2011 ஆம் வருடம் நான் பெங்களூரில் வசந்தபுராவில் இருந்த ஒரு அதிசயமான ஆலயத்துக்கு சென்று இருந்தேன். அதன் பெயர் பகவான் வசந்தபுரா வல்லபாராய ஆலயம் என்பதாகும். ஆலயம் 1000 வருடத்துக்கு முற்பட்டது, சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம் என்கின்றார்கள். அது கட்டப்பட்டபோது அதன் பெயர் ‘பூனில வசந்த நாயகி சமேத வசந்த வல்லபாராய ஸ்வாமி ஆலயம்’ என்பதாகும். அந்த ஆலயத்தின் எதிரில் பகவான் ஹனுமாருக்கு ஒரு ஆலயம் உள்ளது. அந்த ஆலயங்கள் இரண்டுக்கும் இடையில் அன்னை மாரியம்மன் எனும் காத்யாயினி தேவி என்ற கிராம தேவதையின் ஆலயமும் உள்ளது. அதை போலவே பகவான் சிவபெருமானுக்கும் ஒரு ஆலயம் பகவான் வல்லபாராய ஸ்வாமி ஆலயத்தின் பக்கத்திலேயே கட்டப்பட்டு உள்ளது.
பகவான் சிவபெருமானின் ஆலயம் குறித்த இரண்டு கதைகள் உள்ளன. ஒரு காலத்தில் மராட்டிய மானியத்தை ஆண்டு வந்த பேரரசன் சத்ரபதி சிவாஜி அடிக்கடி தென்னாட்டுக்கு வந்து அங்குள்ள ஆலயங்களுக்கு செல்வாராம். அவர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் ஆலயத்துக்கு சென்றுவிட்டு பெங்களூரில் இந்த ஆலயம் உள்ள இடத்தில் வந்து தங்கி இருந்தாராம். அப்போது இது வனப் பிரதேசமாக இருந்தது. சிவாஜி மன்னன் இங்கு தங்கி இருந்தபோது பகவான் சிவபெருமானுக்கு இங்கு ஆலயம் அமைத்து அதில் அன்னை பார்வதி தேவி மற்றும் அவருடைய குலதெய்வமான பவானி தேவியின் சிலையையும் பிரதிஷ்டை செய்தாராம்.
பகவான் வல்லபாராயா யார்? அவர் பகவான் திருப்பதி வெங்கடாசலபதியே ஆவார். திருப்பதியில் திருமணத்தை முடித்துக் கொண்டு இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு மஞ்சள் நீராட்டு விழா எனும் வைபவத்தைக் கொண்டாட வந்தாராம். மஞ்சள் நீராட்டு விழா எனும் சடங்கை திருமணம் செய்து முடித்ததும் செய்ய வேண்டும் என்பது அந்த கால நியமம் ஆகும். ஆகவே பகவான் வெங்கடாசலபதி அடர்ந்த காடாக இருந்த இங்கு வந்து தங்கி இருந்தார்.
அப்போது தாண்டவ முனிவர் எனும் பெரிய முனிவர் ஒருமுறை யாருக்கும் தெரியாமல் இங்கு வந்துவிட்டார். அவர் காணாமல் போய் விட்டதைக் கண்டு கவலைக் கொண்ட சீடர்கள் அவரை தேடி அலைந்து முடிவாக இங்கு வந்து அவரைக் கண்டு பிடித்தார்கள். அவரிடம் இங்கு வந்ததின் காரணத்தைக் கேட்டார்கள்.
அதற்கான காரணத்தை மாண்டவ முனிவர் அவர்களிடம் கூறினார். ஒருமுறை காசியில் கங்கைக் கரையில் தங்கி இருந்த மாண்டவ முனிவர் அங்கிருந்து பத்ரிநாத்துக்கு சென்று பகவான் விஷ்ணுவை தரிசனம் செய்தபோது விஷ்ணு பகவான் அவருக்கு பீஜாக்ஷர மந்திரோபதேசம் செய்தாராம். ஆகவே அதன் சில காலத்துக்குப் பிறகு மீண்டும் பகவான் விஷ்ணுவைக் காண ஆவல் கொண்ட மாண்டவ முனிவர் திருப்பதிக்கு சென்றபோது அவர் வசந்தபுராவில் இருந்த இடத்துக்கு சென்று விட்டதாக தெரியவர மாண்டவ முனிவரும் பகவான் விஷ்ணுவைத் தேடி அந்த காட்டுக்குள் வந்தாராம். அதற்கு முன்னதாக கர்னாடகாவுக்கு வந்த மாண்டவ முனிவர் மேல்கோட்டை எனும் இடத்தில் தங்கி இருந்தபோது அவர் கனவில் தோன்றிய பகவான் விஷ்ணு தான் இன்ன இடத்தில் தங்கி உள்ளதாக விவரத்தைக் கூறி அங்கு வந்து தன்னை வணங்குமாறு கூறியதால், பகவான் விஷ்ணு குறிப்பிட்ட இந்த ஆலயம் உள்ள இடத்துக்கு வந்தாராம். அங்கு பல முனிவர்களும், ரிஷிகளும் தவத்தில் அமர்ந்து இருந்தார்கள். மாண்டவ முனிவரும் விஷ்ணு பகவானின் சிலையைக் கண்டு பிடித்து அதை அங்கேயே பூமியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.
அப்போது அவர் முன் காட்சி தந்த பகவான் விஷ்ணு திருப்பதியில் தான் பகவான் வெங்கடேஸ்வரராக உள்ளதை போலவே இங்கும் அதே வெங்கடேஸ்வரராக தங்கி இருந்து பக்தர்களை காத்தருள்வேன் என வாக்குறுதி தந்தார். திருப்பதி பகவான் வெங்கடேஸ்வரர் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வந்திருந்த தெய்வங்களான பகவான் ஹனுமார், பகவான் சிவபெருமான் மற்றும் அன்னை பார்வதி தேவி போன்றவர்கள் அந்த ஆலயத்தை சுற்றியே தாமும் இருக்க முடிவு செய்து அங்கு கட்டப்பட்ட ஆலயங்களில் அமர்ந்தார்கள். அந்த ஆலயத்தை சுற்றி வசந்த தீர்த்தம், சங்கர தீர்த்தம் மற்றும் தேவ தீர்த்தம் என்ற நீர் நிலைகளைத் தவிர மேலும் இரண்டு நீர் நிலைகள் இருந்தனவாம். அவற்றின் பெயர் தெரியவில்லை. ஆனால் இன்று அந்த தீர்த்தங்கள் எங்கு உள்ளன என்பது தெரியவில்லையாம்.
ஆலயத்தில் வசந்த வல்லபா பகவானுக்கு முன் பக்கத்தில் உள்ள அறையில் அவரை நோக்கியவாறு கருடாழ்வார் கைகளைக் கூப்பியபடி அமர்ந்து கொண்டு உள்ளார். ஆலயத்தில் நுழைந்ததும் அதன் இடப்புறத்தில் பகவான் ஹனுமானின் சன்னதி உள்ளது. அங்கு பகவான் ஹனுமான் ஒரு தங்க தட்டில் நின்று கொண்டு உள்ளார்.
அங்கிருந்து சுமார் 50 அல்லது 60 அடி உள்ளே தள்ளிச் சென்றால் மூல சன்னதியை அடையலாம். அது இரண்டு சன்னதிகளாக உள்ளது. ஒன்றில் பகவான் வெங்கடாசலபதி தனது மனைவிகளான பூதேவி மற்றும் ஸ்ரீ தேவியை பக்கத்தில் வைத்துக் கொண்டு நின்றவண்ணம் அபய முத்திரையைக் காட்டியபடி வசந்த வல்லபாராயராக காட்சி தந்து கொண்டு இருக்கின்றார். இன்னொரு சன்னதியில் அன்னை பத்மாவதித் தாயார் காட்சிதருகிறார். இந்த நிலையில் பகவான் விஷ்ணு காட்சி தரும் ஆலயம் அபூர்வமானதாகும்.
Vasantha Vallabha Raya Swamy Temple
Vasantapura,
Near Uttarahalli ,
Bangalore – 560061