சாந்திப்பிரியா – 18 –
திரிவேணி சங்க
சனீஸ்வரர் ஆலயம்
மறுநாள் காலை கிளம்பி முதலில் நேராக திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வர தேவர் ஆலயத்துக்கு சென்றோம். உஜ்ஜயினியி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஏழு அல்லது எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உஜ்ஜயினியின் எல்லையில் இந்தூருக்கு செல்லும் பாதையில் உள்ள இந்த திரிவேணி சங்க சனி ஆலயத்தில் இரண்டு சனி தேவர்கள் உள்ளார்கள். அவர்களில் ஒருவர் ஏழரை நாட்டு சனி தேவர் மற்றும் இரண்டாமவர் இரண்டரை ஆண்டு சனிஸ்வரர். அவர்களோடு வினாயகரும் காட்சி தருகிறார். இப்படியாக ஒரே சன்னதியில் மூவரும் இருப்பது வேறு எங்கும் கிடையாது. அவர்களது சன்னதியை சுற்றி உள்ள தனித் தனி சன்னதிகளில் மற்ற நவக்கிரக தேவர்கள் அமர்ந்து உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தந்திர சாதனாவின் யந்திர பூஜை செய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டு உள்ளார்களாம். இந்த ஆலயத்தின் இருபுறமும் மூன்று நதிகளான சிப்ரா, காந்தாரி மற்றும் கான் நதிகள் ஒன்றிணைந்து ஓடுகின்றன. சிலர் இதை பாணகங்கா எனும் நதி என்றும் கூறுகிறார்கள். இந்த நதியின் அடிப்பகுதியில் கண்களுக்குத் தெரியாமல் சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் ஓடிக் கலப்பதாகவும் ஐதீகம் உள்ளது (தற்போது சிந்துவெளி நாகரீகத்தில் இருந்த சரஸ்வதி நதி மறைந்து விட்டது என்பது வரலாற்றுச் செய்தி ஆகும்). அமாவாசை சனிக்கிழமைகளில் இங்கு லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சனி பகவானை வழிபடுகிறார்கள்.
விக்ரமாதித்தியன் திரிவேணி சங்கம் -மூன்று நதிகள் கலக்கும் இடம்- என்ற இடத்தில் சனீஸ்வரரின் ஆலயத்தை நிறுவி அங்கு வந்து தவறாது வழிபட்டாராம். விக்ரமாதித்தியனுக்கு சனி பகவான் மூலம் வாழ்க்கையில் ஒரு பாடம் கிடைத்ததினால் அவர் சனி பகவானை உதாசீனப்படுத்தியதே இல்லை என்றும், அவர் தவறாது சனி பகவானை வழிபாட்டு வந்துள்ளார் என்பதும் இந்த ஆலயத்தை அவர் நிறுவியதின் மூலம் வெளிப்படுகிறது.
விக்கிரமாதித்தியனும் ஒரு தேவகணமே என்றாலும் சில கடமைகளை நிறைவேற்றவே அவர் பூமிக்கு வந்து உஜ்ஜயினியில் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். ஆரம்ப கால ஆட்சியில் ஒரு கட்டத்தில் விக்கிரமாதித்தியனுக்கு கர்வம் அதிகமாகி இருந்ததாம். அதற்குக் காரணம் அவருக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி தசை ஆகும். ஆனால் விக்ரமாதித்தியனோ சனி பகவானை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவருக்கு ஏழரை நாட்டு சனி தசை வந்துள்ளதால் சனி பகவானை வணங்கி துதித்து வந்தால் அதன் தாக்கம் குறையும் என ஒரு பண்டிதர் கூறியும் அதை அவர் ஏற்கவில்லை, மாறாக தன்னை சனி பகவானினால் ஏதும் செய்ய முடியாது என்று இறுமாப்பாகக் கூறிவிட்டு அந்த பண்டிதரை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்.
ஒருமுறை ஒரு குதிரை வியாபாரி அவரது அரண்மனைக்கு வந்து தான் ஒரு அற்புதமான குதிரையைக் கொண்டு வந்துள்ளதாகவும், அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு அதை ஒரு தட்டு தட்டினால் வானத்தில் பறக்கும் எனவும், இன்னொருமுறை தட்டினால் கீழே இறங்கும் எனவும் கூறினார். பண்டிதர் உருவில் முன்னர் வந்ததும் இப்போது குதிரை வியாபாரி உருவில் வந்ததும் சனி பகவானே என்பதை விக்கிரமாதித்தியனால் புரிந்து கொள்ள முடியவில்லை. விக்ரமாதித்தியன் அதை வாங்கியவுடன் அதில் ஏறி அமர்ந்து கொண்டு குதிரையை தட்டி விட அது வானத்தில் பார்க்கலாயிற்று. சற்று நேரம் பறந்தப் பின் அதை மீண்டும் தட்டி விட அதுவோ அவரை அரண்மனையில் இறக்கி விடாமல் எங்கோ ஒரு காட்டில் கொண்டு போய் வானத்தில் இருந்தே அவரை கீழே தள்ளி விட்டது. அது எந்த இடம் என்றுகூட விக்ரமாதித்தியனுக்குத் தெரியவில்லை. கீழே விழுந்ததில் உடம்பெல்லாம் நல்ல அடிபட்டு வலித்தது. சற்று நேரத்தில் அந்த வழியே வந்து கொண்டு இருந்த சில திருடர்கள் விழுந்து கிடந்த விக்ரமாதித்தியனை இன்னும் அடித்துப் போட்டு விட்டு அவரிடம் இருந்த அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு போய் விட்டார்கள். எப்படியோ அங்கிருந்து தப்பிப் போய் ஒரு நகரில் ஒருவர் வீட்டில் தங்கியபோது அந்த வீட்டில் இருந்தப் பெண்ணின் நகைகள் திருட்டுப் போய்விட்டன. அவர்களோ விக்ரமாதித்தியன் மீதே சந்தேகப்பட்டு அந்த ஊர் மன்னனிடம் முறையிட அவரும் தண்டனையாக அவரது கைகால்களை வெட்டி விட்டார். விய அனைத்தும் நடந்து கொண்டு இருந்தபோது விக்ரமாதித்தியனுக்கு தன நினைவே இல்லை.
விக்கிரமாதித்தியனும் இப்படி சந்தித்து வந்த பல கஷ்டங்களுக்கும் இடையே எப்படியோ அங்கிருந்து கிளம்பிச் சென்று இன்னொருவரிடம் அடைக்கலமானார். அவருக்கு தான் வந்துள்ள இடம் உஜ்ஜயினிக்கு அருகில் உள்ள இடம் என்பது தெரியாது . அதே நேரத்தில்தான் அவரைப் பிடித்து இருந்த ஏழரை நாட்டு சனியும் விலகும் நேரம் வந்தது. ஒருநாள் அங்கு நடைபெற்ற ஒரு ஆலய விழாவில் ஏற்றப்பட்ட விளக்குகள் காற்றில் அணைந்து விட்டன. அப்போது விக்கிரமாதித்தன் வாயில் இருந்து சற்றும் தாமதிக்காமல் தீப ராக எனும் பாடல் வெளிவர அந்த விளக்குகள் தாமாகவே மீண்டும் எரியலாயின. முற்றிலும் மாறி இருந்த அவருடைய முகமும் தெளிவாயிற்று, அவருடைய அடையாளமும் புரியலாயிற்று. அப்போதுதான் அங்கிருந்தவர்கள் அவர் விக்கிரமாதித்தியனே என்பதை புரிந்து கொண்டு அந்நாள்வரை குதிரை மீது ஏரி வானத்தில் பறந்தவர் திடீர் எனக் காணாமல் போய் விட அவரைத் தேடி அலைந்து கொண்டு இருந்தவர்கள் அவரை அரண்மனைக்கு தூக்கிச் சென்றார்கள். அங்கு சென்றதும் மீண்டும் அதே பண்டிதர் சனி பகவானின் சக்தியை எடுத்துக் கூறி அவர் முன்னாள் தன சுய உருவில் பிரசன்னமானார். அதைக் கண்ட விக்கிரமாதித்தியனும் உடனடியாக சனி பகவானின் கால்களில் விழுந்து நமஸ்கரிக்க மீண்டும் அதே ராஜ தேஜஸ்ஸை விக்ரமாதித்தியன் அடைந்தார். அது முதல் அவர் சனி பகவானை தொடர்ந்து ஆராதித்து வந்ததும் இல்லாமல் சனி பகவானுக்கும் அங்காங்கே ஆலயங்களை நிறுவி வழிபட்டார். அதில் ஒன்றே திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வரர் ஆலயமும் ஆகும்.
ஆலய நுழை வாயில்
சன்னதி நுழை வாயில்- விக்ரமாதித்தியன்
நிறுவிய ஆலயம் என்ற வாசகம்
சன்னதியில் வினாயகர், ஏழரை நாட்டு சனி தேவர்,
மற்றும் இரண்டரை ஆண்டு சனி தேவர்
ஆலய சன்னதியில் பண்டைக் கால
சனிஸ்வரர் படம்
கீழே உள்ளவை நவக்கிரகங்கள். சனீஸ்வரர் சன்னதியை சுற்றி மூன்று பக்கங்களிலும் ஒன்றுக்கு அடுத்து இன்னொன்றாக அமைக்கப்பட்டு உள்ளன. சனீஸ்வரர் சன்னதியின் வலது பக்க மூலையில் இருந்து வரிசைக்கிரமமாக அமைக்கப்பட்டு உள்ள சன்னதிகள்
கேது சன்னதி
குரு சன்னதி
புதன் சன்னதி
சுக்ரன் சன்னதி
சூரியன் சன்னதி
சந்திரன் சன்னதி
மங்கள் எனும் செய்வாய் சன்னதி
ராகு சன்னதி
ஆலயத்தை ஒட்டி மூன்று நதிகள் கலக்கும் இடம்
ஆலயத்தை ஒட்டி மூன்று நதிகள் கலக்கும்
இடம் – இன்னொரு தோற்றம்
…………..தொடரும்