63 சைவ நாயன்மார்கள்
-நமி நந்தி அடிகள் –
சாந்திப்பிரியா
 
நமி நந்தி அடிகள்
நமி நந்தி அடிகள் என்பவர் 63 நாயன்மார்களில் ஒருவர். பெரும் சிவ பக்தர். திருவாரூரில் வாழ்ந்தவர். அவர் தினமும் திருவாரூரில் இருந்த சிவன் ஆலயத்துக்குச் சென்று அங்கிருந்த வாஞ்சினாதரை வணங்கி விட்டு வந்தப் பின்னரே உணவு அருந்துவார்.
ஒருமுறை திருவாரூரில்  பண்டிகை நடைபெற்றுக் கொண்டு இருந்தது.  பண்டிகை நாட்களில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ஒரு விசேஷமாக கருதப்பட்டது. அது சோழமன்னன் ஆண்ட காலம் . அந்தப் பண்டிகையின் தினத்தன்று நமி நந்தி அடிகளாருக்கு சிவபெருமானின் சன்னதியில் பல விளக்குகளை ஏற்றி வைத்து வணங்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது.  கையிலோ காசில்லை. உள்ள சில்லறையில்  அகல் விளக்குகளை மட்டுமே வாங்க முடிந்தது. பரவாய் இல்லை பிட்ஷை எடுத்து எண்ணை வாங்கி  அதில் விளக்கேற்றலாம் என எண்ணியவாறு வரும் வழியில் இருந்த சில வீடுகளில் எண்ணையை பிட்ஷையாகக் கேட்டார். ஆனால் அவர் செய்த பெரும் தவறு அதிகமாக ஜெயின் இனத்தவர் இருந்த வீதிகளில் சென்று யாசகம் கேட்டதுதான். அந்த கால கட்டங்களில் இ$E ��்துக்களுக்கும் ஜெயின் மற்றும் புத்த மதத்தினருக்கும் அவரவர் மதங்கள் மீது அபார அபிமானம் இருந்தது மட்டும் அல்ல அனைவருமே தம்முடைய மதமே மடற மதங்களை விட  சிறந்த மதம் என எண்ணித் திரிந்த காலம் அது.
ஒரு நிகழ்ச்சியை ஆண்டவன் நடத்த வேண்டும் என முடிவு செய்து விட்டால் அதற்க்கு ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார். ஆகவே தாம் பிட்ஷை எடுக்கச் சென்ற இடம் ஜெயின் மதத்தினர் அதிகள் உள்ள பகுதி என்பதை மறந்து போன நமி நந்தி அடிகள் ஜெயின் மதத்தினர் அதிகள் இருந்த பகுதியில் தனது யாசகத்தைத் துவக்கினார்.
அவர் பிட்ஷை எடுக்கச் சென்ற வீட்டில் இருந்தவர ஜெயின் மதத்தவர்.  ஆலயத்தில் தீபம் ஏற்ற என்னை யாசகம் கேட்டு வந்த நமி நந்தி அடிகளை  அவர் ஏளனமாகப் பேசி அனுப்பினார். ”எதற்காக இங்கு வந்து எண்ணையை யாசகம் கேட்கிறாய். உன் கடவுளுக்கு சக்தி இருந்தால் அதோ தெரிகின்றதே ஆலயக் குளம் அதில் இருந்து தண்ணீரை எடுத்துப் போய் எண்ணையாகக் கருதி அதில் திரியைப் போட்டு ஏற்றினால் அதை எறிய வைக்க மாட்டாரா என்ன?” எனக் கூற வார்த்தைகள் நமி நந்தி அடிகளை வாட்டி எடுத்தன. எண்ணை  பிட்ஷைக் கேட்டுப் போன முதல் வீட்டிலேயே அவமானமா?  மனம் வெதும்பிய நமி நந்தி அடிகள் அவமானத்தால் கூனிக் குறுகிப் போய் ஒன்றுமே பதில் கூறாமல் ஆலயத்துக்குள் போய் சிவன் சன்னதியில் நின்று கொண்டு மனம் குலுங்கி அழுதார். ” இறைவா…என்னை ஏன் இப்படி சோதிக்கின்றாய்? உனக்கு எண்ணை தீபம் ஏற்ற ஆசைப்பட்ட என்  மூலம் உனக்கு அல்லவா அவமானத்தைத் தேடித் தந்து விட்டேன். உன்னை அந்த மனிதன் ஏளனமாகப் பேசியதைக் கேட்டு மனம் ஒடிந்து போனேன் ஐயனே …அந்த மூடன் கூறுகிறான்  தண்ணீரை ஊற்றி விளக்கை எரிய விடு என்று…எங்காவது தண்ணீரினால் விளக்கை எறிய வைக்க முடியுமா?…இப்படி அவனிடம் அவமானப் பேச்சைக் கேட்க வைத்த என்னை மன்னித்து விடு… இனி எப்போது முடிகிறதோ அப்போது உனக்கு விளக்கு ஏற்றுகிறேன்…என்னை மன்னித்து விடு ” . அழுது அழுது சோர்ந்து போனார்.அப்படியே சன்னதிக்கு எதிரே அமர்ந்து கொண்டார். அவர் வாங்கிய அகல் விளக்குகளும் அவருடன் சேர்ந்து அழுதது  போல இருந்தது.
ஆலய சன்னதியில் யாருமே காணப்படவில்லை. ஏன் அந்த குருக்கள் கூட அங்கு இல்லை. அப்போது அதிசயமாக ஒரு குரல் கேட்டது ”நமி நந்தி…நீ ஏன் அழ வேண்டும்?  போ…எழுந்து போய் அந்த குளத்தில் இருந்து ஒரு குடம் தண்ணீரைக் கொண்டு வந்து ஆலயத்தில் உள்ள அனைத்து விளக்குகளிலும் அதை ஊற்றி ஏறிய வை….உனக்கு உதவ நான் இல்லையா? என் சக்தி உனக்குப் புரியாதா?…..போ..போ..போய் தண்ணீரைக் கொண்டு வா…..தாமதிக்காதே” . தன் காதுகளையே நமி நந்தியால் நம்ப முடியவில்லை. தான் கேட்டக் குரல் உண்மைதானா என யோசனை செய்தவாறு சிவலிங்கத்தை நோக்கி நின்று கொண்டு இருந்தவருக்கு மீண்டும்  குரல் கேட்டது ” ஏன்…என் மீது நம்பிக்கை இல்லையா….போ…உடனே போய் நான் கூறியதை செய்”.
அவ்வளவுதான், தான் கேட்டதை தள்ளி நின்று கொண்டு இருந்த குருக்களிடம் அவசரம் அவசரமாகக் கூறி விட்டு இனி தாமதிக்க கூடாது என நினைத்த நமி நந்தி அடிகள் ஒரு சொம்பை  எடுத்துக் கொண்டு குளத்தை நோக்கி ஓடினார். அங்கு போய் ஆலயக் குளத்தில் இருந்து நீரைக் கொண்டு வந்தார். அவர் தண்ணீரைக் கொண்டு வந்து விளக்குகளை ஏற்ற முயற்சிப்பதை தடுக்காமல் அதிர்ந்து நின்று இருந்தார் குருக்கள். காரணம் பல வருடங்களாக நமி நந்தி அடிகளை அவர் நன்கு அறிந்தவர்….அவர் பக்தியையும் உணர்ந்தவர்….அவர் பொய் கூற மாட்டார்….எதோ ஒன்றினால் உந்தப்பட்டு அவர் அதை செய்துள்ளார்….செய்யட்டும்…இறைவன் இருப்பது உண்மை என்பது இவர் மூலம் திருவாரூரில் அது தெரியட்டும் என எண்ணியவாறு அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டு நின்றார்.
தண்ணீர் ஊற்றி விளக்குகளை ஏற்றினார் நமி நந்தி அடிகள் 

சன்னதியில் இருந்த அனைத்து விளக்குகளிலும் இருந்த திரிகளை தூண்டி விட்டப் பின் நமி நந்தி அடிகள் அந்த விளக்குகளில் தண்ணீரை ஊற்றினார். நெருப்பால் திரிகளைப் பற்ற வைத்தார்….ஆகா…என்ன அதிசயம் …அத்தனை விளக்குகளும் சூரிய ஒளி போல பிரகாசமாக எரியத் துவங்கின. அதோடு நின்றாரா அடிகளார்…மீண்டும் ஓடிச் சென்று ஆலயத்தில் என்னை வற்றிப் போய் அணைந்து இருந்த அனைத்து விளக்குகளிலும் ஊற்றி அவற்றை எறிய விட்டார். அதற்குள் அந்த செய்தி குருக்கள் மூலம் ஊரில் பரவி அனைவரும் அங்கு வந்து கூடி நமி நந்தி அடிகள் உண்மையிலேயே நீரைத்தான் ஊற்றி தீபங்களை எரிய வைக்கின்றாரா என ஆவலுடன் பார்த்தவாறு நின்றார்கள்.  நமி நந்தி அடிகளோ யாரையும் பார்க்கவில்லை, ஓடிப் போய் குளத்தில் இருந்து நீரை மொண்டு வந்தார், நிதானமாக விளக்குகளில் நீரை ஊற்றி அவற்றை எரிய விட்டப் பின் சிவன் சன்னதியின் எதிரில் சென்று நின்றவாறு  மனம்  உருகி ஸ்துதிகளைப் பாடினார் . அனைவரும் திகைத்து நிற்க அந்த செய்தியைக் கேட்டு அவரை அவமானப் படுத்திய ஜெயின் இனத்தவரும் ஆலயத்துக்குள் ஓடி வந்து தான் தவறாகப் பேசியதாற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டார். அதைக் கேள்விப் பட்ட சோழா மன்னன் அதிசயித்துப் போய் நமி நந்தி அடிகளின் மகிமையை உணர்ந்து அவரை  ஆலயப் பாதுகாவலராக நியமித்தார்.

நமி நந்தி அடிகள்- இன்னொரு தோற்றம் 

இப்படியாக காலம் ஓடியது. திருவாரூர்  ஆலய மகிமை பல இடங்களிலும் பரவியது. அப்படி இருக்கையில் ஒரு முறை ஆலயத் தேர் திருவிழா நடைபெற்றது.  அந்த தேர் திருவிழாவில் நமி நந்தி அடிகளும் சென்றார். தேர் திருவிழா என்றால் கூட்டம் இல்லாமல் இருக்குமா? அந்த காலங்களில் எது எப்படியோ, ஆசாரத்தில் கடுமையான விதிமுறைகளைக் கையாண்டார்கள். பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்பது மட்டும் அல்ல மேல் ஜாதி, கீழ் ஜாதி என்ற  மனப்பான்மையும் நிறையவே இருந்தன. ஆலயங்களில் நுழைவதற்குக் கூட பல கட்டுப்பாடுகள் இருந்தக் காலம் அது. அந்தக் கூட்டத்தில் ஆசாரத்தைப் பார்க்க முடியுமா?  தெய்வம் பொதுவானது. அது யாரையும் பிரித்துப் பார்ப்பது இல்லை. அவற்றுக்கு அனைவரும் ஒன்று போலத்தான். அதை உணரவில்லை நமி நந்தி அடிகள். ஆகவே வீட்டிற்குச் சென்றவர் தன் மீது அனைத்து தர மக்களும் பட்டு விட்டதினால் தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி விட்டு வீட்டின் வெளியில் இருந்தவாரே மனைவியை அழைத்து தண்ணீர் கொண்டு வந்து தன் மீது கொட்டுமாறு கூறி அங்கேயே குளித்து விட்டு வீட்டின் உள்ளே சென்றார்.

அது வாஞ்சிநாதருக்கு ஏற்புடையதாக இல்லை. தன்னுடைய நல்ல பக்தர் இப்படிப்பட்ட  தவறு செய்யலாமா? ஆகவே அவருக்கு ஒரு பாடம் புகட்டி அறியாமையை அவர் மனதில் இருந்து விளக்க வேண்டும் என நினைத்தார். அன்று இரவு தூக்கத்தில் சிவபெருமான் அவர் கனவில் தோன்றி அவரது செய்கையைக் கடிந்து கொண்டார். நமி நந்தி அடிகள் தன் தவறை உணராமல் தன மீது தீட்டு பட்டு விட்டதினால்தான் அப்படி செய்ததாகக் கூற சிவபெருமானோ திருவாரூரில் உள்ள அனைவருமே தன்னுடைய குழந்தைகளே  என்றும், அவர்களில் யாரையுமே பேதம் பிரித்துக் காணக் கூடாது என்றும், அதை மறுநாள் அவருக்கு எடுத்துக் காட்டுவதாகவும் கூறினார். கனவில் அவருக்கு முன் வந்த சிவபெருமான் தொண்டை நீல நிறமாக இருந்ததையும் நமி நந்தி அடிகள் கண்டார்.

மறுநாள் நமி நந்தி அடிகள் தன் கனவில் வந்ததை எண்ணிக் கொண்டே ஆலயத்துக்குள் நுழைந்தார்.  உள்ளே நுழைந்தவர் அப்படியே உறைந்து நின்றார். அன்று ஆலயம் நிரம்பி வழிந்தது. அங்கு நின்று இருந்தவர்களில் பல ஜாதியினர் இருந்தார்கள். துண்டு போட்டவன், தோளில் துணி இல்லாதவன், கிருதா மீசை வைத்தவன், மீசை இல்லாதவன், குடுமி வைத்தவன், அழுக்கு வேட்டி அணிந்தவன் என பல்வேறு மக்கள். அது போலப் பெண்கள் பகுதியிலும் ஆசாரமானப் பெண்கள் மத்தியில் தோய்க்காத சேலை உடுத்தியப் பெண்கள், பக்கத்தில் சென்றாலே வாடை அடித்தப் பெண்கள் என அனைவரும் ஒருவருடன் ஒருவர்  உரசிக் கொண்டு நின்று கொண்டு சிவபெருமானை தரிசித்துக் கொண்டு இருந்தார்கள். அதற்கு ஒரு படி மேலாக அனைவர் தொண்டையும் நல்ல நீல நிறமாகக் காட்சி தந்தது.

”ஐயனே என்னை மன்னித்து விடு….என் தவறை உணர்கிறேன்….உனக்கு அனைவரும் ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொண்டேன்.. என்னை மன்னித்து விடு” என அழுதுகொண்டே தடாலென சன்னதி முன்னால் கீழே விழுந்து நமஸ்கரித்து விட்டு  எழுந்தார் நமி நந்தி அடிகள். தனது இரண்டு காதுகளையும்  பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு எழுந்து கண்களைத் திறந்தார். மீண்டும் அவருக்கு ஆச்சர்யம். அங்கு யாருமே இல்லை. அவர் தனியாகவே நின்று இருந்தார். அப்படி என்றால் தான் கண்டது கனவா இல்லை பிரமையா?  சிவபெருமான் தனக்கு நல்ல பாடம் புகட்டிவிட்டார் என்பதை உணர்ந்தார். அன்று முதல் அவர் மனித ஜாதிகளில் பேதம் பார்க்கவில்லை.