ஒரு அதிசயம்
சாந்திப்பிரியா
சாந்திப்பிரியா

நேற்று ஒரு அதிசயமான நிகழ்ச்சி எனக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை என்பதினால் பெங்களூரில் சனீஸ்வரர் ஆலயத்துக்கு செல்லக் கிளம்பினோம். சாதாரணமாக நாங்கள் ஜெய நகரில் உள்ள சனிஸ்வரர் ஆலயத்துக்கு செல்வது பழக்கம். எனக்கு வலது கை தோள்பட்டைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒரே வலி. நேற்று கையை தூக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டேன். காலை முதலே பல வலி நிவாரணியை போட்டுக் கொண்டும் வலி குறையவில்லை. வண்டியில் அமர்ந்து இருந்தவாறு கையை பிடித்து விட்டுக் கொண்டே இருந்தேன். பிலகஹல்லியைத் தாண்டி JP நகர் சிக்னல் அருகில் சிக்னலை தாண்டியதும் பஸ் ஸ்டாப்பிற்கு பக்கத்தில் வந்த வண்டிக்காரன் திடீரென ‘சார் இங்கே ஒரு சனி ஆலயம் உள்ளது, போகலாமா என்று கேட்க நாங்கள் அங்கு சென்றோம். ஆலயம் மிகச் சிறிய அளவில்தான் இருந்தது. ஆலயத்தின் அளவு சுமார் 30 அடிக்கு 40 அடி இருக்கலாம். JP நகர் 3 ஆம் Phase அருகில் உள்ள சிக்னலுக்கு அருகில் மூலையில் இருந்தது ஆலயம். நாங்கள் இத்தனை ஆண்டுகளாக அதே வழியாக சென்று இருந்தும் அந்த ஆலயத்தைப் பார்க்கவில்லை.
ஆலயத்தின் உள்ளே சிவன் சன்னதி, விநாயகர், சந்தோஷி மாதா, நவகிரகம் மற்றும் ஐயப்பனுக்கும் சன்னதிகள் சிறிது சிறிதாக இருந்தன. சாலையை நோக்கியபடி சனிஸ்வரர் சன்னதியில் சனீஸ்வரர் நின்ற நிலையில் கையில் கதையுடன் காட்சி தந்தார். சனிஸ்வரர் கையில் கதையா என யோசனை செய்தவாறு உள்ளே நுழைந்தோம். சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்தப் பண்டிதர் தீபாராதனை முடிந்து எங்களுக்கும் அதைக் காட்டியப் பின் ஒரு மயில் இறகினால் ஆன நீண்ட தடியை எடுத்து என் மனைவியின் தலையில் மூன்று முறை கோதி விட்டப் பின் ஸ்வாமியின் கையில் இருந்து கால்வரை அந்த தடியால் வருடினார். மீண்டும் அதே மாதிரி மூன்று முறை செய்தார். அதன் பின் அதே மயில் இறகுத் தடியால் என் வலது கை தோள்பட்டை மீது மூன்று முறை வருடினார். ஸ்வாமியின் கையில் இருந்து கால்வரை அந்த தடியால் வருடினார். மீண்டும் அதே மாதிரி மூன்று முறை செய்தார். நாங்கள் வீடு திரும்பினோம். என் கைவலி மறைந்து விட்டு இருந்தது.
வீடு திரும்பியதும் என் மனைவி இப்போது கைவலி எப்படி உள்ளது எனக் கேட்டாள். அப்போதுதான் எனக்குப் புரிந்தது என் கை வலி காணவில்லை!!!! ஆச்சர்யத்துடன் இருவரும் பேசிக் கொண்டோம் , எதற்காக அந்த பண்டிதர் என் கை வலி உள்ள இடத்தை இறகால் கோதி விட்டார்? நாங்களோ அவரிடம் கைவலி பற்றி எதுவுமே கூறவில்லை. கையை தூக்கவே முடியாமல் கையை பிடித்து விட்டுக் கொண்டே ஆட்டோவில் அமர்ந்து இருந்த எனக்கு என் கைவலி எப்படி மறைந்தது? ? வேறு ஆலயத்தை நோக்கி போய் கொண்டு இருந்த நாங்கள் எப்படி, எதற்காக கடந்த ஆறு வருடங்களாக அறிந்திராத அந்த ஆலயத்துக்கு சென்றோம்? எதற்காக அந்த பண்டிதர் நான் வலி எனக் கூறாமலேயே, மயில் இறகினால் என் கைவலி இருந்த இடத்தைக் கோதினார்?
முஸ்லிம் தர்காக்களைத் தவிர வேறு எந்த ஆலயத்திலுமே இப்படி மயில் இறகினால் பக்தர்களை ஆசிர்வதித்துப் பார்க்கவில்லை. அப்படிப்பட்ட அனுபவம் எங்களுக்கு அஜ்மீர் தர்கா மற்றும் மும்பை ஹஜ்ரத் அலி தர்காவில் மட்டுமே கிடைத்து இருந்தது. ஆனால் சனிஸ்வரர் ஆலயத்தில் கிடைத்த அந்த அனுபவத்தை நினைத்து நினைத்துப் பார்த்தாலும் எங்களுக்கு விடை தெரியவில்லை. மயில் இறகினால் என் கைவலி மறைந்த நிகழ்ச்சி ஒரு அதிசய அனுபவம். ஆச்சர்ய அனுபவம். அந்த ஆலய சனிஸ்வர பகவானின் சக்தி அத்தனை அதிகமா?
ஆலயம் உள்ள இடத்தைக் காட்டும் தரைப்படம்
