ஸ்ரீ லங்காவின் 
சன்னிதியான் எனும்
ஸ்ரீ செல்வ சன்னிதி 
சாந்திப்பிரியா
ஸ்ரீ லங்காவில் பல தமிழ் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சில வரலாற்று சிறப்பு மிக்கவை.  ஸ்ரீ லங்காவில்தான்  முருகப் பெருமான் வள்ளித் தேவியை சந்தித்தார் என்றும், அங்குதான் ஆவலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு அவரை மணந்தார் என்பதும்  புராணங்களில் கூட நம்பிக்கையாக இருந்துள்ளது என்பதின் காரணம் உலகிலேயே அங்கு உள்ள மலைப் பிரதேசத்தில்தான்  வள்ளியின் பெற்றோர்களான வேதாஸ் எனப்பட்ட வேடவர்களின்  இனத்தினர் உள்ளதாகவும், அதனால்தான் வள்ளி தேவி அங்கு வளர்ந்தவர் என்றும் நம்புகிறார்கள்.  இப்படியான நம்பிக்கையினால் ஸ்ரீ லங்கா முருகன் ஆலயங்களில் வள்ளி தேவிக்கே பிரதான இடம் உள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நாட்டின் குழப்பமான அரசியல் நிலைமையினால் அவை அதிகம் அறியப்படாமல் இருந்துவிட்டது. அப்படி உள்ள சில ஆலயங்களில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் என்பது விளங்குகின்றது.  இந்த ஆலயம் ஸ்ரீ லங்காவின் தென் பகுதியில் நல்லூருக்கு அருகில்  உள்ள தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது . இதன் தோற்றம், அமைப்பு, மற்றும் வழிபாட்டு முறை என அனைத்துமே தனித் தன்மைக் கொண்டனவாக உள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பான மற்றும் தனித் தன்மைக் கொண்ட அம்சம்  என்ன என்றால் கந்தஸ்வாமி என அழைக்கப்படும் முருகன் இங்கு வேல் வடிவில் மட்டுமே வழிபடப்படுகிறார் என்பதே . அவருக்கு அங்கு முருக உருவிலான வேறு சிலை அமைக்கப்படவில்லை. ஞான சக்தியைக் குறிக்கும் ஆயுதமான வேல் என்பது ஒருவருக்கு உபதேசமும் முக்தியையும் தரும் சின்னம் ஆகும். ஆகவேதான் செல்வ சன்னிதியானின் ஆலயத்திலும் வேலவனை இந்த வேல் என்ற சின்னத்தில் வழிபடுகிறார்கள்.

செல்வசன்னிதி ஆலய வழிபாடு வினோதமானது. முருகனின் அருளைப் பெற அங்கு வருகைத் தரும் பக்தர்களின் சமய ஈடுபாடும், தெய்வ பக்தியுமே முன்னிலைப்படுத்தப்பட்டு ஆகம வழிபாட்டு முறைகளும் வழக்கங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. ஆலயத்துக்கு வரும் பக்தர்களே பூஜைகளை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.  அவர்களை முன்னிலைப்படுத்தி வைத்துக் கொண்டு  அங்குள்ள ஆலயப் பண்டிதர் தமது வாயை மெல்லிய துணியால் மூடிக் கொண்டு பூஜைகளை செய்கிறார். ஆனால் மந்திரங்கள்  எதுவும் ஓதப்படுவது இல்லை.

ஆலய மேற்கூரையின் சித்திரம் 

இந்த ஆலயத்தில் (செல்வசன்னிதி) உள்ள வேல் இலங்கையின் இன்னொரு பகுதியில் உள்ள கதிர்காமனில் உள்ள கதிர்காமக் கடவுள் எனக் கூறப்படும் முருகனின் ஆலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது . கதிர்காமன் எனும் ஆலயத்திலும் முருகப் பெருமானை வேல் வடிவிலேயே வணங்குகிறார்கள். கதிர்காமனில் நடைபெறும் வருடாந்தர கொடியேற்ற விழாவின்போது செல்வசன்னதி ஆலயத்தில் இருந்து முருகனை கதிர்காமனுக்கு எடுத்துச் செல்வார்கள். அங்கு நடைபெறும் கடைசி நாள் விழாவான தீர்த்த விழா முடிவடைந்ததும், அதை மீண்டும் கொண்டு வருவார்கள். அது போலவே கதிர்காமனில் படைக்கப்படும் தினை மாவில் தேனைக் கலந்து செய்யப்படும் மாவிளக்கைப் போலவே இங்கும் அதை படைக்கின்றார்கள் . அந்த மாவின் மீது சிறு விளக்கை ஏற்றி வைத்து வழிபட்டப் பின் அந்த விளக்குகள் அணைந்ததும்  அந்த மாவை பிரசாதமாக அங்குள்ள பக்தர்களுக்குத் தருவார்கள்.  அன்று  பன்னிரண்டு திரிகளைக் கொண்ட விளக்குகளை ஏற்றுவார்களாம்.  பன்னிரண்டு திரிகளும், முருகனின் பன்னிரண்டு கைகளைக் குறிக்குமாம். இந்த ஆலயத்தில் பெரிய இலைகளை கீழே வைத்து  அதன் மீதுதான் பிரசாதமாக தரப்படும் உணவை கொட்டி வைத்து பூஜை செய்கிறார்கள். அதன் பின் அந்த உணவை பிரசாதமாக அங்குள்ளவர்களுக்குத் தருவார்களாம்.

ஜாப்னா பிராந்தியத்தில் பல சன்யாசிகளுக்கு இந்த ஆலயத்தின் பக்கத்தில் அமைந்து உள்ள பல மடங்களே தியானம் செய்யவும், தங்குவதற்கான புகலிடமாகவும் உள்ளது. இங்கு வந்து வேண்டினால் பக்தர்கள் கேட்டதை  முருகன் தருகிறார் என்றே அங்கு வரும் பக்தர்களின் எண்ணமாக உள்ளது .

அந்த ஆலயம் குறித்து ஆதாரபூர்வமான செய்திகள் இல்ல. ஆனால் இந்த ஆலயத்தின் வரலாற்றைக் குறித்து கர்ண பரம்பரையாக கூறப்பட்டு வரும் கதை இது.  தற்போது தொண்டைமானாறு என்ற பெயரில் ஓடும் நதி முன்னர் வல்லி நதி என்ற பெயரைக் கொண்டு இருந்ததாம். அந்த நதியை ஒட்டி இருந்த இடங்கள் வல்லை வெளி என்று அழைக்கப்பட்டு வந்திருந்தன.  அப்போது அந்தப் பகுதியை ஆண்டு வந்த மன்னன் அந்த நதியின் ஒரு முனையை கடல் நீர் கலக்கும் வகையில் வெட்டி விட ஏற்பாடு செய்தார். அதற்குக் காரணம் அந்த நதியின் நீருடன் உப்பு நீரான கடல் நீர் கலந்து வந்தால், அந்த ஆற்றின் கரைகளில் தண்ணீரைத் தேக்கி நிறைய உப்பு உற்பத்தி செய்ய முடியும் (உப்பளம்), அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெருத்தும் உதவும் என்ற எண்ணத்துடன் அந்த  மன்னனின் பிரதிநிதியான தொண்டைமான் என்பவர் அந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக வல்லுனர்கள் கருத்து கொண்டுள்ளார்கள். இன்னொரு கதையின்படி  அந்த தொண்டைமான் என்பவரும் அந்தப் பகுதியில் இருந்த மன்னரே என்றும் கூறுகிறார்கள். அது முதல் அவர் பெயரிலேயே அந்த நதியானது தொண்டைமான் ஆறு என ஆகி காலப்போக்கில் அது மருவி தொண்டைமன்னாறு என்று ஆகி விட்டது. அதனால் அந்த ஆற்றைத் தொட்டு இருந்தப் பகுதியும் அதே பெயரை அடைந்தது.

ஊர்வலத்தில் முருகன்

அந்த ஆற்றுக் கரை ஓரங்களில் இருந்த பெரும்பான்மை இனத்தவர் பிராமணர்கள் அல்லாத குருகுலத்தவர் என்பார்கள். அந்த குருகுலத்தவர் இங்கு தமக்கு வழிபாட்டுத் தளம் தேவை என எண்ணி  சிறிய ஆலயம் ஒன்றினை இங்கு அமைத்து அதில் முதலில் வேல் ஒன்றை வைத்து வழிபாட்டு வந்துள்ளார்கள். அவர்கள் முருகப் பெருமானை குறிக்கும் சின்னமாக வேலை அமைத்ததின் காரணம் அப்போது அங்கு பரவத் துவங்கி வந்த முருக பக்தி வழிபாட்டு மரபே. அந்த வேலை அவர்கள் கந்தஸ்வாமி என்று அழைத்தார்கள். அது மட்டும் அல்ல ஆற்றுக் கரையின் பக்கத்தில் இருந்த ஆலயத்தில் முருகப் பெருமான் இருந்ததினால் அவரை கல்லோடையான் அதாவது ஓடும் ஆற்றுக் கரையில் கல்லாக அமார்ந்தவர் என்ற பொருளில் அழைத்தார்களாம். ஆகவே அதை சுற்றி இருந்த அந்த இடம் கல்லோடை என அழைக்கப்பட்டது. அவருக்கு ஆற்றங்கரை வேலன் என்ற பெயரும் இருந்தது. அந்த நதிக்கரையில் முருகன் ஆலயம் அமைந்ததற்கான இன்னொரு காரணமும் உண்டு. தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனையும், அவனுடைய சகோதரர்களையும் அழித்தால் ஒழிய தமக்கு விமோசனம் கிடையாது என்பதை உணர்ந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது துயரங்களைக் களையுமாறு வேண்டிக் கொள்ள அவர் முருகனைப் படைத்தார். முருகப் பெருமான் தேவ படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது தனக்கு யுத்தத்தில் உதவி செய்வதற்காக வீரவாகு எனும் கணத்தைப் படைத்துக் கொண்டார். வீரவாகு நல்ல பராக்கிரமசாலி.  சூரனை அழிக்க முருகன் கிளம்பிச் சென்றபோது, யுத்த நெறியாக அவர்  முதலில் வீரவாகுதேவரை மகேந்திரபுரி எனும் இடத்தில் தங்கி இருந்த சூரனிடம் தூதுவராக அனுப்பி அவன் சிறைப் பிடித்து வைத்திருந்த தேவர்களை விடுதலை செய்யுமாறு கூறினார். ஆகவே மகேந்திரபுரிக்குக் கிளம்பிச் சென்ற தூதுவரான  வீரவாகு தேவர் முதல் முதலாக வட இலங்கையின் வல்லி நதிக் கரையில் இருந்த கல்லோடை வழியே சென்றார். அப்போது  அவர் காலடி தடம் அங்கும் பதிந்தது.  சூரனிடம் சென்ற வீரவாகு தமது முயற்சியில் தோல்வியை அடைந்து திரும்பி வந்தார். திரும்பி வந்த வழியில்  இங்கு வந்தபோது மாலை சந்தியாகாலம் ஆயிற்று. உடனே அவர் அந்த நதிக்கரை அருகிலேயே அமர்ந்து கொண்டு முருகனை நினைத்து சந்தியகால வந்தனம் செய்தார்.  அவர் அங்கு வழிபட்டபோது அங்கு முருகன்  வந்து காட்சி அளித்தார். அது முதல் உள்ளூர் மக்களுக்கு  அதிக செல்வம் பெருகத் (உப்பளம் மூலம் ) துவங்கியதாம். அப்படி வீரவாகு வந்தனம் செய்த இடத்திலேயே பின்னர் உருவமற்ற முருகனுக்கு  முதலில் ஒரு சன்னதி அமைத்து வழிபட்டார்கள். பின்னர் தமக்கு செல்வத்தை தந்து கொண்டு இருந்த அந்த சன்னதியை  பெரிய ஆலயமாகவும் பிற்காலத்தில் உரு மாற்றினார்களாம்.  ஆகவேதான் செல்வத்தை தந்து கொண்டு இருந்த இடத்தில் ஒரு சன்னிதியை அமைத்து  வீரவாகு தேவர்  வழிபட்ட இடத்தில் அமைந்திருந்த அந்த ஆலயத்தை செல்வ சந்நிதியான் என்ற பெயரில் அழைக்கத் துவங்கியதாக நம்புகிறார்கள். இந்த ஆலயத்தில் வந்து வணங்குபவர்களுக்கு சகல செல்வமும் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது.

வீரவாகு தேவரின் காலடித்தளம் 

இன்னொரு சிறப்பான அம்சம் என்ன என்றால் வீரவாகுதேவர் இங்கு காலடி வைத்துச் சென்றதாகக் கூறப்பட்ட இடத்தில் அவருடைய பாத சுவடுகளை பதிந்துள்ளதாகவும், அவற்றை இன்றும் ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் காண முடியும் என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் சிறப்பை கூற இன்னொரு கதையும் உண்டு. ஒருமுறை தேவலோகத்தில் இருந்த ஐராவசு என்ற முனிவர் வியாழ பகவானினால் ஒரு சாபத்தைப் பெற்று இருந்தது. அந்த சாபம் விலக வேண்டுமானால் அது பூமியில் சென்று ஒரு யானையாக பிறந்து  சிகண்டி என்ற முனிவர் மூலம் சாப விமோசனம் பெறவேண்டும் என்ற  விதி இருந்தது. அந்த சாபத்தின்படி ஐராவத முனிவரும்  இலங்கையில் இருந்த கதிர்காமன் எனும் பகுதியில் இருந்த காட்டில் யானையாகப் பிறந்து இருந்தார். அப்போது ஒருமுறை அந்த வனப்பகுதியின் வழியே கதிர்காமனை தரிசிக்கச் சென்று கொண்டு இருந்த சிகண்டி முனிவரின் சீடர்களை அந்த யானை மதம் கொண்டு தாக்க முயன்றபோது, முருகனை நினைத்துக் கொண்டு, அந்தக் காட்டில் இருந்த ஒரு வெற்றிலையைக் கிள்ளி  அதன் மீது சிகண்டி முனிவர் எறிய அது ஒரு வேலாக மாறி அந்த யானையைத் தாக்கிக் கொன்றது. அத்துடன் அந்த யானை உருவில் இருந்த ஐராவு முனிவரின் சாபமும் விலக அவர் சிகண்டி முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி  தனது பூர்வ ஜென்மக் கதையைக் கூறி தனக்கு முக்தி கிடைக்க ஒரு வழி கூறுமாறு வேண்டினார். சிகண்டி முனிவரும் வல்லி நதிக்கு அருகில் வீரவாகுதேவர் முருகப் பெருமானை வழிபட்ட இடத்தைக் கூறி அங்கு  சென்று வழிபாட்டு முக்தி பெருமாறுக் கூறினார். அவர் கூறிய அறிவுரையை ஏற்று செல்வசந்நிதியான் ஆலயத்தின் அருகில் வந்த ஐராவு முனிவர் அங்கிருந்த பூவரசு மரத்தின் அடியில் முருகப் பெருமானை நினைத்து தவம் இருந்து முக்தி அடைந்தார். அந்தப் பூவரசம்மரமானது தெய்வத்தன்மை பெற்றது. அந்த முனிவர் முத்தியடைந்து சமாதி அடைந்த பூவரசமரத்து அடிதான் வீராகு தேவர் சந்திக்கடன் செய்த இடமும் ஆகும். இன்று அந்த இடத்திலேயே கந்தப்பெருமான் வேல் ரூபத்தில் அந்த ஆலயத்தில் குடி கொண்டுள்ளார்.

இதற்கிடையில் கதிர்காமனுக்குச் சென்ற கதிர்காமர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முருக பக்தருக்கு கதிர்காமனில் முருகனின் சின்னமான வேல் ஒன்று பரிசாகக் கிடைத்தது. அவர் அதை இங்கு கொண்டு வந்து ஆலயத்து மாடத்தில் (மேற்கூரை போடப்பட்ட திறந்தவெளி) வைத்து தின பூஜைகளை செய்து வந்தார். சில நாட்களுக்குப் பிறகு கதிர்காமரையே  அந்த ஆலயத்தை நிர்வாகித்து வர  அனுமதித்தார்கள்.

இன்று  செல்வ சன்னிதி முருகன் ஆலயத்தை  சுற்றி இன்னொரு ஆலயமும், சில மடங்களும் தோன்றி உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், துறவிகளும் இந்த ஆலயத்துக்கு வருகை தருகிறார்கள். வரலாற்று சிறப்பு மிக்க தொண்டைமன்னார் உப்பளம்  இந்த ஆலய தலத்திற்கு மேன்மை சேர்க்கின்றது.  ஆலயத்தை சுற்றி உள்ள மடங்களில் அந்த ஆலயத்திற்கு வருகைத் தரும் துறவிகள் உணவருந்த எந்த நேரத்திலும் உணவு கிடைக்கின்றது. அங்கு வருகை தரும் சில பக்தர்கள், இறைவன் அருளினால் தம்முடையக் கோரிக்கைகள் நிறைவேறியதை கொண்டாடும் வகையில் அன்னதானமும் செய்கிறார்கள். அதனால்தான் வருடம் முழுவதுமே அங்குள்ள அனைத்து மடங்களிலும் யார் வந்து தங்கினாலும் அவர்களுக்கு  உணவு இலவசமாகவே கிடைக்கின்றது.  இந்த ஆலயம் அன்னதான  கைங்கர்யத்திற்கு பெயர் போனதாக இருப்பதினால் அங்குள்ள ஆலய முருகனை அன்னதான முருகன் என்றே அழைக்கின்றார்கள். இந்த ஆலய விழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள்:

காவடி மற்றும் கரக ஆட்டம்,  குழந்தைகளை தத்து எடுப்பது, தத்து கொடுப்பது, தலையை மொட்டை அடித்தல், தலையில் பால் குடத்தை ஏந்திச் செல்லுதல், கற்பூர குடத்தை (குடத்தில் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரம் ) ஏந்திச் செல்வது, ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதர்ஷனம் செய்வது,  காது குத்துதல், குழந்தைக்கு முதலாம் அன்னப் பிராயச்சனம் செய்வது போன்றவை .