ஆண்டான் கோவில்

ஸ்ரீ ஜெயவீர

ஆஞ்சனேயர் ஆலயம்

-சாந்திப்பிரியா-

வலங்கைமான் கிராமத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமான் கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளதே ஆண்டான் கோவில் எனும் கிராமம். ஆண்டான் கோவில் கிராமத்துக்கு அடுத்து உள்ளது சாந்தவெளி கிராமம். ‘சாந்தவெளி’ என்பதின் அர்த்தம் அமைதியான வெட்டவெளி என்பதாகும். அந்த கிராமத்தில் உள்ளதே மிக பிரபலமான பகவான் ஆஞ்சனேயர் ஆலயம். இந்த ஆலயம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 முதல் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  அங்குள்ள பகவான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சனேயர் ஆலயத்தின் பின்புறத்தில் உள்ளது காரை சித்தர் சமாதி ஆலயம். இவை இரண்டுமே பல விழுதுகளை தொங்க விட்டபடியும், அவற்றில் பல கிளைகள் ஆலமரமாகி நிற்கும் பிரும்மாண்டமான ஒரு தாய் ஆலமரத்தின் அடியில் அமைந்துள்ளது. மிகப் பெரிய நிலப்பரப்பளவில் மூல தாய் மரத்தின் விழுதுகளில் இருந்து வெளிவந்துள்ள பல ஆல மரங்கள் அந்த தலத்தையே ஆலமர பூமியாக மாற்றி வைத்துள்ளது. தாய் ஆலமரத்தின் அடியில் அமைந்துள்ள பகவான் ஆஞ்சனேயர் ஆலயம் மற்றும் அந்த ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள காரை சித்தரின் சமாதி உள்ள இடத்தின் ஒரு புறம் குடமுருட்டி ஆறு ஓடிக் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் பொன்னி ஆறு ஓடுகின்றது.

இந்த ஆலயத்தில் காணப்படும் பகவான் ஆஞ்சனேய பகவானின் சிலையை நோக்கும்போது அது ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலய சிலையாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஏன் என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் காவேரி டெல்டா பகுதிகள் எனப்படும் அந்த இடங்கள் பலவும் சோழ மன்னர்கள் ஆட்சியில் இருந்துள்ளன. சோழ மன்னர்கள் காலத்தில் அங்கெல்லாம் பல ஆலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. பிற மன்னர்கள் படையெடுப்பின்போதும் இயற்கை சீற்றங்களினாலும் அவற்றில் பல ஆலயங்கள் அழிந்து போய் விட்டன. நீட்ட வடிவிலான பாறையில் செதுக்கப்பட்டு உள்ள அற்புதமான அந்த ஆலய பகவான் ஆஞ்சனேயரின் சிலையை நோக்கும்போது அது ஏதாவது ஒரு ஆலய தூண்களில் ஒன்றாகவோ இல்லை ஆலய மூலவராகவோ இருந்திருந்து பல காலம் பூஜிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பதை உணர முடிகின்றது. அப்படி பூஜிக்கப்பட்ட அந்த பகவான் ஹனுமான் சிலை பூமியில் புதைந்து இருந்து விட்டு மீண்டும் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னதாக ஸ்வயம்புவாக வெளியில் வந்து உள்ளது என்று கூறுவதே சரியானதாக இருக்கும். அந்த பகவான் ஆஞ்சனேயர் ஆலயம் அங்கு எழுந்ததைக் குறித்து உள்ளூர் மக்களால் கூறப்படும் கதை சுவையானதாக உள்ளது.

உள்ளூர் மக்களால் கூறப்படும் ஆலய வரலாற்று கதையின்படி ஒரு காலத்தில் அது ஒரு சிற்றூராக இருந்துள்ளது. அங்கு வாழ்ந்திருந்த மக்கள் ஏழை எளியவர்கள். அவர்கள் வயலில் வேலை செய்யும் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் ஆடு மாடுகளை ஓட்டி அவற்றின் மூலம் கிடைத்து வந்த வருமானத்தில் வாழ்ந்து வந்தவர்கள். அங்குள்ள மக்கள் வீடுகளில் இருந்த ஆடு மாடுகளை வயல்வெளி அல்லது அருகில் புல்வெளிகள் இருந்த இடங்களுக்கு ஓட்டிச் சென்று அவை புல் மேய்ந்த பின் திரும்ப அழைத்து வருவார்களாம். அதன் காரணம் அவற்றுக்கு தேவையான தீவனங்களை வாங்கிப் போட அவர்களது வருமான நிலை இடம் தரவில்லை. அவர்கள் ஆடு மாடுகளை ஒட்டிச் சென்ற நிலப் பகுதிகளில் அங்கிருந்த பிரும்மாண்டமான ஆலமர பகுதியும் ஒன்றாகும். குடமுருட்டி ஆற்றின் அந்த பகுதிக்கு அப்பால் இருந்த ஒரு குடியானவன் தனது மாடுகளை புல் மேய்க்க அந்த ஆலமர பகுதிக்கு அழைத்து வருவது உண்டு. அப்படி வந்து சென்றவன் ஒருநாள் வீடு திரும்பியதும் தான் ஓட்டிச் சென்ற மாடுகளில் ஒரு மாட்டைக் காணாமல் திடுக்கிட்டான். காணாமல் போன மாடோ கன்றை பெற்றெடுக்கும் நிலையில் கர்பமுற்று இருந்த மாடாகும். இரவு வெகு நேரமாகி இருட்டாகி விட்டதினால் காலை விடிந்ததும் அவற்றை எங்கெல்லாம் ஓட்டிச் சென்றானோ அந்த அனைத்து இடங்களுக்கும் மூன்று நாட்கள் மீண்டும், மீண்டும் தொடர்ந்து சென்று தேடியும் அந்த மாட்டைக் கண்டு பிடிக்க முடியாமல் அழுது புலம்பினான். மூன்றாம் நாள் துக்கத்தினால் தன்னை மறந்து தூங்கியவன் கனவில் ஒரு பெரியார் தோன்றிக் கூறினார் ‘மைந்தனே நீ அந்த ஆலமரத்தடிக்கு மீண்டும் வா. அங்கு உன் மாட்டைக் காண்பாய்’.

இரவு உறங்கப் பிடிக்கவில்லை. எழுந்து அமர்ந்து விட்டு காலை விடியும் பொழுதை எதிர்நோக்கி காத்திருந்தான். பொழுது விடிய சற்றும் தாமதிக்காமல் அந்த ஆல மரத்தடியை நோக்கி ஓடிச் சென்றான். என்ன ஆச்சர்யம் ! அங்கிருந்த தாய் ஆலமரத்தின் அடியில் பாறையில் செதுக்கப்பட்டு இருந்த பகவான் ஹனுமாருடைய சிலை இருந்ததைக் கண்டான். அந்த ஆஞ்சனேய பகவானின் முகமோ தனது கனவில் தோன்றிய அதே முதியவர் முகத்தை ஓத்து இருந்தது. முதல்நாள் வரை மரத்தடியில் ஒன்றும் இல்லாமல் இருந்த அந்த இடத்தில் இன்று எங்கிருந்து வந்தது அந்த ஆஞ்சனேய பகவானின் சிலை ? குழம்பி நின்றான். அது மட்டுமா அதிசயம் ? அந்த சிலையின் அடியில் மூன்று நாட்களாக காணாமல் போய் இருந்த தனது மாடு அமர்ந்து இருக்க, அதன் பக்கத்தில் அன்று பிறந்து இருந்த கன்றும் தாயின் மடியில் இருந்து பாலை குடித்துக் கொண்டு இருந்த காட்சியைக் கண்டு வாய் அடைத்து நின்றான். அடுத்த கணம் ஊருக்குள் ஓடிச் சென்று தான் கண்ட அதிசயத்தைக் கூற ஊர் ஜனங்கள் ஓடி வந்தார்கள். வந்தவர்கள் தாய் மரத்தில் இருந்து வெளி வந்து இருந்த வேர்களில் முளைத்து இருந்த ஆலமரங்கள் இருந்த அந்த இடத்தில் புதியதாக பாறையில் செதுக்கப்பட்டிருந்த பகவான் ஹனுமானின் சிலை பூமியில் சிறிது புதைந்து இருந்த நிலையில் இருந்ததையும் கண்டு எதுவும் கூற முடியாமல் வாய் அடைத்து நின்றார்கள்.

வந்தவர்கள் நடந்துள்ள அதிசயத்தை பார்த்து மெய் சிலிர்த்து நின்றார்கள். அந்த செய்தி அனைத்து கிராமத்தினருக்கும் பரவத் துவங்க ஒவ்வொரு தினமும் பிற கிராமங்களில் இருந்தும் அங்கு அதிக அளவிலான மக்கள் வந்து கூடலானார்கள். அது வெட்டவெளியில் அமைந்த ஆலயமாக மாறிவிட்டது. வந்த மக்கள் தமது கோரிக்கைகளை பகவான் ஆஞ்சனேயரிடம் வைக்க பலரது குறைகள் மற்றும் வியாதிகள் விலகலாயின. ஆகவே அவரை குறை தீர்க்கும் பகவான் ஆஞ்சனேயர் என்றே கூறத் துவங்கினார்கள். சில காலம் கழிய அங்கிருந்த ஊர் ஜனங்கள் பகவான் ஆஞ்சனேயரின் சிலையை உள்ளே தள்ளி வைத்து ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டார்கள். ஆனால் அவர்களது எந்த ஒரு முயற்சியும் வெற்றி பெற முடியாமலேயே, எதோ ஒரு விதத்தில் தடைகள் ஏற்பட்ட வண்ணமே இருந்தது. முக்கியமாக அந்த சிலையை இடம் மாற்றி அமைக்க அதை சுற்றி எத்தனை ஆழம் தோண்டியும் சற்றே சாய்ந்த நிலையில் பூமியில் பதிந்து இருந்த அந்த பாறையில் செதுக்கப்பட்டு இருந்த சிலையை அவர்களால் அசைக்கக் கூட முடியவில்லை. ஆகவே தாய் ஆலமரத்தடியில் ஸ்வயம்புவாக தான் வெளி வந்துள்ள அந்த இடத்தில் இருந்து தன்னை அப்புறப்படுத்துவதை பகவான் ஆஞ்சனேயரே விரும்பவில்லை என்பதாக கருதி எந்த இடத்தில் பகவான் ஆஞ்சனேயர் வெளிவந்து அமர்ந்தாரோ அதே இடத்தில் அவருக்கு பூஜைகள் செய்து வழிபடலானார்கள். அந்த சிலை எங்கிருந்து வந்தது, எப்படி வெளிவந்தது, எதற்காக அங்கு அவர் தோன்றினார் என்பதற்கான விடைகள் இன்றுவரை யாருக்கும் கிடைக்கவில்லை. பகவான் ஆஞ்சனேயர் இடது கையை தூக்கி வைத்தபடியும், வலதுபக்கம் பார்த்தவாறும், கண்களை திறந்து வைத்துக் கொண்டும் உள்ள அந்த அற்புதமான உருவம் சுமார் மூன்று அடி உயரம், மற்றும் இரண்டு அடி அகலம் கொண்ட பாறையில் செதுக்கப்பட்டு உள்ளது. தவிர பகவான் ஆஞ்சனேயரது காலடியில் ஒரு கதையும் காணப்படுகின்றது .

இந்த நிலை தொடர்ந்தபோது பகவான் ஆஞ்சனேயரை தரிசிக்க அந்த ஊருக்கு ஒரு சித்தர் வந்தார். முதலில் அந்த ஊரில் இருந்தவர்களுக்கு வந்தவர் யார் என்ற எந்த விவரமும் தெரியாது. ஆனால் அங்கு வந்த சித்தர் நடந்த அனைத்து விஷயங்களையும் தனது ஆன்மீக சக்தி மூலம் தெரிந்து கொண்டு பல சக்திகளைக் கொண்டிருந்த அந்த பகவானுக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். ஆகவே ஊருக்கு வந்த சித்தர் மெல்ல தனது தெய்வீக சக்தியை வெளிப்படுத்தத் துவங்கி பலரது பிரச்சனைகளை தீர்த்து வைக்க, பகவான் ஆஞ்சனேயரை பூஜை செய்ய வந்த மக்கள் அவரிடமும் சென்று தத்தம் சொந்த பிரச்சனைகளைக் கூறி அவர் மூலம் தீர்வு கண்டார்கள். இதுவே தக்க சமயம் என எண்ணிய சித்தர் அங்கு பகவான் ஆஞ்சனேயருக்கு ஆலயம் அமைக்க நிதி திரட்டினார். நிதிக்கு பஞ்சம் இல்லை என்பது போல நிறைய பணம் குவிந்தது. ஆலயம் அமைக்கத் தேவையான அளவிற்கான பணம் குவிந்தது.

தேவைப்பட்ட அளவிலான நிதி சேர்ந்ததும் ஆலயத்தின் முதல் கட்ட பணி துவங்க வழிபாட்டு கூடம் நிறைவு பெற்றது. 08-09-1960 ஆம் தேதி பகவான் ஆஞ்சனேய ஆலயத்தின் முதல் கட்ட திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது இன்னொரு முக்கிய சம்பவமும் நிகழ்ந்தது. திடீரென பெய்த மழையினால் பகவான் ஆஞ்சனேயர் ஆலயத்தின் ஒருபுறம் இருந்த குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் ஓடியது. அந்த ஆற்றைக் கடந்து வர பாலமும் கிடையாது. வெளி ஊர்களில் இருந்து நிறைய மக்கள் வரவுள்ளனர் என்பதினால் என்ன செய்வது என அனைவரும் திகைத்து நின்றபோது சற்றும் கலங்காத காரை சித்தர் வண்டி வண்டியாக நிறைய மூங்கில் கழிகள் மற்றும் மரப் பலகைகளை கொண்டு வருமாறு கூற ஒரே நாளில் வண்டி வண்டியாக மூங்கில் கழிகள் மற்றும் மரப்பலகைகள் வந்து சேர்ந்தன. அடுத்து நேரத்தை வீணடிக்காமல் அதே உள்ளூர் மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் பாலம் அமைக்கத் துவங்கினார். மக்களுடன் சேர்ந்து தானும் ஆற்றில் இறங்கி ஆற்றின் இரு கறைகளை இணைக்கும் வகையில் சுமார் 300 அடி நீள அளவிலான மூங்கில் பாலத்தை இரண்டே தினங்களில் அமைத்து விட்டார். பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரே பாலம் அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த மக்கள் அந்த ஆற்றில் இருந்த தண்ணீரில் முழுகாமல், பூமியில் நடப்பதை போல தங்களால் எப்படி நடந்து சென்று பாலம் அமைக்க முடிந்தது என்ற நினைத்தே பார்க்க முடியாத உண்மையை உணர்ந்தார்கள். அதன் காரணம் காரை சித்தரின் தெய்வீக அருளே என்பதையும் உணர்ந்தார்கள். அதைக் கேள்விப்பட்ட அரசு அதிகாரிகள் அங்கு வந்து தமது அனுமதியும், எந்த விதமான உபகரணங்களும் இல்லாமல் இரண்டே தினங்களில் எப்படி அத்தனை வலுவான பாலம் அமைக்க முடிந்தது என்பதைக் கண்டு வாயடைத்து நின்றார்கள்.

வந்தவர்களை வரவேற்ற சித்தர் அவர்களுக்கு ஆற்று மணலை பிரசாதமாக அள்ளிக் கொடுக்க வேண்டா வெறுப்பாக அதை பெற்றுக் கொண்டவர்கள் கையில் அதை வாங்கி கொண்டதும் அவை அனைத்துமே வெல்லக் கட்டிகளாக மாறியதைக் கண்டு மேலும் அதிசயித்தார்கள். நிச்சயமாக அந்த சித்தர் சாதாரண மனிதர் அல்ல, மாபெரும் மகிமை வாய்ந்தவர் என்பது மட்டும் அல்ல, அந்த ஆலயமும் மகிமை வாய்ந்த ஆலயம் என்பதை தெரிந்து கொண்டார்கள். அப்படியாக எண்ணியவர்கள் எந்த கேள்வியுமே கேட்காமல் அந்த பாலம் கட்டியதற்கான அனுமதியை கொடுத்து விட்டுச் சென்றார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடிய 08-09-1960 ஆம் தேதி ஆண்டு பகவான் ஆஞ்சனேயர் ஆலய திறப்பு விழா மற்றும் ஆற்றின் பாலத்தின் திறப்பு விழாவும் இனிதே நடைபெற்று முடிந்தது. பகவான் ஆஞ்சனேயரை அவர் தோன்றிய ஆல மரத்தடியில் இருந்து அசைக்க முடியவில்லை என்பதினால் அவரை சுற்றி சுவர் எழுப்பி ஆலயம் அமைக்கப்பட்டது. அந்த ஆலயத்தில் உள்ள பகவான் ஆஞ்சனேயரின் உருவம் செதுக்கப்பட்டு இருந்த பாறாங்கல் சற்றே சாய்வாக உள்ளது. அதை நேராக நிமிர்த்தி வைக்க முடியவில்லை. அதை பகவான் ஆஞ்சனேயரும் விரும்பவில்லை போலும்.

இதற்கு இடையே அந்த சித்தர் அந்த ஊரில் பிரபலமாகத் துவங்கினார். அவரது புகழும் பெருமையும் மெல்ல பரவத் துவங்கின. பலரும் அவரிடம் வந்து தத்தம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு சென்றார்கள். சென்னை சித்தாஸ்ரமத்தை சேர்ந்த திருமதி எஸ்.அம்புஜம்மாள் என்பவர் 1959 ஆம் ஆண்டில் இருந்து காரை சித்தரின் பக்தையாக இருந்தவர். அந்த சித்தரின் மகிமைகளை கண்கூடாக கண்ட சில செய்திகளை தொகுத்து 1961 ஆம் ஆண்டு சித்தாஸ்ரமத்தினரால் வெளியிடப்பட்ட சிறு புத்தகத்தில் எழுதி உள்ளார். அந்த சித்தருடன் வாழ்ந்து வந்த  ஒரு பக்தர் அந்த சித்தரின் மகிமைகளை குறித்து கூறும் செய்தி  நம்ப முடியாத அளவில் வியப்பாகவே உள்ளது. காரை சித்தரின் மகிமைகளை அவர் விவரிக்கும்போது காரை சித்தரின் நினைவால் உணர்ச்சி வசப்பட்டு பேசுகின்றார்.

பகவான் ஆஞ்சனேய ஆலய சன்னதியிலேயே பெரும்பாலும் காணப்பட்ட அந்த சித்தர் உள்ளூர் மக்களால் பிரதீக்ஷ தெய்வமாகவே கருதப்பட்டார். தம் முன் வந்து நிற்கும் பக்தர்களை ஆசிர்வதிப்பது போல வெறும் கையை நீட்டுவார். அந்த பகுதியே மணக்கும் அளவிலான சந்தன வாசனையோடு கூடிய சந்தனம் அவர் கையில் தோன்றும். அதை அவர்களுக்கு தருவார். எப்போதெல்லாம் மனக் குழப்பம் ஏற்படுமோ, எப்போதெல்லாம் உடல் நலம் குன்றுகின்றதோ அப்போதெல்லாம் அதை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளுமாறும், அது அவர்களது தீராத பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்றும் கூறுவார். பின்னாளில் அவர்கள் தமக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் எப்படி எல்லாம் நீர் விலகியதை போல தீர்ந்தன என்பதை பிறருக்கு விளக்கும்போது மெய் சிலிர்க்கும்.

ஒருமுறை திருமுல்லைவாயிலில் இருந்த வைஷ்ணவி ஆலயத்துக்கு காரை சித்தர் சென்று இருந்தபோது, அங்கிருந்த அர்ச்சகரிடம் அந்த தேவிக்கு நிறைய பூக்களை போட்டு பூஜை செய்யுமாறு கூறினார். அப்போது அந்த சன்னதியில் நிறைய மக்கள் கூடி இருந்தனர். அர்ச்சகர் அவரிடம் மன வருத்தத்துடன் கூறினாராம் ‘இந்த தேவிக்கு பூஜை செய்ய இங்குள்ள செடியில் பூ பறிக்கலாம் என்றால் அதில் பூக்களே மிகக் குறைவாக பூக்கின்றது. நான் எங்கிருந்து அதிக பூக்களை கொண்டு வர முடியும் ஐயா. இன்று காலைக் கூட அந்த செடியில் இரண்டு பூக்கள் மட்டுமே பூத்து இருந்தன’ என்று கூற காரை சித்தரோ ‘என்ன நீங்கள் கூறுகின்றீர்கள் ? ஆலயத்தில் நுழையும்போது பார்த்தேன், அந்த செடியில் நிறைய பூக்கள் காணப்படுகின்றதே. அதை பறித்து வரலாமே’ என்று கூற அந்த அர்ச்சகரும் இப்போதுதானே அந்த செடியில் இருந்த இரண்டே இரண்டு பூக்களை பறித்து வந்தேன். அதில் எப்படி பூக்கள் இருக்க முடியும்’ என அவரை நம்பாமல் வெளியில் வந்து அந்த செடியை நோக்கிப் பார்க்க அந்த செடி நிறைய பூக்கள் பூத்துக் கிடப்பதை கண்டு ஒரு கணம் அசந்து விட்டாராம். ஓடிச் சென்று அவற்றை பறித்து வந்து பூஜை செய்தாராம். அதை கண்கூடாக கண்ட அங்கிருந்த பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். வந்தவர் யார் என்பதை காண அவர்கள் அவரை தேடியபோது அந்த சித்தர் காணப்படவில்லை.

இன்னொரு சம்பவம் நடந்தது. ஒருநாள் காலை சுமார் 10 மணி இருக்கும். காரை சித்தருடன் சில பக்தர்கள் தமது பிரச்சனைகளைக் குறித்து பேசிக் கொண்டு இருக்கையில் திடீர் என காரை சித்தர் கூறினாராம் ‘அடடா, இன்று 10.40 மணி அளவில் ரயில் நிலையத்தில் முக்கியமான நண்பர்கள் சிலரை சந்திப்பதாக கூறி இருந்தேனே மறந்து போய் விட்டேனே. நான் வரும்வரை இங்கேயே அமர்ந்து இருங்கள், இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறிவிட்டு எழுந்து சென்றார். ரயில் நிலையம் அங்கிருந்து சுமார் 15 மைல் தொலைவில் இருந்தது. அந்த காலத்தில் வாகன வசதிகள் அதிகள் இல்லாத நிலையில் அங்கு சென்று வர சுமார் 3 அல்லது 4 மணி நேரமாவது ஆகும். எங்கு சென்று விட்டார், நம்மையும் அவர் வரும் வரை இங்கேயே அமர்ந்து கொண்டு இருக்குமாறு கூறி உள்ளாரே என பக்தர்கள் குழம்பிக் கொண்டு இருக்கையில் ஒரு மணி நேரத்தில் காரை சித்தர் திரும்பி வந்து பக்தர்களுடன் அவர்களது குறைகளை கேட்டு பேசிய பின் அவர்களை அனுப்பி வைத்தார். அன்று மாலை அந்த ஊரை சேர்ந்த வேறு சில நண்பர்களுடன் காலையில் சித்தருடன் தாம் பேசிக் கொண்டு இருந்த செய்திகளைக் குறித்துக் கூறிக் கொண்டு இருக்கையில் அந்த நண்பர்கள் கூறினார்கள் ‘நாங்கள் அவரை காலை 10.30 மணிக்கு ரயில் நிலையத்தில் பார்த்தோமே. எப்படி நீங்கள் அவருடன் காலை 10.30 மணிக்கு பேசிக் கொண்டு இருக்க முடியும்?’ என்று கேட்க, 15 மைல் தொலைவில் இருந்த ரயில் நிலையத்துக்கு எப்படி ஒரு வண்டி கூட இல்லாமல் சென்று விட்டு திரும்பி உள்ளார் என்பதைக் கேட்ட அனைவருக்கும் அது புரியாத புதிராகவே இருந்தது. ஆகவே சித்தரிடமே சென்று அந்தக் குழப்பம் குறித்து கேட்கலாம் என்று எண்ணியவர்கள் அவரிடம் சென்று கேட்க அவர் கூறினாராம் ‘ஆமாம், உண்மைதான். நான் அங்கு சென்று அவர்களை சந்தித்து விட்டு வந்தேன்’. காரை சித்தரால் இப்படிப்பட்ட மகிமைகளை நடத்திக் காட்டி இருக்க முடியுமா என சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை. அவர்களுக்கு உள்ள அமானுஷ்ய, அஷ்டமா சக்தியினால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அவர்களால் ஷணப் பொழுதில் செல்ல முடியும். இப்படிப்பட்ட நிகழ்வுகள் பல சித்தர்கள் வாழ்க்கையில் நடந்துள்ளன. தத்தாத்திரேய அவதாரங்களான ஸ்ரீரடி சாய்பாபா, மானிக் பிரபு, ஸ்ரீ சமர்த்த மஹராஜ் போன்றவர்கள் வாழ்க்கை சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நிறையவே காணப்படுகின்றன என்பதினால் இதில் ஐயம் கொள்ள வேண்டியதே இல்லை.

இப்படிப்பட்ட மகிமைகளை நிகழ்த்திக் கொண்டே மக்களது நலன்களுக்கு பாடுபட்டவண்ணம், ஸ்வயம்புவாக எழுந்துள்ள ஆண்டான்கோவில் பகவான் ஆஞ்சனேயர் ஆலயத்தையும் நிறுவி அங்கேயே தங்கி இருந்து சமாதி அடைந்த அவரே பின்னாளில் காரை சித்தர் என அறியப்பட்டவர். காரை சித்தர் யார் ? கும்பகோணத்தை அடுத்த குடமுருட்டி ஆற்றின் கரையில் இருந்த நகரசம்பேட்டை எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்ட இந்த சித்தர் 1918 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தாராம். தலையில் ஒரு முண்டாசை கட்டிக் கொண்டு கட்டுமஸ்தான தேகத்துடன் வலம் வருவார். அந்தக் கால குடும்ப கட்டுப்பாட்டினால் இளம் வயதிலேயே திருமணம் ஆகி, இரு குழந்தைகள் பெற்று இருந்தாலும் அதே இளம் வயதில் குடும்பத்தையும் துறந்து துறவசத்தை மேற்கொண்டு விட்டார். பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தவர் வட நாட்டில் ரிஷிகேசத்தில் உள்ள லக்ஷ்மணஜூலாவில் ஒரு மஹானை சந்தித்து அவரையே குருவாக ஏற்றுக் கொண்டு அவர் மூலம் அதீத சக்திகளை பெற்றாராம். ஆண்டான் கோவில் பகவான் ஆஞ்சனேயர் தான் அங்கு தோன்ற உள்ளதை மனதில் கொண்டு தனக்கு அங்கு ஒரு ஆலயத்தை காரை சித்தரே அமைக்க வேண்டும் என எண்ணி இருந்ததினால்தானோ என்னவோ, அவரை அங்கு வரவழைத்து அவர் மூலம் தனக்கு ஒரு ஆலயம் எழுப்பிக் கொண்டு இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகின்றது.

இந்த ஆலயத்தில் சென்று வழிபட்டால் தீராத பிரச்சனைகளுக்கு வழி கிடைக்கிறது என்றும், நாள்பட்ட தீராத வியாதிகளும் விலகுவதாக கூறுகின்றார்கள். சாதாரணமாக ஆல மரத்தின் அடியில் பகவான் பிள்ளையார், சப்த மாதாக்கள், பல அவதார அம்மன்கள் அல்லது ராகு கேது அல்லது நவகிரகங்கள் காணப்படும். ஆனால் அதிசயமாக ஒரு ஆல மரத்தின் அடியில் பகவான் ஆஞ்சனேயரின் ஆலயம் அமைந்து உள்ளதே அந்த தலம் மிக மேன்மையான அபூர்வமான தலம் என்பதை பறை சாற்றுகின்றது.

இந்த ஆலயத்துக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ஒரு அறிவுரை. இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஆலயங்கள் கிராமங்களில் இருந்தாலும் அவை நாள் முழுவதும் திறந்து வைக்கப்படுவது இல்லை. இந்த ஆலயத்தில் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுமாம் . சனிக்கிழமைகளில் மட்டும் சுமார் 500 முதல் 600 அர்ச்சனைகள் நடைபெறுகின்றது என்பதாக ஆலய அர்ச்சகர் கூறுகின்றார். சனிக்கிழமைகளில் ஆலயம் காலை ஆறு முதல் மதியம் ஒருமணி வரையும் மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை திறந்து இருக்குமாம். ஆகவே மற்ற நாட்களில் அங்கு செல்லும் முன் ஆலய குருக்களிடம் பேசிவிட்டு செல்வது நல்லது. மூன்று தலைமுறையாக திரு ஷண்முக சுந்தர குருக்கள் எனும் அர்ச்சகர் இந்த ஆலய பூஜை புனஸ்காரங்களை செய்து வருகின்றார். அவருடைய தாத்தா திரு நடராஜ குருக்களில் ஆரம்பித்து, தந்தை திரு நாகமணி குருக்கள், அவரை தொடர்ந்து திரு ஷண்முக சுந்தர குருக்கள் என்று அவரது பரம்பரையின் ஆலய பணி தொடர்கின்றது. திரு ஷண்முக சுந்தர குருக்களை திரு பிரபு குருக்கள் என்றே உள்ளூரில் அழைக்கின்றார்கள்.  கும்பகோணத்தில் இருந்து ஆலயத்துக்கு செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன.

ஆலய குருக்களின் தொலைபேசி எண் : 9384144497.

ஆலயத்தின் சில புகைப்படங்கள்