தகட்டூர் பகவான்
கால பைரவர்
சாந்திப்பிரியா
பகவான் கால பைரவர் பொதுவாக பகவான் சிவபெருமானின் உக்ர அம்சத்தை குறிக்கும் தெய்வம் என்று கூறுவார்கள். கோபக்கனலான பார்வை, புலிப் பற்கள், எரியும் நெருப்பு போல காட்சி தரும் தலை முடி போன்றவற்றைக் கொண்ட உருவத்துடனும் மார்பில் பாம்பு சுற்றிக் கொண்டு இருக்கும் காட்சி அல்லது மனித மண்டை ஓடுகள் கோர்த்த மாலையுடனும் காணப்படுபவர். சில சிலைகளில் கையில் பகவான் பிரும்ம தேவரின் தொங்கும் தலையையும், கையில் ஈட்டி மற்றும் டமாரத்தை கொண்டும் காட்சி அளிப்பார். அவருடைய மூன்றாம் கண் ஞானத்தை குறிக்கும். பகவான் கால பைரவரை பூஜித்து அல்லது வணங்கி வருபவர்களது மன பயம் மற்றும் மன பீதி விலகுகின்றது. எதிரிகள் அடங்கி அழிவார்கள், அவர்களது தொல்லைகள் விலகும். தம்மை வணங்கித் துதிக்கும் பக்தர்களை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார் போன்ற நம்பிக்கைகள் உள்ளன. சில ஆலயங்களில் பகவான் கால பைரவர் சாந்த சொரூபியாகவும் காட்சி தருகின்றார்.
அப்படி சாந்த சொரூபத்தில் பகவான் கால பைரவர் காட்சி தரும் ஒரு ஆலயமே நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் எனும் கிராமத்தில் காணப்படுகின்றது. இந்த ஆலயம் எழுந்த காலம் சுமார் 1000 அல்லது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றார்கள். இந்த ஆலயம் குறித்து வெளி உலகில் பலருக்கும் தெரியவில்லை. ஆனால் ஆலயத்தில் நுழைந்ததும் ஒருவரை சுற்றி பகவான் கால பைரவரது தெய்வீக சக்திகள் சுழல்வதை உணர முடியும். ஆலய மூலவராக பகவான் கால பைரவர் காட்சி தரும் ஒரு சில ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் பல தோற்றங்களில் காணப்பட்டுள்ள இந்த ஆலய கும்பாபிஷேகம் 2002 ஆம் ஆண்டில் நடந்ததாக ஆலய கல்வெட்டு கூறுகின்றது.
இந்த ஆலயத்தில் பகவான் கால பைரவரைத் தவிர பகவான் காசி விஸ்வநாதர், பகவான் விநாயகர், தெய்வீக அன்னைகளான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கூடிய முருகப் பெருமான், பகவான் சண்டிகேஸ்வரர், தெய்வீக அன்னைகளான துர்கை, அன்னை விசாலாட்சி போன்ற பிற தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைந்து உள்ளன. இங்குள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் பகவான் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் காசியில் அவரை பூஜித்ததின் மூலம் கிடைக்கும் அதே அளவிலான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் காரணம் பகவான் கால பைரவராக இந்த ஆலய மூல சன்னதியில் தன்னை அமர்த்திக்கொண்டபோது, அதே சிவபெருமான் இன்னொரு சன்னதியில் தன்னுடைய சுய உருவான சிவலிங்கத்தில் காசி விஸ்வநாதராக அமர்ந்து கொண்டாராம்.
ஆலயத்தின் எதிரில் பெரிய தண்ணீர் குளம் உள்ளது. அதன் இன்னோர் பக்கத்தில் கிராம தேவதைகளான ராவூத்தர், கருப்பாயி எனும் தேவதை போன்றவர்களுடன் அன்னை காத்தாயியும் கிராம தேவதை உருவில் காணப்படுகிறாள். இந்த கிராமத்தை சேர்ந்த பலருக்கும் எதோ ஒரு காரணத்தினால் சித்தாடி அன்னை காத்தாயி அம்மனே குலதெய்வமாக இருக்கின்றாள் என்பதைக் கேட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. அவர்கள் மூவரும் அங்கிருந்தபடியே வெளித் தெரியாத நிலையில் பகவான் கால பைரவருக்கு சேவகம் புரிந்து கொண்டு இருப்பதாக ஐதீகம் உள்ளது. அதைத் தவிர கிராம தேவதை ராவுத்தர், தகட்டூர் கிராமத்தின் காவல் தெய்வம் என்கின்றார்கள். சாதாரணமாக சில ஆலயங்களில் சில காரணங்களுக்காக சக்தி எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைக் காணலாம். அதை போலவே இங்குள்ள பகவான் கால பைரவரது ஆலயத்திலும் பகவான் கால பைரவ எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றார்கள்.
பகவான் கால பைரவர் எதற்காக இந்த ஆலயத்தில் வந்து அமர்ந்தார் என்பதற்கு சுவையான ஒரு பின்னணிக் கதை உள்ளது.
இராமாயண யுத்தம் முடிந்த பின் ராவணனைக் கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை களைந்து கொள்ள ராமேஸ்வரத்தில் ஸ்வயம்புவாக தோன்றிய சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்க வேண்டும் என்பதாக பகவான் ராமனுக்கு சில மாமுனிவர்கள் ஆலோசனைக் கூறினார்கள். அதனால் அந்த காலத்திலேயே புனித ஷேத்திரமாக கருதப்பட்ட காசி எனப்பட்ட இன்றைய வாரணாசி நகருக்கு சென்று அங்கு ஸ்வயம்புவாக அவதரித்திருந்த ஒரு சிவலிங்கத்தை தேடிக் கண்டுபிடித்து எடுத்து வருமாறு தனது தூதரான பகவான் அனுமானை பகவான் ராமபிரான் அனுப்பி வைத்தார். அந்த காலத்தில் காசி நகரமோ மனிதர்கள் வாசம் செய்ய இயலாத அடர்ந்த காடுகளாக இருந்த வறண்ட பூமியாகவே இருந்தது.
காசிக்கு சென்ற பகவான் ஹனுமான் அங்கு பல ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் இருந்ததைக் கண்டார். அத்தனை சிவ லிங்கங்களும் அங்கு தவம் இருந்த ரிஷி முனிவர்களால் செய்த பூஜைகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டவை. அந்த காலத்தில் காசி நகரமோ மனிதர்கள் வாசம் செய்ய இயலாத அடர்ந்த காடுகளாக இருந்த வறண்ட பூமியாகவே இருந்தது என்பதினால்தான் அங்கு முனிவர்கள் தவம் செய்ய வந்தார்கள். பல முனிவர்கள் ஸ்தாபித்து பூஜை செய்திருந்த சிவலிங்கங்கள் பலவும் இருந்ததினால் அந்த இடத்தில் பகவான் ஹனுமான் எத்தனை தேடியும் ஸ்வயம்பு லிங்கத்தைக் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. அப்போது அங்கு பறந்து கொண்டு இருந்த ஒரு கருடனும், சிவலிங்கங்கள் மீது ஓடிக் கொண்டு இருந்த பல்லி ஒன்றும் பகவான் ஹனுமானின் தேடுதலைக் கண்டு அவருக்கு உதவ முன் வந்தன. ஸ்வயம்பு லிங்கம் இருந்த ஒன்றின் மீது கருட பகவான் பறக்கத் துவங்க பல்லியும் அந்த சிவலிங்கத்தின் அருகில் சென்று கத்தியது. பகவான் ஹனுமானும் அவை அடையாளம் காட்டிய ஸ்வயம்புவாக எழும்பி இருந்த சிவலிங்கத்தை அடையாளம் கண்டு கொண்டு அதை எடுத்துக் கொண்டு கிளம்பினார். காசி நகரமோ பகவான் பைரவர் கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தன் அனுமதி இன்றி கருடன் மற்றும் பல்லியின் உதவியுடன் ஒரு சிவலிங்கத்தை பகவான் ஹனுமான் எடுத்துச் செல்வதைக் கண்ட பகவான் பைரவர் கோபம் கொண்டு பகவான் ஹனுமானை தடுத்து நிறுத்த அவர்கள் இடையே கடும் யுத்தம் நடந்தது. யுத்தம் பல நாட்கள் நடந்தும் எவருக்கும் சாதகமாக முடியாமல் நீண்டு கொண்டே இருக்க அதைக் கண்ட தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகவான் பைரவரிடம் சென்று பிரும்மஹத்தி தோஷத்தை தொலைத்துக் கொள்ள பகவான் ராமபிரான் அனுப்பிய தூதுவராகவே பகவான் ஹனுமான் அங்கு வந்து சிவலிங்கத்தை எடுத்துச் செல்கின்றார் என்று கூற, அதைக் கேட்ட பகவான் கால பைரவரும் சினம் தணிந்து அந்த சிவலிங்கத்தை ராமேஸ்வரம் வரை பத்திரமாக எடுத்துச் செல்ல பகவான் ஹனுமானுக்கு தானே துணையாக செல்வதாக வாக்குறுதி தந்த பின் யுத்தத்தை நிறுத்தி விட்டு பகவான் ஹனுமானுடன் சென்று அதை பகவான் ராமபிரானுக்கு அளித்தப் பின் தான் வழியில் கண்ட தகட்டூரிலேயே தங்கி விட முடிவு செய்தார். அதன் காரணம் என்ன எனில் அவர் பகவான் ஹனுமானுடன் சென்றபோது வழியில் வந்த காசியைப் போலவே தனக்கு தோற்றம் தந்த தகட்டூரில் ஒரு க்ஷணம் தான் சிறு குழந்தையாக மாறி விட்டு, மீண்டும் தன் பழைய உருவை அடைந்ததை உணர்ந்தார். ஆகவே அந்த சிறு செயல் தனக்கு எதோ ஒரு கட்டளை இட்டுள்ளது என்பதாகக் கருதி தகட்டூரிலேயே அமர்ந்து விட முடிவு செய்து அங்கு அமர்ந்து கொண்டார். அதே சமயத்தில் காசியில் தன்னை மீறி கருடனும், பல்லியும் பகவான் ஹனுமானுக்கு உதவி செய்ததினால் இனி காசியில் பல்லி கத்தக் கூடாது, கருடன் பறக்கக் கூடாது என தடை விதிக்க, இன்றுவரை காசியில் பல்லியும் கத்துவது இல்லை. கருடனும் பறப்பது இல்லை.
தகட்டூரை அடைந்த பகவான் பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பகவான் பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள்.
தகட்டூரை அடைந்த பகவான் பைரவர் தன்னை சிறு குழந்தை உருவிலான பைரவராக மாற்றிக் கொண்டு அங்கேயே தங்கி, தன்னை நாடி வந்து வழிபட்ட பக்தர்களுக்கு அருள் புரியலானார். அவர் அங்கு தங்கி உள்ளதைக் கேள்விப்பட்ட, பகவான் பைரவருக்கு அடங்கி உள்ள ஒன்பது கிரகங்களும் அங்கு வந்து அவரை தரிசித்து ஆசி பெற்றார்கள். அவர்களைத் தவிர பகவான் ராமர், துர்வாச முனிவர், அர்ஜுனன், தேவேந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம் மற்றும் சந்திர சூரியர்கள் இருவரும் அங்கு வந்து பகவான் பைரவரை வணங்கித் துதித்தார்கள்.
முன் ஒரு காலத்தில் இந்த இடத்தை அதியமான் எனும் ஒரு மன்னன் ஆண்டு வந்தபோது தகட்டூரில் ஒரு கோட்டையையும் அமைத்தார். அதனால்தான் இந்த இடத்தை அந்த காலத்தில் அதியமான் கோட்டை என்றே அழைத்தார்கள். அதை போலவே பல ஆயிரம் வருடங்கள் முன்பாகவே பல ரிஷி முனிவர்கள் வந்து தவம் செய்தபோது பல யந்திரங்களை செய்து தமக்கு பல விசேஷ சக்திகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து, யந்திரங்களை பிரதிஷ்டை செய்து பகவான் பைரவரை வழிபட்டார்கள். ஆகவே பல யந்திரங்கள் கிடந்த அந்த இடம் யந்திரபுரி என்ற பெயரையும் அடைந்து இருந்தது. பக்தி இயக்கத்தை வளர்த்த நாயன்மார்களில் ஒருவரான அப்பர் இந்த தலத்தின் பெருமை குறித்து பாடி உள்ளார். குழந்தை வரம் வேண்டியும் தடைபட்ட திருமணம் நடந்திடவும், எதிரிகளின் தொல்லை விலகவும், வியாதிகளின் தாக்கம் குறையவும் பலரும் இந்த ஆலயத்துக்கு வந்து பகவான் பைரவரிடம் வேண்டுதல் வைக்கின்றார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள் சின்ன குழந்தை வடிவிலான பொம்மையை வைத்த சிறு அளவிலான விளையாட்டு தொட்டிலை கட்டி விட்டுச் செல்கின்றார்கள்.
இந்த ஆலயத்தில் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மரங்கள் உள்ளதாகவும் அவற்றை ஒன்பது முறை சுற்றினால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும் என்றும் கூறுகின்றார்கள். அதன் காரணம் அனைத்து கிரஹங்களும் பகவான் பைரவருக்கு அடங்கியவை என்பதினால் கிரக தோஷங்கள் அடங்குகின்றதாம்.
இந்த ஆலயத்தில் உள்ள மூலவரை படம் பிடிக்க அனுமதிப்பது இல்லை. இங்கு செல்ல கும்பகோணம், மாயவரம் அல்லது தஞ்சாவூரில் இருந்து திருத்துரைப்பூண்டி சென்று அங்கிருந்து நாகப்பட்டினம் கோடிக்கரை-வேதாரண்யம் நெடுஞ்சாலை வழியே எளிதில் செல்லலாம். திருத்துறைப்பூண்டியில் சென்று தகட்டூர் செல்லும் வழியைக் கேட்டால் யாரும் கூறுவார்கள். தகட்டூர் எல்லையை அடைந்ததும் பைரவஸ்வாமி அல்லது வைரவன் ஸ்வாமி ஆலயம் என்று கேட்டால் எவரும் ஆலயம் செல்லும் வழியை கூறுவார்கள்.
Contact Nos of Priests : Shri Sekar Gurukkal : 9788518226 Shri. Manogaran Gurukkal: 9942096762
ஆலய படங்கள்
சித்தாடி காத்தாயி அம்மன் ஆலயத்தை பற்றி தெரிவிக்கவும்