ஸ்ரீமத் நடனகோபால நாயகி 
ஸ்வாமிகள் வரலாறு 
 சாந்திப்பிரியா 
  படம் நன்றி : http://www.srimannayagi.org/nayagiphotos.htm#
ஸ்ரீமத் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்பவர் மதுரையில் வாழ்ந்து கொண்டு இருந்த நெசவாள தம்பதியினருக்குப் பிறந்தவர். அவருடைய தந்தையின் பெயர் ரங்கா ஐயர் மற்றும் தாயாரின் பெயர் லஷ்மிபாய் என்பது. 1843 ஆம் ஆண்டு அவதரித்த அந்த தெய்வ அவதாரப் புருஷர் பிறந்தவுடன் அவருக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் சேர்த்த அவர் படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். அவர் மனது முழுவதும் தெய்வீகத்திலேயே முழுகி இருந்தது.
 படம் நன்றி : http://www.srimannayagi.org/nayagiphotos.htm#
 
ஆகவே அவருடைய பெற்றோர்கள் அவருடைய வயது பத்து ஆனபோது அவரை ஒரு வியாபாரக் கேந்திரத்தில் எழுத்தாயராக (Clerk) சேர்த்தார்கள். ஆனால் அவரால் அந்த வேலையில் நிலைத்து இருக்க முடியவில்லை . ஆகவே அந்த வேலையை துறந்தார். வேறயு வழி இன்றி அவருடைய பெற்றோர்கள் அவரை தமது குடும்பத் தொழிலான நெசவு வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த வேலையையும் அவரால் திறமையாக செய்ய முடியவில்லை. தந்தையின் கோபத்தை மட்டும் சம்பாதித்துக் கொண்டே இருந்ததினால் தனது பதினாறாம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். எங்கு செல்வது என எண்ணியவர் அங்கிருந்து நேராக திருப்பரங்குன்றத்துக்கு சென்றார். அங்கிருந்த மலைப் பகுதியில் இருந்த ஒரு குகையில் சென்று தவம் செய்வது எப்படி என்பதை முறையாகப் பயிலாமலேயே ஒரு துறவி போல தவத்தில் அமர்ந்து கொண்டார். அது அவருக்கு இயற்கையிலேயே இருந்த தெய்வீகத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து இருந்தது. அவரை தேடிக் கொண்டு இருந்த அவருடைய அன்னை அவரை அங்கு வந்து கண்டு பிடித்தாள். அவரை மீண்டும் வீட்டிற்கு வருமாறு அழைத்த போதும் அவர் அவளுடைய வேண்டுகோளை நிராகரித்து விட்டார். அந்த மலைப் பகுதியில் சுமார் பன்னிரண்டு வருடகாலம் அவர் தவத்தில் இருந்தாராம்.
இப்படியாக பன்னிரண்டு ஆண்டுகள் தவத்தில் இருந்தவர் தவத்தின் இடையே மனதில் தனக்கு கிடைத்தக் கட்டளைப்படி தனது குருநாதரைத் தேடி பரமக்குடிக்கு கிளம்பிச் சென்றார். அங்கு சென்றவர் நாகலிங்க அடிகளாரை சந்தித்தார். நாகலிங்க அடிகளார் பெரும் துறவி. அவரிடம் இருந்து சுமார் பதினெட்டே நாளில் அஷ்டாங்க சித்திகளைக் கற்றறிந்து சாதனை நிகழ்த்தினார். அமர்ந்த நிலையிலேயே பூமியில் இருந்து ஆறு அடி உயரத்தில் எழும்பும் அவருடைய சித்தியைக் கண்ட நாகலிங்க அடிகளார் அவருக்கு சதானந்த அடிகளார் என்ற பட்டதை வழங்கினார்.
 படம் நன்றி : http://www.srimannayagi.org/nayagiphotos.htm#
மெல்ல மெல்ல அவருடையப் புகழ் அனைத்து இடங்களிலும் பரவத் துவங்க சிவகங்காவை சேர்ந்த மன்னர் அவரை தனது அரண்மனைக்கு அழைத்து கவுரவித்தார். அதற்கு முன்னால் அந்த மன்னன் அவரை சோதிக்க எண்ணி அவர் தங்கி இருந்த இடத்துக்கு ஒருநாள் அழகிய நடனக்காரியை அனுப்பினார். ஆனால் சதானந்த அடிகளாரோ அவளை சக்தி தேவதையாகவே கருதி அவளை வணங்கினார். மன்னன் வெட்கம் அடைந்தான்.
இன்னொரு முறை அந்த மன்னன் ஒரு இடத்தில் பூமியை தோண்டச் சொல்லி அதனடியில் ஒரு அறையை அமைத்து ஸ்வாமிகளை அதற்குள் சமாதி நிலையில் அமரச் சொல்லியப் பின் அந்த அறையை சிமென்ட் போட்டு நன்கு மூடச் செய்து அனைத்து இடங்களையும் அடைத்து விடுமாறுக் கூறினான். நாற்பது நாட்களுக்குப் பின் அங்கு ஒரு பெரிய வெடி சப்தம் கேட்டது. அந்த மூடிய அறைக்குள் இருந்து வெளியில் வந்த ஸ்வாமிகள் மதுரையில் கடை வீதியில் சென்று கொண்டு இருந்தார். இதன்மூலம் ஸ்வாமிகளுடைய பெருமை மேலும் அதிகரித்தது. இன்னொருமுறை மதுரையில் அவர் வெளிப் பகுதியில் ஒரு இடத்தில் தங்கி இருந்தார். வெயில் காலம் அது. அப்போது சூரிய ஒழி அவர் மீது படாமல் இருக்க ஒரு பெரிய நாகப்பாம்பு அவர் அருகில் சென்று படமெடுத்து நின்று அவர் மீது வெயில் படாமல் காத்ததாம். இன்னொருமுறை அவரைக் கொள்ளையடிக்கச் சென்ற திருடர்கள் மீது அவர் மணலை தூவ உடனடியாக அவர்கள் கண்களை இழந்தக் குருடர் ஆயினர். இப்படியாக மகிமைகளை செய்து கொண்டு இருந்தவர் அதன்பின் மதுரையில் இருந்துக் கிளம்பி ஆழ்வார் திருநகரி எனும் இடத்தை அடைந்து நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை பாடிக் கொண்டு இருந்த திருமால் பக்தரான வடபாத்ராராயரை சந்தித்து வைஷ்ணவ தீட்ஷைப் பெற்றார்.
மெல்ல மெல்ல அவர் ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை முறையாகக் கற்று முடித்தார். அங்கிருந்து திருபுவனம் என்ற ஊருக்குச் சென்றபோது அவருடைய ஒரு பக்தை அவருக்கு தன்னிடம் இருந்த நகைகளையும் சேலையையும் காணிக்கையாகக் கொடுக்க அந்த நிகழ்ச்சி மூலம் திருமால் தனக்கு அடிமையான ஒரு பெண் ரூபத்தில் சேவை செய்யக் கட்டளை இட்டு உள்ளார் எனக் கருதி அது முதல் சேலைகளை அணிந்தும், தலையில் கொண்டையை வைத்துக் கொண்டும் ஹரிபக்தியில் ஆழ்ந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் , ஸ்ரீரங்கம் போன்ற வைஷ்ணவத் தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்டார். ஸ்ரீரங்கத்தின் ஜீயர் ஸ்வாமிகள் அவருடைய ஹரிபக்தியைக் கண்டு வியந்து அவருக்கு நடனகோபாலனாயகி என்ற பெயரை சூட்டினார். அது முதல் அன்னாரின் பெயர் ஸ்ரீமத் நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று ஆயிற்று. நடன கோபால நாயகி அதன்பின் தன்னை ஹரி பக்திக் கொண்ட ஒரு பெண்ணாகவே கருதி பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்றபடி இருந்தவாறு ஸ்ரீ ரங்கநாதர் மீது நிறையப் பாடல்களைப் பாடினார். அவர் பாடல்கள் சௌராஷ்டிர மொழியிலும் தமிழிலும் இருந்தன. ஹரி பக்தி கானங்காளைப் பாடி அனைவரையும் ஆன்மீகத்தின்பால் இழுத்தார். பல கீர்த்தனைகளை இயற்றினார். அவர் பாடல்கள் மூலமே பக்தியைப் பரப்பி வந்தார்.
இப்படியாக பல இடங்களுக்கும் சென்று ஹரிபக்தியைப் பரப்பி மக்களுக்கு ஆன்மீக பக்தியை வளர்த்து வந்தவர் தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்தார். முதலில் தான் ஸ்ரீரங்கத்தில் சமாதி அடைய வேண்டும் என நினைத்தார். ஆனால் சில காரணங்களினால் அது நடைபெற முடியாததினால் அதனால் தாம் சமாதி அடைவதற்கு இரண்டு வருடத்துக்கு முன்பாகவே தமது சீடர்களிடம் அழகர் கோவில் அருகிலுள்ள காதக் கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தாவனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். காலம் மெல்ல மெல்ல உழன்றது. 1914 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி அவருடைய எழுபத்தி ஒன்றாம் வயதில் வைகுண்ட ஏகாதசி நாளன்று அந்த சமாதிக் குழிக்குள் அமர்ந்து இருந்தவர் மகாவிஷ்ணுவின் திருவடிகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவருடைய ஆலயம் மதுரை மாரியம்மன் தெப்பக் குள மேல் வீதியில் உள்ளது. ஸ்வாமிகளின் ஜெயந்தி விழாவை அவர் கடைப்பிடித்து வந்த நியதிப்படியே, பாடல்களைப் பாடியவாறு, நடனம் ஆடிக் கொண்டே ஆலயத்தை சுற்றி பிரதர்ஷனமாக சென்றபடி ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள்.
ஆலயத்தைப் பற்றிய மேல் விவரங்களுக்கு
தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி

Kuduva.S.Krishnamoorthy & Thangamani Krishnamoorthy
Siddha NayagiSri Kuduva.K.Ganesamoorthy & Mekala Ganesamoorthy & Family
R.R.D 20, Teachers’ Colony, Tirunagar Madurai,
625 006. Phone: 2483931
Email: kuduvamoorthy@yahoo.com (or)
administrator@srimannayagi.org
or
C.K. Ramesh babu(Secretary),
Mobile no: 09940368861,
Landline no : 0452-2330701.
Address : 15p/1, Alagar swamy naidu 1st lane,
South veli street,
Madurai – 625001.