தெரிந்த ஆலயம் , பலரும் அறிந்திடாத வரலாறு – 27
அக்னீஸ்வரர் ஆலயம்
சாந்திப்பிரியா

கும்பகோணத்தில் இருந்து சுமார் பதினெட்டு கிலோ மீட்டர் தொலைவில் கல்லணை செல்லும் பாதையில் உள்ளது பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டு உள்ள அக்னீஸ்வரர் ஆலயம். ஆலயம் உள்ள இடம் காவேரியின் வடக்குப் பகுதியான கஞ்சனூர் ஆகும். கும்பகோணத்தில் உள்ள சூரியனார் ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த ஆலயம் உள்ளது. தான் பெற்ற சாபத்தில் இருந்து சாப விமோசனம் பெற அக்னி தேவர் இங்கு வந்து சிவனை வணங்கி வழிபட்டதாக் கதை உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள சிவ பெருமானை அக்னீஸ்வரர் என்றும் பார்வதியை கற்பகாம்பாள் என்றும் அழைக்கின்றார்கள்.

இந்த ஆலயத்தின் மகிமையைக் குறித்துப் மேலுள்ள கதையைத் தவிர வேறு பல கதைகள் நிலவுகின்றன. அதில் ஒன்று இது. ஏதோ ஒரு காரணத்தினால் பூமியில் அவதரித்து இருந்த பார்வதியை சிவ பெருமான் அந்த இடத்துக்கு வந்து மீண்டும் மணந்து கொண்டாராம். அப்போது அந்த திருமணத்தைக் கண்டு களிக்க பிரும்மாவும் அங்கு வந்ததும் இல்லாமல் சிவபெருமானை அங்கு வணங்கித் துதித்தாராம்.

இன்னொரு கதை இது. வாமன அவதாரத்தில் இருந்த விஷ்ணு பாலியிடம் தனக்கு மூன்று அடி நிலம் கேட்டார். அப்போது அதை தந்த பாலி அதற்கு அடையாளமாக கமண்டலத்தில் இருந்து நீரை கீழே விட வேண்டும். ஆனால் அசுரர்களின் குருவாக இருந்த சுக்ராச்சாரியார் அதை விரும்பவில்லை. கமண்டலத்தில் இருந்து நீர் வெளியில் விழாமல் இருக்க தன்னை வண்டாக மாற்றிக் கொண்டு அதன் வாயில் புகுந்து கொண்டு அதை அடைக்க அதைக் கண்ட விஷ்ணு ஒரு தர்பைப் புல்லினால் அந்த தடையை குத்தி உடைக்க தர்பையின் நுனி சுக்ராச்சாரியாரின் கண்ணை குருடாக்கியது. அதன் பின் அனைத்து லோகத்தையும் இரண்டு அடிகளில் அளந்த விஷ்ணு மூன்றாவது அடியை பாலியின் மீது வைத்து அவனை மிதித்துக் கொன்றதும் அதனால் கோபமுற்ற சுக்ராச்சாரியார் விஷ்ணுவிற்கு சாபம் தந்தார். அந்த சாப விமோசனம் பெற்றிட விஷ்ணு அக்னீஸ்வரர் ஆலய இடத்துக்கு வந்து கடுமையாக சிவ பெருமானை துதித்து தவமிருந்து சாப விமோசனம் பெற்றாராம். அது முதல் சிவ பெருமான் தானே அந்த இடத்தில் நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரனாக இருந்து மக்களை ஆசிர்வதித்து சாப விமோசனம் தருவதாக விஷ்ணுவிடம் கூறினாராம்.

சுக்ர பகவான்
ஆகவே அக்னிதேவரைத் தவிர முமூர்த்திகளில் இருவரான விஷ்ணுவும், பிரும்மாவும் சிவனை வழிபட்ட தலம் இது. இந்த ஆலயம் கட்டப்பட்ட காலம் தெரியவில்லை ஆனால் அது சோழர்கள் அல்லது விஜயநகர மன்னர்கள் ஆட்சியில்தான் ஆலயம் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்பது அங்குள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகின்றது. இந்த ஆலயத்தில் வந்து வணங்க பிருமஹத்தி தோஷம் விலகும், சாபங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்பது பொதுவான நம்பிக்கை. மேலும் இது நவக்கிரஹா ஆலயங்களில் ஒன்றான சுக்ரனின் ஆலயம் ஆகும். சுக்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து சிவபெருமானை சுக்ரனாக வழிபட்டு விமோசனம் பெறுகிறார்கள்.