கர்நாடகத்தில் பல அறிய ஆலயங்கள் அவ்வப்போது எழுப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆலயம் சமீபத்தில் எழுந்துள்ள பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்கங்களை கொண்ட துவாதஷ ஜ்யோதிர் லிங்க சமஸ்தானா என்பது. இங்கு பன்னிரண்டு ஜ்யோதிர் லிங்க ஆலயங்களின் அதே மாதிரியான சிவ லிங்கங்களை தனித்தனி சன்னதி அமைத்து அதில் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். நடுவில் ஒம்காரீஸ்வரர் ஆலய சிவ லிங்கம் சுமார் ஆறு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த லிங்கத்தை சுற்றி சன்னதிகள் அமைத்து அவற்றில் மற்ற பதினோரு சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். இந்த ஆலயம் எழும்பக் காரணம் அனைவராலும் ஜ்யோதிர் லிங்கங்களை பல பகுதிகளிலும் அமைந்துள்ள அந்தந்த ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய இயலாது என்பதினால் ஒரே இடத்தில் அந்த பன்னிரண்டு சிவ லிங்கங்களையும் விதிப்படி பிரதிஷ்டை செய்து வைத்தால் இந்த இடத்தில் வந்து அவற்றை ஆராதிப்பதின் மூலம் அந்த பன்னிரண்டு ஜியோதிர் லிங்க ஆலயங்களில் சென்று தரிசித்து வணங்கிய பலனைப் பெற முடியும் என்பதற்காகத்தான்.
இந்த ஆலயத்தை உத்ரஹள்ளி – கென்கேரிக்குச் செல்லும் பாதையில் ஒரு மலைப் போன்ற பகுதியில் அமைத்து உள்ளார்கள். மலை மீது சிவன் ஆலயம் உள்ளதே விசேஷம் என்று கூறுவார்கள். ஆகவே மலைப் போன்ற குன்றில் அமைந்து உள்ள இந்த ஆலயம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏது ?
இந்த ஆலய நிர்மாணப் பணியை 2002 ஆம் ஆண்டு ஸ்ரீ சிவபுரி ஸ்வாமிகள் துவக்கி வைத்ததாகவும், ஆனால் அது நிறைவேறும் முன்னரே அன்னார் 2007 ஆம் ஆண்டு சமாதி அடைந்து விட்டதினால் அவருடைய வாரிசாக உருவான ஸ்ரீ மதுசூதானந்த பூரி ஸ்வாமிகள் அந்தப் பணியை தொடர்ந்து செய்து 20011 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் முடித்து வைத்துள்ளார். பன்னிரண்டு ஜியோதிர் லிங்க சன்னதிகள் அமைந்து விட்டாலும், ஆலயப் பணிகள் இன்னமும் நிறையவே உள்ளன.
இந்த சன்னதிகளில் உள்ள சிவ லிங்கங்களின் விசேஷம் மற்ற ஆலயங்களில் இல்லை. நர்மதை நதிக் கரையில் இருந்து எடுத்து வந்த பாண லிங்க கற்களில் ஒரு அங்குல நீளத்தில் சிவ லிங்கங்கள் செய்யப்பட்டு அவை ஒவ்வொரு சன்னதியின் கீழும் உள்ள சிவ லிங்கங்களின் அடியில் புதைக்கப்பட்டு உள்ளன. அப்படி செய்யப்பட்ட 1000 ஒரு அங்குல நீள நர்மதேஸ்வர சிவலிங்கங்கள் மந்திர உச்சாடனைகள் செய்து பீடத்தின் கீழே புதைக்கப்பட்டு அதன் மீதே அந்தந்த ஆலயத்தின் சிவ லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இப்படியாக பதினோரு சிவ லிங்க சன்னதிகளில் 11,000 சிவலிங்கங்கள் புதைக்கப்பட்டு இருக்க ஒம்காரீஸ்வரர் சிவ லிங்கத்தின் அடியிலோ 2000 ஒரு அங்குல சிவ லிங்கங்கள் புதைக்கப்பட்டு உள்ளன. ஆக மொத்தம் 13,000 சிவ லிங்கங்கள் நமது கண்களுக்கு தெரியாமலும் பன்னிரண்டு சிவ லிங்கங்கள் கண்களுக்கு தெரியுமாறும் அமைக்கப்பட்டு உள்ளன. அதனால்தான் பன்னிரண்டு சிவலிங்கங்கள் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று அந்த பண்ணிரண்டு சன்னதிகளையும் ஒருசேர ஒரு பிரதர்ஷணம் செய்தப் பின் ஒம்காரீஸ்வரர் சிவ சன்னதியின் வாயிலில் நமஸ்கரித்தால் 13012 சிவ லிங்கங்களை வணங்கியப் பலனைப் பெறலாம் என்கிறார்கள். இப்படிப்பட்ட புனிதமான ஷேத்திரம் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை.
இந்த ஆலயத்தின் மற்றொரு விசேஷம் என்ன என்றால் ஒவ்வொரு சிவ லிங்க சன்னதியிலும் சிவ லிங்கத்தின் முன்னால் பஞ்சலோக உலோகத்தில் செய்யப்பட்டு உள்ள மேரு யந்திரத்தை மந்திர உச்சாடனைகள் செய்து பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். இதற்குக் காரணம் சிவனுடன் சக்தியும் இங்கு சேர்ந்து உள்ளதான ஐதீகத்தைக் காட்டுவதற்கே. ஆகவேதான் இந்த ஷேத்திரத்தை சிவசக்தி ஷேத்திரம் என்று கூறுகிறார்கள்.
ஆலயத்தில் நுழையும் முன்னால் கொடி மரம், நந்தி போன்றவை இருக்க சன்னதியின் நுழை வாயிலில் வலது புறம் முருகப் பெருமான் மற்றும் இடது புறத்தில் விநாயகர் சன்னதிகளும் காணப்படுகின்றன. வைதீக தர்மத்தின்படி நாம் விநாயகரை வணங்கியப் பின், முருகனை தரிசித்து விட்டே சிவ சக்தியாக உள்ள ஜ்யோதிர் லிங்க கூடத்தில் சென்று தனித் தனி சன்னதிகளில் அமைக்கப்பட்டு உள்ள லிங்கங்களை வணங்கி துதித்தப் பின் ஒம்காரீஸ்வரர் சன்னதிக்கு முன்னால் வந்து அனைத்து லிங்கங்களுக்கும் சேர்த்தே நமஸ்கரிக்க வேண்டம். அதன் பின் வெளியில் வந்து கொடி மரத்தின் முனாலும் நமஸ்கரிக்க வேண்டும். அப்போதுதான் ஆலய தரிசனம் முடிவு பெரும் என்பது தர்ம விதியாகும்.
சிவலிங்க சன்னதிக் கூடத்தில் அனைத்துபுறமும் சண்டிகேஸ்வரர், கால பைரவர் போன்றவர்களின் சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
ஆலயத்தை விட்டு வெளியில் வந்ததும் இடப்புறத்தில் ஒரு குன்று போல உள்ள இடத்தில் மத்சவநாராயணருக்கு சன்னதி அமைத்து உள்ளார்கள். அதில் விஷ்ணுவானவர் மத்சாவதாரம் எடுத்த அவதாரக் கோலத்தில் காட்சி தருகிறார். தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மத்ய அவதாரம் மிகவும் முக்கியமானது. விஷ்ணுவானவர் மீன் வடிவம் எடுத்து உலகைக் காத்தார் என்பதைப் போல இந்த அவதாரத்தை இங்கு வந்து வேண்டி வணங்கினால் கரையேற முடியாமல் பிரச்சனைகளில் மூழ்கிக் கிடக்கும் நம்முடைய பிரச்சனைகளையும் மத்யாவதார விஷ்ணு தீர்த்து வைப்பாராம். எப்படி ஒரு மீனானது குளத்தில் உள்ள அழுக்குகளைக் களைகின்றதோ அது போலவே நம் மனதில் உள்ள துயரங்களையும் விஷ்ணு களைகின்றாராம் . ஆகவே இங்கு கிடைக்கும் மத்யாவதார யந்திரத்தை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி அதற்குள் வைத்து வணங்கி வந்தால் வீட்டில் வாஸ்துவினால் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் விலகும் , பணப் பிரச்சனை தீரும், சரீர நோய்கள் விலகும் என்று கூறுகிறார்கள்.
இந்த மத்ஸ்ய நாராயணர் ஆலய சன்னதியின் வாயிலில் பெரிய ஆலமரம் உள்ளது. அதன் அடியில் வன துர்கையின் ஒரு சன்னதியும் உள்ளது. அந்த ஆல மரத்தின் மீது வன துர்க்கை வசித்து வருவதாகவும் அவள் சிலருக்கு அங்கு காட்சி தந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். வன துர்க்கை கற்பூரத்தை விரும்புபவளாம். ஆகவே அவளுக்கு அந்த ஆல மரத்தின் கீழ் கற்பூரம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பெற்று மன அமைதி கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவள் சன்னதியை சுற்றி பல மாபெரும் முனிவர்கள், மகான்கள் போன்றவர்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
Omkar Ashrama Maha Samasthana
|
Omkar Hills,
|
Shrinivasapura,
|
Bangalore – 560 060
|
Karnataka
|
INDIA
|
Ph No: +91 80 2860 2586
|
|
Cell No: +91 9916682757, 9141920920, 9141930930
|
|
Telefax No: +91 80 2860 2586
|