரியக் குழி தோண்டச் சொன்னார். குழி தோண்டப்பட்டதும் அதில் சென்று அமர்ந்து கொண்டு மண் போட்டு தன்னை மூடிவிடுமாறு ஆணையிட்டு விட்டு கி.பி 1458 ஆம்ஆண்டில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடம் இராஜஸ்தானில் இந்தியா அணுகுண்டு சோதனை செய்த போக்ரான் என்ற இடத்தில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது. 1931 ஆம் ஆண்டு அந்த சமாதி மீது பிக்கானிர் மன்னன் ஒரு ஆலயம் எழுப்பினார். செப்டம்பர் மாதங்களில் அங்கு பாபா இராம்தேவ் விழா நடைபெறுகின்றது. அவர் சமாதிக்குச் சென்று வேண்டிக் கொண்டு வந்தால் நினைத்தக் காரியங்கள் நடைபெறுகின்றன எனக் கூறுகிறார்கள்.
Please send your comments to the author on this article