பத்ராசலம் ராமர் ஆலயம்
சாந்திப்பிரியா
 
ஆந்திரப் பிரதேசத்தில் கம்மம் நகரின் அருகில் உள்ளது பத்ராசலம். அங்குள்ள ராமர் ஆலயம் மிகவும் பிரபலமானது. முன்னொரு காலத்தில் அந்த இடத்தில் இருந்த மலை உச்சியில் பத்ரா என்ற முனிவர் தவம் செய்து வந்தார். அவர் ராமரின் பக்தர். அவர் ராமபிரான் தனது தலை மீது வந்து அமர வேண்டும் என வேண்டிக் கொண்டு தவம் இருந்தார். அப்போது ராமன் சிதை மீட்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு இருந்த நேரம். திரும்பி வரும்போது உன்னுடைய ஆசையை நிறைவேற்றுவேன் என ராமர் கூறினார். ஆனால் அதை நிறைவேற்றும் முன் ராமர் மற்றொரு அவதாரமான மகா விஷ்ணு அவதாரத்தை எடுக்க வேண்டி வந்தது. ஆகவே அந்த முனிவரின் ஆசையை அப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பின்னர் மகாவிஷ்ணு அவதாரத்தில் இருந்த ராமர் அங்கு வந்து அந்த முனிவருக்கு சீதா சமேத ராமபிரானாக காட்சி தந்தார் . அதனால்தான் அங்குள்ள ராமர் சிலையின் கையில் மகாவிஷ்ணுவின் சங்கு சக்கரம் உள்ளது.
ஆனால் அந்த ஆலயம் வந்தது எப்படி? ராமரும் சிதை மற்றும் தனது தம்பி லஷ்மணருடன் அங்கு இருந்து மறைந்தனர். அப்போது அவர் தம்மை சிலையாக அங்கு விட்டுச் சென்று இருந்தார். வெகு காலத்துக்குப் பின்னால் ராமர் ஒரு பெண்ணின் கனவில் தோன்றி தாம் அந்த மலை உச்சியில் ஒரு இடத்தில் புதைந்து உள்ளதாகக் கூறினார். ஆகவே அந்தப் பெண்மணியும் அந்த சிலையை தேடிச்சென்றால். அவள் தனக்கு கனவு வந்த இடத்தை அடைந்தபோது அங்கு ஒரு மண் புத்ரே இருப்பதைக் கண்டால். ஆனால் ராமர் கூறி இருந்ததினால் அங்கு ஓடிக் கொண்டு இருந்த கோதாவரி நதியில் இருந்து நீர் எடுத்து வந்து குடம் குடமாக அந்தப் புற்றின் மீது ஊற்றி அதைக் கரைக்க அந்த சிலை புதைந்து இருந்ததைக் கண்டு வெளியில் எடுத்து அங்கேயே சிறு மண்டபம் எழுப்பி பூஜிக்கத் துவங்கினாள்.
 
நீண்ட காலத்துக்குப் பின் தானா ஷா என்ற முஸ்லிம் மன்னனின் தாசில்தாரராக அந்தப் பகுதியில் இருந்த ராமருடைய பக்தரான ராமதாஸ் அந்த சிலையைக் கண்டு வியந்தார். அவர் மக்களிடத்தில் இருந்து பணம் வசூலித்து அந்த சிலையை வைத்து ராமருக்கு ஆலயம் எழுப்பத் துவங்கினார். ஆனால் பணம் போதவில்லை. ஆகவே அவர் தான் வசூலித்து இருந்த வரிப்பணத்தை அந்த ஆலயம் கட்ட பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமுற்ற மன்னன் அவரை கோல்கொண்டா சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தினான். ராமதாஸ் ராமரையே தன்னை அந்த சங்கடத்தில் இருந்து விடுவிக்குமாறு வேண்டினார். ஆகவே ராமரும் லஷ்மணரும் ஒரு மனித உருவில் வந்து மன்னனிடம் ராமதாஸ் எடுத்துக் கொண்ட பணத்தை திருப்பி விட்டுச் சென்றனர். அதற்கான ரசீதை ராமதாஸிடம் தந்துவிட்டுச் சென்றனர். நடந்த அனைத்து  உண்மைகளைகளையும் பின்னர்  அறிந்து கொண்ட மன்னன் ராமதாசை விடுவித்தான். தானே அந்தக் கோவிலைக் கட்ட நன்கொடை தந்தான்.