திருவான்மியூர் மருதீஸ்வரர் ஆலயம்
சாந்திப்பிரியா 

சென்னை திருவான்மியூரில் உள்ள மரூதீஸ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. ஆலயம் அடையாரில் இருந்து சுமார் மூன்று கிலோ தொலைவில் திருவான்மியூர் செல்லும் சாலையின் பிரதான சாலையில் திருவான்மியூர் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ளது. ஆலயத்துக்கு இரண்டு நுழை வாயில்கள் உள்ளன. ஆலயத்தின் பிரதான தெய்வம் மருந்தேஸ்வரர் எனும் மருதீஸ்வரர் ஆவார். இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கங்களில் ஒரு சிவலிங்கம் ஆஞ்சநேயரால் வழிபடப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆலயத்தில் உள்ள சுமார் ஒரு அடி உயர  சுயம்பு சிவலிங்கம் சற்றே சாய்ந்து காணப்படுகின்றது. இங்கு பல ரிஷி முனிவர்களும், தேவர்களும் வந்துள்ளதாக கருதப்படுகின்றது.  அதன் தல வரலாறும் சுவையானது. இந்த ஆலய மகிமை மற்றும்  திவான்மியூர் மற்றும் மருந்தீஸ்வரர் ஆலயம் என பெயர் வந்தக் காரணக்  கதைகள் பல இருந்தாலும் முக்கியமாக நான்கு  கதைகளையே கூறுகிறார்கள்.

மருதீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி 

முதல் கதை
சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் திருமணம் நடைபெற தீவீரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டு இருந்தன. சக்திக்கும் சிவனுக்கும் திருமணம் என்றால் அனைத்து உலகிலும் உள்ள தேவ முனிவர்கள், ரிஷிகள் மற்றும் கடவுட்கள் வந்து குமிழ மாட்டார்களா என்ன? அவர்களுக்கு யார் அழைப்பிதழ் கொடுப்பார்கள்? அந்த காலத்தில் அழைப்பிதழ் ஏது ? யாருக்கெல்லாம் செய்தி கிடைத்ததோ அவர்கள் அனைவரும் வந்து அந்த இனிய விழாவில் கலந்து கொண்டு ஈசனிடமும் உமையிடமும் ஆசிகளைப் பெற்றுக் கொண்ட காலம் அது. அதனால் அனைவரும் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள கயிலை மலைக்கு வந்தபோது  பூமியின் வடக்குப் பகுதி சாய்ந்தது.  இன்னும் வருபவர்கள் ஏராளமாக  இருந்தார்கள். ஆகவே பூமி பாரம் தாளாமல் கவிழ்ந்து விட்டால் என்ன ஆவது எனக் கவலைப்பட்ட சிவனார் அகத்திய முனிவரை அழைத்தார். அவர் உடலுக்கு பாரம் என்ற சக்தியை தந்தார். அவரை பூமி சாய்ந்து உள்ள பகுதியின் எதிர்புறத்தில் சென்று, அதாவது தென்புறத்துக்கு சென்று இருந்தவாறு பூமியின் தளத்தை சமதளமாக இருக்கச் செய்யுமாறு ஆணையிட்டார். அகத்தியருக்கு வருத்தம். ‘என்னால் திருமண விழாவை காண முடியாதே, அந்த நேரத்தில் உங்கள் ஆசிகளைப் பெற முடியாதே’ என்றார். சிவனார் அவருக்கு ஆறுதல் கூறினார், ‘கவலைப்படாதே, நீ என்னை நினைத்து தவம் இருக்கும் இடத்தில் உனக்காக அதே திருமண கோலத்தில் வந்து காட்சி தந்து அருள் புரிவேன்’ என்றார்.

சிவன் பார்வதி திருமணம் துவங்கியது . அனைவருக்கும் அருள் புரிந்தனர் சிவ-பார்வதி தம்பதியினர். வந்தவர்கள் திருமண கோலத்தில் இருந்த தம்பதியினரின் அழகில் மெய் மறந்து நின்றார்கள் . வருந்திய மனதுடன் அகத்திய முனிவர் தெற்கு நோக்கி நடந்து கொண்டு இருந்தார். அந்த திருவான்மியூர்  பகுதியின் கிழக்கு பக்க கடற்கரை அருகில் அழகிய சோலைகளும் மரங்களும் மண்டிக் கிடந்த இடத்தைப் பார்த்தார். அவர் மனம் அமைதி அடைந்தது. அங்கு சென்று ஒரு வன்னி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டார் அகத்தியர். சிவனை துதித்து பூஜைகளை செய்தப் பின் அவரையே நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

கயிலை மலையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமண கோலத்தில் நின்றவாறு அனைவருக்கும் ஆசிகளை வழங்கிக் கொண்டு இருந்த சிவனார் அனைவரையும் சற்று நேரம் காத்து இருக்குமாறு கூறி விட்டு, அகத்தியர் தவத்தில் இருந்த இடத்துக்கு சென்று அவருக்கு அதே திருமண கோலத்தில் காட்சி தந்து ஆசிகளை வழங்கினார். அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி…….ஆகா…அகத்திய முனிவர் எத்தனை புண்ணியம் செய்து உள்ளார், அதனால்தான் அவர் அமர்ந்து இருந்த இடத்துக்கே சிவன் தனது திருமண கோலத்திலேயே சென்று அவரை ஆசிர்வதித்து விட்டு வந்துள்ளார் என்பதையும் அதற்கான காரணத்தையும் அறிந்து கொண்டார்கள்.

அகத்தியர் தவத்தில் இருந்த இடத்துக்கு சென்று திருமண கோலத்தில் காட்சி தந்த சிவ பெருமான் தான் மீண்டும் திரும்பி வருவதாக கூறிவிட்டு கயிலைக்கு சென்றார். திருமணம் நடந்து முடிந்து நடந்த உண்மைகளை புரிந்து கொண்ட தேவர்கள், கடவுட்கள், ரிஷி முனிவர்கள் என அனைவரும் அனைவரும் தத்தம் இடங்களுக்கு சென்று விட்டார்கள். அதன் இடையே அந்த இனிய சோலைவனத்தில் திருமண கோலத்தில் சிவபெருமானைக் கண்ட அகத்திய முனிவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. இந்த உலகில் பரவிக் கிடக்கும் மக்களின் நோய் நொடிகளை தீர்க்க இங்குள்ள சோலையின் இலைகள், தழைகள் பயன் உள்ளவாறு இருக்கக் கூடாதா என நினைத்தவர், மீண்டும் தனக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் உனக்கு எனக் கேட்ட சிவபெருமானிடம் தனது மனதில் உள்ள ஆசையைக் கூறியப் பின்னர் சிவபெருமான் அங்கேயே எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்.  சற்றும் தயங்காத சிவபெருமானும் அகத்திய முனிவருக்கு மூலிகைகளைக் கொண்டு பிணி தீர்க்கும் வைத்திய முறையை அங்கேயே ஆசானாக இருந்து பொத்தப் பின்னர் தான் ஒரு காலத்தில் அங்கு எழுந்தருளுவதாக வாக்கு தந்ததாக  புராண நம்பிக்கைக் கதை உள்ளது.  அகத்திய முனிவருக்கு வைத்தியம் கற்றுத்தந்த  இடம் என்பதினால் இதன் பெயரும் மருந்து கலை கற்பித்த  ஈஸ்வரர் என்று ஆகி பின்னர் மருந்தேஸ்வரர் என ஆகி கடைசியாக மருதேஸ்வரர் மருவியது.

ஆலயத்தின் வெளியில் உள்ள தெப்பக் குளம் 

இரண்டாம்  கதை
காலம் ஓடியது. காமதேனுப் பசு தான் பெற்ற ஒரு சாபத்தினால் சத்தாயு என்ற மன்னனின் அரண்மனையில் பசுக் கூட்டத்தில் ஒரு பசுவாக வாழ்ந்து வந்தது.  அது அந்த காட்டுப் பிரதேசத்தில் புல் மேயச் செல்லும் சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த  ஒரு வன்னி மரத்தடியில் பாலை சுரந்து விட்டு வந்தது. அதை பல முறை கவனித்த மன்னன் ஒரு நாள் அதற்குத் தெரியாமல் அதை பின் தொடர்ந்து சென்றபோது அது ஒரு இடத்தில் நின்றவாறு  பால் சுரப்பதைக் கண்டான். ஆகவே அரச பண்டிதர்களின் ஆலோசனைக் கேட்டு அந்த இடத்தைத் தோண்டச் சொன்னான்.  தோண்டிய இடத்தில் வெள்ளை நிற லிங்கம் – தற்போது உள்ள அதே நிலையில் சுயம்புவாக –  கிடைத்தது. அதை வெளியில் எடுத்து பிரதிஷ்டை செய்து பூஜித்தான்.  அதுவே தற்போது ஆலயத்தில் உள்ள வெள்ளை நிற சிவ லிங்கம் என்றும் அதன் பெயர் பால் வண்ண நாதர் என்று  பெயர் வந்தது.

மூன்றாம்  கதை

அந்த ஆலயத்தின் வன்னி மர விசேஷம் என்னவென்றால் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் அங்கு வந்து சிவபெருமானின் தரிசனம் பெற்றதான கதையும் உள்ளது. ஒரு முறை வால்மீகி முனிவர் அமரத்துவம் அடைய வேண்டியவாறு தவத்தில் இருந்தார். அவரை சுற்றி புற்று எழுந்ததுக் கூடத் தெரியாமல் தவத்தில் இருக்க அவர் தவத்தின் கடுமையினால் உலகமே தகித்தது. ஆகவே அனைவரும் பிரும்மாவிடம் சென்று அவர் தவத்தைக் கலைக்குமாறு கோர, பிரும்மாவும் புற்றுக்குள் இருந்த வால்மீகியை வெளியே வருமாறு அழைத்தார். புற்றில் இருந்து வெளி வந்த வால்மீகி முனிவரும் , அங்கிருந்த மார்கண்டேயரிடம் தனக்கு அமரத்துவம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்க அவரும் தென் பகுதியில் இந்த ஆலயம் உள்ள இடத்தைக் குறிப்பிட்டு அந்த வனப்பகுதியில் எங்கு அவருக்கு அசரீரியாக குரல் தருவாரோ அங்கு அமர்ந்து கொண்டு சிவ பெருமானை வழிபட்டால் அவர் காட்சி தருவார் என்றும் அவரிடம் அமரத்துவத்திற்கு வரம் கேட்கலாம் எனவும் கூறினார் . வால்மீகியும் அந்த வனப்பகுதியில் அலைந்து கொண்டு இருந்தபோது ஆலயத்தின் தல விருஷமான வன்னி மரத்தடியில் அசரிரீயாக குரல் கேட்க அங்கேயே வன்னி மரத்தடியில் வால்மீகி முனிவரும் அமர்ந்து கொண்டு சிவபெருமானை துதித்து வணங்க அவரும் வால்மீகிக்கு காட்சி தந்து அவர் அமரத்துவம் அடைய ஆசிகளை தந்தார். அது மட்டும் அல்லாது, அவரை ஆசிர்வதிக்கும் விதத்தில் தனது சடை முடியில் இருந்து கங்கை நீரை சிவபெருமான் அங்கிருந்த வால்மீகி முனிவர் மீது தெளிக்க அந்த தண்ணீர் ஐந்து இடங்களில் தெளிக்க அவை ஆலயத்தின் ஐந்து தீர்த்தங்களாக ஜென்மனாசினி, காமனாசினி , பாவனாசினி , ஞானாதாயினி , மற்றும் மோட்சதாயினி என்ற பெயர்களில் உருவாயிற்றாம். ஆனால் தற்போது ஆலயத்தின் இரண்டு தீர்த்தங்களே தெரிகின்றன. புற்றில் இருந்து வெளி வந்து இங்கு வந்த வால்மீகி முனிவர் புற்று எனப் பொருள் தரும் வான் மீகி என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.

நான்காம் கதை 
இங்கு ஈசன் மேற்கு முகமாக திரும்பி உள்ளார். அதற்கும் ஒரு சுவையான கதை உள்ளது. ஒரு கட்டத்தில் அப்பய்ய தீட்சிதர் என்பவர் அனுதினமும் இங்கு வந்து ஈசுவரனை வழிபட்டு வந்தார். அப்போது சிவலிங்க வடிவிலான ஈசன் கடலை நோக்கி கிழக்கு முகமாக பார்த்தபடி அமர்ந்து இருந்தார். 

ஆலயத்தின் பின்புற நுழை வாயில். 
இது தீக்ஷதருக்காக ஏற்பட்டதாம் 

அப்போது ஒரு நாள் கிழக்கில் கடல் பொங்கி ஆலயத்தில் கிழக்கு வாசல் சூழ்ந்து கொள்ள  அப்பய்ய தீட்சிதரால் உள்ளே வர முடியவில்லை. வருத்தம் அடைந்த அவர் மேற்கு பக்கத்தில் சென்று  நின்றபடி இறைவனை  துதித்து வேண்ட ஈசனும் தீட்சிதருக்காக மேற்கு நோக்கித் திரும்பி அவருக்கு  தரிசனம் தந்ததினால் ஆலய  சன்னதி மேற்கு நோக்கி அமைந்து விட்டது.

மூன்று விநாயகர்
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் இரண்டாம் பிராகாரத்தின் இடது புறம் மூன்று  விநாயகர் சன்னதி உள்ளது. அந்த விநாயகர் குறித்து கூறப்படுகையில் அந்த மூன்று வினாயகர்களும் முக்காலமான இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் வரும் காலத்தின் அதிபதிகள்  எனவும், அவர் முக்காலங்களிலும் மூன்று வகையான அவதாரங்களை எடுத்து அனைவரையும் ஆசிர்வதித்து  காத்து வந்தவர் எனவும் கூறுகிறார்கள். இந்த ஆலயம் எழுந்தபோது அந்த மூன்று வினாயகர்களில்  முக்கால வினாயகரே அந்த ஆலயத்தின் காவலராக இருந்து வந்ததாக கூறுகிறார்கள். ஆகவே அவரை அங்கு சென்று வணங்கினால் இந்த காலத்திலும், வரும் காலத்திலும் ஏற்படும் துயரங்கள் நமக்கு குறையும் என்றும் அவர் நம்மை காத்து அருள்வார் என்றும்  நம்புகிறார்கள்.
ஆலய செய்தி 

ஆலயத்தில் உள்ள வன்னி மர சன்னதியை ஒரு முறை சுற்றி வர வேண்டும். அப்போதுதான் அந்த ஆலயத்துக்கு சென்ற பலன் கிடைக்கும். காரணம் அங்குள்ள வன்னி மரத்து அடியில்தான் சிவ பெருமான் திருமண கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி தந்தார்.  அதே மரத்தடியில்தான் சிவபெருமான் வால்மீகி முனிவருக்கும் காட்சி தந்து வரம் அளித்தார் என்பதினால் அந்த வன்னி மரத்தை வணங்குவது சிவபெருமானின் ஆசிகளை அடைந்த பலனை தரும் என்கிறார்கள்.

ஆலயத்து கால பைரவர்  

ஆலயத்தில் திருபுரசுந்தரி அல்லது  சொக்கநாயகி , வள்ளி – தெய்வானையுடன் முருகன், விஜயகணபதி எனும் வினாயகர்,  நடன காட்சியில் தியாகராஜராக சிவன், நவகிரகங்கள், மூன்று மூன்ற லிங்கங்களாக 36 வரிசையில் 108 சிவ லிங்கங்கள், கால பைரவர், 63 நாயன்மார்கள்  போன்றவர்களின் தனி சன்னதிகள் உள்ளன. ஆலயம் காலை ஆறு  முதல் மதியம் ஒரு மணி  வரையிலும், மாலை மூன்று முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் திறந்து உள்ளது.
ஆலயம் ஏழாம் அல்லது பதினொன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆனால் நிச்சயமாக ஆலயம் 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டு  உள்ளதாம். சோழ மன்னர்கள் காலத்தில் ஆலயம் கட்டப்பட்டது.  அதனால் இந்த ஊரும் திருவாளர் வான் மீகி எனும் பெயரைத் தரும் திரு வான்மீகி  என ஆகி பின்னர் மருவி திருவான்மீயூராகியது . இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாலயத்திற்கு வந்து தமது நோயை நீக்கி சுகம் பெற்றவர்கள் பலர். அதே போல இது ஒரு சாப விமோசனத் தலமும் ஆகும்.