பெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது ‘பண்டே மகா காளி’ எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 அல்லது 350 ஆண்டுகளுக்கு முன்பே வெளியில் தெரிந்ததாக கருதுகிறார்கள். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அது ஸ்யம்புவாகத் தோன்றி இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். இதைக் கட்டியவர் யார், மற்றும் இதன் வரலாறு என்ன என்பது குறித்து சரியான விவரம் தெரியவில்லை. மலைப்பாங்கான பகுதியில் ஒரு பெரிய பாறையில் காளி தேவியின் சிலை காணப்படுகிறது. அங்கொரு ஆலயத்தை நிறுவி அதற்குள் பாறையில் காணப்படும் அந்த காளி தேவியின் சிலை இருக்குமாறு சிறு சன்னதியாகக் கட்டி உள்ளார்கள். அந்த சன்னதிக்கு செல்ல படிகள் ஏறிப் போக வேண்டும். அந்த சன்னதியை சுற்றி வேறு பல தெய்வ சன்னதிகள் உள்ளன.
இந்த காளியின் ஆலயத்துக்கு எதிரில் வீரபத்திர ஸ்வாமி ஆலயம் உள்ளது. அவரை பிரளயகால வீரபத்திரர் என்கிறார்கள். இந்த ஆலயம் ராஜராஜ சோழனின் காலத்து ஆலயம் என்கிறார்கள். மேலும் அங்குள்ள வீர பத்திரர் பிரளய காலத்தில் சுயம்புவாக அங்கு எழுந்தவராம். ஆனாலும் இந்த ஆலய வரலாறு குறித்தும் சரியான தகவல் கிடைக்கவில்லை.
வீரபத்ரர்
வீரபத்திரர் சிவபெருமானின் அவதாரம் ஆகும். காளியும் சிவபெருமானால் படைக்கப்பட்டவள். சாதாரணமாகவே சிவபெருமானுக்கு காவலாக நிற்பவள் காளி என்பார்கள். ஆகவே வீரபத்திரர் ஆலயத்துக்கு எதிரில் அமைந்துள்ள இந்தாள் காளியின் ஆலயம் சிவபெருமானுக்குக் காவலாக நிர்ப்பவள் காளி என்ற தத்துவத்துக்கு மிகப் பொருத்தமாகவே உள்ளது.
இந்த ஆலய காளியின் விசேஷம் என்ன என்றால், ஆலயத்தில் உள்ள காளி சிலையின் கால்களைத் தொட்டு வணங்கும்போது அந்த காளி தேவியின் உருவத்தின் மீது சிறிய சொம்பினால் நீரை ஊற்ற, சிலை மீது ஊற்றப்படும் தண்ணீர் சிலை மீது இருந்து நம் தலையில் தெறித்து விழுகிறது. அதையே காளி தேவி நம் மீது தண்ணீர் தெளித்து ஆசிர்வதிப்பதைப் போலக் கருதுகிறார்கள். தை மாத வெள்ளிக் கிழமையில் கூட்டம் அலை மோதுகிறது. நீண்ட வரிசையில் நிற்க வேண்டி உள்ளது. அதைத் தவிர இருபது ரூபாய் கொடுத்து விசேஷ வாயில் மூலமும் செல்லலாம் என்றாலும் இரண்டிலும் கூட்டம் குறைவே இல்லை. திருப்பதி ஆலயத்தில் உள்ளதைப் போலவே ஜலகண்டி தரிசனமே கிடைக்கின்றது. ஆகவே நிதானமாக காளி தேவியை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றால் வெள்ளிக் கிழமையை தவிர்த்து பிற நாட்களில் சென்று தரிசனம் செய்யலாம்.
இந்தக் காளியின் இன்னொரு மகிமை என்ன என்றால் தோஷங்களினால் பீடிக்கப்பட்டவர்கள், நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டு குணமடைய முடியாதவர்கள், பில்லி சூனியம் போன்ற தீமைகளினால் பீடிக்கப்பட்டவர்கள் போன்றவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து இங்குள்ள காளியை வழிபட்டால் அவை விலகும் என்பது நம்பிக்கை. கவிபுரத்தில் பல பிரபலமான ஆலயங்கள் – புல் டெம்ப்ள் எனப்படும் மிகப் பெரிய நந்தியின் ஆலயம், பவானி தேவி மற்றும் வீரபத்ரர் ஆலயம்- போன்றவை உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ளது இந்த ஆலயமும்.
பகவான் ஜீவீஸ்வர்
‘பண்டே மகா காளி’ ஆலயத்தை ஸ்வகுலசாலி எனும் ஒரு பிரிவினர் சஹாஸ்ரார்ஜுன ஷத்ரியா எனும் பிரிவினருடன் சேர்த்து பூஜைகள் செய்து நிர்வாகித்து வருகிறார்கள். ஸ்வகுலசாலி என்பவர்களின் பகவான் ஜீவீஸ்வராவை வழிபடுபவர்கள். பகவான் ஜீவீஸ்வர் யார்? அவரைக் குறித்துக் கூறப்படும் கதை இது. ஒரு முறை ஆதிமாயா எனும் பராசக்தி சிவபெருமானிடம் பேசிக் கொண்டு இருந்தபோது அவரிடம் அற்புதமான துணிகளை உற்பத்தி செய்யும் புண்ணிய புருஷனைப் படைக்குமாறு கேட்டுக் கொண்டபோது அவர் ஸ்ராவண மாதத்தில் திரியோதிசி நாளில் தனது நாக்கில் இருந்து ஒரு புண்ணிய புருஷனைப் படைத்தார். அவருக்கு கைலாயத்தில் மிக சிறப்பாக ஒரு விழா எடுத்து அவருக்கு சாலி என்ற பெயரை சூட்டினார். அதன் பிறகு பார்வதியும் தன் பங்கிற்கு அவரை வணங்குபவர்கள் ஸ்வகுலா என அழைக்கப்படுவார்கள் என்று கூறினார். அதன் பின் அவரை சிவனின் நாக்கில் இருந்து வெளிவந்தவர் என்பதினால் நாக்கு என்பதை குறிக்கும் சொல்லான ஜீவி என்பதை முன் நிறுத்தி அவரை பூமிக்கு ஜீவீஸ்வரா எனும் பெயரில் அனுப்பி அவருடன் காசிக்கு வந்து அவரை சந்நியாசி ஆக்கி விட்டுச் சென்றார்கள். அவரே காலபைரவர் ஆனார். இப்படியாக வந்தவரே ஜீவிஸ்வரா எனும் பகவான். அவரை ஏற்று அவர் வழியில் வந்த சந்ததியினர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஸ்வகுலாசாலி என அழைக்கப்பட்டார்கள்.
We are a participant in the Amazon Services LLC Associates Program, an affiliate advertising program designed to provide a means for us to earn fees by linking to Amazon.com and affiliated sites