காத்தாயி அம்மன்
குடிகொண்ட வள்ளி மலை
சாந்திப்பிரியா

வள்ளி உருவில் காத்தாயி உருவில்
முருகப் பெருமானின் மனைவியே வள்ளி தேவி. அவளே காத்தாயி அம்மன் என்ற பெயரிலும் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சித்தாடி எனும் கிராமத்தில் ஆலயத்தில் கம்பீரமாக வீற்று உள்ளாள். ஒவ்வொரு கடவுளும் பல ரூபங்களில் பல இடங்களில் அவதரிக்கின்றார்கள். ரூபம் மட்டுமே மாறுபட்டு இருந்தாலும், அந்த கடவுள் ஒருவரே என இருந்தாலும் அந்தந்த ரூபங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அந்தந்த இடங்களில் தர வேண்டும் என்பதும் முக்கியம். காத்தாயியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் காத்தாயிதானே வள்ளி தேவி என வள்ளி மலைக்கு சென்று வள்ளியை வணங்கி விட்டு செல்வதும், வள்ளி மலையை குல தெய்வமாகக் கொண்டவர்கள் சித்தாடிக்குச் சென்று காத்தாயியை வணங்கி விட்டு இருந்து விடக் கூடாது. எந்த உருவில் நம் முன்னோர்கள் ஒரு கடவுளை குல தெய்வமாக வணங்கினார்களோ அந்த உரு உள்ள இடத்துக்குச் சென்று குல தெய்வத்தை வணங்காவிடில் ஒருவருக்கு நன்மைகள் கிடைக்காது. என்னதான் இருந்தாலும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நம் குலத்தைக் காப்பது குல தெய்வம் மட்டுமே.


வள்ளிக்கு தனி ஆலயங்கள் இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்கும் இல்லை. அவற்றில் ஒன்று சித்தாடி மற்றும் இரண்டாவது வள்ளி மலை. மற்ற இடங்கள் அனைத்திலும் வள்ளிக்கு தனி சன்னதிகள் முருகன் ஆலயங்களில் உள்ளன. அதற்குக் காரணம் முருகப் பெருமானின் இரண்டு மனைவிகளில் தெய்வயானை இந்திர லோகத்தில் தேவர்களில் பிறந்து முருகனை மணந்தவள். வள்ளி தேவியோ பூமியிலே மனித உருவில் பிறந்து முருகனை மணந்தவள். ஆனால் இருவரில் சக்தி அதிகம் பெற்றவள் வள்ளி தேவியே. வள்ளி தேவியைப் பற்றிக் கதைகளும் நிறையவே உண்டு, தெய்வயானயை பற்றிய தனிக் கதைகள் குறைவு என்பதைவிட இல்லை என்றே கூறலாம். அதனால்தான் வள்ளி தேவி, தனித் தேவி என்பார்கள்.

வள்ளி தேவிக்கு வேலூருக்கு அருகில் வாலாஜாபேட் எனும் இடத்தில் உள்ள மலை மீது ஆலயம் உள்ளது. அவளை அங்கு வள்ளிமலை வள்ளி அல்லது பொங்கு தேவி என்றும் அழைக்கின்றார்கள். இந்த வள்ளிமலை வள்ளி தேவியைப் பற்றியக் கதை இது. பகவான் விஷ்ணுவிற்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். அவர்கள் சுந்தரவல்லி மற்றும் கஜவல்லி என்பவர்கள். அவர்களுக்கு நல்ல கணவனை அவர் தேடிக் கொண்டு இருந்தபோது அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தாம் தம் மீது கோபமே கொள்ளாத ஒரு கணவனையே மணப்போம் என்று தந்தையிடம் கூறியபோது அங்கு தற்செயலாக முருகன் வந்தார். அவரைக் கண்ட இருவரும் அவரையே தமது கணவனாக அடைய விரும்பினார்கள். ஆகவே அவர்களை தாம் மணப்பதாக உறுதி கூறிய முருகப் பெருமான் அவர்களை வேறு பெண்களாகப் பிறந்து சில காலம் இருந்தால் தான் வந்து மணப்பதாகக் கூறினார்.
அவர்கள் இருவரில் சுந்தரவல்லி பூமியில் வள்ளி என்ற பெயரில் ஒரு வேடனின் வளர்ப்பு மகளாகப் பிறக்க கஜவல்லியோ இந்திரனின் மகளாக தெய்வயானை என்ற பெயரில் பிறந்தாள். அப்போது சூரபத்மனினால் தேவ லோகத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை நீக்க முருகன் சூரபத்மனுடன் சண்டை இட்டு அவனை அழிக்க, அதைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் தனது மகளான தெய்வயானையை அவருக்கு மணம் முடித்தார். இப்படியாக தெய்வயானையின் ஆசை நிறைவேறியது.
பூமியிலே வேடவரின் மகளாகப் பிறந்த வள்ளியோ வேடர்களில் ஒருவளாக வாழ்ந்து வந்தாள். அவளும் முருகனின் பெருமையைப் பற்றி கேட்டு அறிந்து இருந்தாள். ஆனால் அவளுக்கு தன்னைப் பற்றிய பூர்வ ஜென்மத்தின் கதை தெரியாது. ஆகவே அவள் மனதில் முருகப் பெருமான் பெரிய வீரர் என்ற எண்ணம் ஏற்பட அவரையே மணக்க ஆசை கொண்டாள். ஆனால் வேடவனின் மகளான அவள் எப்படி அவரை மணக்க முடியும்? அப்போது வயலில் வேலை செய்து வந்தவள் யதேற்சையாக அங்கு மனித ரூபத்தில் திரிந்து கொண்டு இருந்த நாரதரை சந்தித்தாள். அவருடன் பேசிக் கொண்டு இருந்தவள் அவரை ஒரு மனிதர் என்று நம்பி அவரிடம் தான் முருகப் பெருமானை மணக்க ஆசைக் கொண்டு உள்ளதாகக் கூறினாள். நாரதரும் உடனே முருகப் பெருமானிடம் சென்று அவள் காதலைப் பற்றிக் கூறினார். ஆகவே இதுவே நல்ல தருமணம் என எண்ணிய முருகப் பெருமானும் அந்த வயல் பகுதிக்கு வந்து ஒரு வேடன் போல தன்னைக் காட்டிக் கொண்டு அவளைக் காதலித்தார். இருவரும் பல ஆண்டுகள் ஓடி ஆடித் திரிந்து காதல் வயப்பட்டனர். ஒருவரை ஒருவர் மணக்க முடிவு செய்து கொண்டவுடன் அதற்கு வள்ளியின் வளர்ப்பு பெற்றோர் தடை போட்டார்கள். ஆகவே முருகனின் சகோதரரான விநாயகர் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, முருகனின் வீரத்தையும், சக்தியையும் அந்த மலையில் காட்ட வைக்க இருவரின் குடும்ப சம்மதத்துடன் முருகப் பெருமான் வள்ளியை மணக்க வள்ளி தேவியின் பூர்வ ஜென்ம ஆசையும் நிறைவேறியது. அந்த மலை மீது முருகப் பெருமான் வள்ளி மற்றும் தெய்வயானையுடன் குடி கொண்டார்.
இந்த வல்லிமலைப் பகுதியை சித்தபூமி என்கிறார்கள். அதன் காரணம் அங்கு பல சித்தர்கள் வாழ்ந்து உள்ளார்கள். அவர்களில் வள்ளிமலை ஸ்வாமிகளான சச்சிதானந்தா ஸ்வாமிகள் என்பவர் மிகவும் பிரபலமான சித்தர். அவர் வள்ளி அம்மாவை நேரிலே சந்தித்து உள்ளார் என்பது இங்கு கூறப்படும் உண்மைக் கதை. அவரே வள்ளி தேவியை பொங்கி தேவி என அழைத்தார் என்று கூறுவார்கள். அந்த மலைக் கோவிலுக்குச் செல்ல 300 றுக்கும் அதிக படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும். ஆலயம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து இருக்கும். சென்னையில் இருந்து நேரடியாக வேலூருக்குச் சென்று அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளி மலை ஆலயத்துக்கு செல்லலாம்.


ஆக வள்ளியின் பக்தர்கள் சித்தாடிக்குச் சென்று காத்தாயி ரூபத்தில் உள்ள வள்ளியையும் அல்லது வள்ளி மலைக்குச் சென்று வள்ளி ரூபத்தில் உள்ள காத்தாயியையும் வணங்கி அவள் அருளைப் பெற்றிடலாம்.