வசந்தபுரா 
ஆஞ்சநேய ஸ்வாமி ஆலயம்
சாந்திப்பிரியா

சுமார் 1000 வருடங்களுக்கு முந்தைய சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ‘வசந்தபுரா வல்லப ராயா’  ஆலயத்தின் முன்னால்  ஒரு ஹனுமார் ஆலயமும்  சேர்த்து கட்டப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள ஹனுமார் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகின்றார்.  ஸ்ரீநிவாசப் பெருமானின் அவதாரமான ராமரின் காலடிக்கு கீழே  ஹனுமார்  அமர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தில்  ஹனுமார்  ஆலயத்தை வசந்தபுரா வல்லப ராயா ஆலயத்தின் சற்று கீழ்புறமாக அமைத்து உள்ளார்களாம்.  கிருஷ்ணகிரியில் உள்ள ஹனுமான் ஆலயத்தின் வரலாற்றுக் குறிப்பில் கிருஷ்ணதேவராயர் காலத்தில்தான் ஹனுமாரின் வால் வளைந்து வலது பக்கத்தில் தலைக்கு மேல் தொங்க அதன் வாலில் ஒரு மணி கட்டப்பட்டு உள்ளது போன்ற  ஹனுமான் சிலைகள் கர்நாடகாவின் பல இடங்களிலும் அமைக்கப்பட்டன என்ற குறிப்பு உள்ளது. ஆகவே   இந்த ஆலயத்தில் உள்ள பாறையில் காணப்படும் அது போன்ற ஹனுமாரின் சிலை ஒரு வேளை கிருஷ்ண தேவராயர் காலத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.  ஆனால் ஆலய வரலாற்றுக் குறிப்பு அங்கு இல்லை. ஆனால் அங்குள்ள பண்டிதர்களின் கூற்றின்படி இந்த ஆலயமும் சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டதே என்பதற்கு சான்றாக அந்த ஆலய கோபுரத்தின் சிலைகளின் அமைப்பும் , ஆலயத்தின் வடிவமைப்பும்  வல்லபராயா ஆலய அமைப்பில் உள்ளதுதான்.

இந்த ஆலயத்தில் உள்ள ஹனுமாரின் சிலை சுமார் எட்டு அடி உயரமாகவும், நாலு அல்லது ஐந்து அடி அகலமாகவும்  ஒரு பாறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதன் மீது  முலாம் பூசப்பட்ட தகட்டில் அந்த சிலையை அப்படியே வடிவமைத்து வைத்து உள்ளார்கள். அங்குள்ள ஹனுமாரின் சிலையைக் காண்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. நின்ற நிலையில் காட்சி தரும் ஹனுமாரின் மார்பில் ராமரின் உருவ  காட்சி காணப்படுகின்றது.  ஹனுமாரின் வால் வளைந்து வலது பக்கத்தில் தலைக்கு மேல் தொங்க அதன் வாலில் ஒரு மணி கட்டப்பட்டு உள்ளது.  சிலை உண்மையிலேயே மிகப் பெரிய அளவில் உள்ளது என்பது மட்டும் அல்ல அற்புதமாக வடிவமைக்கப்பட்டும்  உள்ளது.

 ஆலயத்தில்  உள்ள ஹனுமாரின் சிலை 

நாங்கள் சென்று இருந்தபோது காலை சுமார் 9.30 அல்லது 10 மணி இருக்கும். திரை போடப்பட்டு கருவறையில் ஆலய பண்டிதர் எதோ பூஜை செய்து கொண்டு இருந்தார். அதன் பின் அரை மணி நேரம் பொறுத்து திரையை விலக்கி விட்டு புஷ்பங்களைப் போட்டும், துளசி இலையைப் போட்டும் சுமார் 15 நிமிடங்கள் மந்திரங்களை உச்சரித்தபடி பூஜை செய்தப்பின், மீண்டும் சாமரம் வீசியவாறு மந்திரங்களை ஓதினார். சாமரம் வீசியவாறு மந்திரம் ஓதியது இன்னும் 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. அதன் பின் கற்பூர ஆரத்தை எடுத்தார். ஆனால் அதை யாருக்கும் தரவில்லை. மீண்டும் திரைப் போட்டு விட்டு பூஜைகளை தொடர்ந்தார். இன்னும் 15 நிமிடங்கள் கழிந்தன. பிரசாதங்களை எடுத்துக் கொண்டு போய் மூடிய திரைக்குள் பிரசாதத்தைப் படைத்தார். திரை விலகியது. மீண்டும் சாமரம் வீசியவாறு ஓதிய மந்திரம் இன்னும் 10 அல்லது 15 நிமிடங்கள் எடுத்துக் கொண்டன. அதற்குப் பின்னர் மீண்டும் 10 அல்லது 15 நிமிடங்கள் விஷ்ணுவை துதித்துப்  ஆராதனை செய்தப் பின் முடிவாக  ஆரத்திக் காட்டிவிட்டு அதை நின்று கொண்டு இருந்த  பக்தர்களிடம் எடுத்து வந்தார். அப்போது மணி 11 .30 அல்லது 12 இருக்கும். இப்படியாக சுமார் 2 மணி நேரம் கழிந்தது. அந்த ஆலயத்துக்கு சென்ற நாங்கள் பொறுமை இழந்து நின்று கொண்டு இருந்தபோது அங்கு ஒவ்வொரு வாரமும் ஆம்பூரில் இருந்து வந்து தரிசிப்பதாகக்  கூறிய ஒரு பெண்மணி  இப்படியாக இடைவேளைக்கு இடைவேளை திரையை மூடிக் கொண்டு ஏன் பூஜைகள் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும் ஆனாலும்  காலையிலேயே ஆலயம் திறந்தாலும் எதிரில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமான் மற்றும் சிவன் ஆலயங்களுக்குச் சென்றப் பின்னரே தான் கடைசியாக  11 மணிக்கு மேல்தான் அங்கு வருவதாகவும் கூறினார்.  எங்களுக்கும் இந்த மாதிரியான பூஜையைக் கண்டபோது வியப்பாகவே இருந்தது. ஆலயங்களில் ஸ்வாமிக்கு அலங்காரம் செய்யும் போதும், பிரசாதம் படிக்கும்போதும் மட்டுமே திரையை மூடிக் கொண்டு செய்வதைப் பார்த்து இருக்கின்றோம் . காலையில் ஸ்வாமிக்கு அலங்காரம் செய்தப் பின் பிரசாதத்தை படைத்து விட்டு திரையை விலக்கிய பின் பக்தர்கள் வேண்டும் அர்ச்சனைகள் தொடரும். ஆனால் இங்கோ மீண்டும் மீண்டும் திரையை போட்டு ஸ்வாமியை மறைப்பது ஏன் என்பது புரியவில்லை. ஆனால் இந்த ஆலயத்து ஹனுமாரின் மகிமை மிக அபாரமானது என்கிறார்கள். அதனால்தான் இப்படியாக பக்தர்களை மணிக் கணக்கில் காக்க வைத்தப் பின் ஆரத்தியைக் காட்டினாலும் மக்கள் அங்கு வந்து வேண்டிக் கொண்டு செல்கிறார்கள். ஆலயம் வசந்தபுராவில் ‘வசந்தபுரா வல்லப ராயா ஆலயத்தின்’ எதிரிலேயே உள்ளது.