

ஸ்ரீ வீர மஹா காளி ஆலயம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு கிராமமே கமுதி என்பது. அங்குள்ள ஸ்ரீ வீர மஹா காளி அம்மான் ஆலயம் தெற்கத்திய நாடார் பங்காளிகளுக்கு பாத்தியமான ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் ஸ்ரீ வீர மகாகாளி எனப்படுகிறாள். அவள் பார்வதியின் அவதாரம். இந்த உலகில் தீமைகளை அழித்து நல்லதை செய்ய அவதாரம் எடுத்து வந்து உள்ளவள், கருணைக் கொண்டவள், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கனிவுடன் அருளைத் தருபவள் என்று ஆலயத்தினர் கூறுகிறார்கள்.

அந்த ஆலயத்தில் சென்று அவளை வழிபட சிறந்த நாட்கள் : செய்வாய், வெள்ளி, ஞாயிறு, அஸ்தமி, தசமி, நவமி, பௌர்ணமி, அம்மாவாசை, ஆடிப் பூரம், தமிழ் புத்தாண்டு, நவராத்தரி மற்றும் மாசி மகம் போன்றவை.

சுடலை மாடன் ஆலயம்
அது போல தெற்கத்திய நாடார் பங்காளிகளுக்கு கமுதியிலேயே உள்ள சுடலை மாடனின் ஆலயமும் முக்கியமான ஆலயம். சுடலை மாடனை வணங்கித் துதிப்பவர்களில் நாடார்கள், நாயிடு , பிள்ளை, தேவர், செங்குந்த முதலியார், கோனார் போன்ற இனத்தவர் உண்டு. உண்மையைக் கூறினால் சுடலை மடனுக்குப் பெரிய ஆலயங்கள் எதுவும் இல்லை. ஆனால் அவர் பெயர் பெற்ற கிராம தெய்வம் ஆகும். சிவப்பு முக்கோணம் போடப்பட்ட கல்லையே கிராமப்புறங்களில் சுடலை மாடனாக பூஜித்தாலும் அவருக்கு சில உருவங்களும் சில இடங்களில் கொடுக்கப்பட்டு உள்ளன. அந்த சுடலை மாடன் பற்றிய கதையை கமுதி சுடலை மாடனின் ஆலய வரலாற்றில் இப்படியாகக் கூறி உள்ளார்கள்.

சுடலை மாடன் கதை
சுடலை மாடன் சிவன் பார்வதியினால் படைக்கப்பட்டு அவர்களது மகனாக ஏற்கப்பட்டவர். ஒரு முறை கைலாயத்தில் இருந்த பார்வதிக்கு ஒரு மகன் வேண்டும் என்ற ஆசை எழுந்தது. ஆனால் சிவபெருமானோ தான் பார்வதியுடன் உறவு கொண்டால் அகண்டமே ஆடி விடும் என பயந்தார். அதே நேரத்தில் பார்வதியின் ஆசையையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக அவளை பாதாள உலகிற்குப் போய் அங்கு எரிந்து கொண்டு இருந்த ஒரு விளக்கின் பொறியை எடுத்து வருமாறுக் கூறினார். பார்வதியும் பாதாள லோகத்துக்குப் போய் அவர் கூறியபடியே விளக்கின் பொறியை தனது சேலையில் முடித்து வைத்துக் கொண்டு கைலாயத்துக்கு வந்தாள். அங்கு வந்ததும் தனது சேலையில் முடித்து வைத்து இருந்த விளக்கின் பொறியை வெளியில் எடுத்தபோது அது ஒரு உருவமற்ற மொத்தையான ஜடமாக இருந்தது. ஆகவே பார்வதியின் மீது பரிதாபப்பட்ட சிவன் அதற்கு ஒரு உயிரைத் தருமாறு பிரும்மாவிடம் கூற அவரும் சுடலை மாடனுக்கு உயிர் கொடுத்து ஒரு குழந்தை உருவமாக்கினார். முதலில் முடமாகவும் முண்டமாகவும் பிறந்து இருந்ததினால் அதன் பெயர் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த முண்டன் என ஆயிற்று. அதுவே பின்னர் முண்டன் என ஆகி அதுவும் மருவி மாடன் என ஆயிற்றாம்.

அந்தக் குழந்தையை ஆசையுடன் பார்வதி தேவி தாய்ப் பாலைத் தராமல் அமிர்தத்தை ஊட்டி வளர்த்து வந்தாலும் அந்தக் குழந்தை நாளடைவில் அதிக பசி கொண்டு ஆலயத் துவங்கியது. கைலாசத்தின் மயானத்தில் இருந்த (மயானத்தை சுடலை என்றும் கூறுவார்கள்) எரிந்து கொண்டு இருந்த பிணங்களைத் தின்னத் துவங்கியது. அதன் பிறகும் பசி அடங்காமல் போய் விலங்குகள், மரங்கள், பேய்கள் என அனைத்தையும் தின்னத் துவங்கியது. அந்த குழந்தை பிணம் தின்னும் பேயாகவே மாறி விட்டதினால் அதை இனியும் தேவ லோகத்தில் வசிக்க முடியாது என்று எண்ணிய சிவபெருமான் அதை பூலோகத்திற்குப் போய் அங்கு மக்களை ரட்சித்து வருமாறு பூலோகத்திற்கு அனுப்பினார். அவருக்கு சுடலை மாடன் எனப் பெயரிட்டு பூமியில் அவருக்கு வருடத்தில் எட்டு நாட்கள் விழா எடுத்து, உணவு படைத்து ஆராதிப்பார்கள் என்றும், விழாவின் முடிவாக அவர் பக்தர்களின் சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் கூறி அனுப்பினார்.
அவருக்கு சுடலை மாடன் எனப் பெயரிட்டு பூமிக்கு அனுப்பியதும் மனித ரூபம் எடுத்த அவர் பகவதி என்பவளின் வீட்டிற்குச் சென்றார். வந்தவரை யார் என பகவதி விசாரிக்க அவரும் தான் பார்வதியின் மகன் என்றும், அதே நேரத்தில் பூமிக்கு வந்துள்ளதினால் அவளுக்கும் மகன் என்று கூறினார். ஆகவே மிகுந்த செல்வம் இருந்த அவள் தன்னுடைய பொக்கிஷங்களை அவர் பாதுகாப்பதாக உறுதி தந்தால் அவரை அங்கு தங்க வைத்துக் கொண்டு நரபலி தருவதாக உறுதி கூறினாள். அவரும் அங்கு தங்கினார்.

படம் நன்றி:
http://s959.photobucket.com/home/mageshwaran4950/tag/idaikal%20parvathi%20amman
சுடலை மாடன் பிறப்புக் குறித்து உள்ள மற்றொரு கதை உள்ளது. திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டையில் இருந்து பன்னிரண்டு கிலோ தொலைவில் உள்ளது சீவலப்பேரி எனும் கிராமம். அங்கு சுடலை மாடனின் ஒரு ஆலயமும் உள்ளது. தன்னுடையப் பிள்ளையான முருகப் பெருமான் தங்கள் மீது கோபம் கொண்டு பழனிக்கு சென்று விட்டதும் பார்வதிக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அவள் தனது கணவர் சிவபெருமானிடம் அதை பற்றிக் கூற அவரும் அவளை மரகதக் கல்லினால் ஆன விளக்கில் தீபம் ஏற்றுமாறும் அது எரிந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார். விளக்கு எரிந்து திரி எரிந்துபோய் மங்கத் துவங்கியதும் சிவபெருமான் வேண்டும் என்றே அதன் திரியை பெரியதாக்கிக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு நாள் அது பார்வதியின் தொடையில் விழுந்து விட அவள் சதை தீ காயத்தினால் வீங்கி விட்டது. ஆகவே சிவபெருமான் பிரும்மாவை அழைத்து அதற்கு குழந்தை உரு கொடுக்குமாறுக் கூற அதுவும் குழந்தையாக மாறி சுடலை என்ற பெயர் பெற்றது. அது பெரியவனானதும் பசி பசி என எப்போதும் பசியால் துடித்து கைலாயத்தில் சுடுகாட்டில் இருந்த உடல்களைத் தின்னத் துவங்கியது. ஒரு நாள் அதன் உடலில் பிண வாசனை அடிப்பதைக் கண்ட பார்வதி அதைப் பற்றி சிவனிடம் கூற கோபமுற்ற அவர் அதை கைலாசத்தில் இருந்து அனுப்பி விடுமாறு கூறினார். ஆகவே பார்வதி அதனுடன் இருபத்தி ஒரு பிடி சமைத்த உணவை தந்து வனப் பேச்சியை அழைத்து அதை அங்கிருந்து அழைத்துப் போய் விடுமாறு கூறினாள். அந்தக் குழந்தையும் தாமிரபரணியின் அருகில் இருந்த சீவலப்பேரியை அடைந்தது. அங்கு சென்றதும் அந்த சிறுவனுக்கு பசி எடுக்க அங்கு வந்த மசானம் என்ற ஆட்டு இடையனிடம் அவன் கொண்டு வந்த ஆட்டின் பாலைக் கறந்து தருமாறு கேட்க மசானமோ அது பால் தர முடியாத மலடி ஆடு என்றான். சுடலை விடவில்லை அதன் பாலைக் கரக்குமாறு கூற மசானமும் பாலைக் கறக்கத் துவங்க மலட்டு ஆடு நிறைய பாலை தந்ததும் அதை அந்த சிறுவன் குடித்தப் பின் அங்கேயே தங்கத் துவங்கியது.
நிற்க, பூமிக்கு வந்த சுடலை மாடன் பகவதியின் வீட்டில் தங்கினார். இதற்கு இடையில் கேரளத்தை சேர்ந்த புல்லாயன் என்ற மந்திரவாதி பகவதியின் அளவற்ற சொத்தைக் கொள்ளையடிக்க வந்தான். அவன் பல பேய்களை அனுப்பி சுடலை மாடன் தூங்கிக் கொண்டு இருந்த நேரத்தில் பகவதியின் செல்வத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டான். ஆகவே அவனைக் கண்டுபிடித்து செல்வத்தை மீட்க சுடலை மாடன் கேரளாவிற்குப் போனார். அங்கு சென்று அவன் வீட்டைக் கண்டுபிடித்தவர், அந்த மந்திரவாதியின் மகளைக் கண்டு அவளை மணக்க விரும்பினார். அதை அவளிடமே கூறினார். ஆனால் அவள் அவரை மணப்பதற்கு மறுப்பு தெரிவித்தாள். ஆகவே ஒருநாள் அவர் அவளை மயக்கம் அடைய வைத்து அவளை கர்பவதியாக்கினார். அதன் பின்னர் புல்லாயனிடம் அவனுடைய மகளை அவன் கையினாலேயே தனக்கு பலியாகத் தர வேண்டும் என்று கூறிவிட்டு அப்படி செய்யாவிடில் அங்குள்ள அனைவரையும் கொண்டு விடுவதாகக் கூறினார். ஆகவே கருவுற்று உள்ள தனது மகளை வெட்டிக் கொல்ல மனமில்லாத அழுது புலம்பிய புல்லாயன் சுடலை மாடனிடம் கெஞ்சிக் கேட்க சுடலை மாடனும் மனம் இறங்கி அவளை தானே அனைவர் முன்னாலும் மணந்து கொள்ள அவள் பெயர் புல்லாயன் இசக்கி என ஆயிற்று. இப்படியாக பூமிக்கு வந்த மாடனை சுடலை மாட ஸ்வாமி என அழைத்து பூஜித்தார்கள்.

அது முதல் அவர் கிராமங்களின் தேவதையாக ஆனார். அவர் பாதுகாப்பில் இருந்த கிராமங்களில் கிராம மக்கள், பசு, மாடுகள், ஆடுகள் போன்றவற்றை பாதுகாத்து வரலானார் . அவருக்கு மிருக பலிகள் தரப்பட்டு ஆராதிக்கப்பட்டார். சுடலை மாடனின் ஆலயங்கள் பெரும்பாலும் சுடுகாடுகளின் அருகிலேயே அமைந்து இருக்கும். ஆகவே அவருடைய ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்படும் திரு நீரை பூசிக் கொண்டால் பில்லி சூனிய, பேய்களின் தொந்தரவுகள் நம்மை அண்டாது என்பது அபாரமான நம்பிக்கை.

சுடலை மாடன் விழாக்கள்
சுடலை மாடனின் ஆலயங்களில் மாசிகாலரி என்ற வருடாந்தர விழா நடைபெறும். மூன்று நாட்கள் நடைபெறும் அந்த விழா குறிப்பிட்ட ஒரு தினத்தில் ஒரு வருடத்திற்கு ஒருமுறை, அல்லது இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அல்லது பல வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறுமாம். அதில் பல சடங்குகள் உண்டு. அதில் ஒன்று நாடு இரவில் மயானத்திற்கு போய் பூஜித்தல். அதை வேட்டைக்குப் போதல் என்பார்கள். அதில் கோமாரத்தாண்டிகள் எனப்படுபவர்கள் கலந்து கொண்டு தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு வினோதமான முறையில் உடையை அணிந்து கொண்டு நடு இரவில் மயானத்துக்குச் செல்வார்கள். அவர்களை வழி நடத்திச் செல்பவரை கனியான் என்று கூறுவார்கள். கனியான் வழி முழுவதும் இரு புறமும் முட்டைகளை வீசிக் கொண்டே செல்வார். அதை பலி தருதல் என்கிறார்கள். அது சுடலை மாடனின் எல்லையைக் குறிக்குமாம். அதைக் கடந்து எந்த தீய ஆவிகளுமே வந்து கோமாரத்தாண்டிகளுக்கு இடையூறு செய்ய மாட்டார்களாம். அதன் பின் மயானத்துக்குச் சென்று சாமி ஆடியதும், அவர்களை வழி நடத்திச் செல்லும் கனியான் சாமியாடிகளுடன் மயானத்துக்குச் சென்று அங்கு வாழை இலையை போட்டு அதில் உணவுகளை வைத்தப் பின், சில சடங்குகளை செய்துவிட்டு அந்த உணவை உருண்டையாகப் பிடித்து நாலு பக்கமும் வீசுவார். அதற்கு முன்னால் அவர் தனது கையை கீறிக் கொண்டு அதில் இருந்து வெளிவரும் ரத்தத்தை அங்கு ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மிருகங்களின் ரத்தத்துடன் கலந்து அதை சுடலைக்குப் படைப்பார். தன் ரத்தத்தை இலையில் வைக்கப்பட்டு உள்ள உணவுடன் கலந்து அதற்குப் பிறகுதான் நாலு பக்கமும் வீசுவார். அந்த உணவுகள் பூமியில் விழாது என்றும் அவற்றை அங்கு சுற்றித் திரியும் பேய் பிசாசுகள் அப்படியே அவற்றை பூமிக்கு மேலேயே பிடித்துக் கொண்டு போய் விடும் என்றும் நம்புகிறார்கள் . ஆகவேதான் சுடலை மாடனை பேய் பிசாசுகளின் அதிபதி என்றும், அவரால் மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்தி வைக்க முடியும் என்றும் நம்புகிறார்கள். மிருக பலி தரப்படும்போது அவற்றின் ரத்தமும் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைக்கப்படும். இப்படியாக வரலாற்று ஆதாரங்கள் இல்லாத வாய் மொழிக் கதையே கிராமப்புறங்களில் சுடலை மாடனைப் பற்றி வலம் வந்துள்ளது. அவை பெரும்பாலும் சாமியாடிகள் கூறிய செய்திகளின் அடிப்படையில் அமைந்து உள்ளதாம்.
காலப் போக்கில் மிருக பலிகள் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு வருகின்றது என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட சுடலை மாடனும் ஸ்ரீ வீர மஹா காளியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதியில் தெற்கத்திய நாடார் பங்காளிகளுக்கு பாத்தியமான ஆலயத்தில் அவர்களது தெய்வமாக மறந்து உள்ளார்கள். அவர்களைப் பலரும் தமது குல தெய்வமாகவும் வணங்குகிறார்கள்.
- இசக்கி மடன்
- இருளோப்ப சாமீ
- பூல் மாடன்
- சுடலை மாடன் சாமீ
- சுடலை ஈஸ்வரன்
- மாடசாமி
- மாடன்
- மகாராஜா
- சுடலேஷ்வரன்
- சுடலையாண்டி
- சுடலை முத்து
- மாசன முத்து
- முண்டன் சாமி
- மயாண்டீஸ்வரர்
- மாண்டி
- சோலைசேரி (ஆலங்குளம் ) சுடலை மாடன்
- சோலைசேரி (ஆலங்குளம் )இளங்காமணி அய்யனார் சாஸ்தா
- பலவேசகரன் சுவாமி
- ஊசிக்காட்டு சுடலை
- முத்து சுவாமி
- பத்மா பரம ஈஸ்வரன்
- வெள்ளை பாண்டி
- பலவேஷக்காரன்
- கருத்த பாண்டி
- முனியாண்டி
- முனீஸ்வரன்
- கருப்பசாமி

தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி
THERKKATHIYAR NADAR PANGALIGAL TRUST,
No : 27 South Street,
Kamuthi – 623 603,
Ramanathapuram District,
Tamil Nadu, INDIA.
Tel :+91 4576 223123, 223253 / +91 4566 223985
Mobile : +91 9443576001, +91 9486613150, +91 9942999994
Fax : +91 4576 223123
E-Mail : info@kamuthisudalaimadaswamy.com