கலி ஸ்ரீ ஆஞ்சனேய ஆலயம்
– சாந்திப்பிரியா –
பெங்களூரின் புறநகர் பகுதியான மைசூர் சாலையில் பியாட்டராயன்புரா (Byatarayanapura) எனும் பகுதியில் அமைந்துள்ள பெங்களூரின் பழமையான மற்றும் மிகவும் புனிதமான ஆலயங்களில் ஒன்றே கலி ஸ்ரீ ஆஞ்சனேய (ஸ்ரீ அனுமான்) ஆலயம் ஆகும். கலி என்றால் கன்னடத்தில் காற்று எனப் பொருள். அவர் காற்றுப் போல பறந்து வந்து துயர் தீர்ப்பவர் என்பதினாலும், வாயுவின் (காற்று பகவான்) புதல்வர் என்பதினாலும் ஸ்ரீ காற்று ஆஞ்சேநேயர் என்ற பெயர் வந்தது என்கிறார்கள்.
பெங்களுர் மற்றும் மைசூர் சாலையில் யஸ்வந்தபுரம் நோக்கிச் செல்லும் சாலையில் அந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை அமைத்தவர் ஸ்ரீ வியாசராஜா எனும் துறவியாம். அவர் குறித்து கிடைத்த செய்தி என்ன என்றால் விஜயநகர மன்னர்கள் கர்னாடகத்தில் உள்ள சில பகுதிகளை ஆண்டு வந்தபோது மைசூர் செல்லும் பாதையில் உள்ள சென்னப்பட்டினா என்ற ஊரில் பிறந்த ஸ்ரீ யதிராஜா என்பவர் சன்யாசத்தை ஏற்று ஸ்ரீ வியாசராய என்ற பெயர் பெற்று பெரும் முனிவராக வாழ்ந்து வந்தாராம். துறவி ஸ்ரீ வியாசராயர் ஒரு சிறந்த தத்துவ ஞானி மற்றும் சிறந்த கட்டிடக் கலைஞர். அவர் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கிருஷ்ண தேவராயர் என்ற விஜயநகர மன்னனின் ராஜ குருவாக இருந்தவர், ஹனுமான் உபாசகர். அந்த பெரிய துறவி 732 ஆலயங்களை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு அர்ப்பணித்துள்ளார். அவர் நிறுவிய ஸ்ரீ ஆஞ்சனேய பெருமானின் ஆலயங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ஆந்திர மானிலத்தில் அனந்தபூருக்கு அருகில் உள்ள பெனுகொண்டா எனும் பகுதிகளிலும் பிற கர்நாடகத்திலும் கட்டப்பட்டுள்ளன என்கின்றார்கள். அங்குள்ள ஆலயங்களை தினமும் ஒரு ஆலயம் எனும் வகையில் அவர் நிறுவினார் என்ற செய்தி உள்ளது. அவர் மஹா பண்டிதர் என்பதினால் பல விவாதங்களில் கலந்து கொண்டு 732 பண்டிதர்களை வென்றார் என்றும், அதை குறிக்கும் வகையில் அவர் 732 ஸ்ரீ ஆஞ்சனேய ஆலயங்களை நிறுவினார் என்றும் கூறுகின்றார்கள். இன்னொரு செய்தியின்படி அந்த துறவி தான் சென்று இடங்களில் எல்லாம் இருந்த பாறைகளில் ஸ்ரீ ஆஞ்சனேயரின் உருவத்தை கரித் துண்டினால் (அடுப்பு எரிக்க பயன்படும் கருப்பு நிறக் கல்) வரைந்து அதை பூஜிப்பார் என்றும் அவர் பூஜை முடித்ததும் அந்த ஓவியம் மறைந்து விடும் என்றும், அவற்றில் பல பாறைகளில் இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் அங்கேயே திரு வியாசராஜர் அமைத்த ஆலயத்தில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகின்றது. அவரை ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் அவதாரம் என்பதாகவும் கூறுகின்றார்கள். ஸ்ரீ வியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ஆலயங்களில் ஒன்று ஹம்பியில் சக்ரதீர்த்தத்தில் உள்ள ஸ்ரீ யந்த்ரோதாரக ஹனுமான் ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் மட்டுமே ஸ்ரீ ஆஞ்சநேயர் யந்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார் என்பது மிகவும் விசேஷமானது.
அன்றைய பெங்களுர் மானிலத்தில் ஓடிய விருஷபவதி மற்றும் பஸ்சிமவாஹினி ஆகிய இரு நதிகள் சங்கமித்த இடத்தில் 1425 ஆம் ஆண்டு ஸ்ரீ வியாசராயர் கலி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தை நிறுவியதாக நம்பப்படுகிறது. முன்னர் இப்போது ஆலயம் உள்ள இடத்தில் ஓடிக்கொண்டு யதுர்முக்தி மற்றும் பஷ்சிமவாகினி என்ற இரண்டு நதிகள் கலந்த இடத்தில் ஆலயத்தை அவர் நிறுவினாராம். ஸ்ரீ வியாசராஜர் ஆலயங்களை அவராகவே கட்டியது இல்லை. ஸ்ரீ ஹனுமான் சிலைகளை கண்டறிந்து அல்லது அவருடைய சிலையை வடிவமைக்கச் சொல்லி அவற்றை பிரதிஷ்டை செய்து அங்காங்கே வழிபாடுகளைத் துவக்கினார் என்கிறார்கள். அந்த செய்தியின் அடிப்படையில் கூறப்படுவது என்ன என்றால் இந்த ஸ்ரீ கலி ஆஞ்சேநேயர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஹனுமானின் சிலை அந்த இடத்தில் நதியில் கிடைத்ததாம். அது எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆகவே அதை முதலில் தலை கூரை இல்லாத அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தாராம்.
அவர் நிறுவி உள்ள ஆலயங்களில் உள்ள ஸ்ரீ ஹனுமாரின் சிலைகளில் ஸ்ரீ ஹனுமாரின் கை ஒன்று தூக்கி உள்ளபடியும், வால் வளைந்து வளைந்து தலைக்கு மேல் சென்று சற்று சுருண்டு இருக்கும். வாலின் நுனியில் ஒரு மணியும் கட்டப்பட்டு இருக்கும். அதுவே அவர் நிறுவிய ஸ்ரீ ஹனுமான் என்று புரியும் என்று நம்புகிறார்கள். கிருஷ்ணகிரியில் உள்ள காட்டு வீர ஸ்ரீ ஆஞ்சினேயர் ஆலயத்தில் உள்ள சிலையும் அது போலவே அமைந்து உள்ளது.
கலி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலின் நுழைவாயிலில் உயரமான ராஜகோபுரத்தை (நுழைவு கோபுரம்) காணலாம். ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமிகளையும் தரிசனம் செய்யலாம். நுழை வாயிலைக் கடக்கும்போது ஸ்ரீ ராம பரிவாரம் மற்றும் ஸ்ரீ சத்ய நாராயணரைப் பார்த்து பிரார்த்தனை செய்யலாம். மூலஸ்தான தெய்வம் ஸ்ரீ கலி ஆஞ்சநேய சுவாமி ஸ்ரீராம பரிவாரத்தை நோக்கி காட்சியளிக்கிறார்.
எந்த ஆலயத்திலுமே நுழைந்தால் ஏதாவது ஒரு ஸ்வாமியின் சிலை கண்களில் தெரியும் நிலையில் சன்னதி காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலயத்திலோ சாலையில் அமைந்து உள்ள நுழைவாயில் மூலம் உள்ளே நுழைந்தால் ஸ்ரீ ஹனுமாரின் சன்னதி உள்ள அறையின் பின் பக்க சுவரே காணப்படுகின்றது. வேறு எந்த சுவாமியின் சன்னதியோ அல்லது சிலையோ வாயிலில் தெரிவது இல்லை. ஹனுமார் சன்னதிக்கு எதிரில் இடதுபுறம் காணப்படும் சன்னதியில் ராமர், சீதை தேவி , ஸ்ரீ லஷ்மணர் என அனைவரும் நின்று கொண்டு இருக்க எப்போதும் போல ஸ்ரீ ஹனுமார், ஸ்ரீ ராமபிரானின் பாதத்தடியில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். அங்குதான் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றன. அது போலவே ஸ்ரீ ஹனுமார் சன்னதிக்கு எதிரில் வலதுபக்கம் காணப்படுவது மிகப் பெரிய அளவிலான ஸ்ரீ வெங்கடாசலபதி சிலை ஆகும். இவற்றை தவிர்த்து அந்த ஆலயத்தில் நுழைந்ததுமே வலதுபுறத்தில் உள்ள சன்னதியில் நவகிரகங்கள் காணப்படுகின்றன. அந்த நவக்கிரஹ சன்னதிக்குள் ஒரு மூலையில் இருபக்க சுவர்களையும் தொட்டவாறு குறுக்காக குறுக்குவாட்டில் ஸ்ரீ ராகு மற்றும் ஸ்ரீ கேது பகவான்கள் உள்ளனர் (நவக்கிரஹங்களைத் தவிர) . நவக்கிரகங்களில் உள்ள ஸ்ரீ ராகு கேதுவைத் தவிர எதற்காக அந்த தனி பீடம் அவர்களுக்கு உள்ளது என்பது தெரியவில்லை என்றாலும் பெரும்பாலான பெங்களுர் ஆலயங்களில் நவக்கிரகங்களைத் தவிர ஸ்ரீ ராகு கேதுவிற்கு தனிச் சன்னதிகள் உள்ளதைப் போலவே இங்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு தனி சன்னதி அமைக்கப்பட்டு இருக்கலாம்.
இந்த ஆலயத்தில் உள்ளஸ்ரீ ஹனுமானின் சிலையில் அவருக்கு மீசை உள்ளது ஒரு சிறப்பு அம்சமாகும். ஸ்ரீ ஹனுமானை எந்த இடத்திலும் இந்த கோலத்தில் பார்ப்பது அரிது. வளைந்து வளைந்து தலைக்கு மேல் செல்லும் அவருடைய வால் நுனி சுருண்டு சக்கரம் போல உள்ளது. அதில் ஒரு மணியும் கட்டப்பட்டு உள்ளது போல காட்சி தருகின்றது. வெற்றியைக் குறிப்பது போல மேலே ஏந்தி உள்ள ஒரு கை அபய முத்திரையைக் காட்ட, மற்றொரு கை தாமரை மலரை ஏந்தி உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஆஞ்சனேயரை ஸ்ரீ யதுரமுகி ஆஞ்சனேயர் என்றும் கூறுகிறார்கள். அவருடைய முகம் சிந்தூரினால் (ஆரஞ்சு வண்ணச் சிவப்பு) பூசப்பட்டு உள்ளது.
ஆலயத்தில் நுழைந்தாலே ஒருவரது மனதில் அமைதி கிட்டும், மனம் சாந்தி அடையும். மேலும் அவரை அந்த ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்டால் நினைத்தது நடக்கும், ஆபத்துக்கள் விலகும், காரிய சித்தி கிடைக்கும் என்கிறார்கள். ஆலயத்தில் சனிக்கிழமைகளில் கூட்டம் நிரம்பி வழிகின்றது. பலரும் தத்தம் வேண்டுதலுக்கு ஏற்ப வெற்றிலை மாலை மற்றும் குறிக்கோள்களைக் கொண்ட காகித மாலைகளையும் ஸ்ரீ ஹனுமாருக்குப் படைக்கின்றார்கள். ஸ்ரீ ஹனுமார் சுமார் பத்து அடிக்கும் மேல் உயரமாக இருக்கின்றார். ஒரு பெரிய பாறையில் அவர் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது.