வைஷ்ணவ தேவியின் கதை
சாந்திப்பிரியா
முன்னொரு காலத்தில் விஷ்ணு மற்றும் பிரும்மாவின் மனைவிகளான லஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதியின் அவதாரமான காளி தேவி என்ற மூவரும் இந்த உலகில் அதர்மத்தை ஒழித்து உலகை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தமது சக்திகளில் சிலவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு ஹோம குண்டத்தில் வைத்தபோது அந்த சக்திகள் ஒன்றிணைந்து பெரிய தீப்பிழம்பாக மாறியது. அந்த தீப்பிழம்பின் ஒளி வெள்ளத்தில் இருந்து அழகிய  பெண் ஒருவள் தோன்றினாள். அவள் அந்த மூன்று தேவிகளின் முன்னிலையில் சென்று ‘என்னை எதற்காகப் படைத்தீர்கள். நான் என்ன செய்ய வேண்டும்?’  என்று கேட்டாள். அவர்கள் அந்த தேவி தென் இந்தியப் பகுதியில் இருந்த ரத்னாகர் என்பவரின் மகளாகப் பிறந்து அந்த மனிதப் பிறப்பில் அனைவரும் ஏற்கும் பெண்ணாக இருந்து கொண்டு மக்களை நல்வழிப் படுத்தி உலகில் ஆன்மீக எண்ணத்தை மக்களிடையே வலுப்படுத்த வேண்டும் என்றும், அதன் பின் அவள் விஷ்ணுவை காணுவாள் என்றும் அப்போது அவருடன் அவள் கலந்து விடுவாள் என்றும் கூறினார்கள்.
அதற்கு அடுத்த நிமிடமே பூமியில் அவர்கள் குறிப்பிட்ட ரத்னாகரின் மனைவி கர்ப்பம் அடைந்தாள். அந்த கர்பத்தில் இருந்த அணுவில் வைஷ்ணவி கலந்துவிட அவளே பத்து மாதத்திற்குப் பின்னர் அவர்களுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். சிறு வயது முதலேயே ஒரு வித்யாசமானப் பெண்ணாகவே வளர்ந்து வந்தவள் ஆன்மீக விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தாள். இப்படியாக இருக்கையில் ஒரு கட்டத்தில் தனியே அமர்ந்து வீட்டின் ஒரு மூலையில் தியானம் செய்யத் துவங்கியவள் ஒரு நாள் வனப் பகுதிக்குச் சென்று அங்கேயே தங்கி தியானம் செய்யலானாள். அவளது பிறப்பின் ரகசியத்தை அறியாத அவளுடையப் பெற்றோர்கள் அவள் செயலைக் கண்டு மனம் ஒடிந்து போனார்கள். ஆனால் எத்தனை முயன்றும் அவர்களால் அவளை சம்சார வாழ்க்கைக்கு திரும்ப கொண்டு வர இயலவில்லை என்பதினால் பண்டிதர்கள் சிலரிடம் அது பற்றிக் கேட்டபோது அவர்கள் ஜாதகங்கள் மற்றும் தாந்த்ரீக மந்திர முறைகளில் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தப் பின் அவள் ஒரு தெய்வப் பிறவியாகவே இருக்க வேண்டும் என்றும் ஆகவே அவள் செல்லும்  வழியிலேயே விட்டு விடுமாறும் அவளது செய்கைகளை தடுக்க வேண்டாம் எனவும் அறிவுரைக் கூறினார்கள். அதன் பின் கானகத்திற்குச் சென்ற வைஷ்ணவி வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. அங்கேயே தங்கி விட்டாள். பெற்றோர்களால் அவளைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
வைஷ்ணவி காட்டில் தங்கி இருந்த நேரத்தில் தனது மனைவியான சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்ட ராவணனுடன் யுத்தம் செய்ய லங்காவிற்குக் கிளம்பிச் சென்ற ராமபிரான் அந்த வழியே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரைக் கண்ட கண்ட வைஷ்ணவி விஷ்ணுவின் அவதாரமான ராமரை அடையாளம் கண்டு கொண்டு தன்னை மணந்து கொள்ளுமாறு கேட்டாள். ஆனால் ராமபிரானோ அவள் வந்த வேலை முடியவில்லை என்பதினால் அவளை மணந்து கொண்டு அவள் மனிதப் பிறவி வாழ்க்கைக்கு முடிவு கொடுக்க தகுந்த நேரம் அது அல்ல என்பதைக் கருத்தில் கொண்டு அவளிடம் தான் இலங்கைக்குச் சென்றுவிட்டு திரும்பும்போது தன்னை மீண்டும் அடையாளம் கண்டு கொண்டால் அவளை மணப்பதாக உறுதி கொடுத்துவிட்டுச் சென்றார். அதன்படி அவர் ராவணனை வதம் செய்துவிட்டு திரும்பி வந்தார்.  திரும்பும் வழியில் காட்டில் தங்கி இருந்தவர் சீதை மற்றும் லக்ஷ்மணனை தான் அழைக்கும்வரை வெளியில் வராதீர்கள் எனக் கூறி விட்டு ஒரு கிழவரைப் போல வெளியில் அமர்ந்து கொண்டார். அப்போது அந்த வழியே சென்று கொண்டு வைஷ்ணவியிடம்   எங்கே அந்த கானகத்தில் தனியே சுற்றித் திரிகிறாள்  என அவளிடம்  கேட்க அவள் ராமரின் அங்க அடையாளங்களைக் கூறி விட்டு அவரை தேடிக் கொண்டு அலைவதாகக் கூறினாள். உடனே தன்னுடைய சுய உருவைக் காட்டிய ராமபிரான் அவளால் தன்னை அடையாளம் கண்டு பிடிக்க முடிவில்லை என்பதினால், இனி கலியுகத்தில் வந்து அவளை மணப்பதாகவும், அதுவரை அவள் தன்னுடைய ஆன்மீக சக்தியைப் பெருக்கிக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்குமாறு கூறினார்.
அதனால் மனம் வருந்திய வைஷ்ணவி உடனே அங்கிருந்து கிளம்பி ஜம்முவைத் தாண்டி கடாரா எனும் பகுதியில் இருந்த திரிகூட மலைப் பகுதிக்குச் சென்றாள். அங்கு ஒரு ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு அங்கு தவம் புரியலானாள். அவளிடம் சீடர்கள் பலரும் வந்து சேர்ந்தார்கள். அவள் தனது ஆன்மீக ஆற்றலினால் பலரது மனத் துயரங்களை தீர்க்கும் வலிமைக் கொண்டவள் ஆயினாள். ஆகவே அவளை நாடி பலரும் வரத் துவங்கினார்கள். அதே நேரத்தில் அதே மலைப் பகுதியில் கோரக்னாத் எனும் முனிவரும் தம் சீடர்களுடன் இருந்தவாறு தவம் செய்து வந்தார். ஆகவே வந்துள்ளவள் யார், அவளுடைய சக்தி என்ன என்பதையெல்லாம் அறிந்து வருமாறு அவருடைய பிரதான சீடரான பைரோன்னாத் என்பவரை அனுப்பினார். வைஷ்ணவியின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்த பைரோன்னாத் அவளிடம் வாள், வில், அம்பு போன்றவை இருந்ததையும், சர்வ சாதாரணமாக அவளை மிருகங்கள் சுற்றி அலைவதையும், முக்கியமாக சிங்கம் அவளிடம் நெருக்கமாகப் பழகுவதையும் கண்டு அவள் மீது ஆசைக் கொண்டு அவளை தானே மணக்க விரும்பி அவரை சுற்றித் திரியத் துவங்கினாள்.
அடுத்து சில நாளில் ஒரு விருந்து நடந்தது. அதில் அனைவரும் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு வந்த வைஷ்ணவியின் கையை பிடிக்க  பைரோன்னாத் விரும்பியபோது  அவரிடம் இருந்து தப்பி ஓடிய வைஷ்ணவி காஷ்மீரத்தில் தற்போது வைஷ்ணவி தேவி ஆலயம் உள்ள குகையில் சென்று புகுந்துக் கொண்டாள். அங்கும் அவளைத் தொடர்ந்து சென்ற பைரோன்னாத்தை வேறு வழி இன்றி அவள் அவரது தலையை சீவிக் கொன்று விட அவருடைய துண்டிக்கப்பட்ட தலை அங்கிருந்து சற்று தூரத்தில் சென்று விழுந்தது. ஆகவே துண்டிக்கப்பட்ட அவருடைய தலை மரணம் அடையும் தருவாயில் அவளிடம் மன்னிப்புக் கேட்க அதே சமயத்தில் அவளுக்கும் காளி, லஷ்மி மற்றும் சரஸ்வதி தேவிகள் படைத்த தன்னுடைய சுய உருவம் கிடைக்க ‘இனி அந்த குகையிலேயே தங்கி இருந்தவாறு தன்னிடம் வந்து சரண் அடையும் மக்களை நல்வழிப் படுத்தி உலகில் அமைதியை ஏற்படுத்துவேன்’ என்று அருள் மொழியைக் கூறினாள். அதன் பின் பைரோன்னாதிற்கு முக்தி கிடைக்க அருளி விட்டு, அவருடைய தலை விழுந்த இடமும் ஒரு வழிபாட்டுத் தலம் ஆகும் என்றும் இனி அங்கு வந்து தன்னை தரிசிக்கும் மக்கள் பைரோன்னாத் சன்னதிக்கும் சென்று வணங்காவிடில் அவர்களின் பயணம் பலனுள்ளதாக அமையாது என்றும் கூறி அங்கே வைஷ்ணவ தேவியாக அமர்ந்து கொண்டாள்.
 பைரோன்னாத்

இப்படியாக  வைஷ்ணவதேவி ஆலயம் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்ததாகக் கூறுகிறார்கள். அந்த  ஆலயத்தின்  கருவறையில்  சுமார் ஐந்தரை அடி உயர பாறையில் மூன்று  தலைகளுடன்  மட்டும்  காட்சி  அளிக்கும் தேவியே வைஷ்ணவி தேவி என்றும் அந்த மூன்று தலைகளும் லஷ்மி, சரஸ்வதி மற்றும் காளி தேவியைக்  குறிக்கின்றன என்கிறார்கள். அந்த ஆலயத்துக்கு ஒவ்வொரு வருடமும் லட்சக் கணக்கில் மக்கள் சென்று வைஷ்ணவி தேவியை  வணங்கி வருகிறார்கள்.