சூரியனார் ஆலயம்
அகஸ்தீஸ்வர்
 
சாந்திப்பிரியா 


வழி : குரு ஆலயத்தில் இருந்து மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து (SH 113) இடப்புறம் திரும்பி குன்றத்தூர் வழி நோக்கிச் செல்ல வேண்டும். அதில் முதலில் மௌலிவாக்கம் பஸ் ஸ்டாப் வரும். அடுத்து கெருகம்பாக்கம் பஸ் நிலையம் வரும். அந்த பஸ் நிலையங்களுக்கு இடையே இடப்புறம் கோலம்பாக்கம் செல்லும் சாலையைக் காணலாம். மௌலிவாக்கம் பஸ் ஸ்டாப்பில் இருந்து சுமார் ஒன்று அல்லது இரண்டு கிலோ தொலைவு சென்று எந்த கடைக்காரரைக் கேட்டாலும் பக்கத்துத் தெரு வழியே கோலம்பாக்கம் செல்லும் பாதையைக் காட்டுவார்கள். அந்த பாதையில் திரும்பியதும் மூலையில் ஒரு பள்ளிக் கூடம் இருக்கும். அது ஒரு அடையாளம். அந்தப் பாதையிலேயே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் ஆலயத்தைக் காணலாம்.

வரலாறு:-

இந்த ஆலயமும் 1300 அல்லது 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும், இந்த இடத்தில்தான் சூரியன் வந்து சிவபெருமானை வணங்கினார் எனவும் கூறுகின்றனர். இந்த ஆலயத்தைப் பற்றி கூறப்படும் வரலாற்றுக் கதை என்ன எனில் தசரத மகாராஜனுக்கு வெகு காலமாக குழந்தைகளே பிறக்கவில்லை, ஆகவே அவர் தமது அரச பண்டிதர் ஆலோசனையின்படி சூரியனை குறித்து பூஜை செய்து விரதம் இருந்தார். அவரிடம் தனக்கு குழந்தை பாக்கியம் தருமாறு வேண்டிக் கொண்டு ஆலயம் தற்போது உள்ள கோலப்பாக்கத்துக்கு வந்து தவம் புரிந்தார். சூரியனை வெறும் கண்களினால் காண முடியாது என்பதினால் அவரை அரூப ரூபத்தில் பார்த்து அதாவது சிவபெருமான் மூலம் சூரியனை வழிபாடு செய்தார். அப்போது சிவபெருமானும் சூரியனாரை தன் உருவில் வெளிப்படுத்தி தசரதனுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் எனவும் அவர் ஆளும் நாடு சுபீட்ஷமாக இருக்கும் எனவும் அருள் புரிந்தார். ஆகவேதான் இந்த தலத்தில் சூரியன் உருவில் சிவபெருமான் காட்சி தருகின்றார்.

சூரியன் தனது மனைவியாக விஷ்வகர்மாவின் பெண்ணை ஏற்றுக் கொண்டு இரு குழந்தைகளைப் பெற்றார். ஆனால் அவளால் சூரியனின் ஒளியைத் தாங்க முடியவில்லை. பலமுறை கேட்டும் அவரால் தன் ஒளியைக் குறைத்துக் கொள்ள முடியாமல் போக அவள் தனது சாயலாக வேறு ஒரு பெண்ணை அவரிடம் விட்டு விலகி அவருக்குத் தெரியாமல் ஒரு காட்டில் சென்று குதிரை வடிவில் வசித்தாளாம். அவள் தன்னைவிட்டு விலகிச் சென்று விட்டதை அறிந்து கொண்ட சூரியனார் அவளைத் தேடி பூலோகத்துக்கு வந்து அவளைக் கண்டு பிடித்து அவள் மூலம் குதிரை வடிவிலேயே கலவி இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டப் பின் அவளை தன்னுடன் அழைத்துச் சென்றாராம். அந்த கால கட்டத்தில்தான் ஒரு முறை அவர் இன்று ஆலயம் உள்ள இடத்தில் வந்து தவமிருந்து சிவபெருமானை வணங்கிச் சென்றபோது சிவபெருமான் அவரிடம் மன மகிழ்ச்சி கொண்டு இனி அந்த இடத்தில் சூரியனாரும் இருந்து கொண்டு மக்களுக்கு அருன் புரியுமாறு கூற சூரியனாரும் சிவபெருமானுக்கு முன்னால் அவரை துதித்தபடி அமர்ந்து கொண்டாராம். ஆகவேதான் அந்த ஆலயத்தில் சிவபெருமானைப் பார்த்தபடி சூரியனார் சன்னதி உள்ளது. அது மட்டும் அல்ல சூரியனுக்கு பெருமைத் தரவேண்டும் என்பதற்காக மற்ற அனைத்து சன்னதிகளும் சூரியனாரைப் பார்த்தபடியே அமைக்கப்பட்டு உள்ளன. அதுபோல அகஸ்திய முனிவரும் அங்கு வந்து சிவனை வழிபட்டுச் சென்றாராம்.

அதன் விளைவே சிவனின் பக்தர்களான சோழ மன்னர்கள் அந்த இடத்தில் நவக்கிருக சூரியனாரை முன் வைத்து ஒரு சிவன் ஆலயம் அமைத்தனர்.

அந்த ஆலயத்தின் பெயர் அகஸ்தீஸ்வரர் என அகஸ்திய முனிவரின் பெயரிலும் அமைந்தது. ஆலயத்தின் மற்றும் ஒரு விஷேசம் என்ன எனில் சூரியனும், கால பைரவரும் சிவனை வழிபட சிவபெருமான் படைத்த அங்குள்ள கால பைரவர் சக்தி வாய்ந்தவராக இருப்பதுதான். தமது வேண்டுகோட்கள் நிறைவேற பக்தர்கள் அங்கு வந்து ஆறு ஞாயிற்றுக் கிழமைகள் இராகு காலத்தில் அவரை வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறுமாம். ஆலயத்தின் ஸ்தல விருஷ்சம் அரச மரமாகும். அதன் அருகில் உள்ள குளம் புஷ்கரணி என அழைக்கப்படுகின்றது.