திருத்தாங்கல்புரம், விருதுநகர்
சாந்திப்பிரியா
சில நேரங்களில் எழுதப்பட்ட ஆலயக் கதைகளைப் படிப்பதை விட காலஷேபங்களில் கூறப்படுவதை நேரடியாகக் கேட்பது சற்று மாறுதலாகவும், இனிமையாகவும் இருக்கும். ஒரு திவ்யதேசத்தைப் பற்றி ஒரு வைஷ்ணவப் பெரியவர் ஆற்றிய உபன்யாசத்தின் ஒரு சிறிய பகுதியை முடிந்தவரை அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழவும் :
”………..இன்னிக்கு என்ன திவ்யதேசத்தைப் பத்தி சொல்லும்படி நிறையபேர் கேட்டுண்டா. இந்த லோகத்துல உள்ளவா ரொம்மபேருக்கு திவ்யதேசம்னா என்னனு தெரியாது. ஒத்தர் என்னக் கேட்டா, ஸ்வாமி திவ்ய தேசம்னா என்ன ? அந்த தேசம் எங்க இருக்கு?………. நேக்கு ஆச்சர்யமா இருந்துது…..இதென்னடா, திவ்ய தேசம்னா என்னன்னு கேக்கறா….அதி புத்திசாலியா இருப்பா போலருக்கே அப்படீன்னு நெனச்சுண்டேன். ஆனா என்ன பண்ரது……காலம் ரொம்பவே கெட்டுப் போச்சு ….இந்த காலத்ல இருக்கற கொழந்தேள்கு அவா அவா ஆத்லல்லாம் தெய்வத்தைப் பத்தி சொல்லித் தரதில்ல. கோவிலுக்குப் போறதே பாதிபேர்க்கு சோம்பலா இருக்கு. ஆத்துல பூஜா பண்லாம்னா நேரம் இல்லாங்க்ரா…. அதனாலதான் பக்தீங்கரத்ல இப்படியான ஷீன நிலமையில நாம் இருக்கோம் அப்படீன்னு நினச்சு வருத்தப்பட வேண்டியதாயிடுத்து…..ஆனா என்ன பண்றது சொல்லுங்கோ …காலத்துக்கு ஏத்த மாதிரி நம்மையும் மாத்திக்கணும் இல்லையான்னு நெனச்சின்று அவருக்கு திவ்விய தேசம்னா என்னனு புரியும்படி சொன்னேன்…..
ஆமா…திவ்யதேசம்னா என்னனுன்னு நினக்கரேள் ? திவ்யம்னா அற்புதமான, எல்லாமே நன்னா இருக்கற ,இன்னும் சொல்லனும்னா நமக்கு வேண்டிய எல்லாமே இருக்கற எடம்னு அர்த்தம். அதாவது பகவான் தான் இருக்கற எடுத்துலேந்து அவர் கிட்டப் போய் வேண்டரவாளுக்கு அவா கேட்டதெல்லாத்தையும் கொடுக்கற எடம்தாம் திவ்ய தேசம் அப்படீங்கற ஐதீகம்னு சொல்வா. ……அதனால திவ்ய தேசத்தோட அர்தம்…..திவ்யமா இருக்கற எடம்னு அர்த்தம்.
…………….நம்ம தமிழ்நாட்டுல திருத்தாங்கல்புரம்னு ஒரு திவ்யதேசம் இருக்கு…அது மகா புண்யஷேத்ரம்…பூதத்தாழ்வார் , இன்னும் திருமங்கை ஆழ்வார் அப்படீங்கரவாளால மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம்னு சொல்வா….ரொம்மபேர்க்கு தெரில்ல அது இருக்கற எடம் ……..அப்படி ஒரு நெலம ….சாதாரணமா மதராஸ்…மதுரை …திருச்சி…கோயம்பத்தூர்….கும்பகோணம் …. மாயுரம் அப்படிநீனு பெரிய பெரிய எடத்த சொன்னாதான் ரொம்மபேர்க்கு தெரியறது………..இல்லனா அது எங்க மாமா இருக்கூன்னு கேட்டுர்ரா…போட்டும் .. அந்த எம்பெருமான் தளப் பெருமையைக் கேளுங்கோ …..கவனமா கேளுங்கோ
………….திருத்தாங்கல்புரம் , திருத்தாங்கல்புரம்னு ஒரு திவ்யதேசம் இருக்குன்னேன் இல்லையா…அது ரொம்மவே புண்யம் பண்ரவா மட்டுமே பாக்க முடிஞ்ச எடம்னு கூட சொல்வேன்……… என்னனா அங்க பெருமாள் நின்னுன்றுக்கா…தாயாரும் நின்னுன்ருக்கா…சரி நின்னுன்று இருந்தா என்ன பெரிசுன்னுக் கேக்காதேங்கோ.. பெருமாள் எப்போதுமே நிக்கற கோலத்துல இருக்க மாட்டா…அது போல தாயாரும் நிக்கற கோலத்துல வேற எங்கயுமே இருக்க மாட்டா…. ..ஆனா இங்க ரொம்ம அபூர்வமா நின்ன கோலத்துல இருப்பா…..
…………………மத்த கோவில்லல்லாம் கால் வலிக்கும்கர்த்துக்காக உக்காரமாட்டா… உட்கார்ந்து இருக்கறது ஒரு ரூபத்தக் காட்டத்தான் … நம்மாத்லல்லாம் ஒண்ணு சொல்வா…பெரிவா முன்னாடி நாம உட்கார்ங்துக்கர்த்து மரியாத இல்லான்னு…அது வேற…..ஆனால் பெருமாள் முன்னாடி உட்கார்ந்துக்கர்தூங்கர்த்து அவரவிட நாம சின்னவான்னுக் காட்டர்த்துக்குத்தான். அது ஒரு உருவம் அவ்ளவுதான்…அதனாலத்தான் நீங்க பார்த்தேள்னா எந்த மூல தெய்வத்துக்கு முன்னாடியும் அங்க இருக்கற மத்தவா அத்தனைபேரையும் சின்னவாளாக் காட்டுவா….அதாவது அவாள விட ஒசரம் கம்மியா இருக்கும், இல்லேன்னா அவா முன்னாடி உட்கார்ந்து இருப்பா…. ராம பட்டபிஷேக படத்தப் பாருங்கோ….சிவன் திருமண படத்தையோ, இல்லேன்னா நெறைய கோவில்ல இருக்கற சிலைகளைப் பாருங்கோ …புரியும்.
திருத்தாங்கல்புரம் அப்டீங்கர்து சிவகாசி, விருதுனகர்னு நம்ம தென் பகுதில இருக்கற எடத்துல இருக்கு. சிவகாசி, இல்லேன்னா விருதுநகர் அப்படீன்னா நமக்கெல்லாம் பட்டாசு இல்லைன்னா தீப்பெட்டி ஞாபகம்தான் வரும்…ஏன்னா அந்த ஊர்ல அப்படி நெறையா தொழில்சாலைலாம் இருக்கு….ஆனால் அங்கல்லாம் நல்ல நல்ல கோவிலும் இருக்கூன்னு ரொம்பபேர்க்கு தெரில்ல…அங்கல்லாம் பக்தியும் ஜாஸ்தி….பெரிய பெரிய ஊர்ல இருக்கறதவிட அந்த ஊர்லலாம் ஜனங்களுக்கு பக்தி ஜாஸ்தியா இருக்கு… சரி திருத்தாங்கல்புர கோவிலோட கதை என்னனு கேக்கறேளா…சொல்றேன் கேளுங்கோ …
………ஒரு சமயத்துல ஸ்ரீதேவி, பூதேவி இன்னும் நீலா தேவிங்கற மூணு பொம்னாட்டிகளுக்கும் ஒரு விவாதம் வந்துட்த்தூ …நாம மூணுபேர்ல யார் பெரிவா….சாதாரணமா மூணு பொம்னாட்டி ஒண்ணா சேந்தாலே நீயா, நானான்னு சண்ட வரும்..அப்படி இருக்கச்சே ஸ்ரீமான் நாராயணன் மேல வெச்சுர்க்ற அன்ப யாராவது கொறச்சு சொல்லிப்பாளா, இல்ல அவர்கிட்ட தான்தான் நெருக்கம்னு சொல்லிக்க ஆசபடமாட்டாளா? அதுதான் இங்கயும் வந்துட்தூ……ஒத்தர்கொத்ரர் அப்படி, இப்படீன்னு சொல்ல ஸ்ரீதேவிக்கு வருத்தம் வந்துட்தூ…. அங்கேந்து எழுந்து போய்ட்ரா…எங்க போனா…..நேர திருத்தாங்கல்புரம் இருக்கற எடத்துல வந்து பெருமாள மனசுல நெனச்சு த்யானம் பண்றா…நாதா…பெருமாளே……நேக்கு நீ ஒஸ்தீனா நீ இங்க வந்து என்னோட இருக்கணும்….இப்படி ரொம்ப நாளா அவர தியானம் பண்ணிண்டு இருந்தா. ரொம்ம நாளா அங்கயே ஒக்காந்துண்டு அவ நாராயணன் நெனச்சு த்யானம் பண்ணதும் பெருமாளுக்கே மனசு இளகிடுத்து … இது சரில்ல…பாவம், அவோ மனச ஏன் நோகடிக்கணும், நேக்கு எல்லாருமே ஒன்னுதான்னாக் கூட இப்ப இவ வருத்தத நீக்கணும்னு நெனச்சுண்டு அங்க வந்து அவளுக்கு காட்சி தந்துட்டார்….அவளோட அங்கயே நின்னுண்டார்…அதனால, ஸ்ரீதேவி இங்க வந்து, தங்கி பகவான பிரார்திச்சதுனால , பகவானும் அங்க வந்து அவளோட நிண்நுண்டத்னால நின்ற நாராயணப் பெருமாள்னு அவருக்கும் பேர் வந்துட்த்து …ஸ்ரீதேவியோட அவர் இந்த தங்கிட்டத்னால, அந்த ஊருக்கும் திரு அதாவது ரொம்ம புனிதமானன்னு அர்த்தம்…..தங்கல் அதாவது தங்கினது …அப்படீன்னு ரெண்டயும் ஒண்ணா சேர்த்து புண்ணியம் தர்ரவா தங்கின எடம்கர பேர்ல திருத்தாங்கல்னு ஆயுடுத்துனு சொல்வா.
இன்னும் ஒரு சமாச்சாரம் என்னன்னா பெரியபிராட்டியாரோட தவத்த மெச்சின எம்பெருமான் இந்த லோகத்துல இருக்கறவா எல்லாருக்குமே அன்னம் தர அன்னபூர்ணியா நீ இருப்பாய் அப்படீன்னு ஆசிர்வாதம் கொடுத்தாராம். அதனால அன்னபூரணி நம்ம பெரியபிராட்டியோட அம்சமாவே அங்க இருக்கா என்பது இன்னொரு நம்பிக்கை. நாம சாப்படற சாதம் கூட தாயார் போடற சாப்பாடுதான்னு நாம எப்போதுமே நினச்சிண்டு இருந்தா, அது நமக்கு புண்ணியத்த தரும்.
………இந்த கோவில்ல என்ன விசேஷம்னு கேக்கறேளா ….ரொம்மவே இருக்கு ஸ்வாமி….சொல்றேன்…கேட்டுக்கோங்கோ….
இந்த பூமில எந்த கோவில்லயாது மூலவர் சன்னதில பதினோரு பேர் ஒண்ணா இருக்கறத பார்திருக்கேளா .. ..நிச்சயமா பார்த்திருக்க மாட்டேள்…..ஏன்னா அத்தனைபேரும் மூல சன்னதில இருக்க மாட்டா. ….ரெண்டுபேர் இருந்ததாலே சண்ட வந்துடூங்கர்ச்சே பதினோரு பேரா….
………ஆமாம் …பதினோரு தெய்வ அம்சங்களையும் ஒரே எடத்துல தன்னோட வச்சுண்டு பெருமாள் காட்சி தரார்….. .அது ஏன்னு கேக்கறேளா?…நீ பெரிவா, நான் பெரிவாங்கர்து இல்லாம எல்லாருமே நேக்கு வேண்டியவாதான் அப்படீன்னு காட்டர்துக்காக பெருமாள் அப்படி காட்சி தராராம்……அங்க பெருமாளோட இருக்கறவா யார் யார் தெரியுமா? …….ஸ்ரீதேவி, பூதேவி, நீலா தேவி, பிருகு ரிஷி, கருடன், சூர்யனோட தேரை ஓட்ற அருணன், கிருஷ்ணரோட பேரன் அனிருத்தன், அவன் பொண்டாட்டி உஷா, இன்னும் ஜம்பாவதிங்கர அத்னபேரும் அங்க இருக்கா………சரி …அவ்ளோபேர் அங்க ஏன் வந்தாங்கரேளா ……. அவாள்லாம் அங்க வந்து, பெருமால சேவிச்சு , வேண்டிண்டு, பெருமாளோட ஆசிய வாங்கிண்டவா…..
…………பானாசுரன்கர அசுரன் அட்டகாசம் பண்றச்சே அவன கிருஷ்ணரா போய் அடக்கறார்..அப்போ அவன் தன்னோட தப்ப உணர்ந்துண்டு ‘நான் திருந்திட்டேன் ஸ்வாமி….என்ன மன்னிச்சுக்கோங்கோன்னு கேட்டுட்டு, தன்னோட பொண்ணு உஷாங்கரவளை அவரோட பேரன் அனிருத்ரனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துடறான். அந்தக் கல்யாணத்தை அவா ரெண்டுபேரும் பெருமாள் முன்னாடி இங்க வந்து பண்ணினத்னால அவா ரெண்டுபேரும் இங்க இருக்கா. இதுக்காக எம்பெருமான் நேர்லயே வந்தார்னு சொல்வா..
…..இங்க இருக்கற பெருமாள திருத்தான்கல் அப்பன் அப்டீனும் சொல்வா . சிலபேர் அவரை தெய்வீக வாசுதேவர்னும் சொல்வா. ரெண்டுமே சரிதான்.
..இங்க இருக்கற தாயாருக்கு செங்கமத் தாயார், கமலமஹாலஷ்மி, அன்ன நாயகி, ஆனந்த நாயகி, அமிருத நாயகி அப்ப்டீனல்லாம் நெறைய பேரு வைச்சுர்க்கா. இந்த அன்னனாயகிதான் அன்னபூரணி அப்படீம்பா…. இங்க ரெண்டு தீர்த்தம் இருக்கு….அது என்னன்னா பாஸ்கர தீர்த்தம், இன்னொன்னு பாபநாசன தீர்த்தம் அப்டீங்கர்த்து. பாபநாசன தீர்த்தம் அப்டீங்கர்த்து ரொம்பவே விசேஷமான தீர்த்தம்க்ரா….ஏன்னா எல்லா ஊர்லயும் இருக்கற நதிகள்ளையும் பாவம் செய்தவா போய் குளிச்துனால அந்த நதி எல்லாத்துக்கும் நிறைய பாவம் சேந்துட்த்து…..என்னடா, நாமளும் பாவ நதிகளாயிடுவோமோன்னு அதுகள் எல்லாத்துக்கும் பயம் வந்துட்டத்னால அவா சப்த ரிஷிகள்டையும் போய் எங்க ஒடம்புல சேர்ந்துண்டே வர்ற பாவத்த தொலைக்கலைன்னா இன்னும் கொஞ்ச நாள்ல நாங்களும் பிரயோஜனம் இல்லாம ஆயுடுவோமே….என்ன செய்யலாம்னு யோசனைக் கேட்டப்போ அவா சொன்னா…போங்கோ…போய் எம்பெருமான சேவிச்சு அவர் கால அலம்பிலேள்னா நீங்க சுத்தம் ஆவிடுவேங்க்ரா ….ஆஹா இந்த புத்தி நமக்கு தோணலயேன்னு தலேல அடிச்சுண்ட நதி எல்லாமே அந்த ரிஷிகள்ட கேட்டா…ஸ்வாமி…ஸ்வாமி..இப்ப பகவான் எங்க இருப்பார்?….
அவாளோட மனகஷ்டாத பார்த்த ரிஷிகளும் அவர் இப்போ திருத்தாங்கல் அப்படீங்கற ஊர்ல தங்கி இருக்கார்ன்னு சொன்ன உடனே அத்தன நதியும் அங்க ஓடினா.. ஓடிப் போய்…பெருமாளே ….பெருமாளே…இன்ன மனக் கஷ்டம் எங்களுக்கெல்லாம் வந்துட்த்து….அதனால நீங்க எங்க உடம்புல ஒங்கக் காலை வைச்சு புனிதமாக்கணும்னு வேண்டின்டதும், அவரும் நீங்க எல்லாம் ஒண்ணா நில்லுங்கோங்க்றார். …….அவா எல்லாமே ஒண்ணா நின்னதும் அதுல இறங்கி குளிக்றார்…. உடனே அவா அத்தன பேரோட பாவமும் போய்டறது…..அதுக்கப்ரமா பெருமாளை சேவிச்சுட்டு திரும்பிப் போய்டரா….திரும்பிப் போர்துக்கு முன்னால அவா தன்னோட சரீரத்தைக் கொஞ்சம் அங்க விட்டுப் போறா. அதுதான் பாபநாசன தீர்த்தம்க்றது. அதுல குளிச்சா அனைத்து பாவமும் போய்டூம்க்றது அதனாலதான் ஒரு ஐதீக வந்துட்த்து ….
………அது மாதிரி அந்த தீர்த்தத்துக்கு பக்கத்ல இருக்கற தீர்த்தத்துக்கு பாஸ்கர தீர்த்தம்னு பேரு. அதுல குளிச்சா பிரும்மஹத்தி தோஷம் போகும்னு சொல்வா…என்னா ஒரு தடவ சூரிய பகவான் தன்னோட பொண்டாட்டிய தூங்கிண்டு போய்ட்ட ஒரு அசுரனை தொரத்திண்டு போறார்….அவன் என்ன பண்ணான்னா, ஓடிப் போயி ஒரு பிராமணன் பின்னால ஒளிஞ்ஜூன்றான். ஆனா அதுக்கு முன்னால சூரிய பகவான் அவன் மேல தூக்கிப் போட்ட ஆயுதம் அந்த பிராமணனையும் செத்துக் கொன்னுடர்தால அவருக்கு பிராமண ஹத்தி தோஷம் வந்துதுடுத்து … அடடா தெரியாம சேஞ்சது தோஷத்த தந்துடுத்தேன்னு பயந்து போய் என்ன செய்யலாம்னு பிரும்மாக்கிட்ட கேக்கறார். …அவரோ உடனே ஓடிப் போய் எம்பெருமான் நின்னுண்டுள்ள ஷேத்ரத்துல இருக்கற தீர்தல்ல குளிச்சா தோஷம் போகும்னதும், சூரியன் இங்க ஓடோடி வரார்….வந்து இந்த நதில குளிச்சுட்டு பெருமாளை செவிக்கறார்…அவ்ளோதான்…. உடனேயே அவர் தோஷம் போய்டறது. இந்த தீர்த்தம் ரொம்ப புனிதமானது அப்படீன்னு சொல்வா…
இங்க உள்ள கருடப் பெருமானும் ரொம்ம ஒசத்தியானவர். இங்கதான் அவருக்கு நாலு கை இருக்கு. ரெண்டு கையால பகவானை செவிச்சுன்று மத்தத ரெண்டு கைல ஒண்ணுத்ல அமிர்த கலசத்தையும், இன்னொன்னுத்ல பாம்பையும் வெச்சுன்றுக்கார். இப்படிப்பட்ட விசேஷமான கோவில்ல போய் பெருமாளை செவிச்சு அவரோட அனுக்ரகத்த வான்கிக்கோங்கோ அப்படீன்னு சொல்லி நான் இதை முடிச்சுக்கறேன்”.
அவர் கூறிய காலத்ஷேபத்தைக் கேட்டப் பின் அந்த ஆலய விவரத்தை கேட்டு அறிந்தேன். இந்த ஆலயம் திவ்ய தேசங்களில் ஒன்றாம். இது விருதுநகரில் இருந்து 20 கிலோமீட்டர், சிவகாசி அல்லது சாத்தூர் போன்ற ஊர்களில் இருந்து ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. வில்லிப்புதூரும் இந்த ஊரின் அருகில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளை வணங்கித் துதிப்பதின் மூலம் குடும்ப ஒற்றுமை மேலோங்கும், தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறும், குழந்தைகள் மேன்மை அடைவார்கள் என்று ஐதீகம் உள்ளதாம். இங்குள்ள பெருமாளுக்கு வெண்ணை சாத்துவது விசேஷம் என்கிறார்கள். ஆலயம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையதாம். மூலவர் சன்னதியில் பதினோரு தெய்வ சிலைகள் உள்ளது இந்த ஆலயத்தில் மட்டும்தானாம். இங்குள்ள மூலவரை நின்ற நாராயணன் என்று அழைக்க தாயார் செங்கமலத் தாயார் என அறியப்படுகிறார். பெருமானுடன் ஜம்பாவதியும் சேர்ந்து உள்ளது இந்த ஆலயத்தில் மட்டும்தானாம். ஆலயத்தின் சிலப் படங்களைக் கீழே காணலாம்.