சாந்திப்பிரியா 
பாகம்-4

மீண்டும் கைலாயத்துக்கு சென்றவன் அதன் வாயிலில் அமர்ந்து கொண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். இந்த முறையும் அவன் தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவன் முன் தோன்றி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவனும் நடந்ததைக் கூறி  தான் எப்படி ஏமாற்றப்பட்டேன் என்பதையும் கூறியப் பின்  மீண்டும் அது போன்ற சிவலிங்கமே தனக்கு வேண்டும் எனக் கேட்க சிவபெருமானும் வேறு வழி இன்றி அவனுக்கு ஒரு சிவலிங்கத்தை கைலாயத்தில் இருந்து தந்தப் பின்  மீண்டும்  முன்னர் கூறியபடியே அதை அவன் எடுத்துச் செல்லும் வழியில் பூமியில் எங்குமே வைக்கக் கூடாது என்றும், மீண்டும் தவறாக எந்த இடத்திலாவது அந்த ஆத்ம லிங்கத்தை பூமியில் அதை வைத்து விட்டால் அதை திரும்ப எடுக்க முடியாது என்றும் எச்சரித்து அனுப்பினார். அதை எடுத்துக் கொண்டு நாடு திரும்பத் துவங்கிய ராவணனை நினைத்து தேவர்கள் அஞ்சினார்கள். அதை எடுத்துக் கொண்டு சென்று அதை பூஜித்தால் பிறகு ராவணனை யாருமே அடக்க முடியாதே என அஞ்சியவர்கள் மீண்டும் நாரதரிடம் சென்று அதை தடுத்து நிறுத்த ஒரு உபாயத்தைக் கேட்க அவரும் வினாயகரின் உதவியை நாட வினாயகர் வேறு வழியைக் கையாள வேண்டி இருந்தது.

இந்த முறை ராவணன் லேசில் ஏமாற மாட்டான் என்பது அவருக்குத் தெரியும். ஆகவே ஒரு ஆட்டு  இடையன் போல வேடம் அணிந்து கொண்டு அவன் சென்ற வழியில் அமர்ந்து கொண்டார். சிவலிங்கத்தை கையிலே வைத்துக் கொண்டு தன் நாட்டை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருந்த ராவணன் இம்முறை வழியில் தாகம் எடுத்தாலும் தண்ணீரைக் குடிக்கக் கூடாது என்ற திடத்துடன் இருந்தான். மனதை இருக்க வைத்துக் கொண்டு அதை அலைபாயாத வண்ணம் சிவா நாமத்தை ஜெபித்தவாரே வைராகியத்துடன் சென்று கொண்டு இருந்தான். தற்போது கர்நாடகாவின் கோகர்ணம் உள்ள இடத்தை அடைந்து விட்டான். இன்னும் சற்று தூரம்தான், இலங்கை வந்து விடும். ஆனால் அதற்குள் வினாயகரின் ஏற்பாட்டின்படி வாயு பகவான் திடீர் என அந்த இடத்தில் அதிக குளிரை தோற்றுவிக்க கோகர்ணத்தை அடைந்த ராவணனுக்கு குளிரினால் தாங்க முடியாத வேதனை ஏற்பட்டு சிறுநீர் பிரச்சனை ஏற்பட்டது.

கையிலோ லிங்கம், அதை எங்கு வைப்பது? ஆனால் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் குளிரினால் சிறுநீர் அவதி ஏற்பட்டு விட்டது . லிங்கத்தை வைத்துக் கொண்டும் சிறுநீர் கழிப்பது தவறு.  அப்படி செய்தால் அதன் சக்தி விலகி விடும். செய்வதறியாது திகைத்தவன் அங்கிருந்த ஆட்டு இடையனைப் பார்த்தான்.  அவனைக் கூவி அழைத்தான்.  அந்த லிங்கம் பூஜைக்கான லிங்கம் என்றும் கீழே வைத்தால் அதற்கு தோஷம் வந்து விடும் என்பதினால் சற்று நேரம் அதை அவன் மடியில் வைத்துக் கொண்டு இருந்தால்  அதற்குள் தான் சிறுநீர் உபாதயை விலக்கிக் கொண்டு வந்து விடுகிறேன் எனக் கெஞ்சினான்.   அந்த இடையன் வேடத்தில் இருந்த விநாயகரும் அதற்கு ஒப்புக் கொள்ள, ராவணனோ  இந்த முறை தான் ஏமாறக் கூடாது என்றெண்ணிக் கொண்டு, பத்தே நிமிடம் அதை வைத்திருக்குமாறும், அதற்குள் சிறுநீர் கழித்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு அவன் வரும்வரை அதை கீழே வைக்கலாகாது என  ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டு  சிறுநீர் கழிக்கச் சென்றான்.

ஆட்டு இடையனோ  கைநீட்டி ராவணனிடமும் ஒரு சத்தியம் வாங்கிக் கொண்டான். பத்து நிமிடம் ஆன பின் மூன்று முறை தான் குரல் கொடுப்பேன் என்றும் அதற்கும் வராவிடில் அதை கீழே வைத்து விட்டு தான் சென்று விடுவேன் என்றும் கூறினான். ராவணனும் அதற்கு ஒப்புக் கொண்டான். பத்து நிமிடம் கடந்தது. ஆட்டு இடையன் மூன்று முறைக் குரல் கொடுத்தான்.  இன்னும் இருபது  அடியே பாக்கி இருக்க கொடுத்த சத்தியத்தின்படி  அந்த ஆட்டு இடையன் அதை கீழே வைத்து விட்டான்.  அதுவே தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகர்ணம் எனும் இடத்தில் உள்ள ஆலயத்தில் வினாயகர் வைத்த  ஆத்ம லிங்கம் ஆகும். முதல் முறை கிடைத்த லிங்கம் பீகார் மாநிலத்தில் வைஜ்யநாத் ஆலாயத்தில் தங்கிவிட்டது.  இப்போது இரண்டாம் முறைக் கிடைத்த லிங்கம் கோகர்ண ஆலயத்தில் தங்கி விட்டது.

இந்த முறையும் காரியம் கெட்டு விட்டது. ஓடோடி வந்த ராவணன் கோபமுற்று அந்த ஆட்டு இடையனை வெட்ட தன் கத்தியை உருவியபோது, அந்த ஆட்டு இடையன் ஓடத் துவங்கினான்.  அப்போது விஷ்ணு பகவான் ஒரு வயதானவர் உருவில் அங்கு தோன்றி , ‘நில்….ராவணா …..தவறு செய்யாதே, நில்’…… எனக் கத்தியபடி ஓடி வந்து  ராவணனை  தடுத்து நிறுத்தினார். சத்தியத்தை மீறுவது முறையா என்று கேட்க ராவணன் வெட்கி தலை குனிந்தான். இரு முறை  தான் எப்படி எல்லாம் ஏமார்ந்து போனேன்  என்பதை விவரமாகக் கூறிவிட்டு, மீண்டும் மூன்றாம் முறையாக கைலாயத்துக்கு சென்று சிவலிங்கத்தைப் பெற்று வர தீர்மானித்து விட்டதாகக் கூறியவுடன் அந்த வயதான மனிதர் அவனை தடுத்து நிறுத்தி  நகைத்தவாறு கூறினார் ‘ ராவணா, இந்த சுலபமான காரியத்துக்கு  நீ ஏன் தேவை இல்லாமல் கைலாயத்துக்குப் போக வேண்டும்?   உன் ராஜ்யமான  இலங்கையின் தென் பகுதியிலேயே பிரும்மா படைத்து வைத்துள்ள தக்ஷிண கைலாயம் எனும் மலைப் பருவத்தில் ஏராளமான லிங்கங்கள் உள்ளது தெரியாதா? அதன் நடுவில் உள்ள மிகப் பெரிய சிவலிங்கம் சிவபெருமானே  வந்து ஸ்தாபித்த ஆத்ம லிங்கமாகும். அனைத்து லிங்கங்களை விட சிவபெருமானே வந்தமர்ந்துள்ள அதல்லவா மேன்மையான லிங்கம். அதை எடுத்துப் போய் பூஜிப்பதை விடுத்து வேண்டாத காரியத்தை ஏன் செய்கிறாய் என்று  அவனை உசுப்பேற்றினார் .

‘அடாடா…என் ராஜ்யத்திலேயா அந்த ஆத்ம லிங்கம்  உள்ளது, இந்நாள் வரை அது தெரியாமல் போய் விட்டதே’ என எண்ணி வருந்திய  ராவணன் சற்றும் தாமதிக்காமல் தனது தேரில் ஏறிக் கொண்டு இலங்கையின் தென் பகுதியில் இருந்த தக்ஷிண கைலாயத்தை அடைந்தான். அந்த வயதான மனிதர் கூறிய இடத்திலேயே அதி சுந்தரமான சிவலிங்கம் சூரி ஒளியினால்  மின்னிக் கொண்டு இருந்ததைக் கண்டான் . அவன் கண்கள் கூசும் அளவிற்கு அது பளபளக்க அதைக் கண்டவன் ஆனந்தக் கூத்தாடினான். ‘இதோ சமுத்திரக் கடலில் குளித்து விட்டு அதை எடுத்துப் போகிறேன்’ என மனதுக்குள் கூறிக் கொண்டு கடலில் சென்று குளித்து விட்டு வந்தான். குளித்து விட்டு வந்தவன் அந்த லிங்கத்தை எடுக்க முயன்றான். ஆனால் பூமியில் இருந்த அதை எடுக்க முடியாமல் திணறினான். ஆகவே வேறு வழி இன்றி அதை அந்த பூமியுடன் சேர்த்து பெயர்த்துக் கொண்டு போவது என முடிவு செய்து விட்டு  அந்த பூமியை தனது வலிமை மிக்க வாளினால் ஓங்கி வெட்ட அந்த இடத்தில் இருந்த பூமி லிங்கத்துடன் சேர்ந்து பிளக்க , லிங்கத்தை  அந்தப் பிளவுடன் சேர்த்து அதை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்லக்  கிளம்பினான்.

……தொடரும்