தெரிந்த ஆலயம்…பலரும் அறிந்திடாத வரலாறு – 26
ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்-
கும்பகோணம்

சாந்திப்பிரியா

தமிழ் நாட்டில் உள்ள கும்பகோணம் இரண்டு காரணங்களுக்காக பெருமையாகப் பேசப்படும். ஒன்று சுவையான கும்பகோணம் டிகிரி காப்பி, இரண்டாவது மகாமகம். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருவதே மகாமகத் திருவிழா. அப்படிப்பட்ட கும்பகோணத்தில் உள்ளதே ஆதி கும்பேஸ்வரர் ஆலயம். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு நாயகர் மன்னர்களால் மீண்டும் பழுது பார்க்கப்பட்டு பராமரிக்கப் பட்டது. ஆலயத்தின் உயரம் 128 அடி. அங்கு கும்பேஸ்வரர் மங்களாம்பிகை சமேதமாக அமர்ந்து அருள் பாலிக்கின்றார்.

அந்த ஆலயத்தின் வரலாறு இது. ஒரு முறை உலகெங்கும் பிரளயம் ஏற்பட்டது. அப்போது மேரு மலை மீது பகவான் பிரும்மா ஒரு குடத்தில் அமிர்தத்தையும் தமது மீதி படைப்புக்களையும் போட்டு மூடி வைத்து இருந்தார். அப்போது ஏற்பட்ட பிரளயத்தில் சிவபெருமான் அந்த குடத்தை எடுத்து வெள்ளத்தில் ஓட விட்டார். அது எங்கு சென்று நிற்குமோ அதுவே புண்ணிய பூமியாகும் என்றார். அதுவும் மிதந்துகொண்டு பல இடங்களையும் சென்றடைந்து முடிவாக கும்பகோணத்தில் மகாமகம் குளம் உள்ள இடத்தில் வந்து நின்றது. அப்போது ஒரு வேடன் உருவில் அங்கு வந்த சிவபெருமான் அதை ஒரு அம்பினால் உடைத்தார். குடம் உடைய அமிர்தம் அங்கே கொட்டியது. உடனே அந்த குடத்தில் சிவபெருமான் புகுந்து கொண்டு அங்கேயே சிவலிங்கமாக நின்றார். அமிர்தம் கொட்டிய இடம் மகாமகக் குளமாக ஆதிகும்பேஸ்வரர் லிங்க வடிவாக ஆலயத்தில் அமர்ந்தார்.

மகாமகத்து குளத்து நீரின் மகிமை பற்றி இப்படிக் கூறுகிறார்கள். ஒரு முறை கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி போன்ற ஒன்பது நதிகளும் சிவபெருமானிடம் சென்று உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பலவிதமான பாவங்களையும் செய்துவிட்டு அதற்கு பிராயசித்தம் பெற புனிய நதிகளாக படைக்கப்பட்டு உள்ள தம்மிடம் வந்து தம்முடைய நீரில் குளித்துவிட்டு அந்த பாபங்களை தம்மிடம் விட்டுச் செல்வதினால் அனைத்துப் பாவங்களையும் தாங்கள் சுமக்க வேண்டி உள்ளது எனவும், ஆகவே அதன் வலி தாங்க முடியாமல் உள்ள தமக்கு ஒரு பரிகாரம் கூறுமாறு அவரை கேட்டனர்.

 ஆதி கும்பேஸ்வரர் 

அதற்கு சிவபெருமான் தான் தென் பகுதியில் அமிருதத்தைக் கொட்டி ஒரு புனிதக் குளம் படைத்துள்ளதாகவும் அவர்கள் தம்முடைய நதிகளின் சக்திகளை தம்மீது ஏந்திக் கொண்டு, கன்னிகைகளாக மாறி அங்கு சென்று அந்த குளத்தில் குளித்தால் அவர்களின் சுமைகளும் குறையும் என்று கூறிவிட்டு, அவர்களை முதலில் காசிக்கு வந்து அங்கு தம்மை வணங்கினால் தானே அவர்களை அங்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் காசியில் ஓடினாலும் அவற்றின் பாபங்களும் குறைய வேண்டும் அல்லவா. ஆகவே அந்த அனைத்து நதிகளும் அவர் கூறியபடியே கன்னிகைகளாக உரு எடுத்து காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை வணங்கித் துதிக்க அவர் அந்த ஒன்பது கன்னிகைகளுடன் கும்பகோணத்துக்கு வந்து மகாமகக் குளத்தில் நீராட அவைகளின் பாபச் சுமை அழிந்தது. மகாமகக் குளத்தில் அந்த ஒன்பது நதிகளும், சிவபெருமானுடன் சேர்ந்து குளித்ததினால் அந்த ஒன்பது நதிகளின் சக்திகளும் அந்தக் குளத்துக்கு கிடைத்தது. ஆகவேதான் அந்த மகாமகக் குளத்தில் குளிப்பதினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும், சர்வ பாவமும் தொலைந்து சர்வ மங்களமும் உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது.