சங்குகன்னர் யார் என்றால் பார்வதி குளித்துக் கொண்டு இருக்கும்போது  அவர் குளிக்கும் இடத்தை பாதுகாத்து வந்த சிவகணங்களில் ஒருவர்.  ஒருமுறை பார்வதி குளித்துக் கொண்டு இருக்கையில் உள்ளே நுழைய முயன்ற சிவபெருமானை தடுத்து நிறுத்தியதினால் சிவபெருமானிடம் சாபம் பெற்ற சிவகணம் என்றும் அவரே பாலசித்தர்  என்றும்  மயிலம் ஆலய வரலாற்றில் அவரைக் குறித்து செய்தி உள்ளது.

மைலம் ஆலயத்தில் உள்ள சிற்பத்தில் 
சிவன் மற்றதும் பார்வதியுடன் 
காணப்படும் சங்குகன்னர்

அப்படிப்பட்ட சிவகணங்களில் அவர்  ஒருவர் என்பதினால் பூலோகத்தில் அவர் ஒரு தாயின் வயிற்றில் கருவாகி பிறக்க விரும்பாமல் நேரடியாக பூமியில் அவதரிக்க முடிவு செய்தார். அதன்படி அவர் வீர சைவர்கள் பெரும்பாலும் அணியும் ஆன்மீக சின்னமான இஷ்ட லிங்கம் ஒன்றை கழுத்தில் அணிந்து கொண்டு , ருத்திராத்ஷமும் போட்டுக் கொண்டு, நெற்றியில் திருநீறு பூசி, காதுகளில் குண்டலங்கள் மினுமினுக்க, ஜடா முடியுடன் சிவப்பழமாக புதுச்சேரி கடற்கரைக்குச் சென்று அங்கு தன்னை பலரும் காணும் வகையில் பத்து வயது சிறுவன் உருவத்தில் கடற்கரையில் நின்று கொண்டார். சுருங்கக் கூறினால் கைலாய மலையில் இருந்து வந்திறங்கி மானிட உருவில்   அங்கே ஒரு அவதார தோற்றம் தந்தார். அவரை பார்த்தவர்கள் எங்கிருந்தோ அங்கு வந்துள்ள ஒரு சித்த புருஷராகவே அவரைக் கருதினார்கள். அவர் ஒரு சிவகணம் என்பது யாருக்கும் தெரியாது.

அங்கு வந்து இறங்கியவர் ஊருக்குள் சென்றார்.  அவர் யார், எங்கிருந்து வந்தார் என்ற விவரத்தை யாரும் கேட்கவில்லை என்பதின் காரணம் அந்த காலம்தொட்டு இந்த காலம்வரை  சித்தர்களை அணுகி யாரும் அவர்களுடைய பூர்வீகத்தைக் கேட்பதில்லை. அவர்களை தெய்வீக அம்சம் நிறைந்தவர்களாகப் பார்த்து அவர்களுடைய ஆசிகளைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இருப்பார்கள்.  இப்படியாக கடற்கரைப் பகுதியில் வந்து தோற்றம் தந்தவர் ஊருக்குள் சென்று அங்கு இடமிடமாக  தங்கி இருந்தவாறு சிவபெருமான் தனக்கு ஆணையிட்டது போலவே சிவநெறியை போதித்து வளர்க்கலானார்.

சென்ற இடங்களில் எல்லாம் அகமநெறி முறைகளை விளக்கினார். இடையிடையே பல ஆச்சர்யப்படும் அளவிலான சித்துக்களையும் அவ்வப்போது செய்து காட்டியவண்ணமும் இருந்தார். ஒரு பாலகர் இத்தனை ஆன்மீக பொக்கிஷமாக இருக்கின்றாரே என அனைவரும் வியந்தார்கள். அவர் ஒரு பாலகனாக தோற்றம் தந்து கொண்டு இருந்தாலும் பெருமளவிலான ஆன்மீக கலைகளை  உள்ளடக்கிக் கொண்டிருந்தவர் என்பதினால் மெல்ல மெல்ல அக்கம் பக்கத்து ஊர்களில் எல்லாம் பிரபலமாக ஆகத் துவங்கினார். பத்து வயது நிரம்பிய பாலகனாக சங்குகன்னர் காட்சியளித்ததால், மக்கள் அவரை பால சித்தர் என்றும், மக்களுக்கு சிவஞானத்தை போதித்து சிவஞான அறிவை வளர்த்து வந்ததினால் அவரை சிவஞான பால சித்தர் என்றும் பாலய சித்தர் என்றும் அழைத்தனர். அவர் சென்ற இடங்கள் அனைத்திலும் அவரது அறிவாற்றலையும், தெய்வீகத்தையும் கண்டு அவருக்கு பல சீடர்கள் உருவாகத் துவங்கினார்கள்.

பாலசித்தராலும்  மலைகள், வனங்கள் என எந்த இடத்துக்குமே தனது யோக சக்தியைப் பயன்படுத்தி எளிதில் செல்ல முடிந்தது. கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் சித்தர்கள் இருப்பதைக் காண முடியும்.   சக்தி அப்படிப்பட்டது. பல சித்தர்கள் வானில் பறவைகளைப் போல பறந்து கூட சென்றுள்ளார்கள். விமான சேவைகள் இல்லாத அந்த காலங்களில் சித்தர்கள் வானில் பறந்து சென்றார்கள் என்பது வியப்பல்ல. போகரும், புத்தரும் பறந்தே சென்றுள்ளார்கள் என்ற வரலாற்றுக் குறிப்புக்கள் உண்டு. ஆகவே சிவகணமான பாலசித்தருக்கு அந்த சக்தி இருந்தது பெரிதல்ல என்றாலும் அதுவே மக்களால் அதிசயமாக பார்க்கப்பட்டது. பாலசித்தர் அங்காங்கே சென்று கொண்டு சித்த முனிவர்களுக்கு ஞானத்தைத் தந்தும் அவர்களது சந்தேகங்களை நிவர்தித்தும் வந்தார். இப்படியாக சிவசேவை செய்து கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் மைலம் அருகில் இருந்த பொம்மயபாளயத்தில் வந்து தங்கி விட அங்கு அவருடைய சீடர்களினால்  அவருக்கு மடம் ஒன்று ஏற்பட்டது.

பாலசித்தரின் தோற்றம் எப்படி இருந்ததெனில் உருவத்தில் குள்ளமானவராக இருந்தார். நீண்ட சடைமுடி கொண்டவரது காதுகளை குண்டலங்கள் அலங்கரிக்க நெற்றியில் பட்டையாக விபூதி இருக்க, கழுத்தில் உருத்திராட்சம் தொங்கிக் கொண்டிருக்க வலக்கரம் சின் முத்திரை காட்டிட, இடக்கரத்தில் விபூதியும் மந்திரக்கோலும் கொண்டு இருந்தவர் உடுத்தி இருந்தது பெரும்பாலும் இடையில் கோவணம் மட்டுமே. இப்படியாக பல காலம் அங்கிருந்து கொண்டு சிவநெறியை வளர்த்து வந்தவரை அனைவருமே சிவஞான பால சித்தர் என அழைக்கலானார்கள்.

………தொடரும்