ஆலமரத்தடியில் கேட்ட கதைகள் -6
சித்தர்  குலாப்  ராவ்  
சாந்திபிரியா

இந்தியாவில் பல்வேறு சித்தர்களும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டே இருக்கிறார்கள். ஆகவேதான் இந்தியா  ஒரு புனித நாடாகவே உள்ளது. அப்படிப்பட்ட சித்தர்களில் வழி வந்தவரே குலாப் ராவ் மகராஜ் ஆவார். அவர் மகராஷ்டிரா மாநிலத்தில் அமராவதி ஜில்லாவில் இருந்த மத்தான் என்ற கிராமத்தில் பிறந்தவர். பிறந்த ஒன்பதாவது மாதத்திலேயே கண்களை இழந்து விட்டவரை பதான்ஷு ( அதாவது புத்திசாலி கண்களைப் பெற்றவர் ) என அழைத்தனர்.

அவர் தெய்வீக சக்தி பெற்றவராக இருந்தார். கண்பார்வையை இழந்து இருந்தாலும்  எந்த புத்தகத்தையும் எந்த மொழியில் இருந்தாலும் அவரால் படிக்க முடிந்தது. அப்படி ஒரு சக்தி பெற்று இருந்தார். அவர் தன்னுடைய இளமை காலத்தில் ஆறு வயது வரை தாய் மாமனுடன் இருந்தார். அவர் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க வரும் பெண்களை பெயர் கூவி அழைப்பார். அது எப்படி, வந்தவர் யார் என்பது அவருக்குத் தெரியும் என்பதே ஆச்சர்யம்.  அது போலவே அவர் அந்த கிணற்றின் அடியில் மணிகணக்கில் அமர்ந்து கொண்டு சமாதி நிலையில் இருப்பார். அதைக் கண்ட அவருடைய குடும்பத்தினர் கவலை அடைந்தனர். ஆனால் அந்த ஊரில் இருந்த பெரிய மனிதர்களோ அவர் அபூர்வ சக்தி பெற்றவர் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி அவரை அமைதிப்படுத்தி வந்தனர்.  அவருக்கு நான்கு  வயதானபோது அவருடைய தாயார் மறைந்து விட்டார். சில நேரத்தில் அவர் தன்னுடைய நண்பர்களை அழைத்து புத்தகங்களை படித்துக் காட்டாச் சொல்வர். அவர்கள் படித்து முடித்ததும் அதை அப்படியே ஒப்பிப்பார். பத்தாவது வயதிலேயே வேதங்களை நன்கு கற்றறிந்து   இருந்தார்.
1896 ஆம் ஆண்டில் அவருக்கு திருமணம் நடந்தது. தன்னுடைய மனைவியுடன் பல இடங்களுக்கும் சென்று சமய ஒற்றுமையை வலியுறுத்தினார். தன்னுடைய பதினாறாவது வயதில் சந்த்  த்யானேஸ்வரரின்  சீடராக மாறினார். இருபத்தி மூன்றாம் வயதில் டார்வின் தீர்ப்பு குறித்து கட்டுரை எழுதினர். 1905 ஆம் ஆண்டில் தன்னை ஒரு பெண் என்றும், தான் பகவான் கிருஷ்ணரின் மனைவி என்றும் கூறிக்கொண்டு நெற்றியில் கும்குமம், கழுத்தில் தாலி என அனைத்தையும் பெண்கள் போல அணிந்து கொண்டார். பெண்களின் உடையையே அணிந்து கொண்டார்.
பார்வை அற்றவராக இருந்தாலும் பல்வேறு கருத்தோட்டம் பெற்ற ஆறாயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நூற்றி முப்பத்தி மூன்று புத்தகங்களை எழுதி உள்ளார். பார்வை அற்ற  அந்த மகன் எப்படி உபநிஷத்துக்கள். வேதங்கள், யோகங்கள் மற்றும் புராணங்களை படித்து இருக்க முடியும் என்பது பெரும் புதிராகவே இருந்தது.  மேலும் ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன என்றால் அவர் பிராமணர் அல்ல. ஆனாலும் அவருக்கு பல பிராமண சிஷ்யர்கள் இருந்தனர். மதுர பக்தி எனும் குரு சிஷ்ய கருத்துக்களை  பரப்பினார். அது அத்வைத்ய கருத்துக்கு முரண்பாடானது.   பக்தி மார்க்கம் மூலம் கிருஷ்ண பக்தியை பரப்பினார். இப்படியாக  பல தெய்வீக செயல்களை காட்டியும்  பக்தியையும் பரப்பி வந்தவர் 1915 ஆம் ஆண்டு மறைந்தார். காலத்தினால் அழிக்க முடியாத சித்தர் குலாப் ராவ்.
( நான் எழுதிய இந்தக் கட்டுரை நம்முடன் பேசும் ஆவிகள் என்ற  தமிழ் புத்தகத்தில் 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  வெளியாயிற்று)