அவர் மேலும் தொடர்ந்து கூறிய பிற விவரங்கள் :-
”கால பைரவரின் பிரதான எட்டு பைரவர்களையும், அவர்களை வணங்கித் துதித்த ரிஷி முனிவர்களையும் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் மூல சன்னதியின் கீழ் சன்னதியில் வைத்து உள்ளார்கள். இந்த ஆலயத்தில் அவர்களையும் பிரதர்ஷணமாக வலம் வந்து வணங்க வேண்டும். அது போலவே தேவிக்கு யுத்த கன்னிகைகளாக இருந்த அஷ்ட கன்னிகைகளும் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள். அது மட்டும் அல்ல இந்த ஆலயத்தின் சன்னதி சிவபெருமானின் ஹிமயமலையின் சூழ்நிலையை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக வாயிலில் மலையின் மீது ஓடும் நதியுடன் கூடிய சிலைகளையும் மந்திரங்களை ஓதி பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். மண்டபத்தின் உட்புற மேல் கூறையில் மின் மினுக்கும் நட்ஷத்திரங்களை காட்டும் வகையில் அமைப்பு உள்ளது. இந்த அமைப்புக்கள் அனைத்துமே பைரவ சித்தாந்த ஸ்வாமிக்கு ஸ்ரீ மஹா ஷேத்திர பால பைரவரே நேரில் கூறியவை ஆகும். ஆகவேதான் இந்த ஆலயத்தை கட்டிடக் கலைஞர்களின் மாதிரிப் படங்களை கொண்டு வடிவமைக்காமல் நேரடியாக ஷேத்திர பால பைரவரே குறிப்பிட்டதைப் போல நிர்மாணித்து உள்ளார்கள்.
ஆலயம் கட்டத் துவங்கியதும் அவர்கள் ஒரு விஷயத்தில் பயந்தார்கள். இது வனப்பிரதேசமாக உள்ளதே. ஹனுமானின் தூதர்களான குரங்குகள் தொல்லை வேறு உள்ளதே. அவை அங்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே, என்ன செய்வது? ஆனால் பைரவரே அதற்கான விடையையும் பைரவ சித்தாந்த ஸ்வாமிகளுக்கு தந்தார். அது என்ன என்றால் ஆலயத்திற்கு நேர் எதிரில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேய ஈஸ்வரர் சன்னதியை அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டை உடனே துவக்கினார்கள். ஹனுமானுக்கு எந்த இடத்தில் சன்னதியை அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக பைரவரின் உத்தரவுக்கு இணங்க ஒரு குறிப்பிட்ட இடத்தை பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் தேர்வு செய்து அங்கு முதலில் ஏழரை அடி நீளத்தில் பள்ளம் தோண்டுமாறு கூறினார்.
பள்ளம் தோண்டத் துவங்கியதுமே பத்தடி ஆழத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் புதைந்து கிடந்ததைக் கண்டார்கள். ஒரு ஆலயத்தில் நுழைந்ததுமே எப்படி சன்னதியில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு இருக்குமோ அதைப் போலவே அந்த சிவலிங்கம் அங்கு புதைந்து கிடந்தது. ஆகவே அந்த இடமே ஹனுமானின் சிலையை பிரதிஷ்டை செய்ய பைரவர் அனுமதித்துள்ள இடம் என அறியப்பட்டது. பைரவரின் உத்தரவின்படி அந்த சிலை வெளியில் எடுக்கப்படாமல் அதன் நெற்றிப் பகுதிவரை சுத்தம் செய்யப்பட்டு அதற்கு பூஜைகளை செய்து வழிபட்டப் பின் அந்த பள்ளமும் மூடப்பட்டது.
அதன் காரணம் என்ன என்றால் ஹனுமானை சிவபெருமானின் அம்சம் என்பார்கள். சிவபெருமானே ஹனுமானாக அவதரித்தவர் என்று புராணங்களில் செய்திகள் உள்ளன. ஆகவே சிவபெருமான் எந்த இடத்தில் ஹனுமானாக தான் அமர வேண்டும் என்பதை விரும்பினாரோ அந்த இடத்தை இப்படியாக சிவபெருமான் வெளிப்படுத்திக் காட்டி உள்ளார் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பைரவரின் ஆணைக்கேற்ப அந்த இடத்திலேயே புதைந்து இருந்த சிவலிங்கத்தை வெளியில் எடுக்காமல் கட்டிடம் எழுப்பப்பட்டு புதைந்து கிடந்த சிவலிங்கம் இருந்த இடத்தின் மேலேயே பஞ்சமுக ஹனுமானின் சிலை செய்யப்பட்டு அவரை வணங்கித் துதிக்க தனி சன்னதி அமைக்கப்பட்டது. அந்த பஞ்சமுக ஹனுமாரை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சனேய ஈஸ்வரர் என்கின்றார்கள். அந்த சன்னதி அமைக்கப்பட்டது முதல் குரங்குகள் தொல்லை இங்கு இல்லையாம்.
அவற்றைத் தவிர வெளியில் நாக ருத்ர ஈஸ்வரர் சன்னதியும் வன துர்க்கை அம்மன் சன்னதிகளும் ஒன்றுடன் ஒன்று தள்ளித் தள்ளி அமைந்துள்ளன. சன்னதியின் வெளிப்பிராகாரத்தின் சுவற்றில் தன்வந்தரி, குபேரர் மற்றும் பிரும்மாவிற்கும் தனித் தனி சுவர் சன்னதிகள் அமைந்துள்ளன.
ஆலயத்தின் வெளியில் சப்த கன்னிகைகளுக்கும் ஆலய தல மரத்துக்கும் தனித் தனியாக சன்னதிகள் அமைந்து உள்ளன.
அஷ்ட பைரவர்களைக் குறித்து புராணங்களில் காணப்படும் விவரத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முன் ஒரு காலத்தில் அந்தகாசுரன் எனும் கொடிய அசுரன் சிவபெருமானிடம் இருந்து பெற்று இருந்த வரத்தினால் தேவலோகம் மற்றும் பூலோகங்களில் இருந்த அனைவரையும் வதைத்து வந்தான். அவன் பெற்று இருந்த பெரும் சக்தியினால் உலகையே இருளில் மூழ்கடித்தான். பிரபஞ்சத்தின் எட்டு திசைகளும் இருளில் மூழ்கின. தேவர்களாலும், ரிஷி மற்றும் முனிவர்களாலும் அவனை அழிக்க முடியவில்லை, இருள் சூழ்ந்த உலகில் எப்படி வாழ்வது எனத் தெரியாமல் தவித்த அவர்கள் தம்மைக் காக்குமாறு சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பிரும்மாவின் அகங்காரத்தை அழிக்க எப்படி கால பைரவரை உருவாக்கினாரோ அது போலவே காலபைரவரிடம் இருந்தே கால அக்னி எனும் பைரவரை படைத்தார்.
அந்த கால அக்னி பைரவரை தவிர எட்டு திசைகளிலும் படர்ந்திருந்த இருளைப் போக்க எட்டு பைரவர்களையும், எட்டு திசைகளிலும் (8) இருந்த அந்த பைரவர்களை சுற்றி இருந்த நான்கு திசைகளிலும் பணி செய்திட ஒவ்வொரு திசைக்கும் நான்கு பைரவர்கள் (4) என அறுபத்தி நான்கு (64) பைரவர்களையும் படைத்தார். இப்படியாக கால பைரவர் அவதாரத்தில் இருந்து எழுபத்தி இரண்டு (72) பைரவ கணங்கள் அவதரித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவருமே கால பைரவரின் அவதார தெய்வ கணங்களே என்பதினால் இந்த ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் ஆலயத்தில் அந்த பைரவ அவதாரங்கள் யார் யார் எனக் காட்ட அவர்களை பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.
பைரவர் ஆலய அமைப்பு எப்படி உள்ளது? வட்ட வடிவிலான பிரகாரத்தை சுற்றி வந்தால், சன்னதிக்கு செல்லும் ஆலயத்தின் நுழை வாயிலில் வெளியே இரண்டு துவார பாலகர்களும், பைரவரின் வாகனங்களான நாய்களும் காணப்படுகின்றன. அந்த மூன்று நாய்களில் ஒன்று படுத்துள்ள நிலையிலும், மற்ற இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டு உள்ள நிலையிலும் உள்ளன. அவற்றை வலம் வந்தே பைரவர் சன்னதியை அடைய முடியும் எனும் வகையில் அவற்றை பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.
ராசிப் படிகளில் மேலே ஏறிச் சென்றால் இரண்டாவது சன்னதியான கால பைரவர் சன்னதி உள்ளது. படிகளின் கைபிடிகளில் ருத்ராக்ஷ மாலைகள் போடப்பட்டு உள்ளன. அந்த ருத்ராக்ஷங்கள் நம் உடலில் ஒட்டிக் கொண்டு நம்மை தொடரும் தீய கணங்களை அழிக்கும். ஒன்றுக்குள் ஒன்றாக மேலும் கீழுமாக உள்ள சன்னதியின் மேல் சன்னதியில் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் நின்ற நிலையில் அற்புதமாக காட்சி தருகிறார். அந்த சன்னதியின் சுவர்கள் கண்ணாடிக் கூட்டினால் கட்டப்பட்டு உள்ளன. ருத்ர பால பைரவரை வணங்கி நமது வேண்டுதலை கூறி அர்ச்சனை செய்தப் பின் நம் மனதுக்கு தோன்றிய அளவிற்கு அந்த சன்னதியை பிரதர்ஷணம் செய்து விட்டு கீழிறங்கி வர வேண்டும். கீழ் சன்னதியில் பைரவரின் அஷ்ட அவதாரங்களைக் கொண்ட சுவர் சன்னதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு அவதாரத்துக்கும் எதிரில் அவரை துதித்த ரிஷிகளை ஒரு பாறையின் வடிவில் வைத்திருக்க அவற்றின் முன்னால் அஷ்ட தேவதைகளையும் விளக்கு ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வைத்து உள்ளார்கள். அந்த சன்னதியையும் மனதுக்கு தோன்றும் அளவில் பிரதர்ஷணம் செய்து விட்டு வர வேண்டும்.