ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள் – 10

நந்தீஸ்வரர் ஆலயம்
இரண்டு ஆலயங்கள், இரண்டு கதைகள்
சாந்திப்பிரியா
சென்னையில் கூடுவாஞ்சேரி மற்றும் செயின்ட் தாமஸ் மலைக்கு அருகில் இரண்டு நந்தீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ஒன்றை சோழ மன்னன் கட்டி உள்ளதாகவும் மற்றதை பாண்டிய மன்னன் கட்டியதாகவும் செய்திகள் உள்ளன. ஆனால் அவற்றின் ஆதாரத்துக்கு இரண்டிலுமே எந்த கல்வெட்டுக்களும் இல்லை. பல தலைமுறைகளாக இருந்து வரும் வாய் மொழி சொல்லும் அங்குள்ள சில பண்டிதர்கள் தகவல்களுமே அந்தஆலயங்களின் தல வரலாற்றின் ஆதாரம்.


பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் கூடுவாஞ்சேரி ஆலயம் பற்றிய கதை இது. ஒரு காலத்தில் பிரும்மா அனைத்து தேவர்களுக்கும் அழிவில்லா நிலையைத் தர வேண்டும் என நினைத்தார். அனைத்து தேவர்கள் மற்றும் கடவுட்களிடம் பாற்கடலைக் கடைந்து அமிருதம் எடுத்து அதை உண்ணக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததின் காரணமாக தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைந்து அமிருதம் எடுத்தக் கதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அமிருதக் கலசத்தை எடுத்துக் கொண்டு தன்வந்தரி வெளியில் வந்து அதை தந்தப் பின் அதை உண்பதில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் விஷ்ணு தேவர்களுக்கு அது கிடைக்க தந்திரம் செய்தார். அதில் தேவர்களைக் காப்பாற்ற சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ண வேண்டி இருந்தது . தேவர்களுக்கு அமிருதம் கிடைத்தது. அதை உண்டவர்கள் தலைகால் புரியாமல் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியில் அவர்கள் தம்மைக் காப்பாற்றிய சிவபெருமானை மறந்து விட்டனர். அவர் தொண்டை மண்டலப் பகுதிக்குச் சென்று பார்வதியுடன் தங்கி விஷத்தைக் குறைத்துக் கொண்டார். ( அந்த கால கட்டங்களில்தான் அந்த மண்டலத்தில் பல நவகிரக ஆலயங்கள் தோன்றி உள்ளதாக வரலாறு உள்ளது) . அப்போதுதான் தேவர்கள் தாம் செய்த பிழையை உணர்ந்து கொண்டார்கள். ஆகவே அவர்கள் சிவபெருமானைத் தேடி வந்து அவரைக் கண்டு பிடித்து அவரிடம் தாம் செய்த பிழையை மன்னித்து தமக்கு அருளுமாறு கேட்டுக் கொண்டனர். முதலில் அவர்களை சிவபெருமானை சந்திக்க நந்தி தேவர் விடவில்லை. அவரை தாம் பார்த்துக் கொள்வதாக கூறி அவர்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் விஷ்ணுவும், பிரும்மாவும் அவரிடம் சாந்தமாகப் பேசி விஷ்ணுவின் தங்கையான பார்வதியிடம் வேண்டுகோள் விட அவள் நந்தியை சமாதானப் படுத்தி சிவபெருமானை சந்திக்க வைத்தாள். சிவபெருமானிடம் அனைவரும் மன்னிப்புக் கேட்டதும் அவரும் மன மகிழ்ச்சி அடைந்து அவர்கள் அனைவருக்கும் அருள் புரிவதற்காக தம்மை காத்து நின்ற நந்தியின் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் ஆனந்தக் கூத்தாடினார். அன்று பிரதோஷ தினம். அந்த ஆனந்த நடனத்தை களி நடனம் என்று அழைப்பார்கள். அந்த அற்புதமான காட்சியைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். நந்தி தேவர் தமக்கு கிடைத்த பாக்கியத்துக்கு இன்னமும் அதிக சந்தோஷம் அடைந்தார். சிவபெருமான் நந்தி தேவரின் கொம்புகளின் இடையே நடனமாடிய அந்த இடத்தில் நந்தியை கவுரவிக்கும் விதமாக நந்தீஸ்வரர் என்ற பெயரில் அனைவரும் அங்கு வந்து வணங்குவார்கள் என சிவன் அருள் புரிந்தார். ஆகவே அந்த இடத்தில் சிவ பெருமானை நந்தீஸ்வரர் என்ற பெயரில் வணங்கும் ஆலயம் அமைந்தது.

இன்னொரு தலப் புராணக் கதைப்படி செயின்ட் தாமஸ் மலைக்கு அருகில் ஆதம்பாக்கத்தில் உள்ள ஆலயத்தின் அருகில் இருந்த மலையில் பிருங்கி ரிஷி சிவா பெருமானை துதித்து தவம் இருந்தார். பிருங்கி ரிஷி என்றுமே சிவனை மட்டுமே வணங்கி வந்தவர். ஒரு முறை அவர் சிவபெருமான் பார்வதியுடன் இருந்த போது அங்கு சென்றார். பார்வதியுடன் சிவன் இருந்ததைக் கண்டு சிவனை மட்டும் வணங்கும் வகையில் தான் ஒரு தேனீ உருவில் சென்று சிவனை வணங்க அவரை சுற்றி வந்தாராம். அதை கண்ட பார்வதி கோபமுற்று அவருக்கு சாபமிட்டு, தானும் இனி சிவபெருமானின் உடலில் பாதியாக மாறுவேன் என சபதமிட்டப் பின் தவம் இருந்தாளாம். ஆகவே பார்வதி தந்த சாபத்தைக் களையவே ரிஷி அங்கு வந்து தவத்தில் இருந்தாராம். அவருடைய கடுமையான தவத்தை மெச்சிய சிவ பெருமான் பார்வதி தவத்தில் இருந்ததினால் நந்தி தேவருடன் வந்து அவருக்கு நந்தி தேவர் உருவில் காட்சி தந்தாராம். ஆகவே அந்த இடத்தில் சிவ பெருமான் நந்தி தேவர் உருவில் பக்தர்களுக்கு காட்சி தந்ததை குறிக்கும் விதத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் ஆலயம்எழுந்ததாம்.