திருத்துறைப்பூண்டி

திருவிடைமருதூர்

மஹாலிங்கஸ்வாமி

ஆலயம்

    – சாந்திப்பிரியா-

நாம் அனைவருமே ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த திருஞான சம்மந்தர் எனும் சைவ நாயன்மார் அவருடைய மூன்று வயதில்  ஒரு நதிக்கரையில் அழுது கொண்டு இருந்தபோது அங்கு வந்த பார்வதி தேவி ஒரு தங்கக் கிண்ணத்தில் பாலை கொடுத்து அமைதிப்படுத்தியதான கதையை படித்து இருக்கலாம். ஆனால் நான்கு யுகங்களில் முன்னொரு யுகத்தில் மானிட உருவில் பிறந்த பார்வதி தேவிக்கே மகனாக பிறந்த சிவபெருமான் அவளிடம் தாய் பாலைக் குடித்து வளர்ந்த கதையை வேறு எங்குமே கேள்விப்பட்டு இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு கதையை வரலாற்றுக் கதையாக கொண்ட மேன்மையான ஆலயத்தை மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178 ஆம் ஆண்டு கட்டி உள்ளார் என்பதைக் கேட்கும்போது வியப்பாக இருக்கின்றதா?  ஆமாம் தற்போது திருத்துறைப்பூண்டி -நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் உள்ள திருவிடைமருதூர் என்ற ஒரு கிராமத்தில் உள்ள மஹாலிங்கஸ்வாமி ஆலயமே அது. இதே பெயரில் மாயவரம் கும்பகோணம் நெடுஞ்சாலையிலும் இன்னொரு திருவிடைமருதூர் என்ற ஊரும் அங்கு ஒரு மஹாலிங்கஸ்வாமி ஆலயமும் உள்ளது. இந்த இரண்டு ஆலயங்களுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் என்றாலும் இரண்டு ஆலயங்களுடைய  வரலாறும் வெவ்வெறானவை.

மானிடர்களை தீமைகளில் இருந்து காப்பாற்ற பல்வேறு நிலைகளில் தெய்வங்கள் பூமியில் பல்வேறு உருவங்களையும், அவதாரங்களையும் எடுக்கின்றன. அதைப் போலவே தெய்வங்களுக்கு ஏற்பட்டு இருந்த சாபங்களை நிவர்த்தி கொள்ளவும் அவர்கள் பூமியில் மானிடர்களாக உருவெடுத்து சாபம் நீங்கி தேவலோகத்துக்கு திரும்பச் சென்று உள்ளார்கள்.  சில தெய்வங்கள் சிலரது வேண்டுகோளை ஏற்று பூமிக்கு வந்து அவர்களுக்கு காட்சி தந்தபின் அந்த இடங்களை புனித இடங்களாக்கிச் சென்று இருந்தார்கள்.  பூமிக்கு வந்து விட்டு சென்ற தெய்வங்கள் வாழ்ந்திருந்த இடங்களில் பிற்காலத்தில் அந்தந்த தெய்வங்களின் மகிமைகளைக் கூறும் ஆலயங்களும் எழுந்துள்ளன. இப்படியாக சில அவதாரங்களை எடுத்த, தம்மை வேண்டி துதித்தவர்களுக்கு காட்சி தந்த தெய்வங்களில் முக்கியமானவர் சிவபெருமானே என்றாலும் பூமியில் பல அவதாரங்களை எடுத்தவர்களில் கிருஷ்ண பகவான், விஷ்ணு பகவான், பிரும்ம பகவான், சனி பகவான், துர்கா தேவி, பார்வதி தேவி, அக்னி தேவர், பைரவப் பெருமான்   போன்ற தெய்வங்களும் உண்டு.  இவை பல புராணங்களில் காணப்படுகின்றன. 

சிவபெருமான் எடுத்துள்ள அவதாரங்களை குறித்த செய்திகள் புராணங்களில் அதிகம் காணப்படவில்லை என்பது உண்மை என்றாலும் சிவபெருமானுக்கு 64 வடிவங்கள் இருப்பதாக பண்டிதர்கள் கூறுகின்றார்கள். மேலும் சிவபெருமானும் பூமியில் 19 மானிட அவதாரங்களை எடுத்திருக்கிறார் என்பதாகவும் கூறுகின்றார்கள். ஆனால் அந்த 19 அவதாரங்களில் துர்வாச முனிவர், நந்தி, வீரபத்திரர், ஷரப, பைரவ, மற்றும் ஹனுமான் போன்ற சில தெய்வங்களையும் குறிப்பிடுகின்றார்கள். அவற்றில் சிவபெருமான் எடுத்த முக்கியமான ஒரு மானிட அவதாரம் பிப்லாட் அவதாரம் என்பதாக வடநாட்டில் கதை உண்டு. சிவபெருமான் எடுத்த 19 அவதாரங்களில் ஒன்றான பிப்லாட் என்பவரது அவதார வழிபாடு வடநாட்டில் உள்ளது. தாதிச்சி என்ற துறவியின் வீட்டில் மகனாக  பிறந்ததாக கூறப்படும் சிவபெருமானுக்கு  பிப்லாட் என்று பெயரிட்டனர். அந்த பிப்லாட் அவதாரத்தில் அவர் சனி பகவானின் ஒரு  சாபத்தை நீக்கினார் என்பதினால் பிப்லாட்டை வழிபட்டால் சனியின் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று. அதே போல சிவபெருமான் விஸ்வனார் எனும் ஒரு பிராமணருக்கு மகனாகப் பிறந்து கிரஹபதி என்ற பெயரைக் கொண்டு வாழ்ந்தாராம். அஸ்வத்தாமாவாக அவதரித்ததும் சிவபெருமானே ஆகும் என்பதாக வடநாட்டு புராணத் செய்திகள் கூறுகின்றன. இப்படியாக இறைவன் பூமியில் மானிட உருவில் தோன்றுவதே ஒரு அவதாரம் எனப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு மானிட அவதாரத்தை சிவபெருமான் தமிழ்நாட்டில் திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம் எழுந்துள்ள இடத்திலும் எடுத்து இருக்கின்றார் எஎன்பதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. 

அந்த ஆலயம் உள்ள இடத்தில் பார்வதி தேவிக்கு ஒரு குழந்தையாக சிவபெருமான் பிறந்து அவளிடம் தாய் பால் அருந்தி வாலிபனாக வளர்ந்த பின் இருவரும் தத்தம் சுய உருவை அடைந்து கைலாயம் திரும்பச் சென்ற  தெய்வீக திருவிளையாடல் கதையை கேட்டு அறிந்து கொண்ட குலோத்துங்க சோழன்-III, சிவபெருமானும் அன்னை பார்வதி தேவியும் தங்கி இருந்ததாக கூறப்பட்ட அதே இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பி உள்ளார். பல ஆக்ரமிப்பாளர்களது செயல்களினால் இடிபாடு அடைந்து பல காலம் கவனிப்பார் அற்றுக் கிடந்த திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயத்தின் மகிமையை உணர்ந்த கிராமத்தினர் தாமே முன்வந்து அந்த ஆலயத்தை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யத் துவங்கி உள்ளார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் சாத்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு இருந்த, இன்றைய திருவிடைமருதூர்   கிராமத்தில் கூறப்படும் இந்த ஆலயத்தின் வரலாற்றுக் கதை சமீப காலத்தில் கூறப்பட்டது அல்ல. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே கூறப்பட்டு வந்துள்ள வாய்மொழி வரலாற்றுக் கதை ஆகும்.  

இந்த ஆலயத்தின் வரலாற்றுக் கதை என்ன ? ஆதி காலத்திலே  ஒரு முறை சிவபெருமானுக்கு ஒரு ஏக்கம்  ஏற்பட்டது. இந்த பூவுலகில் அனைவருமே தாய், தாய் என தாயின் பாசத்தில் கட்டுண்டு கிடக்கின்றார்களே. அந்த உணர்வை புரிந்து கொள்ள இந்த பிரபஞ்சத்தையே படைத்த எனக்கு ஒரு தாய் இல்லையே. உண்மையிலேயே  தாயின் பாசம் என்பது என்ன ? அதன் வலிமைதான் என்ன? தாயின் பாசத்தை  குழந்தை பருவம் முதல் வயதாகும்வரை எப்படி உணர்ந்து  அவளோடு வாழ்கின்றார்கள்  என்பது நமக்கு தெரியவில்லையே என ஏங்கினார். தானே சிவசக்தி எனும் பரபிரும்மனின் ஒரு பாகமாக இருந்து இந்த உலகை படைத்து இருந்தாலும், அதில் இருந்த மக்களே தாய்-தந்தை என ஒரு உருவகத்தைப் பெற்று குழந்தைகளை ஈன்றெடுத்து வாழ்ந்தாலும்,  தன்னால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில் ஒரு தாயின் உணர்வு எப்படி இருக்கும் என்பது தமக்கே தெரியாமல் இருக்கின்றதே என வருந்தியவர் தானும் யாராவது ஒரு தாயின் வயிற்றில் பிறந்து  ஒரு தாயின் அரவணைப்பும் அன்பும் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை அனுபவபூர்வமாக உணர வேண்டும் என முடிவு செய்தார்.

ஆனால் எங்கு சென்று அந்த பிறப்பை எடுப்பது? அதற்கு தகுதியான இடம்தான் எது என்று எண்ணி சிறிது குழம்பினார். தனக்கு தகுதியான தாயார் யாராக இருக்க வேண்டும் என்பதை பூமியில் எந்த இடம் உணர்த்துமோ அங்கு சென்று ஒரு தாயின் கருவில் தங்கி குழந்தையாக பிறப்பு எடுக்கலாம் என முடிவு செய்து விட்டு தன்னை ஒரு மானிடராக மாற்றிக் கொண்டு தனது வாகனமான ‘விடை’ (விடை என்றால் காளை என்று அர்த்தம்) என்பதின் மீதேறி பூமிக்கு வந்து பல இடங்களுக்கும் செல்லத் துவங்கினார். பூமிக்கு சென்று விட்டு திரும்புவதாக கைலாயத்தில் இருந்து கிளம்பிய ஈசனின் மனதை அன்னை பார்வதி அறியாமல் இருக்க முடியுமா? ஒரு தாயின் அன்பும் அரவணைப்பும் எப்படி இருக்கும் என்பதை மற்ற எந்த பெண்ணும் அவருக்கு உணர்த்துவதை விட, தனக்கு மட்டுமே சிவபெருமானின் அன்பு இருக்க வேண்டும் என்ற உணர்வைக் கொண்டு இருந்த அன்னை பார்வதி, தானே ஈசனுக்கு அந்த உணர்வுகளை வெளிப்படுத்தி புரிய வைக்க வேண்டும் என முடிவு செய்து அவளும் ஒரு மானிட உருவெடுத்து பூமிக்கு வந்து இன்றைய திருவிடைமருதூர் கிராமத்தில் தங்கினாள். ஆனால் மானிட உருவில் இருந்த ஈசனால் அதை உணர முடியவில்லை. அவருக்கு தான் ஈசன் என்பது மட்டுமே தெரியும். வந்த காரணமும் தெரியும். ஆனால் தெய்வங்களாகவே இருந்தாலும் மானிடப் பிறவி எடுத்து பூமியில் தங்கும்போது அந்தந்த தெய்வங்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரும்போதுதான் அவர்களால் பூமியில் உள்ள இன்னொரு தெய்வத்தை அடையாளம் தெரிந்து கொள்ள முடியும் என்பது மட்டும் அல்ல அவர்களது உண்மையான தோற்றத்தையும் மீண்டும் பெற முடியும் என்பது தெய்வ லீலையில் நியதி என்பதினால் பூமிக்கு வந்திருந்த இருவருக்குமே தாம் யார் என்பது தெரியாது.

ஒருமுறை படைக்கப்பட்ட, நான்கு யூகங்களைக் கொண்ட பிரபஞ்சம் குறிப்பிட்ட காலத்தில் அழித்து விட்டு மீண்டும் இன்னொரு பிரபஞ்சமாக வெளியாகும் என்பதாக  பண்டிதர்கள் கூறுவார்கள். இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலமோ நமது எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட காலம் ஆகும். அதில்  நான்கு யுகங்கள் படைக்கப்பட்டு  ஒவ்வொரு  யுகத்துக்கும் நிர்ணயிக்கப்பட்டு இருந்த  காலம் முடிந்ததும் அந்த யுகம் அழிந்து  அதை தொடர்ந்து அடுத்த யுகம் செயல்படத் துவங்கி, அடுத்தடுத்து நான்கு யூகங்கள் முடிந்த நிலையில் கடலும் பூமியும் மட்டும் அழியாமல் அப்படியே இருக்க, அனைத்து யூகங்களும் மறைத்து விட்டு மீண்டும் புதிய பிரபஞ்சம் மலருமாம். இப்படியான நிலையில் பரபிரும்மன் சிருஷ்டி செய்திருந்த பூமியில் ஒவ்வொரு யுகங்களிலும் தெய்வங்கள் தங்கி இருந்த பல புனித, தெய்வீக  இடங்கள் இருந்திருந்தன. பல மன்னர்களது ஆட்சி காலத்தில்  அந்த  தெய்வீக  இடங்களில் மட்டுமே பல ஆலயங்களும் பிற்காலத்தில் எழுந்துள்ளன என்பது ஒரு உண்மை நிலையாகும். 

அப்படிப்பட்ட யுகம் ஒன்றில், தெய்வீக பூமிகளில் ஒன்றான திருவிடைமருதூருக்கு மானிட உருவில் இருந்த ஈசனும் பார்வதி தேவியும்  வந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் அறியாமல்  தங்கி இருந்தபோது, திடீரென அன்னை உமா தேவிக்கு (பார்வதி தேவி)  தான் நிறைமாத கர்ப்பவதி ஆகி இருந்ததை போன்ற உணர்வு வந்தது. உடனடியாக அவள் மனதில் ஈசனை நினைத்தாள். அவள் ஈசனை நினைத்தவுடன் அவருக்கும் தன்னை அறியாமலேயே மானிட உருவில்  குழந்தையை பெற்றெடுக்கும் நிலையில் (உணர்வோடு) இருந்த பார்வதி தேவி மீது, அவள் மானிட உருவில் உள்ள தனது மனைவியே என்பதை உணர முடியாத நிலையில், ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.  தெய்வ லீலைகளில்  மானிட உருவில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் உணர முடியாமல் இருக்கும் இப்படிப்பட்ட நிலை இருப்பது  மிக சாதாரணமானது. உடனடியாக அவளது கருவில் சென்று அமர்ந்து கொண்ட ஈசன் அவளுக்கு ஒரு குழந்தையாகவே பிறந்தார். பார்வதி தேவியும் அந்த குழந்தைக்கு தன் மார்பில் இருந்து பால் கொடுத்து அரவணைத்து வளர்த்து வர சிறிது காலம் ஓடியது. தாயின் அன்பு எத்தகைய வலிமைக்கு கொண்டது என்பது மெல்ல மெல்ல குழந்தை உருவில் வளர்ந்து வந்த ஈசனுக்கு புரிந்தது. அவரும் விரைவிலேயே விடலை (வயதுக்கு வந்த பருவம்)  பருவத்தை அடைந்ததும்,  தெய்வ லீலையில்  ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டிய காலம் வந்ததும், இருவரும் தத்தம் சுய உருவை அடைந்தார்கள். இப்படியாக ஈசனே ஒரு தாய்க்கு   குழந்தையாக பிறந்து ஒரு தாயின் அன்பும் அரவணைப்பும் எப்படிப்பட்டது என்பதை பரிபூரணமாக உணர்ந்து கொள்ள, பார்வதியும் தானே ஒரு தாயின் அன்பை தனது கணவருக்கு எடுத்துரைத்த உண்மையை உணர்ந்து கொண்டவுடன் இருவரும் கைலாயத்துக்கு கிளம்பிச் சென்று விட்டார்கள். அப்படி கிளம்பிச் செல்லும் முன் தாங்கள் தங்கி இருந்த அந்த  இடத்தில் (இன்றைக்கு மஹாலிங்கஸ்வாமி ஆலயம் உள்ள இடம்) வந்து தம்மை வழிபடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், தீராத துன்பங்கள் தீரும் என்ற வகைக்கான புனித பூமியாக அது இருக்கட்டும் என ஒரு தெய்வீக தன்மையை அந்த இடத்துக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றார்கள்.  

கி பி 1178 முதல் 1218 வரை சுமார் நாற்பது ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாக கூறப்படும் மூன்றாம் குலோத்துங்க ஆட்சியில் தற்போது உள்ள மஹாலிங்கஸ்வாமி ஆலயத்தையும் சேர்த்தே  அவர் கட்டிய பல சிவாலயங்கள் எழுந்துள்ளன. இந்த புனித இடத்தில்   கி பி 1178 ஆம் ஆண்டில் கலைநயம் மிக்க இந்த சிவாலயத்தை தானே முன்னின்று  கட்டி அதற்கு ‘குலோத்துங்க சோழீச்சரம்’ என்ற பெயரையும் சூட்டி உள்ளார்.   அவர் கட்டி  உள்ள இந்த குலோத்துங்க சோழீச்சர ஆலயம் பாதி பாறைக் கற்களாலும் மீதி செங்கல்களாலும் கட்டப்பட்டு இருந்துள்ளது.  திருத்துறைப்பூண்டியில் உள்ள பவஓளஷதேஸ்வர் எனும் ஆலயத்தில் காணப்படும் கல்வெட்டுக்கள் மூலம் குலோத்துங்க சோழன் கட்டிய இந்த சிவாலயத்துக்கு அருகில் இருந்த சில கிராமங்களில் இருந்து நிலங்களை மானியமாக தந்துள்ளது தெரிய வருகின்றது. இந்த செய்திகள் மூலம் இந்த சிவாலயம் பெரும் பெருமை வாய்ந்திருந்த ஆலயமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். 

துரதிஷ்டவசமாக கி பி 14  ஆம் நூற்றாண்டில் வடநாட்டில் இருந்து படையெடுத்து வந்த முகலாய மன்னர்களின் படையெடுப்பினாலும், மதுரையை ஆண்ட சில மன்னர்களது படையெடுப்புக்களினாலும் தமிழ்நாட்டின் பல ஆலயங்கள் இடித்து நாசமாக்கப்பட்டுள்ளன, வழிபாடுகள் நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்துள்ளன. அதில் இந்த ஆலயமும் ஒன்றாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் விஜயநகர மன்னர்கள் ஆட்சி காலத்தில் மீண்டும் சில ஆலயங்கள் புதுப்பொலிவை பெற்றாலும், பழைய ஆலயங்களின் பெயர்கள் மாறி விட்டிருந்தன. சாத்தமங்கலம் என்ற பெயரும் திருவிடைமருதூர் என மருவுற்றது, குலோத்துங்க சோழீச்சரம் என்ற ஆலயத்தின் பெயரும் மஹாலிங்கஸ்வாமி ஆலயம் என மருவி உள்ளது எனத் தெரிகின்றது.  

அன்றைய மஹாலிங்கஸ்வாமி ஆலயத்தின் உபபீடம் மற்றும் அதிஷ்டானப் பகுதிகள் கருங்கல்லினாலும் , மேல்நிலை விமான மற்றும் கட்டிட பகுதிகள் செங்கல்லினாலும் கட்டப்பட்டு இருந்துள்ளது. காலப்போக்கில் மெல்ல மெல்ல ஆலய சுவர்களும், மேற்கூறை மற்றும் செங்கல் கட்டிடங்களும் சிதைந்துபோய் அழிந்து  விட்டன.  ஆனால் அந்த ஆலயத்தில் இருந்த மூர்த்திகள் சிதைந்து  போகாமல் தப்பி உள்ளது.  அந்த சிலைகளில் வினாயகப் பெருமான், தேவிகளுடன் உள்ள  முருகப் பெருமான், சூரிய பகவான், பைரவர பகவான், பகவான் திருமால்,  ஸ்ரீதேவி, அம்பாள், இரட்டை காகத்துடன் உள்ள பகவான் சனீஸ்வரர், அமர்ந்த நிலையில் உள்ள துர்கை தேவி மற்றும் அற்புதமான கலை நயம் மிக்க சண்டிகேஸ்வர பகவான்  போன்ற தெய்வங்களின் உருவச் சிலைகள் உள்ளன.  அவற்றை தவிர கருவறையில் மஹாலிங்கஸ்வாமி சிவலிங்க வடிவிலும், ஸ்ரீ விமானத்தில் அபிதகுஜாம்பாள் எனும் பெயரில் பெருவிளாமாமுலை அம்மனும்  காணப்படுகின்றார்கள்.  ஆலயத்தின் எதிரில் ஆலயத்தை நோக்கி வணங்கும் நிலையில் சுமார் நாலரை அடி உயர மூன்றாம் குலோத்துங்க சோழனின் சிலையும் உள்ளது.

அப்படி ஈசனுக்கே பாலூட்டிய அன்னை என்பதினால் அம்பாளுடைய திருநாமம் ‘பெருமாமுலையாள்’ எனவும், அவளது அமுத பாலை குடித்து குறுகிய காலத்திலேயே விடலை பருவத்தை எய்திய சிவபெருமானை ‘மஹாலிங்கஸ்வாமி’ என்ற பெயரிலும், தெய்வீகக் காளை மீதேறி இந்த ஊருக்கு ஈசன் வந்ததால் இந்த ஊரை திரு என்றால் வணக்கத்துக்குரிய என்ற அர்த்தமும், விடை என்றால் காளை என்ற அர்த்தமும் கொண்ட திருவிடைமருதூர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. பிற்காலத்தில் சிதிலமடைந்து கேட்பாரற்று கிடந்த இந்த ஆலய மேன்மையை உணர்ந்த உள்ளூர் மக்கள் ஒன்றிணைந்து அந்த ஆலயத்தை மீண்டும் புனரமைக்க துவங்கி உள்ளனர். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. ஆலயத்தில் இருந்த அனைத்து சிலைகளையும் பத்திரமாக எடுத்து ஒரு கூறை வீட்டில் பத்திரமாக வைத்து பாதுகாத்து வருகின்றார்கள்.

இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிட்டும் என்றும், வேறு எங்கு சென்றும் தீராத பிரச்சனைகள் இங்கு வந்து வேண்டிக்கொள்வதின் மூலம் தீரும் என்பதும் ஒரு ஐதீகமாக உள்ளது. விரைவில் இந்த கிராமத்து மக்களின் உழைப்பினால் இந்த ஆலய கும்பாபிஷேகம் முடிந்து ஆலயம் திறக்கப்பட உள்ளது. இத்தனை புராதனமான, மேன்மை மிக்க வரலாற்றுப் பின்னணி மற்றும் கதையினை கொண்ட ஆலய புனரமைக்கு அவரவர் தம்மால் முடிந்த அளவு  காணிக்கை கீழ் தரப்பட்டு உள்ள ஆலய முகவரிக்கு  அனுப்பினால் அது தெய்வத்துக்கு செய்யும் மிகப் பெரிய கைங்கர்யமாக இருக்கும் என நம்பலாம்.

இந்த ஆலய வரலாற்றுப் பின்னணியைக் குறித்து ஆராய்ச்சி செய்துள்ள டாக்டர் குடவாயில் திரு பாலசுப்ரமணியன் என்பவர்  அளித்துள்ள அறிக்கை மற்றும் பாழடைந்து கிடந்த ஆலயத்தின் படங்களும் இந்த  கட்டுரையின் இறுதியில்  பிரசுரிக்கப்பட்டு உள்ளது.

ஆலய விலாசம்

பெருவளமாமுலையாள் உடனுறை மஹாலிங்கஸ்வாமி திருக்கோவில்
திருவிடைசிமருதூர் கிராமம்
திருக்குவளை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் -614711

 

ஆலய வேலை நிறைய பாக்கி உள்ளது. நான்கு பக்கமும் மதில் சுவர், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுவாமி, மற்றும் அம்பாள் சந்நிதிக்கு தரை தளத்திற்கு டைல்ஸ் போடவேண்டியுள்ளது தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தொலைபேசி எண்கள்:

9486074234  / 9566406752 / 9626749735 / 9843343317

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரம்
Account in the name of: Thiruvidamaruthurnathar Iraipani Group Trust
Current Account No : 35074643072
IFS Code No : SBIN0000936
Bank: State Bank of India
Branch: Thiruthuraipoondi

பழுதடைந்த ஆலயத்தில் இருந்த

சன்னதிகளில் சிலைகள்
 

பாதுகாப்பாக வைக்கப்பட்டு

உள்ள ஆலய மூர்த்திகளின் படங்கள்

டாக்டர் குடவாசல் பாலசுப்ரமணியன்

அவர்களின் அறிக்கை- 11 பக்கங்கள்

திருப்பணிக்குழுவினர் பத்திரிகை