இந்தியாவில் கர்நாடக மானிலத்தில் புராண வரலாற்று சிறப்பு மிக்க பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கர்னாடகாவின் தென் பகுதியில் கடீல் எனும் ஊரில் உள்ள தேவி துர்கா பரமேஸ்வரி ஆலயம் ஆகும். கர்னாடகாவின் உடுப்பி அல்லது மங்களூரில் இருந்து நேரடியாக இந்த ஆலயத்துக்கு செல்ல முடியும். அந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் இருபதுக்கும் மேற்பட்ட பூஜைகளும் யாகங்களும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடைபெறுகின்றது. தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு தேவியின் அலங்காரத்துக்காக ஆலயம் திறக்கப்பட்ட பின், காலை ஆறு மணிக்கு மேல் பக்தர்களுக்காக ஆலயம் திறந்து விடப்படுகின்றது. ஆலயம் இரவு பத்து மணிக்கு மூடப்பட்டு விடும்.
தேவி துர்கா பரமேஸ்வரியின்
வரலாற்று கதை
முன்னொரு காலத்தில் அருணாசுரன் எனும் ஒரு அசுரன் இருந்தான். அவன் தெய்வம் பிரம்மாவிடம் இருந்து ஒரு அரிய வரத்தைப் பெற்று இருந்தான். அந்த வரத்தின்படி அவனுக்கு தெய்வம் பிரும்மாவினாலேயே உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தை மனத்திலோ அல்லது வாயினாலோ அவன் ஜெபித்தபடி இருக்கும்வரை அவனுக்கு மரணம் வராது. அவனை மனிதர்கள் உட்பட எந்த ஒரு ஜீவனும், இரண்டு அல்லது நான்கு கால் ஜீவன்கள், விலங்குகள் அல்லது பறவைகளால் கூட கொல்ல முடியாது. ஆனால் அனுதினமும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க முடியாது. மற்ற செயல்களையும் செய்ய உத்தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதினால் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க இயலாது. அந்த நேரங்களில் ஜெபத்தை உச்சரிப்பதை சற்று நேரம் நிறுத்தினால் பிரும்ம வரத்தின் நியதிப்படி கொடுக்கப்பட்டு இருந்த குறிப்பிட்ட கால இடைவெளி முடியும் முன் மந்திர உச்சாடனையை மீண்டும் தொடர வேண்டும். கொடுக்கப்பட்டு இருந்த கால அவகாசம் முடிந்து மீண்டும் மந்திர ஜெபத்தை தொடரும் முன் அதுவரை இல்லாத புதிய ஜீவன் அவதரித்து விட்டால் அவனை அந்த ஜீவனால் கொன்று விட முடியும். வரத்தின் முக்கிய அங்கமாக அதன் விதி இப்படியாக இருந்தது. தலைக்கு மேல் கர்வம் கொண்டு இருந்த அருணாசுரனோ தன் அரண்மனையில் அரண்மனை காவலை மீறி தைரியமாக யாராலும் நுழைய முடியாது. ஆகவே தன்னை யாராலும் கொல்ல முடியாது என்ற இறுமாப்பில் கவலை இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருந்தான்.
அப்படிப்பட்ட அழியா வரம் பெற்றுக் கொண்டவன் கர்வம் கொண்டு தேவலோகத்துக்கு சென்று அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தப் பின் அங்கேயே ஒரு இடத்தில் அரண்மனையையும் அமைத்துக் கொண்டான். அவனிடம் அகப்பட்டுக் கொண்ட தேவலோகவாசிகளை தனது ஏவலாளிகளாக வைத்துக் கொண்டான். வருண பகவானும் அங்கிருந்து துரத்தப்பட்டு விட்டதினால் அவரால் அவரது கடமையை செய்ய முடியவில்லை. மழை இன்றி பூமி வறண்டு போனது. பயிர்கள் வாடின. உலகெங்கும் உணவுப் பஞ்சம் தோன்றியது. மக்கள் பசியாலும் தாகத்தினால் உயிர் இழக்கத் துவங்க பூமியே சுடுகாடு போலாயிற்று. ஆனால் தேவ லோகத்திலோ தன்னைக் கொல்ல யாரும் இல்லை என்ற தைரியத்தில் அருணாசுரன் ஆனந்தமாக வாழலானான். அவன் அட்டகாசமும் அதிகரித்தது. அதனால் பெரும் துன்பத்துக்கு ஆளான தேவர்கள் பகவான் சிவபெருமானிடம் சென்று தமது துன்பங்களை கூறி அவனை அழிக்க அவரது உதவியை கேட்டார்கள்.
அதே சமயத்தில் ஒரு அடர்ந்த காட்டில் அமைதியாக தவம் செய்து கொண்டு இருந்த ஜபாலி மனிவர் உலகில் அருணாசுராவினால் ஏற்பட்டு இருந்த பஞ்சக் காட்சியைக் கண்டு மனம் வருந்தினார். உலகை இப்படிப்பட்ட கோரத்தில் இருந்து காக்க வேண்டும். அவர்களுடைய பஞ்சத்தைப் போக்கவும், குடிக்கவும் தண்ணீர் எப்படி கொண்டு வர முடியும் என யோசிக்கலானார். அதற்கு ஒரே வழி தெய்வத்தை வேண்டிக் கொண்டு யாகம் செய்வதுதான். ஆனால் அந்த யாகத்தை செய்வதற்கு வேண்டிய தண்ணீர் மற்றும் பிற யாகப் பொருட்கள் இல்லாத நிலையில் யாகத்திற்குத் தேவையான அவற்றை எங்கிருந்து கொண்டு வருவது? யோசனை செய்தவர் நேராக இந்திர லோகம் சென்றார். அங்கு அருணாசுராவின் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டு இருந்த பகவான் இந்திரனிடம் நிலைமையை எடுத்துக் கூறி மக்களை காப்பாற்ற யாகம் செய்ய நினைக்கும் தனக்கு அனைத்தையும் தரும் தெய்வீக பசுவான காமதேனுவை சிறிது நாட்கள் தந்து யாகத்திற்கு உதவுமாறு அவரிடம் கேட்டார். அந்த நேரத்தில் தெய்வீக பசுவான காமதேனுமற்றொரு யாகத்திற்காக வேறு ஒரு லோகத்திற்குச் சென்று இருந்ததினால் அவளைப் போன்றே சக்தி கொண்டு இருந்த தெய்வீக பசுகாமதேனுவின் மகளான தெய்வீகப் பசுநந்தினியை அழைத்துச் செல்ல இந்திரன் அனுமதி கொடுத்தார். ஜபாலி முனிவரும் மனம் மகிழ்ந்து தெய்வீக பசுவான நந்தினியிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறி தன்னுடன் பூமிக்கு வந்து உதவுமாறு வேண்டினார். ஆனால் தெய்வீகப் பசு நந்தினி ஆணவம் கொண்டு பாபிகள் நிறைந்த பூலோகத்திற்கு தன்னால் வர முடியாது எனக் கூறிவிட்டு அவருடன் பூலோகத்திற்கு செல்ல மறுத்து விட்டது.
எத்தனை வேண்டுகோள் விடுத்தும் தெய்வீகப் பசுவான நந்தினி அவருடன் செல்ல மறுத்து விட்டதினால் கோபம் கொண்டார் ஜபாலி முனிவர். மக்களின் துயரத்திற்கு உதவி செய்ய முன்வராத அவள் ஒரு நதியாக மாறி அந்த பூமியிலேயே சென்று பிறக்க வேண்டும் என்று சாபமிட்டார். அவருடைய சாபத்தைக் கண்ட நந்தினி கலக்கமுற்று தேவி பார்வதியிடம் சென்று ஜாபாலி முனிவர் தனக்கு சாபமிட்ட கதையைக் கூறி, அந்த சாபத்தை முனிவர் திரும்ப பெற மறுத்து விட்டதினால் தனக்கு சாப விமோசனம் தருமாறு அவளிடம் வேண்டியது. ஆனால் முனிவர்கள் ஒரு முறை சாபம் தந்து விட்டால் அதைத் திரும்பப் பெற முடியாது. சாபத்தின் தன்மையை சற்றே மாற்றி அமைக்க மட்டுமே முடியும் என்பதை எடுத்துக் காட்டிய தேவி பார்வதி, தெய்வீகப் பசு நந்தினியை பூமியில் சென்று நதியாகப் பிறக்குமாறும், அதன் பின் கனககிரி எனும் இடத்தில் ஓடும் அவள் நதியில் ஒரு காலத்தில் தானே வந்து எழுந்து அவளுக்கு சாப விமோசனம் தருவேன் எனவும் ஆறுதல் கூறி அனுப்பினாள். அதைக் கேட்ட தெய்வீகப் பசு நந்தினியும் கனககிரியில் பெரிய நதியாக ஓட, பூமியிலே தண்ணீர் பஞ்சம் அழிந்தது. விளை நிலங்களில் பயிர்கள் பெருமளவு வளர்ந்து உணவுப் பொருட்களும் பெருகி தண்ணீர் பஞ்சம் மற்றும் பட்டினியும் பசியும் அழிந்தன. முனிவரும் யாகத்தை சிறப்பாக செய்து மக்களின் துன்பம் விலக வழி செய்தார்.
நடந்தவற்றைக் கேட்டறிந்த அருணாசுரன் கோபமுற்று பூமிக்கு சென்று அங்கிருந்த அனைத்தையும் அழிக்கத் துவங்கினான். அவற்றைக் கண்ட திருமூர்த்திகள் இனியும் உலகை அழிவில் இருந்து பாதுகாக்காமல் இருக்கக் கூடாது என எண்ணினார்கள். அருணாசுரனை உயிரோடு வைத்திருக்கக் கூடாது. அசுரன் அழியும் நேரம் வந்துவிட்டது. அவனை அழிக்க தேவி பார்வதி புதிய அவதாரம் எடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டு பார்வதியை புதிய அவதாரம் எடுத்து அருணாசுரனை அழிக்குமாறு வேண்டுகோள் இட்டார்கள். ஆனால் காயத்ரி மந்திரம் ஓதுவதை நிறுத்தும்வரை அருணாசுரனை யாராலும் அழிக்க முடியாது என்பதினால் முதலில் பகவான் பிரஹஸ்பதியை அனுப்பி அவர் மூலம் எதையாவது செய்து அவன் மந்திர உச்சாடனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நேரத்தில் பார்வதி தேவி அதுவரை யாரும் எடுத்து இருக்காத அவதாரம் எடுத்து அருணாசுரனை அழிக்க வேண்டும் என்ற திட்டம் செய்தார்கள்.
அதன்படி பகவான் பிரஹஸ்பதி அருணாசுரனிடம் சென்று மெல்ல மெல்ல அவனை புகழ்ந்து பேசிக் கொண்டே அவனை அங்கிருந்த அரண்மனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அங்கு அவனிடம் கூறினார் ‘அருணாசுரா, தேவலோகம் முதல் பூலோகம் வரை அனைவரும் உம்மிடம் அடிமையாகி கிடக்கையில் எதற்காக இனியும் காயத்ரி மந்திரத்தை ஓதிக்கொண்டு பயந்தவாறு நீ இருக்க வேண்டும்? நீயோ அழிவில்லாதவன். ஆகவே உலகின் இன்பங்களை ரசித்துக் கொண்டு சுற்றித் திரிவதுதானே’ என அவனது மனதை உசுப்பி விட, தன்னை அவர் திசை திருப்புகிறார் என்பதை உணராமல் ஆனந்தமாக எக்காளமிட்டபடி மந்திரம் ஓதுவதை மறந்து போனான். தோட்டத்தில் ஓடியாடிக் கொண்டு இருந்த பெண்கள் மீது மையல் கொண்டு உல்லாசமாக ஓடியாடித் திரியலானான்.
அதுவே சரியான திருமணம் என்பதை கண்ட பார்வதி தேவி தன்னை ஒரு பேரழகியான பெண்ணாக மாற்றிக் கொண்டு அந்த தோட்டத்தில் சென்று அருணாசுரனின் கண்களில் தெரியுமாறு ஓடியாடத் துவங்க, அவளது அழகில் ஒருகணம் தன்னை மறந்த அருணாசுரன் அவளை பிடிக்க ஓடினான். பார்வதி தேவியும் அருகில் இருந்த மலைப் பகுதிவரை ஓடினாள். தன்னை துரத்திக் கொண்டு தன்னருகில் அவன் வரும் வகையில் ஓடிவிட்டு அங்கிருந்த ஒரு குகையில் இருந்த பெரும் தேனிக் கூட்டில் ஒரு தேனியாக தன்னை மாற்றிக் கொண்டு மறைந்து கொண்டாள். அதை அறிந்திடாத அசுரனும் அவளை துரத்திக் கொண்டு குகைக்குள் நுழைய முயல தமது கூட்டை கலைக்க வந்தவன் என நினைத்த தேனீக்கள் ஆக்ரோஷமாக அவனை நோக்கி பறந்து வந்து தாக்கத் துவங்க, அவற்றின் இடையே தேனி வடிவில் இருந்த பார்வதி தேவி ஆவேசமாக அவனை கொட்டித் தீர்த்தாள். தன்னை மறந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள முயன்ற அருணாசுரன் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க மறந்தான், தேனீயின் விஷக்கடியைத் தாங்காமல் மரணம் அடைந்து விழுந்தான்.
ஆலயம் எழுந்த கதை
அருணாசுரன் மரணம் அடைந்த பின்னரும் தேவியின் கோபம் அடங்கவில்லை. ஆவேசமாக சுற்றி அங்கு சென்றவர்களை தாக்கினாள். ஆகவே அவளை சாந்தப்படுத்த அனைத்து தேவர்களின் உதவியுடன் ஜாபாலி முனிவர் ஒரு யாகம் செய்து தேவியின் உருவை வடிவமைத்து அதன் மீது இளநீர் ஊற்றி பிரார்த்தனை செய்ய தேவியின் கோபமும் அடங்கியது. அவள் தன்னை ஒரு சிவலிங்க உருவில் மாற்றிக் கொண்டு அங்கு ஓடிய நந்தினி நதியில் சென்று மறைந்து கொண்டாள். தேவியும் நதியில் மறைந்துக் கொள்ள நந்தினிப் பசுவின் சாபமும் நீங்கியது. அந்த தெய்வப் பசு தேவலோகத்துக்கு சென்று விட, அந்த நதியின் கரையில் தேவியின் ஆலயமும் கடீல் துர்காதேவி ஆலயம் என்ற பெயரில் அமைந்தது.
‘கட்டி’ என்றால் இடுப்புப் பகுதி, ‘லா’ என்றால் பூமி என்பதினால் தன்னுடைய மேல் பகுதியை சிவலிங்கமாக மாற்றிக் கொண்டு அந்த நதியில் தேவி மூழ்கி மறைந்ததினால் அந்த ஆலயத்தின் பெயரை கட்டீலா என அழைக்க நாளடைவில் அது கடீல் எனும் பெயரை அடைந்தது. அந்த ஆலயத்தில் உள்ள துர்கா தேவி உலகைக் காத்தருளியவாறு அங்கு சென்று அவளை வழிபடும் பக்தர்களின் குறைகளையும் களைகின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.