அன்னை மீரா

கேள்வி பதில்

-மொழிபெயர்ப்பு: சாந்திப்பிரியா

1.கேள்வி :- அன்னையின் செயல் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது அல்லவா ?

ன்னை மீரா :- ஆமாம். மனிதர்களுடைய எண்ணங்கள் விரிந்து கொண்டே இருக்க, அவர்களுடைய கண்டு பிடிப்புக்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில அழிக்கப்பட வேண்டியவை. நான் எதையும் அழிக்க விரும்பாதவள். அதற்கு பதில் அழிக்கப்பட வேண்டியவற்றை மனித குல மேம்பாட்டிற்கு பயனுள்ளதாக மாற்றவே முயலுகின்றேன். அதே சமயத்தில் தீமை தருபவை இரகசியமாக எங்கெல்லாம் செயல்படுத்தப்படுகின்றதோ அவற்றை நான் அழிக்க விரும்புகின்றேன். கடவுள் அனைவருக்கும் நல்வழியில் செல்ல ஒரு சந்தர்பத்தைத் தருகின்றார். இந்த பூமியில் பல தெய்வப் பிறவிகள் பிறந்துள்ளனர். அப்படிப்பட்ட நாங்கள் அனைவரும் கடவுளை சென்றடையும் வழிமுறையை வகுத்துத் தருகின்றோம். நல்லறிவு புகட்டுகின்றோம். இந்த பூமியில் தெய்வீகத்தைக் கொண்டு வர முயலுகின்றோம். ஆனால் மனிதர்கள் தங்களுக்கு பிடித்த வழி முறையை தாமாகவே தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு கடவுளும் தங்களுடைய குழந்தைகளை இப்படி செய், அப்படி செய் என வலியுறுத்துவது இல்லை. குழந்தைகளுடைய அன்பு தானாக வெளிப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பம். கடவுள் என்றுமே அன்பு மற்றும் கருணை நிறைந்தவர்.

2. கேள்வி :- நீங்கள் உலகில் உள்ள அனைவருடைய நன்மையைக் கருதி பரமாத்மன் என்ற ஒளியை வெளிக் காட்டி உள்ளீர்கள். அதைத் தவிற உங்களுடைய மற்ற செயல்கள் என்ன என்று விளக்க முடியுமா ?

அன்னை மீரா :- நாங்கள் காட்டும் எல்லா வழிமுறைகளும் தெய்வீகத்தை நோக்கிச் செல்லும் வழிமுறைகளே. ஆகவே நாம் எந்த பாதையில் சென்றாலும் மற்றவர்களுடைய பாதையில் குறுக்கிடக் கூடாது. உதாரணமாக கிருஸ்துவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் போன்ற அனைவருமே அவரவர்கள் விரும்பும் பாதையில் சென்று கொண்டு இருக்க வேண்டுமே தவிற, மற்ற மதத்தினரை வெறுப்பதும், அவர்களுடன் தேவையற்று சண்டை போடுவதும் தவறு. என் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள் மட்டுமே என்னிடம் வரவேண்டும். நான் அவர்களுக்கு தெய்வீகத்தை அடைய வழி காட்டுகின்றேன். அவர்களுக்குத் துயரம் ஏற்படும் பொழுது அவர்கள் மனதில் அமைதியை தந்து மகிழ்ச்சி நிலவ வழி வகுக்கின்றேன்.

3. கேள்வி :- உங்களுடைய முக்கியமான நோக்கம் என்ன ?

அன்னை மீரா :- மனிதர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அனைவரும் அமைதியாக, மனமகிழ்வுடன் வாழ வேண்டும். ஒற்றுமையாக, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திய வண்ணம் இருக்க வேண்டும், மற்றும் இறை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருக்க வேண்டும் போன்ற செயல்களை நிறைவேற்றுவதே என் வேலை. ஒருவர் மன அமைதியுடன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அந்த நிலைக்குச் சென்று விட்டால் தானாகவே இறை வழிபாட்டில் ஈடுபட முடியும்.

4.கேள்வி : அன்னையே, உங்களிடம் வருபவர்களினால் உங்களுக்கு இடையூறு ஏற்படுகின்றதோ என நான் பயப்படுகின்றேன்.

அன்னை மீரா :- என்னைப் பொறுத்தவரை எதுவுமே எனக்கு இடையூறாக இருக்க முடியாது என்பதே உண்மை. இந்த உலகமே என் எதிரில் வந்து நின்றால் கூட என்னுடைய கவனத்தை திசை திருப்ப முடியாது. நான் அனைத்துப் பிரபஞ்சங்களிலும் இருக்கின்றேன். அனைத்து இடங்களிலும் என் கடமைகளை செய்து கொண்டு இருக்கின்றேன். அப்படி நான் என் கடமைகளை செய்து வரும் இடங்களில் இந்த பூமியும் ஒன்றுதான். ஆகவே எனக்கு எப்படி ஒருவர் இடையூறாக இருக்க முடியும்?

5. கேள்வி :- பரமாத்மன் ஒளி என்பதின் மகிமை என்ன?

அன்னை மீரா :- பரமாத்மன் என்ற ஒளியை நான் அடையாளம் கண்டு கொண்டு அதை இந்த பிரபஞ்சத்தில் பயன்படுத்த அழைத்து வந்துள்ளேன். அந்த ஒளி எல்லா இடங்களிலும் இப்போது பரந்து உள்ளது. மனிதர்கள் தூய்மையான மனநிலையில் வந்தால் அவர்களுக்குள் மாற்றத்தை என்னால் விரைவாகக் கொண்டு வர முடியும். இப்பொழுது மனம் திறந்த நிலையில் அவர்கள் இல்லை என்றாலும் காலப் போக்கில் அந்த ஒளியின் சக்தியினால் ஈர்க்கப்பட்டு மக்கள் மனமாற்றம் பெறுவார்கள் என்பது நிச்சயம்.

6. கேள்வி :- பரமாத்மன் என்ற ஒளியை கொண்டு வந்து உள்ளேன் என்பதின் அர்த்தம் விளங்கவில்லை. பரமாத்மன் ஏற்கனவே உலகில் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றார் அல்லவா?

அன்னை மீரா :- பரமாத்மன் என்ற ஒளி அனைத்து இடங்களிலும் பரவி இருந்தாலும் எப்பொழுது, எங்கே, எப்படி அதனுடைய சக்தியை பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஒருவரும் அறிந்திடாத ஒன்று. அந்த ஒளி அனைத்து இடங்களிலும் பரவி இருந்தாலும், அதை எப்படி முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரகசியத்தை நான் இந்த உலகத்தைப் படைத்த அந்த பரமாத்மாவிடம் இருந்தே தெரிந்து கொண்டு வந்தேன். அந்த ஒளியை இதற்கு முன் எவரும் உபயோகித்தது இல்லை. மின்சாரம் போல அனைத்து இடங்களிலும் பரவி உள்ள அதை எப்படி உபயோகிக்க வேண்டும் என்ற இரகசியம் எவருக்கும் தெரியாததினால் அதை முறைப்படி மக்களின் நலனுக்குப் பயன் படுத்த வேண்டும் என்பதற்காக நான் அவதரித்தேன்.

7. கேள்வி:- பிற தெய்வங்களுடன் இணைந்தே நீங்கள் பரமாத்மன் என்ற அந்த ஒளியை கண்டு பிடித்துக் கொண்டு வந்தீர்கள் என்ற கருத்து இருக்கையில், முதல் தடவையாக இப்பொழுதுதான் பரமாத்மன் என்ற அந்த ஒளி இந்த பூமிக்கு வந்து உள்ளது எனக் கூறப்படுவது உண்மையா ?

அன்னை மீரா :- திரு ரெட்டி அவர்கள் மிகவும் புகழ் பெற்ற ஒரு வேத விற்பனரிடம் இந்த கேள்வியை எழுப்பிய பொழுது அனைத்து புராணப் புத்தகங்களையும் ஆராய்ந்துப் பார்த்த அவர் இப்பொழுதுதான் முதன் முறையாக பரமாத்மன் என்ற அந்த ஒளி பூமிக்கு வந்துள்ளது என்ற உண்மையை உறுதி செய்து உள்ளார்.

8.கேள்வி:- அந்த பரமாத்மன் என்ற ஒளியை தெய்வீக மன நிலை உள்ளதினால்தான், உங்களால் காட்ட முடிகின்றதா ?

அன்னை மீரா :- தெய்வீக மனம் என்பதே தவறானது. என்னால் எது நடக்க வேண்டுமோ அது தன்னால் நடக்கின்றது.

9. கேள்வி:- பல்வேறு பிரபஞ்சங்களில் பரவி உள்ள ஒளிகளை நீங்கள் அழைத்து வருகின்றீர்களா, இல்லை பரமாத்மன் என்ற ஒரு ஒளியை மட்டும் நீங்கள் பயன் படுத்துகின்றீர்களா ?

அன்னை மீரா :- நான் பரமாத்மன் என்ற ஒளியுடன் மட்டும் அல்ல மற்ற பிரபஞ்சங்களில் உள்ள ஆண், மற்றும் பெண் தெய்வங்களிடம் உள்ள பிற ஒளிகளுடனும் தொடர்பு வைத்துள்ளேன் .

10. கேள்வி :- நீங்கள் இந்த உலகில் இருந்தால்தான் அந்த ஒளியும் இங்கு வர முடியுமா?

அன்னை மீரா :- ஆமாம்

11.கேள்வி :- நீங்கள் உங்கள் உடலை விட்டு வெளியேறி விட்டால் அந்த ஒளியும் உங்களுடன் மறைந்து விடுமா ?

அன்னை மீரா :- இல்லை. அது தொடர்ந்து கொண்டு இருக்கும். ஒவ்ஒரு அவதாரமும் ஒவ்ஒரு ஒளியை அழைத்து வந்து மக்களுக்கு உதவுகின்றன. பூச்செடிகளில் உள்ள மொட்டுக்குள் மறைந்து இருக்கும் பூக்களைப் போன்ற அந்த ஒளிளை எங்களைப் போன்றவர்கள் மலரச் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும், அனைத்து உயிர் இனங்களிலும் அந்த ஒளி மறைந்து கிடக்கின்றது. அதை வெளிக் கொண்டு வந்து காட்ட வேண்டும். இருதய சுத்தியோடு முனைந்தால் அதை செய்ய முடியும். பரமாத்மன் என்ற அந்த ஒளி அனைத்து இடங்களையும் சென்று அடைய வேண்டும் என்பதே என் விருப்பம்.

பரமாத்மன்

12. கேள்வி :- பரமாத்மன் என்பது என்ன என்பதை விளக்குவீர்களா ?

அன்னை மீரா :- பரமாத்மன் என்பது அழிவற்ற, முடிவற்ற ஒளிச் சக்தி. அதுவே ஒவ்ஒரு ஆத்மா, உயிர் போன்ற அனைத்திற்கும் விவேகம், பேரானந்தம், அமைதி, போன்றவற்றைத் தரும் மூல மையம்.

13. கேள்வி :- பரமாத்மன் மற்றும் அதன் ஒளிக்கு இடையே என்ன வேற்றுமை உள்ளது ?

அன்னை மீரா :- ஒரு விதத்தில் பார்த்தால், அதாவது பூமி, ஆகாயம், நீர், நெருப்பு, தண்ணீர், மற்றும் மிருகங்கள் என அனைத்திலுமே பரமாத்மன் வியாபித்து இருந்தாலும், அவரிடம் இருந்து வெளிப்படும் அந்த ஒளியை சில நேரத்தில் மட்டுமே காண முடியும். அந்த ஒளிக்கு அன்பு, அழகு, சக்தி, பேரானந்த நிலை, ஞானம் போன்றவற்றைத் தரும் குணம் உண்டு. அது இன்றி எதுவுமே இயங்க முடியாது.

14. கேள்வி :- பரமாத்மனின் ஒளி எப்படிப்பட்டது ?

அன்னை மீரா :- அது நிறமற்று இருந்தாலும் அனைத்து நிறங்களையும். அனைத்து பிரபஞ்சத்திலும் உள்ள ஒளிக் கற்றைகளையும் உள்ளடக்கிக் கொண்டு உள்ளது. அந்த ஒளி அனைத்து இடத்திலும், அனைத்திலும் கலந்துள்ளது.

15.கேள்வி:- பரமாத்மன் என்ற அதனுடன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சுய அனுபவம் என்ன ? அவரை உண்மையான உருவில் பார்த்து இருக்கின்றீர்களா ?

அன்னை மீரா :- நான் பரமாத்மனை ஒளி மூலமே பார்த்து உள்ளேன். அதன் நிறம் வெண்மையாக இருந்தாலும் சில சமயங்களில் மற்ற சில நிறங்களுடனும் இணைந்துள்ளதைப் பார்த்து உள்ளேன்.

16.கேள்வி:- அனைத்து ஒளிக் கற்றைகளும் ஒரே இடத்தில் இருந்துதான் வருகின்றனவா ?

அன்னை மீரா :- ஆமாம். ஆனால் ஒவ்ஒரு குருவிற்கும், கடவுளுக்கும் தனிப்பட்ட நிறம் உண்டு. நீங்கள் எவரை ஆராதிக்கின்றீர்களோ அதற்கு ஏற்பவே உங்களுக்கு பலனும் கிடைக்கின்றது.

17.கேள்வி:- மற்ற குருமார்களும் பரமாத்மனுடைய ஒளியைப் பெற்று அவர்களுடைய பக்தர்களுக்கு அருள் புரிகின்றனரா ?

அன்னை மீரா :- மனித உருவில் உள்ள குருமார்கள் அதை அடைந்திருக்க முடியாது. அனைத்து அவதாரங்களும் பரமாத்மனிடம் இருந்தே வெளி வருவதினால் பரமாத்மனின் ஒளியைப் பெற்றுக் கொண்டு வந்தே அவர்கள் தங்களுடைய கடமையை செய்கின்றனர். அதில் ஒரு வேற்றுமை உள்ளது. வந்து வேலை செய்வதும், அந்த ஒளியை பூமிக்கு அழைத்து வருவதென்பதும் வெவ்வெறானது. நான் அந்த ஒளியை அனைத்து உயிரினங்களின் நலனை மனதில் கொண்டு அவர்களைப் பாதுகாக்க பூமிக்கு கொண்டு வருகின்றேன்.

தெய்வீக அன்னை

18. கேள்வி :- கடவுள், தெய்வீக அன்னை மற்றும் சக்தி என்பவற்றுக்கு என்ன வேற்றுமை உள்ளன ?

அன்னை மீரா :- பரமாத்மன் என்பது அனைத்திலும் உள்ளது. சக்தி என்பது அதில் இருந்து சிறு அளவு ஒளியையும் பலத்தையும் பெற்று இயங்கும் ஒரு அங்கம் மட்டுமே. பரமாத்மன் மட்டுமே அனைத்தையும் படைக்கின்றார். அதில் இருந்து வரும் ஆண், பெண் தெய்வங்கள் மற்றும் சக்தி என்பவை மற்றவர்களைப் பாதுகாக்கின்றன. சக்தி என்பது தெய்வீக அன்னையை விட சக்தி வாய்ந்தது. சக்தி என்பதை எதோ ஒரு பெண்ணாக நாம் எண்ணிப் பார்கின்றோமே தவிற அதற்கு என்று எந்த ஒரு உருவமும் கிடையாது. அவளை பரமாத்மன் இல்லாமல் தனியாக ஆராதிக்கின்றோம். பரமாத்மனுடன் கலந்தே உள்ள அவள் என்ன செய்ய விரும்புகின்றாளோ அதை நிறைவேற்றுகின்றாள். அவளை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. அவள் அருளைப் பெற வேண்டும் எனில் அவளிடம் நாம் சரண் அடைந்து விட வேண்டும். ஆனால் தெய்வீக அன்னை என்பவள் ஒவ்ஒருவருடைய வேண்டுதல்களுக்கும் செவி சாய்ப்பவள். அவள் அனைத்து ஜீவன்களையும் நேசிப்பவள். அவற்றை பாதுகாத்து ஒற்றுமை உணர்வையும், அமைதியையும் அவர்களுக்குத் தருபவள்.

19. கேள்வி:- தெய்வீக அன்னை பரமாத்மனிடம் முழுமையாக சரண் அடைந்து உள்ளவளா?

அன்னை மீரா :- தெய்வீக அன்னை மற்றும் பரமாத்மனுக்கு இடையே முழு அளவில் கருத்து ஒற்றுமை உள்ளது. ஆகவே சரண் அடைவது என்ற பேச்சுக்கு அங்கு இடமே இல்லை.

20. கேள்வி :- இந்த நேரத்தில் இந்த பூமியில் இன்னமும் பல தெய்வாம்சம் பெற்ற அன்னையினர் உள்ளனரா ?

அன்னை மீரா :- தெய்வாம்சம் பெற்ற அன்னையினர் நிறையவே உள்ளனர். சிலரைப் பற்றி வெளியில் தெரிந்துள்ளது, வேறு சிலரோ தங்களுடைய அவதாரத்தை இரகசியமாக வைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவருடைய நோக்கங்களும் வெவ்வேறானவை. ஓவ்ஒருவரும் ஒவ்ஒரு தெய்வீக சக்தியுடன் இணைந்து உள்ளனர். என்னுடைய நோக்கங்களோ அனைத்து இடங்களிலும் பரந்து விரிந்துள்ளது. நான் அனைவருக்கும் எல்லா விதத்திலும் உதவி வருகின்றேன். அது மட்டும் அல்ல. நான் ஸ்ரீ அரபிந்தோ என்ற அன்பு மிக்க இனிய அன்னையுடன் இணைந்தும் என் கடமையை செய்து வருகின்றேன்.

அன்னை மீரா

21. கேள்வி: நீங்கள் அவதரித்த பொழுது தெய்வம் என்பதை உணர்ந்து இருந்தீர்களா ?

அன்னை மீரா :- இங்கு வரும் முன்பே நான் யார், எப்பொழுது அவதரிப்பேன், என் வேலை என்ன என்பது அனைத்தையும் அறிந்திருந்தேன். அன்னை என்பவள் காலத்தைக் கடந்து நிற்பவள்.

22. கேள்வி: இதற்கு முன் நீங்கள் மனித உருவில் அவதரித்து உள்ளீர்களா ?

அன்னை மீரா :- இல்லை.

23. கேள்வி: ஸ்ரீ அரபின்தோ அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் எழுதி உள்ள மஹேஷ்வரி, மஹாசரஸ்வதி, மஹாலஷ்மி, மற்றும் மஹாகாளி போன்ற தெய்வங்களில் எவருடைய அவதாரம் உங்களுடன் ஒத்துப் போகின்றது? அவர்களைத் தவிற வேறு என்ன அவதாரங்களாக நீங்கள் உள்ளீர்கள் ?

அன்னை மீரா :- நான் அந்த நால்வரின் குணங்களையும் கொண்டவள். அவர்களில் துர்கையின் குணம் என்னிடம் அதிகம் உண்டு. துர்கை மற்றவர்களை விட மிகவும் சாந்தமானவள். துர்கை தன்னுடைய குழந்தைகளை கண்டிப்பதை விட அதிக பாசம் செலுத்துபவள். மன்னிக்கும் குணம் கொண்டவள். மக்களை அதிகம் நேசிப்பவள். துர்கை எது தேவையற்றதோ அதை மட்டும் அழிப்பாள். அவள் உங்களிடம் எந்த அளவுக்கு இறங்கி வரவேண்டும் என நீங்கள் நினைக்கின்றீர்களோ அந்த அளவு கீழே இறங்கி வருவாள். அவளை ஒரு ஆசானாக, அன்னையாக ஏன் தந்தையாகக் கூட காணமுடியும்.

24. கேள்வி: நீங்கள் உங்களை மாற்றிக் கொள்வது உண்டா?

அன்னை மீரா :- நான் உடலளவில் மட்டுமே மாறுதல்கள் பெறுகின்றேன். அதனால்தான் என்னைப் பற்றிய உங்களுடைய எண்ணங்கள், மாறுபட்டுக் கொண்டே இருக்கின்றது. நான் இன்றல்ல நேற்றல்ல என்றுமே ஒரே நிலையில் இருக்கின்றேன்.

25. கேள்வி: பரந்தாமனிடம் இருக்கும் நேரத்திலும் உலக வாழ்விலும் நீங்கள் பெற்ற அனுபவம் என்ன ?

அன்னை மீரா :- நான் உடலளவில் இங்கு அதாவது தெல்ஹேமில் (ஜெர்மனி) இருந்தாலும் என்னுடைய விருப்பத்தின்படி எனக்குள்ள சக்தியினால் பல இடங்களுக்கும் சென்று கொண்டுதான் இருக்கின்றேன். ஏன் எனில் எங்கிருந்தாலும் எனக்கு இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் வரும் காலத்தைப் பற்றிய நிகழ்வுகள் தெரியும். ஆக அனைத்தும் நான் ஒருவளே என்பதினால் இரண்டு நிலைகளிலும் வித்தியாசம் தெரிவதில்லை.

26. கேள்வி: நீங்கள் அடிக்கடி ‘ எனக்கு பிரிவு இல்லை’ என்று கூறுகின்றீர்களே. அதன் உள் அர்த்தம் என்ன?

அன்னை மீரா :- நான் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும் எனக்குள் எந்த வேற்றுமையும் இல்லை. என்னைப் பொறுத்த மட்டில் பேச்சு, வேலை என அனைத்துமே,தெய்வீகமாகவே உள்ளது என்பதை அப்படிக் கூறுகின்றேன்.

27. கேள்வி:- பல வருடங்களுக்கு முன்பு இறந்து போனவர்களின் ஆத்மாவுடன் உங்களால் தொடர்பு கொள்ள முடியுமா ?

அன்னை மீரா :- அந்த ஆத்மா எந்த நிலையில் எங்கு உள்ளது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அது எங்கே போய் பிறக்க இருக்கின்றது என்பதைக் கூற முடியாது.

28. கேள்வி: ஒரு அவதாரம் என்றால் அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி உள்ள கணிணி போல அனைத்தும் தெரியும் என மக்கள் நினைக்கின்றார்களே. சரியா ?

அன்னை மீரா :- நான் ஒரு அன்னையின் அவதாரம். எனக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே தெரியும். அதை விடுத்து நான் செய்யும் மற்ற வேலைகளில், உதாரணமான சுத்தியலை எங்கே வைத்தேன் என்பது போன்றவற்றை நான் தேடினால் ஒழிய எனக்கு தெரிய வராது.

29. கேள்வி: உங்களுடையத் துன்பங்களை எங்களுக்குக் கொடுத்து அதை குறைத்துக் கொள்ளலாம் அல்லவா ?

அன்னை மீரா :- உங்களுடைய துயரத்தை என்னிடம் நீங்கள் தர முடியும், ஆனால் என் துயரத்தை நான் பரமாத்மனிடம் மட்டுமே கொடுக்க முடியும். ஒரு அவதாரம் மனிதர்களைப் போல துயரங்கள் அடைந்தாலும் அந்த அவதாரமே அதை தாங்கிக் கொள்ள வேண்டும். இதுவே இந்த மாயை நாடகத்தின் ஒரு காட்சி. எனக்கு மேலுள்ளவன் என்ன சொல்கின்றாரோ அதன்படித்தான் நான் நடக்க வேண்டும்.

30. கேள்வி: மீண்டும் நீங்கள் பூமியில் அவதரிப்பீர்களா ?

அன்னை மீரா :-அது எனக்குத் தெரியாது. அது பரமாத்மனின் விருப்பத்தையும் நான் மீண்டும் வர வேண்டும் என பிரார்தனை செய்யும் மக்களின் சக்தியையும் பொறுத்தது.

31. கேள்வி: உங்களுடன் உள்ள சில பக்தர்கள் முன் பிறவியில் உங்களுடன் அவதரித்து உள்ளனரா?

அன்னை மீரா :- இல்லை. ஆனால் அவர்கள் பலருக்கும் இறைவீகத்துடன் தொடர்ப்பு இருந்திருக்கும். அனைத்து தெய்வங்களுக்கும் சக்தி ஒன்றுதான் என்றாலும் அவர்கள் தானாகவே தமக்குப் பிடித்த பக்தர்களை ஏற்கின்றனர்.

32. கேள்வி: உங்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள எந்த பக்தர்களாவது முயற்சி செய்வதாக நீங்கள் எண்ணியது உண்டா?

அன்னை மீரா :- பலர் என்னை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முயன்றாலும் அவர்களிடம் நான் சிக்குவது இல்லை. நான் என்றுமே சுதந்திரமானவள்.

33. கேள்வி: பல பக்தர்கள் மற்றவர்களை விட தம்மை நீங்கள் அதிகம் நேசிப்பது போலவும், தம்மை வெறுப்பது போலவும் உணருகின்றனர். அப்படிப்பட்ட பக்தர்களைப் பற்றிய உங்களுடைய அபிப்பிராயம் என்ன ?

அன்னை மீரா :- என்னிடம் வந்து இணைந்த பலருக்கும் இப்படிப்பட்ட எண்ணம் எழுவது இயற்கை. ஆனால் நான் அப்படி எவரையும் அணுகுவது இல்லை. எவரிடம் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை அவர்களிடம் இருந்து அடைய முயலுகின்றேன். என்னைப் பொறுத்தவரை நான் அனைவரிடமும் காட்டும் அன்பின் அளவு ஒன்றுதான். சில நேரங்களில் செல்லும் பாதை தவறானது என்றாலும் கூட தான் செய்வதே சரி என விதண்டாவாதம் செய்து நேரத்தை வீணடிப்பவர்களிடம் நான் கோபம் அடைவது உண்மையே. ஆனால் அப்படிப்பட்ட கோபம் எப்பொழுதாவது மட்டுமே எனக்கு வரும். ஆனால் கெடுதல் செய்பவனைக் கண்டு நான் கோபம் அடையாமல் அவர்களைத் திருத்தவே முயலுகின்றேன்.

அவதாரங்கள்

34. கேள்வி: கடவுளிடம் இருந்து பூமிக்கு வந்து அவதரிக்கும் வெவ்வேறு அவதாரங்கள் ஒரே தெய்வத்திடம் இருந்து வருகின்றனவா இல்லை வெவ்வேறு தெய்வங்களைச் சார்ந்ததா ?

அன்னை மீரா :- தெய்வங்களும் அவதாரங்களும் வேறு வேறானவை அல்ல. தெய்வங்களிடம் இருந்து வரும் அவதாரங்கள் அதே தெய்வத்தின் அனைத்து சக்திகளையும் பெற்றே வருகின்றன. அவதாரங்கள் மானிட உருவம் கொண்டவை என்பதால் நம்மால் பார்க்க முடிகின்றது. ஆனால் தெய்வங்கள் அனைத்திலும் இருந்தாலும் உருவம் அற்றவை. ஓவ்ஒரு அவதாரமும் பரமாத்மனின் அங்கமான தெய்வங்களின் மறு பிறப்பே ஆகும்.

35. கேள்வி: மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் அவதாரங்களை ஏன் நம்புவதில்லை ?

பதில்:- மேற்கத்திய மக்கள் பல்வேறு பொருட்களின் மீது பற்று வைத்து அதை அடைய தேவையான வழிமுறையை ஏற்று நடப்பவர்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி, அதை அடைய ஒரு வாழ்கை முறையினை கடைபிடித்தபடி நடக்கின்றனர். அதனால்தான் அவதாரங்களை அவர்கள் நம்புவதில்லை. அவதாரங்கள் அங்கெல்லாம் சென்றால் கூட அவர்களை வந்து தரிசிக்கும் மனநிலையோ நேரமோ அவர்களுக்கு இல்லை.

36. கேள்வி: அனைத்து தெய்வங்களும் ஒரே உடலில் அவதரிக்க முடியுமா ?

அன்னை மீரா :- அளவே இல்லாத பரமாத்மன் கூட குறிப்பிட்ட ஒரு மனித உடலில் அவதரிக்க முடியும் என்று கூற முடியாது. ஒரு அவதாரம் என்பது கடவுளின் ஒரு சிறிய பகுதியே. ஆனால் தேவைப்படும் பொழுது எந்த ஒரு நிலையிலும் அவர்களால் அனைத்து சக்தியையும் பெற்றுக் கொள்ள முடியும்.

37. கேள்வி: அவதாரங்களுக்கு கர்ம வினைகள் இல்லை எனும் பொழுது அவர்கள் ஏன் உடல் நலமின்றி அவதிப்பட வேண்டும்?

அன்னை மீரா :- அவதாரங்களுக்கும் சில கர்மாக்கள் உண்டு. அதற்குக் காரணம் அவர்கள் மானிடர்களுடன் இருந்தபடி அவர்களைப் போன்ற வாழ்க்கை முறைகளில் வாழ்கின்றனர். அதனால்தான் உலக நியதியின் சட்டங்களுக்கு அவர்கள் உடல் உட்படுகின்றது. பல நேரங்களில் அந்த அவதாரங்கள் தங்களுடைய பக்தர்களின் நலனில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தம்மை கவனிப்பது இல்லை. அந்த நேரத்தில் பக்தர்களின் கர்மாக்களை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அவதாரங்கள் சுமக்கும் வேதனைகள் அவர்களை உண்மையில் துயரப்படுத்துவதில்லை. அவர்கள் சுமக்கும் உடல் மட்டுமே அதை அனுபவிக்கின்றது.

38. கேள்வி:- அவதாரங்களுக்கும் தானாக ஆன்மீக விழிப்புணர்வு பெற்ற குருமார்களுக்கும் என்ன வேறுபாடு உள்ளது?

அன்னை மீரா :- அவதாரங்கள் தெய்வத்திடம் இருந்து வந்துள்ளன. குருமார்கள் தெய்வத்திடம் செல்கின்றனர். அவதாரங்கள் தெய்வத்திடம் இருந்தவாறு தெய்வீகத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் குருமார்கள் முதலில் அறியாமையினால் பின்னப்பட்டு இருந்தவர்கள். தியானம், ஜெபம் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து கொண்டு கடுமையாக உழைத்தப் பின் அதன் பலனாக ஆன்மீக விழிப்புணர்வு பெறுகின்றனர். அவர்கள் மற்றவர்களையும் தங்களைப் போன்றே கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பதுண்டு. அவர்களுக்கு தெய்வீக அவதாரங்களைப் போன்ற பொறுமைக் குணம் இல்லை. அவதாரங்களினால் மட்டுமே எதையும் விரைவாக மாற்றி அமைக்க முடியும்.

சக்தி ஓளி

39. கேள்வி: உங்களிடம் வருவர்கள் உங்களிடம் உதவி கேட்கும் பொழுது சரி எனக் கூறிவிடுகின்றீர்கள். அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவுகின்றீர்கள் ?

அன்னை மீரா :- சக்தி ஒளியில் பல வகையானவை உண்டு. அவர்களுக்குத் தேவையான சக்தி ஒளியை நான் அவர்களிடம் அனுப்பி வைக்கின்றேன்.

40. கேள்வி: எத்தனை வகையான சக்தி ஒளிகள் உள்ளன ? அவற்றின் தன்மை என்ன ?

அன்னை மீரா :- தங்க நிறம் மற்றும் வெள்ளை நிறக் கதிர்கள் பரமாத்மனின் ஒளிக் கற்றைகள். அவைதான் முக்கியமானவை. மற்ற ஒளிக் கதிர்கள் அவதாரங்கள், ஆண், பெண் தெய்வங்களைச் சார்ந்தவை. துர்கையின் ஒளிக் கதிர் சிவப்பானது, அது பலத்தைக் தரும். கிருஷ்ணருடையது நீலம், அது அறிவையும் அன்பையும் தரும். ஊதா நிறம் உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். பச்சை நிறக் கதிர் இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான சக்தியையும், காவி நிறம் (ஆரஞ்ச்) தியாகத் தன்மையையும் சன்னியாசத்தையும் தரும் ஒளிக் கதிர்கள்.

41. கேள்வி: நான் புரிந்து கொண்டவரை அன்னையிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட சமயத்தில்தான் பரமாத்மன் அல்லது மற்ற ஒளிக் கதிர்கள் வெளி வரும் என நினைக்கின்றேன். ஆகவே அவர்களுக்கு கிடைக்கும் அந்த சக்தி அனைத்து நேரத்திலும் ஒரே அளவுடன் இருப்பது இல்லை என்பது சரியா ?

அன்னை மீரா :- மனிதர்களால் சக்தி ஒளிக் கதிர்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்க முடியாது. அதை சில நேரத்தில் மட்டுமே அதாவது தரிசனம் பெறும் நேரங்களில் மட்டுமே பெற முடியும். தரிசனம் மற்றும் நமஸ்கரிக்கும் நேரத்தில் உலக மற்றும் ஆன்மீக வாழ்விற்கிடையிலான பக்குவத்தில் சக்தி ஒளி தரப்படுகின்றது. தரிசன நேரங்களைத் தவிற ஒரு சில ஒரு பக்தனுக்கு ஆன்மீக அறிவு தரவேண்டி சக்தி ஒளி அபூர்வமாக தரப்படுகின்றது.

42. கேள்வி: அந்த ஒளியை நாம் எப்படிப் பெறுகின்றோம் ? கிடைத்ததை எப்படி உணர்வது?

அன்னை மீரா :- ஒவ்ஒருவருக்கும் ஒவ்ஒரு விதமாக ஒளி செலுத்தப் படுகின்றது. சிலருக்கு தலை மூலம், சிலருக்கு விரல்கள் மூலம் பல விதத்திலும் சக்தி ஒளி செலுத்தப் படுகின்றது. எப்படி கிடைக்கும் என்பதை எப்படி விவரிப்பது? முடிவுதான் முக்கியம். அந்த ஒளி நமக்கு கிடைத்ததும் நம் உடம்பே எடையின்றி இருப்பது போலவும் பூரண மன அமைதியுடன் இருப்பது போலவும் இருக்கும். பரமாத்மனின் ஒளியை கண்களால் காணவும் உணரவும் முடியாமல் இருக்கும். அந்த சக்தி ஒளியை ஒருவர் எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். மேலோட்டமாகத் தெரியும் ஒளி சற்று எரிச்சலைத் தரும். ஆகவே அதைப் புரிந்து கொண்டு நேரத்தை வீணடிக்காமல் கிடைக்க இருக்கும் நன்மையை பெற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தரிசனம்

43. கேள்வி:- உங்களுடைய தரிசன நிகழ்ச்சி ஏன் பாடல்கள் கூட இல்லாத எளிமையான ஒன்றாக உள்ளது ?

அன்னை மீரா :- மக்கள் மிகவும் துடிப்பானவர்கள். அவர்களினால் அமைதியாக நீண்ட நேரம் அமர்ந்திருக்க முடியாது. ஆனால் மௌனமாக இருக்கும் பொழுது அவர்களுடைய கவனம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்துவிடும். என்னுடைய போதனை தெய்வீகத்தைத் தருவதுதான். ஆக எவருக்கு என்ன தேவையோ அதை நான் தருகின்றேன். பரமாத்மன் மௌனமானவர். கடவுளும் மௌனமானவரே. அனைத்துமே மௌனத்தில் இருந்துதான் தோன்றுகின்றன. ஆகவே உண்மையான பேரானந்தம் வார்த்தைகளில் கிடைக்காது.

44. கேள்வி:- உங்கள் முன்னிலையில் வந்து நாங்கள் நமஸ்கரிக்கும் நேரத்தில் நீங்கள் இரு கைகளினாலும் எங்களுடைய தலையை பிடித்துக் கொள்கின்றீர்களே அப்போது என்ன நடக்கின்றது ?

அன்னை மீரா :- ஒவ்ஒரு மனிதரின் பின் பகுதியிலும் உச்சந் தலை முதல் கணுக்கால் வரை மெல்லிய வெள்ளைக் இழை ஒன்று ஓடுகின்றது. உண்மையில் இரண்டு ரேகைகள் கணுக்காலில் இருந்து மேல் எழும்பி கால் வழியே சென்று முதுகுத் தண்டில் ஒன்றாகி மீண்டும் மேல் நோக்கிச் செல்கின்றது. அந்த இழை மனித தலை முடியை விட மெல்லியது. அதில் பல முடிச்சுக்கள் உள்ளன. அதைதான் தெய்வம் அவிழ்த்து விடுகின்றது. அதை அவிழ்த்து விடும் பொழுது மிகவும் கவனமாக இல்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். நான் உங்கள் தலையை பிடித்துக் கொள்ளும் பொழுது அந்த முடிச்சுக்களை மெல்ல அவிழ்த்து விடுகின்றேன். அதை தவிற உங்களுடைய சாதனாக்களில் எழும் மற்ற பிரச்சனைகளையும் களைந்து விடுகின்றேன்.

அதே சமயம் உங்கள் தலையை நான் தொடும் நேரத்தில் நான் செலுத்தும் சக்தி ஒளி அந்த இழைகள் வழியே சென்று மேல் நோக்கி எழும்புகின்றது. அப்போது நீங்கள் கடைபிடித்து வந்த சாதனாக்களின் அளவை எடை போட்டுக் காட்டும் கருவி போல அது செயல்படுகின்றது. எந்த விதமான முன்னேற்றமும் நீங்கள் அடையவில்லை எனில் அந்த ஒளி எந்த அளவு உங்களிடம் குறைபாடு உள்ளதோ அந்த அளவுக்கு மீண்டும் கீழே இறங்கி விடும். கணுக்காலில் இருந்து மேலெழும்பும் அந்த ஒளியுடன் கூடிய இழை தரும் பல எண்ணங்களும், அனுபவங்களும் ஒருவருக்குக் கிடைக்கின்றன. அந்த ஒளி தலையை எட்டி விட்டால் பரமாத்மனைக் காணும் பாக்கியம் கிடைக்கின்றது. அந்த ஒளி தலைக்கு மேல் சென்று விட்டால் பரமாத்மனுடன் நிரந்தரமான தொடர்பு ஏற்பட்டு விடும்.

நான் முன்பு கூறியது போல உங்களுடைய ஆர்வம் குறையத் துவங்கி விட்டால் அந்த இழையும் கீழே இறங்கத் துவங்கி விடும். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் கடை பிடித்து வரும் சாதனாவை நீங்கள் ஒரு நாள் விட்டு விடுவீர்கள். அது மிகவும் சிக்கலானது அல்ல, நிவரத்தி செய்யக் கூடியது. அது போல முன்புறம் இரண்டு சிவப்பு இழைகள் ஓடுகின்றன. அந்த சிவப்பு இழைகளும் வெள்ளை இழையும் ஒன்று சேரும் நேரத்தில் ஒருவன் பற்றற்றவனாக ஆகி விடுவான். ஆனால் அதை தெய்வ சக்தி பெற்றவர்கள் மட்டுமே அதை அடைய முடியும். தொடர்ந்து சாதனாக்களை செய்து வந்தால் அந்த அனுபவத்தினால் அந்த இழைகள் கீழே விழாமல் இருக்கும். சிவப்பு இழை முழுமையாக வளர்ச்சிப் பெற்றால் பெரிய வளர்ச்சி பெறலாம். வெள்ளை இழைகளின் வளர்ச்சியும் அமானுஷ்ய சக்தியை அடைய வழி வகுக்கும். அமானுஷ்ய சக்தியைப் பெறும் வழி ஏற்பட்டு விட்டாலும் அது மீண்டும் மறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த வழி திறந்து விட்டால் சாதானாக்களை செய்வது எளிதாகிவிடும். அந்த இரண்டு வண்ண இழைகளும் உங்களுக்கு அமானுஷ்ய சக்தியைப் பெறும் வழிக்கு உதவும். அந்த இழைகளை ஒரு செடி என்றால் அமானுஷ்ய சக்தி அந்த செடியின் மலர் போன்றது என்று கூறலாம்.

45. கேள்வி:- உங்கள் முன்னிலையில் வந்து நாங்கள் நமஸ்கரிக்கும் நேரத்தில் உங்கள் கண்களையே நோக்குகின்றோம். அப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள் ?

அன்னை மீரா :- உங்களுடைய உள்ளத்தின் ஒவ்ஒரு மூலையையும் நோக்குகின்றேன். உங்களுக்கு என்ன தேவை, எந்த இடத்தில் இருந்து சக்தி ஒளி தர இயலும் எனப் பார்த்தவாறு உங்கள் உடல் முழுவதும் சக்தி ஒளியை பாய்ச்சுகின்றேன். அதன் மூலம் உடம்பில் உள்ள அனைத்து அடைப்புக்களையும் திறக்கின்றேன். என் எதிரில் உண்மையுடன் உட்கார்ந்து இருந்தால் உங்களாலும் அதைக் காண முடியும்.

46. கேள்வி:- உங்கள் முன்னிலையில்; வந்து நாங்கள் நமஸ்கரிக்கும் நேரத்திலும் நீங்கள் தரிசனம் மட்டுமே தரும் நேரத்திலும் உங்கள் செயல்பாடு எத்தகையதாக இருக்கும் ?

அன்னை மீரா :- இரண்டும் வித்தியாசமான நிலைகள். நமஸ்கரிக்கும் பொழுது உங்கள் உள்ளே புகுந்து ஆன்மாவை கட்டுப்படுத்துகின்றேன். தரிசனத்தில் உங்களுடைய வாழ்க்கை முறையை மேலாக்கிக் கொள்ள வழிமுறைகள் கூறி உதவி புரிகின்றேன்.

47. கேள்வி:- தரிசனம் தரும் பொழுதும் சக்தி ஒளியை பயன் படுத்துகின்றீர்களா இல்லை வேறு வழிமுறையைப் பின்பற்றுகின்றீர்களா ?

அன்னை மீரா :- சக்தி ஒளியைக் கொண்டே நான் உதவுகின்றேன்.

48. கேள்வி:- நீங்கள் தரும் சக்தி ஒளி நிறைய கிடைத்து விட்டால் அதில் ஒரு பகுதியை கஷ்டப்படும் மற்றொருவருக்கு மாற்ற முடியுமா ?

அன்னை மீரா:- உங்களால் நான் தரும் சக்தி ஒளியை அடுத்தவருக்கு கொடுக்க முடியாது.

49. கேள்வி:- ஆன்மீக வாழ்வினை மேற் கொள்ள நினைக்கும் பலருக்கும் பாலின உணர்வு குறித்து சந்தேகம் உள்ளது. ஆன்மீக மார்கத்தில் செல்லும் முன் அதை முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டுமா ?

அன்னை மீரா :- ஆன்மீகத்திற்கும் பாலின உறவிற்கும் சம்மந்தம் இல்லை. இரண்டுமே வேறுவேறானவை. ஆன்மீகத்தில் ஈடுபடுபவர் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய விஷயம் அது.

50. கேள்வி:- கரு கலைப்பு பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

அன்னை மீரா :- கரு அடையாமல் இருப்பது கூட கரு கலைப்பைப் போன்றதே. கரு கலைப்பு பற்றி பொதுவான கருத்துக் கூற முடியாது. அது சந்தர்பத்தைப் பொறுத்தது. நிறைய குழந்தைகள் மற்றும் வறுமையில் உள்ள வீட்டில் இன்னொரு குழந்தை பிறந்தால் அது அந்த வீட்டில் உள்ள மற்ற குழந்தைகளுக்குக் கொடுக்கும் தண்டனைப் போல அமைந்து விடும். ஆனால் அதே சமயத்தில் விருப்பம் அற்றவர்களுக்கு கரு கலைப்பு செய்யச் சொல்லி கட்டாயப் படுத்துவதும் தவறு.

51. கேள்வி:- இரட்டையர்கள் பிறப்பது நல்லதா ?

அன்னை மீரா :- முன்னொரு பிறவியில் இருவரும் பிரிக்கப்பட்டதினால் ஏற்பட்ட சோகத்தை நிவர்த்தி செய்யவே இரட்டையர்களாகப் பிறவி எடுக்கின்றனர்.