பெங்களூர்  பனேர்கட்டாவில்

ஒரு ஹனுமார் ஆலயம்
சாந்திப்பிரியா

சமீபத்தில் நான் என் குடும்பத்தினருடன் பெங்களூரில் பனர்கட்டாவில் உள்ள ஒரு ஹனுமார் ஆலயத்திற்கு சென்று இருந்தேன். இது என்னுடைய இரண்டாவது விஜயம். அந்த ஆலயம் அற்புதமானது. 2002 ஆம் ஆண்டுதான் ஆலயம் கட்டப்பட்டு உள்ளதாம். ஆனால் அதனுள் உள்ள ஹனுமார் சிலை 400 அல்லது 500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள். கிருஷ்ண தேவராயர் காலத்தில் கர்நாடகாவில் பல இடங்களில் ஹனுமார் சிலைகளை பாறைகளிலும், கற்களிலும் வடிவமைத்து உள்ளார்கள். ஒரு வேளை அந்த காலத்தை சேர்ந்த சிலையாக இது இருந்திருக்கலாம். அங்குள்ளவர்களுக்கு அந்த சிலை பற்றிய முழு விவரம் தெரியவில்லை. ஏன் எனில் இந்த ஆலயம் உள்ள இடம் ஒரு காலத்தில் முற்றிலும் தனி கிராமமாக இருந்துள்ளது. நான் யாரிடம் கேட்டும் இந்த ஹனுமான் ஆலயம் பற்றிய சரியான விவரம் கிடைக்கவில்லை. ஹனுமானின் உருவம் சுமார் 7 அடி அகலமும், சுமார் 12 அடி உயரமுமான பாறைக் கல்லில் முழுமையாக செதுக்கப்பட்டு உள்ளது. பாறையின் முழு அளவில் நின்று கொண்டு வலதுபுறம் திரும்பியவாறு மேல் நோக்கியபடி முகத்தை வைத்த நிலையில் உள்ள ஹனுமார் சிலையின் அளவும் 6 அடிக்கு 10 அடி இருக்கும். வலதுபுறம் திரும்பி கையை உயரே தூக்கி வைத்துள்ள ஹனுமாரின் நீண்டு உள்ள வாயில் பற்கள் நறநறவென கடித்த நிலையில் உள்ளது போல உள்ளது. இப்படி ஒரு காட்சியில் உள்ள ஹனுமாரை நாங்கள் வேறு எந்த ஆலயத்திலுமே பார்கவில்லை. தனித்தன்மை வாய்ந்ததாக இந்த ஹனுமார் உள்ளார்.

ஹனுமாரின் நீண்டு உள்ள வாயில் பற்கள் தெரிய உக்ரஹமாக அந்த பற்களை கடித்தவாறு காட்சி தரும் அந்த ஹனுமாரை வேண்டிக் கொண்டால் நம்முடைய அனைத்து துயரங்களும் எதிர்ப்புக்களையும் அவர் தூள் தூளாகி விடுவார் என்பது ஐதீகம் என்று அங்கிருந்த ஒருவர் விளக்கம் தந்தார். பார்க்கவே அற்புதமாக காட்சி தரும் அந்த ஹனுமாரின் ஆலயத்துக்கு சென்று தரிசிப்பது மனதுக்கு இதமாக உள்ளது. சாதாரணமாக உக்ரஹமாக உள்ள கடவுள் சிலைகள் உள்ள ஆலயங்களில் சென்று வேண்டிக் கொண்டால் நம்முடைய துயரங்களை அந்த உக்ரஹ மூர்த்திகள் உடனே விலக்குவார்கள் என்பது ஒரு புராண நம்பிக்கை.

   ஆலயத்தில் உள்ள ஹனுமாரின் படம்
அந்த ஹனுமார் ஆலயத்தின் சற்று தொலைவில் நேர் எதிரில் சுமார் 1500 வருடப் புராண சம்பகதாமா என்ற ஆலயம் உள்ளது. அதில் ஸ்ரீனிவாசப் பெருமான் தனி சன்னதியில் பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். அவர் சன்னதியின் கீழ்புரத்தில் இடதுபுறத்தில் தனி ஆலயத்தில் மகாலஷ்மி தாயார் அற்புதமாக காட்சி தர அந்த ஆலயத்தின் மீது சுமார் 200 முதல் 250 படிகள் உள்ள மலையில் லஷ்மி நரசிம்மார் காட்சி தந்தவாறு ஒரு தனி ஆலயத்தில் அமர்ந்து உள்ளார். ஹனுமார் ஆலயத்தில் நின்றவாறு பார்த்தால் அதன் நேர் எதிரில் ஸ்ரீனிவாச பெருமான் சன்னதி தெரிகின்றது. ஆக ஹனுமார் பெருமாளை பார்த்தபடி நின்று கொண்டு இருப்பது போல உள்ளது ஒரு அற்புதமான காட்சியாகும். இந்த ஆலயத்துக்கு அனைவரும் சென்று ஹனுமானை தரிசிப்பது விசேஷம். ஆலயம்  பனர்கட்டா  பஸ்  நிலையத்தின்  எதிரில்  உள்ளது .
ஆஞ்சநேய நமஹா