

சிவபெருமானின் கோபத்தினால் அவரிடம் இருந்து வெளிவந்த வீரபத்ரர் யாகத்தில் வந்தவர்கள் பலரைக் கொன்றதினால் சிவபெருமானுக்கே ஏற்பட்ட பிருமஹத்தி தோஷத்தைக் களைந்து கொள்ள அவரே பூலோகத்தில் பிறவி எடுக்க வேண்டும். வானத்தில் இருந்து தம் உடலில் உள்ள அனைத்து ஆபரணங்களையும் கீழே வீச வேண்டும். அவை எந்த நதியில் வீழுகின்றதோ அந்த நதிக் கரையில் சென்று தங்கி நதியில் குளித்து தவம் இருந்து பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என சாபம் ஏற்பட்டது . அதனால் சிவபெருமான் வீசிய ஆபரணங்கள் நாகப்பட்டினத்தில் வீரபத்திரர் ஆலயம் உள்ள இடத்தில் வந்து விழுந்ததாகவும் அங்கு வந்து தவம் இருந்து பிருமஹத்தி தோஷத்தை களைந்து கொண்டு, தன்னுடைய அவதாரமாக ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் எனவும் அந்த கிராமத்தினர் காலம் காலமாக கூறப்பட்டு வரும் கதையை ஆதாரமாகக் கூறுகின்றார்கள். இன்னும் சிலர் அந்த ஆலயம் கும்பகோணத்து மகாமகம் குளத்தருகில் உள்ள ஆலயம் என்றும் கூறுகிறார்கள்.
வீரபத்திரர் கர்நாடக மானிலத்தில் வீர சைவர்களினால் பெரிதும் போற்றி வணங்கப்படுகிறார்.அவர்களில் பலருக்கு அவரே குல தெய்வமாகவும் இருக்கிறார். அந்த சிவபெருமானே அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், குபேர வீரபத்திரர் என அறுபத்தி நான்கு விதமான ரூபங்களை எடுத்தாராம்.

தட்ஷன் மிகச் ஒரு காலத்தில் பெரும் சிவ பக்தனாக இருந்தவர். அவருக்கு சிவபெருமானால் பல வரங்கள் கிடைத்தன. ஆனால் அப்படி இருந்தும் அந்த சிவபெருமானையே அவர் அவமதித்ததினால் கோபம் கோபம் கொண்ட சிவபெருமான் அவனிடமிருந்து தான் கொடுத்த அனைத்து வரங்களையும் பறித்து விடுகிறார். திரு என்பதற்கு தெய்வம் என்றும் ஒரு பொருள் உண்டு. இதனாலேயே இத்தலம் தெய்வமே வரத்தைப் பறித்த ஊர் என்பதினால் திரு + பறித்த + ஊர் என இருந்து பின்னர் திருப்பறியலூர் என்று மருவியது. தக்கன் வேள்வி செய்த தலமாதலின் ‘தட்சபுரம்’ என்றும், தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் ‘திருபறியலூர்’ என்றும், பெயர்களைப் பெற்று உள்ளது.


திருக்கோயிலின் முதல் திருச்சுற்றில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், போன்றவர்களுக்கு சன்னதிகள் உள்ளன. கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், , வன துர்க்கை போன்றவர்களையும் தரிசிக்கலாம்.


ஆலயத்தில் நவக்கிரகம் இல்லை. யாகத்தை வீரபத்திரர் அழித்தபோது நடந்த நிகழ்ச்சியில் சூரியபகவானின் பல் உடைந்தது. அவர் சிவபெருமானை துதித்தபடி அங்கேயே நின்று இருந்தார் என்பதினால் அவர் உருவம் ஆலயத்தில் சிற்பமாக உள்ளது.



முகமண்டபத்தில் அம்மன் சன்னதி திருமுன் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. நான்கு கரங்களைக் கொண்டு காட்சி தரும் அன்னையின் பெயர் இளங்கொம்பனையாள் என்பதாகும். மண்டபத்தில் மயில் மேல் காலூன்றி நிற்கும் முருகன், விநாயகர், பிரதோஷ நாயகர் ஆகியோரின் சிலைகள் காணப்படுகின்றன.
தட்சன் ஆட்டுத் தலையுடன் இறைவனை வழிபடும் தல வரலாறு தெற்குச் சுவரில் சிற்பமாகக் படைக்கப்பட்டு உள்ளது. மேலும் கருவறையின் இன்னொரு பகுதியில் முனிவர் மற்றும் அரசன் ஒருவனும் நின்ற நிலையில் வணங்கும் கோலத்தில் இருக்க, இன்னொரு சுவற்றில் தட்ஷன் தனது பரிவாரங்களுடன் சிவலிங்கத்துக்கு பூஜை செய்வதைப் போன்ற சிற்பங்களும் உள்ளன .


அஷ்ட வீரட்டத் தலங்களில் இது ஒன்றாகும். திருவாடுதுறை ஆதீனத்தின் நிர்வாகத்தில் இந்த ஆலயம் உள்ளது. சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும். திருமண வரம், குழந்தை வரம் பெற இங்கு வந்து வேண்டிக் கொண்டால் நடக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் பக்தர்களது வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை உண்டு.
மூலவர் பெயர் :- வீரட்டேஸ்வரர், தட்சபுரீசுவரர்
உற்சவர் பெயர் :- சம்ஹாரமூர்த்தி
அம்மன் பெயர் :- இளம்கொம்பனையாள் அல்லது இளம் கொடியம்மை
தல விருட்சம் :- பலா மரம் மற்றும் வில்வம்
தீர்த்தம் :- உத்திரவேதி
ஆலய முகவரி
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
செம்பனார் கோயில் – அஞ்சல் – 609 309
தரங்கம்பாடி வட்டம் – நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாடு