புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர்

பிரகதாம்பாள் ஆலயம்
சாந்திப்பிரியா

 பலரும்  கோகர்னேஸ்வரர் ஆலயம் என்றால் கர்நாடகத்தில் கோகர்ணம் என்ற இடத்தில் உள்ள விநாயகர் ஆலயம் என்றே நினைப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் புதுகோட்டையில் உள்ள குகை கோகர்ண ஆலயம் பற்றி பலருக்கும் தெரியாது. அந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அங்கு செல்ல நிறைய வாகன வசதிகள் உண்டு. புதுகோட்டைக்கு மதுரை, திருச்சி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து செல்லலாம். திருச்சியில் இருந்து சுமார் ஐம்பது கிலோ தொலைவில் உள்ள புதுகோட்டையில் உள்ள கோகர்ண ஆலயத்தின் பெயர் கோகர்ண பிரகதாம்பாள் ஆலயம். அது காமதேனுப் பசுவினால் அப்படி புகழ் பெற்ற தலம். அதன் கதை இது.

ஒரு முறை தேவலோகத்தில் இருந்த காமதேனுப் பசு இந்திரனின் சபைக்கு தாமதமாக வந்தது. தன் சபைக்கு தாமதமாக வருவதா என காமதேனு மீது கோபம் அடைந்தார் தேவேந்திரன்.ஆகவே காமதேனுவையும் இனி சாதாரணப் பசுவைப் போல பூமியில் சென்று பிறந்து வாழுமாறு சாபமிட்டார். அதனால் வருந்திய காமதேனு பார்வதியிடம் சென்று அழுதது. அதை தேற்றிய பார்வதியும் அதற்கு தேவேந்திரன் சாபம் தந்துவிட்டதினால் அதை அனுபவிக்குமாறும் ஆனால் பூமிக்குச் சென்று பசுவாகப் பிறந்து சிவபெருமானை துதித்து சாப விமோசனம் பெறலாம் என வாழ்த்தி அனுப்பினாள்.

 இந்திரன் கோபத்துடன் காமதேனுவிற்கு சாபம் தந்தார் 

காமதேனுவும் அதன் சக்திகள் அனைத்தையும் இழந்து பூமியில் சென்று ஒரு சாதாரணப் பசுவாக மாறியது. ஆனாலும் பூர்வ ஜென்ம நினைவு மட்டும் இருந்தது. அதை கபில முனிவர் தனது ஞானக் கண்களினால் பார்த்து விட்டதினால் அது சாப விமோசனம் பெறும்வரை தம்முடனேயே இருக்கட்டும் என கருணைக் கொண்டு தன்னுடன் வைத்துக் கொண்டார். அந்த ஆசிரமத்தில் அவர் சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து வந்தார். அந்தப் பசு தினமும் பல மைல் தொலைவு சென்று கங்கை நதியில் இருந்து தண்ணீரை தனது காதில் ஏந்திக்  கொண்டு வந்து அந்த நீரை கபில முனிவரின் ஆசிரமத்தில் இருந்த சிவ லிங்கத்தின் மீது ஊற்றி வழிபட்டது. அப்படி பல காலம் செய்து கொண்டு இருந்த அந்த பசுவிற்கு சாப விமோசனம் பெரும் வேளை வந்தது. ஆகவே அதை சோதிக்க விரும்பிய சிவ பெருமானும் தன்னை ஒரு புலியாக உரு மாற்றிக் கொண்டு காதில் தண்ணீரை ஏந்தி வந்து கொண்டு இருந்த பசுவை வழிமறித்தார். பசுவோ தான் சிவபெருமானின் பூஜைக்கு தண்ணீர் கொண்டு போவதினால் தன்னை விட்டு விடுமாறும் தான் எடுத்துப் போகும் தண்ணீரை அர்ச்சனை செய்துவிட்டு திரும்பி வருவதாகவும் அப்போது தன்னை கொன்று உணவாக எடுத்துக் கொள்ளுமாறும் சத்தியம் செய்து கொடுத்து  தன்னை பூஜை  செய்துவிட்டு வர  அனுமதி தருமாறு வேண்டியது. அதன் உண்மையான பக்தியை பார்த்த சிவபெருமானும் அங்கேயே அதற்கு பார்வதி சமேதராக காட்சி அளித்து தன்னை கங்கை நீர் கொண்டு வழிபட்ட இடத்தில் தானே கோகர்னீஸ்வர பிரஹதாம்பாளாக ( பசு வழிபட்ட பார்வதி சமேத சிவன்) எழுந்தருளி அந்த இடத்துக்கு புனிதத் தன்மை தருவேன் எனக் கூறி மறைந்தார். ஆகவேதான் அந்த இடத்தில் ஆலயம் எழுந்தது. ஆலயத்தின் மூல தெய்வமாக பிரகதாம்பாளே இருக்கின்றாள்.

காமதேனுவிற்கு  காட்சி  தந்து  சிவபெருமான்  அதை ஆசிர்வதித்தார்

அந்த ஆலயத்து தேவியான பிரகதாம்பாள் எனும் பார்வதி புதுக்கோட்டை ஆண்டு வந்த மன்னன் தொண்டைமானின் ஆட்சியில் அவர்களது குல தெய்வமாக இருந்தது. அதே புதுக்கோட்டையில் திருட்டுப் போன அல்லது தொலைந்து போன பொருட்களை கிடைக்க அருளும் அரைகாசு அம்மனின் ஆலயமும் உள்ளது.