நமக்கெல்லாம் தெரியாத ஆலய செய்திகள் /விவரங்கள் 
பீமாநாகரி அம்மன்
அல்லது 
பாலபரமேஸ்வரி ஆலயம்
சாந்திப்பிரியா
 
நான் சமீபத்தில் ஒரு நண்பர் மூலம்  நாகர்கோவிலுக்கு  அருகில் உள்ள ஒரு ஆலயத்தைப் பற்றிய  சுவையான கதையைக்  கேள்விப்பட்டேன். அந்த செய்தியின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டதே  இந்த கட்டுரை.  
 
நாகர்கோவில் திருநெல்வேலி நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து நான்கு கிலோ தொலைவில் உள்ளதே பீமாநாகரி என்ற சிறிய கிராமம். நாகர்கோவிலில் இருந்து அந்த கிராமத்துக்கு எளிதில் செல்ல முடியுமாம். அந்த கிராமத்தின் உள்ளே, வயல்வெளிகள் சூழ்ந்த பகுதியில் ஒரு அக்கிரஹாரத்தில் உள்ளதே பால பரமேஸ்வரி ஆலயம். அந்த அம்மனை கோமதி அம்மனின் அவதாரம் என்கிறார்கள். கோமதி அம்மன் பார்வதியின் அவதாரம். அந்த ஆலயம் வந்த கதை சுவையானது.
சுமார் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் களக்காடு என்ற ஊரில் ஒரு வைதீக பிராமணக்  குடும்பம் வாழ்ந்து வந்தது. விவசாயம் அவர்கள் தொழில். அவர்கள் கோமதி அம்மனை குல தெய்வமாக வணங்கி வந்தனராம். அப்போது அனைத்து இடங்களிலும் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமே இருந்தது. நாளடைவில் ஆங்கிலேயரின் அரசாங்கம்  அவர்கள் அனைவருக்கும் தொல்லை தரத் துவங்கினார்கள். அளவுக்கு மேல் வரி விதித்தனர். ஆகவே அவர்கள் அங்கிருந்து வேறு எங்காவது போய்விட முடிவு செய்தனர். அப்போது ஒரு நாள் கோமதி அம்மன் ஒரு சிறுமி வடிவில் ஒருவரின் கனவில் தோன்றி அவர்களை அந்த இடத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சென்று கொண்டே இருக்குமாறும் அவர்களுக்கு எந்த இடத்தில் ஒரு இலுப்பை மரத்தடியில் இரண்டு மஞ்சளும், செவ்வரளியும் கிடைக்கின்றதோ அங்கேயே தங்குமாறு கூறினாள்.
அந்த அம்மன் கூறியது போலவே அவர்களும் கிழக்கு நோக்கி பயணமானார்கள். பீமானாகரி என்ற இடத்தில் அவர்கள் இல்லுப்பை மரத்தடியில் இரண்டு மஞ்சளையும் செவ்வரளிப் பூவையும் கண்டு அங்கேயே தங்கினார்கள். அது முதல் அவர்கள்  அங்கேயே தங்கி தமது குல தெய்வமான கோமதி அம்மனை வழிபடத் துவங்கினார்கள். அவர்களுக்கு மீண்டும் வந்த கனவின்படி கோமதி அம்மன் எட்டு வயது சிறுமி தோற்றத்தில்  இருப்பேன் எனவும், தன்னை பாதுகாக்க தனது சகோதரர் ஆதி கேசவரையும் துணைக்கு வைத்து இருப்பேன் எனக் கூறினாள். ஆகவே அந்த ஆலயத்துக்கு ஆதி கேசவ பால பரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டது. பீமா நாகரி பிராமணர்கள் வசிக்கும் அக்கிரஹாரமாக மாறியது.
முதலில் பல காலமாக மஞ்சளையும் வீபுதியையுமே ஒரு பாத்திரத்தில் வைத்து அதையே பால பரமேஸ்வரி சமேத அதி கேசவராக தம்முடைய இல்லத்தில் சமையல் அறையில் வைத்து அதையே ஆலயமாகக் கருதி வணங்கியவர்கள் பின்னர் அம்மனை அடையாளம் காட்டுவதற்காக ஆலயமாக அதை அமைத்து ஒரு அம்மனின் முகத்தை வெள்ளியில் செய்து வைத்தனர். பின்னர் ஆலயத்தின் எதிரில் அன்றைய  திருவாங்கூர் திவான் ஒரு குளத்தை ஆலயத்துக்காக அமைத்துக் கொடுத்தாராம். முதலில் அந்த ஆலயத்தை நிறுவியவர்களின் வம்சாவளியினரே என்று அதை  இன்றும் தொடர்ந்து பராமரித்து  பூஜைகள் செய்து வருகிறார்களாம். அந்த வம்சாவளியில் பிறக்கும் ஒவ்வொருவரது குடும்பத்திலும் ஒருவருக்காவது பார்வதி என்ற அடைமொழிப் பெயர் வைக்கப்படுமாம்.  ஆலயத்தில்  நவராத்தரி விழாவை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்களாம்  .