

புதுச்சேரியில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் அழகு முத்து ஐயனார் ஆலயம் உள்ளது. புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் இந்த ஆலயத்துக்கு செல்லலாம். இந்த ஆலயத்துக்குள் நுழைந்தாலே மண் மற்றும் சிமெண்ட் கலவையினால் செய்யப்பட்ட குழந்தை, கார், வீடு, கை, கால், மனித உருவம் போன்ற சிலைகளும், பொம்மைகளையும் காணலாம். அவற்றை முதலில் வணங்கிய பிறகே மூல சன்னதிக்கு சென்று வணங்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.
இந்த ஆலயத்தின் பின்புறத்தில் கிணற்றின் மீது கட்டப்பட்ட ஸ்ரீ அழகர் சித்தர் சமாதி ஆலயம் உள்ளது. அந்த சித்தர் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னால் அந்த கிராமத்துக்கு வந்ததாக அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ அவர் காலம் கி.பி 1800 முதல் கி. பி. 1840 வரை ஆகும் என்றும் கூறுகிறார்கள். அந்த சித்தர் அங்கிருந்தபோது தமது பக்தர்களின் பல்வேறு நோய்களை தமது மந்திர சக்தியினால் குணமாக்கி இருக்கிறார். அங்குள்ள ஆலயத்தில் உள்ள அவரது சிலையில் காணப்படும் வாளில் பக்தர்கள் தமது வேண்டுகோட்களை எழுதி வைத்த காகிதத்தைக் கட்டி வைத்து தமது துன்பங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.
அந்த சித்தரிடம் எப்படி வேண்டுகோள் வைக்க வேண்டும் என்பதற்கு ஒரு நியதி உள்ளது. அந்த ஆலயத்துக்கு சென்று சித்தரை வணங்கித் துதித்தப் பின் தமது பிரச்சனைகளை ஒரு காகிதத்தில் எழுதி அதற்கு நிவாரணம் தர வேண்டும் என்ற வேண்டுகோளுடன் அதை அவரது கையில் உள்ள கத்தியில் கட்டி வைத்து விட வேண்டுமாம். அப்படிப்பட்ட வேண்டுகோட்கள் குழந்தை வேண்டும், தமது குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், வாகனம் வேண்டும் மற்றும் தனக்கு வேலை கிடைக்க வேண்டும் போன்றவை அடங்கும். அந்த கோரிக்கை நிறைவேறி விட்டால் அந்த ஆலயத்துக்கு மீண்டும் சென்று தங்களை போன்ற ஏதாவது சிலையை செய்து அங்கு வைக்க வேண்டும். பிரார்த்தனை செய்து கொண்டவர் பெண் என்றால் பெண்ணின் சிலையையும், ஆண் என்றால் ஆணின் சிலையையும் மற்றும் குழந்தைகளுக்கான பிரார்த்தனை நிறைவேறினால் குழந்தைகளின் பொம்மைகளையும் வைக்க வேண்டுமாம். சிலைகள் அங்குள்ள கடைகளில் கிடைக்கின்றன. இதனால்தான் அந்த ஆலயம் முழுவதும் மண் மற்றும் சிமெண்டினால் செய்யப்பட்ட சிலைகள் காணப்படுகின்றன.
உண்மையாக மனமுருகி வேண்டுதல் செய்தால் பிரச்சனை கண்டிப்பாக ஸ்ரீ அழகர் சித்தரின் அருளினால் தீருகின்றன என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. ஆகவேதான் வருடா வருடம் ஏப்ரல் மற்றும் மே மாத இடையில் வரும் தமிழ் மாதமான சித்திரை மாதம் அன்று நடைபெறும் திருவிழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஆலயத்துக்கு தம் பங்கிற்கான சேவையாக அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசுவார்கள். மேலும், அந்த திருவிழாவில் 100 நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் 100 தவில் வித்வான்கள் ஒரே நேரத்தில் வாத்தியங்களை ஒருசேர இசைக்கின்றார்கள்.



ஸ்ரீ அழகர் சித்தர் யார் ? அவர் யார் என்பதோ அல்லது அவருடைய பெற்றோர்கள் குறித்தோ யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவர் அந்த கிராமத்துக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளதாக மட்டுமே அவர்களால் கூற இயலுகிறது. ஐயனார் ஆலயத்தின் அருகிலுள்ள வில்வ மரங்கள் அடர்ந்த புதர்களிடையே அமர்ந்து தவம் செய்வார் என்று கூறுகிறார்கள். அந்த ஐயனார் ஆலயமும் சில நூறு வருடங்களுக்கு முன்னர்தான் கிராம தேவதை ஆலயமாக கட்டப்பட்டு உள்ளதாம்.
அவருடைய வாழ்க்கை மிகவும் எளிமை வாய்ந்ததாக இருந்தது. சில நேரத்தில் தியானத்தில் இருந்து எழுந்து மௌனமாக அங்குமிங்கும் அமைதியாக உலாவுவார். யாருடனும் பேச மாட்டாராம். சில சமயங்களில் கோவில் அருகிலுள்ள கிணற்றில் இறங்கி தியானம் செய்வார். எப்பொழுதும் இந்த ஐயனார் ஆலயத்தின் அருகில் உள்ள பெரிய ஆலமரத்தடியில் படுத்து இருப்பார். சில சமயங்களில் அவர் மீது பாம்பு ஊர்ந்து கொண்டு இருப்பதை பலரும் பார்த்து இருக்கிறார்களாம். பிறகு அவை அவர் மீது இருந்து இறங்கி போய் விடுமாம். அவரை தமது கிராமத்துக்குள் வந்து தங்குமாறு கிராமத்தினர் வேண்டிக் கொண்டாலும் அதை அவர் ஏற்க மறுத்து வந்தாராம். தான் தங்கும் அந்த மரத்தடி மற்றும் கிணத்தடியே தமது இருப்பிடம் என்பாராம். ஆனால் அதே சமயம் தமது பக்தர்களுக்கு உடல் நலம் குன்றினாலோ, விஷ ஜந்துக்கள் கடித்து விட்டாலோ உயிர் போகாமல் தடுக்க வீபூதி தந்தே அவர்களை குணப்படுத்துவாராம். அது போலவே பேய் பிசாசு பிடித்தவர்களை மந்திரித்து குணப்படுத்தி வந்தாராம். இப்படியாக கிராமத்தைத் தவிர சுற்றி இருந்த கிராமங்களிலும் அவர் புகழ் வாய் மொழி வார்த்தைகளினாலேயே பரவத் துவங்கியது.
தான் என்று சமாதி அடைய வேண்டும்என நினைத்தாரோ அன்று அதைக் குறித்து யாரிடமும் கூறாமல் ஊர் ஜனங்களை அழைத்தார். ‘உங்கள் நன்மைக்காக நான் சில பூஜையை செய்ய உள்ளேன். என்னுடன் வாருங்கள்’ என அனைவரையும் அழைத்தார். அவர்கள் அவர் பின்னால் சென்றார்கள். வாத்திய இசை முழங்க அவர் அந்த கிராமத்தை சுற்றி நடக்க அவர்களும் அவரை பின் தொடர்ந்து செல்ல, முடிவாக அவர் ஐயனார் ஆலயத்தின் அருகில் இருந்த கிணற்றை அடைந்தார். தான் பூஜையை கிணற்றுக்குள் செய்ய உள்ளதாகவும், ஆகவே அனைவரும் சற்று தள்ளி நிற்க வேண்டும் எனக் கூறிவிட்டு நீர் நிறைந்த கிணற்றில் இறங்கினார். ஆனால் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியில் வரவில்லை என்பதினால் பயந்து போன மக்கள் கிணற்றின் அருகே ஓடிச் சென்று உள்ளே பார்த்தபோது அவரைக் காணவில்லை. கிணற்று நீரில் மூழ்கி இறந்துவிட்டாரோ என்று கவலைக்கு கொண்டு சிலரை கிணற்றுக்குள் இறக்கி அவரை தேடுமாறு கூறினார்கள். ஆனால் அவருடைய உடல் உள்ளே கிடைக்கவே இல்லை. சிலர் அப்போது கிணற்றின் உள் இருந்து ஒரு ஒளி வெள்ளம் வானத்தை நோக்கி பறந்ததை கண்டார்கள்.

ஆகவே அந்தக் கிணறு புனிதக் கிணறு எனக் கருதியவர்கள், அன்றிலிருந்து அந்தக் கிணற்றை யாரும் அசுத்தம் செய்யக் கூடாது, அதில் இருந்து நீரை எடுக்கக் கூடாது என்பதற்காக கிணற்றை சிமெண்ட் பலகையினால் மூட முயற்சித்தார்கள். ஆனால் எத்தனை முறை மூடினாலும், அந்த தடுப்பு உடைந்தது அல்லது விரிந்தது. ஒரு பக்தர் கனவில் தோன்றிய சித்தர் தனக்கு அந்த கிணற்றின் மீதே சமாதி ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூறினார் என்பதினால் அந்த கிணற்றின் மீதே ஒரு சமாதி ஆலயத்தைக் கட்டி அவரை வழிபடத் துவங்கினார்கள். கிணற்றின் மீதுள்ள சமாதிக்கு மேலே ஓலையினால் வேயப்பட்ட மேற் கூரை அமைத்து சமாதி ஆலயத்தை மூடி உள்ளார்கள். சமாதி உள்ள சன்னதியில் மட்டும் உள்ளே செல்ல பெண்கள் அனுமதி இல்லை. அதன் காரணம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் சித்தர் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள்.