ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் யார், அவர் எங்கிருந்து வந்தார் , அவருடைய தாய் தந்தை யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் அவரை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு சாது ஸ்ரீ நாராயண ஸ்வாமி என்பவர் அழைத்து வந்துள்ளார். ஸ்ரீ நாராயண ஸ்வாமி அவர்களும் போலீஸ் உத்யோகத்தில் இருந்தவராம். சாது திரு நாராயண ஸ்வாமியின் தந்தையான திரு சிதம்பரம் என்பவரும், மாமனான ஸ்ரீ முருகானந்த ஸ்வாமியாரும் போலிஸ் வேலையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். ஆக ஒரே குடும்பத்தில் இருந்த மூன்று பேர்களில் இருவர் ஒய்வு பெற்று விட்டவுடன் மூன்றாவதான சாது ஸ்ரீ நாராயணஸ்வாமி சில ஆண்டுகளுக்குப் பின்னால் தானும் வேலையை ராஜினமா செய்து விட்டு தனது குருவான ஸ்ரீ சதானந்த ஸ்வாமி அவர்களை அழைத்துக் கொண்டு ஆலப்பாக்கத்திற்கு வந்து விட்டாராம். திரு நாராயணஸ்வாமிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான ஸ்ரீ துளசிங்கம் மூலமாகவே நமக்கு ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கை பற்றிய செய்தி கிடைத்து உள்ளது. தற்போது ஸ்ரீ துளசிங்கம் அவர்களும் சமாதி அடைந்து விட்டார்.

ஸ்ரீ நாராயணஸ்வாமி எதற்காக போலிஸ் உத்தியோகத்தை ராஜினமா செய்து விட்டு வந்து அவரும் ஒரு சாதுவாக மாறினார் ? அதற்கு ஒரு பின்னணி கதை உண்டு. போலிஸ் உத்தியோகத்தில் இருந்தபோது திரு நாராயணஸ்வாமி திருவிலக்கேணிப் பகுதியில் தங்கி இருந்தார். அவருக்கு திருமணம் ஆகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தைகள் எதுவும் இல்லை.

அப்போது சென்னையில் நிறைய இடங்களில் திருட்டுக்கள் நடந்து வந்தன. திருடர்களை கண்டு பிடிப்பது கடினமாக இருந்தது. அந்த திருடர்கள் கோஷ்டியில் ஆறு நபர்கள் இருந்தனராம். அவர்கள் ஒருமுறை ஒரு வீட்டில் துணிமணிகள் மற்றும் சாமான்களை திருடிக் கொண்டு வந்து அவற்றை பின்னர் எடுத்துச் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் இருந்த ஒரு தாழம்பூ புதரில் புதைத்து வைத்து விட்டார்கள்.

அதே நேரத்தில் அந்தத் திருட்டு நடந்ததும் ஸ்ரீ நாராயணஸ்வாமியின் மேல் அதிகாரியாக இருந்தவர் திரு நாராயணஸ்வாமி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒரு போலிஸ்காரரிடம் என இருவரிடமும் ‘நீங்கள் அந்த திருடர்களைப் உடனடியாக கண்டு பிடிக்காவிடில் உங்களை பணியில் இருந்து நீக்கி விடுவேன்’ எனக் கடிந்து கொள்ள இருவரும் மன வருத்தத்துடன் அது பற்றி பேசிக் கொண்டே சென்னையில் எக்மோர் எனும் பகுதியில் உள்ள கண் சிகிச்சை மருத்துவ மனை வழியே நடந்து கொண்டு வருகையில் கன்னிமாரா வாசகசாலை அருகில் உள்ள ஆற்றங்கரை பாலத்தின் மீது அமர்ந்து இருந்த ஒரு சாமியார் அவர்களுக்கு மிகவும் பழக்கமானவரைப் போல ‘நாராயணா….நாராயணா..இங்கே வா’ என திரு நாராயணஸ்வாமியை அழைத்தார். அவரே பிற்காலத்தில் அவருக்கு குருவான ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஆவார்.

அதைக் கேட்ட அவருடைய போலிஸ் நண்பரான முஸ்லிம் பாய் ‘யாரோ ஒரு கிழவன் உன்னை பேர் சொல்லி அழைக்கின்றான் பார்’ எனக் கேலியாகக் கூற அடுத்த கணம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் அந்த முஸ்லிம் பாயின் பெயரையும் கூறி இருவரையும் தன் அருகில் வருமாறு செய்கை காட்டினார். அவர்களும் அவர் அருகில் சென்று ‘எங்களை உனக்கு எப்படித் தெரியும்?. எங்களை எதற்காக அழைத்தாய்?’ என்று கோபமாகக் கேட்க அவர் தயங்காமல் ‘உடனே நீங்கள் இருவரும் இங்கிருந்து கிளம்பிச் சென்று நீங்கள் தேடும் திருடனை பிடியுங்கள். அவர்கள் இப்போது சைதாப்பேட்டை அருகில் ஆற்றின் பக்கத்தில் ஒரு தாழம்பூ புதரில் திருடிய பொருட்களை புதைத்து வைத்து விட்டு அமர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் . உடனே சென்றால் அவர்களைப் அங்கு பிடித்து விடலாம்’ என்றார்.

அதைக் கேட்ட அவர்கள் அவர் மீது சந்தேகம் அடைந்து ‘சரி நீங்கள் கூறியது நிஜம் என்றால் உடனே அந்த இடத்துக்கு நாங்கள் கிளம்பிச் சென்று அவர்களைப் பிடித்து வருகிறோம். ஆனால் அதுவரை நீங்கள் இங்கேயே இருப்பீர்களா’ எனக் கேட்க அந்த சாமியார் கூறினார் ‘நான் இங்கே இருந்தாலும் இருப்பேன், இல்லை என்றால் இல்லை. அதற்கு உறுதி தர முடியாது. உங்களுக்கு தேவை என்றால் அவர்களை உடனே சென்று பிடித்துச் செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் வழியில் செல்லுங்கள். எனக்கு அதனால் ஒன்றும் ஆகப் போவது இல்லை ‘ என்று கூறி விட்டார்.

ஆகவே எதோ ஒரு உந்துதலில் அவர்கள் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூறிய இடத்துக்கு சென்று பார்க்க முடிவு செய்தார்கள். அந்த காலங்களில் வாகன வசதிகள் அதிகம் கிடையாது. பஸ்களும் இல்லை. ட்ராம் வண்டியே இருந்தது. ஆகவே அந்த இரண்டு போலிஸ்காரர்களும் ஒரு ஜட்கா வண்டியை எடுத்துக் கொண்டு அந்த சாமியார் கூறிய இடத்துக்குப் போய் அங்கிருந்த ஆறு திருடர்களையும் கையும் களவுமாக பிடித்து விட்டார்கள். வேலையில் நல்ல பெயரும் பெற்றார்கள். அடுத்து அவர்கள் எக்மோருக்கு அருகில் இருந்த ஆற்றின் கரைக்கு வந்து அந்த இடத்தில் சாமியாரை தேடினார்கள். ஆனால் அவரைக் காணவில்லை. அது முதல் திரு நாராயணஸ்வாமிக்கு அந்த சாமியாரை எப்படியாவதுக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது .

அந்த காலத்திலும் மாநிலத்தின் ஆளுநர் (கவர்னர்) சாலையில் செல்லும்போது சாலைக் காவலுக்கு போலிஸ்காரர்கள் ஆங்காங்கே நிற்பார்கள். ஒரு நாள் கவர்னர் செல்ல இருந்த சாலையில் காவல் பணியில் இருந்த ஸ்ரீ நாராயணஸ்வாமி அந்த சாலையில் சென்று கொண்டு இருந்த ட்ராம் வண்டியில் தமக்கு திருடர்களைப் பிடிக்க உதவிய அந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் செல்வதைப் பார்த்தார். ஆவலுடன் ஓடிச் சென்று அந்த ட்ராம் வண்டியில் தானும் ஏறிக் கொள்ள ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூவினாராம் ‘நாராயண…என்னைக் காண வேண்டும் என்பதற்காக ஓடி வந்து இந்த ட்ராம் வண்டியில் ஏறிக் கொண்டு விட்டாயே. உனக்கு மாத சம்பளம் கொடுக்கும் அரசாங்கத்தினர் பணியை விட்டு விட்டு இப்படி என்னைத் தொடர்ந்ததைக் குறித்து உன்னை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வாய் ?.

ஸ்ரீ நாராயணஸ்வாமி அதற்கு பதில் கூறவில்லை. மௌனமாக ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் எங்கு செல்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை பின் தொடர்ந்து சென்றார். அந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் மயிலாப்பூரில் இறங்கி கபாலீஸ்வரர் ஆலயத்து சன்னதியில் சென்று நின்று கொண்டதைக் கண்டு பிடித்தப் பின் அங்கிருந்து மீண்டும் கிளம்பி வந்து தான் காவலுக்கு நிற்க வேண்டிய இடத்தில் வந்து நின்று கொண்டார். ஆனால் அதிசயமாக அவருடைய அதிகாரிகள் அவரிடம் ‘வேலை நேரத்தில் எங்கு சென்றுவிட்டாய்’ என ஒரு கேள்வியும் கேட்காமல் இருந்ததைக் கண்டு அந்த சாமியார் மீது மேலும் அதிக பக்தியும் மரியாதையும் ஏற்பட்டுவிட்டது. தினமும் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குளக்கரையில் குளித்துவிட்டு அமர்ந்து இருந்த ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை  ஒரு முறையாகிலும் சென்று சந்திக்காமல் இருந்தது இல்லை. இப்படியாக இருக்கையில் ஒருநாள் அந்த சாமியார் ஸ்ரீ நாராயணஸ்வாமியிடம் ‘இதோ பார்…நீ தொடர்ந்து போலிஸ் வேலையில் இருந்தால் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருப்பாய். ஆகவே உனக்கு ஊரில் நிலபுலன் இருந்தால் போலிஸ் வேலையை ராஜினமா செய்துவிட்டு அங்கு போய் விவசாயம் செய்து பிழைத்துக் கொள். இல்லை என்றால் இனி என்னைக் காண இங்கு வராதே’ எனக் கடுமையாகக் கூறி விட ஸ்ரீ நாராயணஸ்வாமி மறுநாள் தயங்காமல் தனது போலிஸ் வேலையை ராஜினமா செய்து விட்டு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளை அழைத்துக் கொண்டு ஆதம்பாக்கத்திற்கு வந்து விட்டார். அங்கு வந்ததும் ஸ்ரீ நாராயணஸ்வாமியின் குடும்பத்தினர் 58 சென்ட் நிலத்தை ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளுக்கு எழுதிக் கொடுத்து விட ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளும் அதில் ஒரு குடுசை போட்டுக் கொண்டு தங்கிக் கொண்டு திருவிடைமருதூர் அவதூத மௌன சாமியாரிடம் தீட்ஷையாக பெற்றுக் கொண்ட நவகண்ட யோகத்தை செய்து வந்தார்.

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஆலப்பாக்கம் கிராமத்தில் மெல்ல மெல்ல பிரபலமாகத் துவங்கினார். அப்போது ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் வயது சுமார் 90 இருக்கும். அவர் நவகண்ட யோகம் செய்யும்போது யாரும் அவர் அனுமதி பெறாமல் உள்ளே சென்று அவரை தரிசிக்கக் கூடாது. அவரைக் காண வேண்டும் எனில் வெளியில் நின்றவாறு கையைத் தட்டி சப்தம் செய்து ‘ஸ்வாமி….ஸ்வாமி ‘ என அழைத்து விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆலப்பாக்கத்தின் மக்கள் அவரைக் கேட்காமல் எந்த முக்கியக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள் எனும் அளவுக்கு ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் புகழ் பரவியது. ஆகவே நாளாக நாளாக தன்னிடம் வந்து நச்சரிக்கும் மக்களின் தொந்தரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போன அந்த சாமியார் அந்த கிராமத்தின் வடக்குப் பக்கத்தில் ஒரு இடம் இருந்தால் தொந்தரவு இன்றி தான் அங்கு சென்று தான் தங்கிக் கொள்ள முடியும் என திரு நாராயண ஸ்வாமியிடம் கூற அவர் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கேட்ட இடத்தில் இருந்த தன்னுடைய ஒரு ஏக்கர் நிலத்தை தானமாகத் தந்தார். அதைக் கண்ட ஊர் மக்களும் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை தம் சார்பாக அவருக்கு தானமாகத் தர அந்த சாமியாரும் அங்கேயே சென்று தங்கி ஒரு ஆஸ்ரமம் அமைத்து அங்கிருந்தபடி தம்மை நாடி வந்த மக்களுக்கும் ஊராருக்கும் தொண்டு செய்து வந்தார். இப்படியாக மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வந்த ஆலப்பாக்கம் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள்  1922 ஆம் ஆண்டு ஜீவ சமாதி அடைந்தார்.

 சதானந்த ஸ்வாமியின் 90  வது குரு பூஜை  விழா 

ஸ்ரீ  சதானந்த ஸ்வாமியின் சீடர்கள் சமாதி 

அதுவரை குழந்தையே பிறக்காமல்  இருந்த ஸ்ரீ நாராயணஸ்வாமிக்கு,  ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் அங்கு வந்து தங்கிய  பின்னர்தான்  மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். பெரியவள் பெண். மற்ற இருவரும் ஆண்கள். அவர்களில் ஒருவரே திரு துளசிங்கம் ஆவார். ஆசிரமம் அமைந்ததும் திரு நாராயணஸ்வாமிக்கு ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் ஒரு கடுமையான உத்தரவு போட்டார். ‘ உன்னுடைய மகள் திருமணம் ஆகும்வரை எனக்கு இங்கு வந்து தொண்டு செய்யக் கூடாது. நடு இரவில் வீட்டை விட்டு வரக் கூடாது’ .

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் கூறிய கட்டளையை சிரத்தையுடன் மேற்கொண்ட  சாது ஸ்ரீ நாராயணஸ்வாமி தனது மகளை திருமணம் செய்து கொடுத்தப் பின் வீட்டை துறந்து விட்டு அவருடைய நண்பரான சாது ஸ்ரீவேல்சாமி என்பவருடன் சேர்ந்து ஆஸ்ரமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி பணிவிடைகள் செய்து கொண்டு இருந்தார். அந்த காலங்களில் திருமணங்கள் மிகச் சிறிய வயதிலேயே நடந்து விடும். ஆகவேதான் சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியின் மகளுக்கும் விவாகம் விரைவில் நடந்தது. அப்போது ஸ்ரீ துளசிங்கத்திற்கு வயது ஒன்பதாகியது. அவருடைய தம்பியின்  வயது ஆறு ஆயிற்று. ஆண்டுகள் கடந்தன. 1935 ஆம் ஆண்டு சாதுவாகி விட்ட ஸ்ரீ நாராயணஸ்வாமியும் ஜீவ சமாதி அடைந்தார்.

அவர் ஜீவ சமாதி ஆவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே தான்  சமாதி அடையப் போகும் விஷயத்தை தன் வீட்டாரிடம் கூறினார். அப்போது சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியை சந்தித்த அவரது சகோதரி ‘அண்ணா நீ வீட்டில் வந்து சமாதி அடைய வேண்டும் . உன் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் போட வேண்டும்’ என தன் விருப்பத்தைக் கூறினாள். அதற்கு சம்மதித்த சாது ஸ்ரீநாராயணஸ்வாமி அங்கு செல்ல  ஒரு நிபந்தனைப் போட்டார்.   ‘வீட்டிற்கு வந்து சமாதி அடைந்தால் தனக்காக யாரும் ஒரு சொட்டு கண்ணீர் விடக் கூடாது. மேலும் எந்தவிதமான காரியங்களையும் செய்யாமல் கற்பூரம் மட்டுமே ஏற்றி வைத்து சமாதி செய்ய வேண்டும்’  என்பதே நிபந்தனை.

அதைத் தவிர தன்னை எப்படி சமாதி செய்ய வேண்டும் என்பதையும் அவருடைய சகோதரிக்கும் கடைசி மகனுக்கும் எடுத்துக் கூறினார். அவர் விருப்பத்தை ஏற்று சமாதி அடைய இருந்த தினத்தன்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அன்று இரவு 12 மணி இருக்கும். வெளிச் சாலையில் இருந்து ‘நாராயணா…நாராயணா’ என மூன்று முறை யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. வெளியில் சென்று பார்த்தால் அங்கு யாருமே தென்படவில்லை. அவர்கள் உடனே உள்ளே சென்று சாது ஸ்ரீ நாராயணஸ்வாமியைப் பார்க்க உட்கார்ந்து இருந்தவர் தனது வாயை இரண்டு முறை திறந்து மூடிக் கொள்ள அப்படியே அமர்ந்த நிலையிலேயே 1935 ஆம் வருடம்  ஜீவ சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்ததை நேரிலேயே இருந்து பார்த்தார் அவருடைய இரண்டாம் மகனான ஸ்ரீ துளசிங்கம் அவர்கள் .

சாது ஸ்ரீநாராயண ஸ்வாமி விருப்பபடியே யாருமே ஒரு சொட்டு கண்ணீரும் விடவில்லை. அவர் கூறி இருந்தபடியே கற்பூரம் மட்டுமே ஏற்றி விட்டு அவரை சமாதி செய்தார்கள். ஒரு பண்டாரத்தைக் கொண்டு நாற்பது நாட்கள் பூஜை செய்து கல்வெட்டு லிங்கம் அமைத்தார்கள்.

அவர் சமாதி ஆன இரண்டு ஆண்டுகளில் அவர் நண்பராக இருந்த சாது ஸ்ரீ வேல்முருகனும் சமாதி அடைந்தார். அதன் பின் 19.12.2003 ஆம் ஆண்டு ஸ்ரீ துளசிங்கமும் சமாதி அடைந்தார்.

ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகளின் சீடர்கள் 
———————————————————-
ஸ்ரீ நாராயண ஸ்வாமிகள்
ஸ்ரீ வேலு ஸ்வாமிகள்
ஸ்ரீ பிச்சை ஸ்வாமிகள்
ஸ்ரீ அகண்டபுரி ஸ்வாமிகள்
ஸ்ரீ மாயா ஸ்வாமிகள்
ஸ்ரீ கோபால் ஸ்வாமிகள்
ஆஸ்ரமக் காட்சிகள் 
அனைத்துப் படங்களுக்கும் நன்றி: திரு மணிகண்டன் :-
ஆலய விலாசம்
Arulmigu Gurudevadath Sri Sadhananda Swamigal temple
Sadhanandapuram (near to New Perungalathur)
New Perungalathur
Chennai – 600 063