தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத செய்திகள் -16

குஜராத் மற்றும்

உஜ்ஜயினில் 

ஹர்சித்தி அல்லது

ஹர்ஷா மாதா ஆலயம்

சாந்திப்பிரியா 

முன்னொரு களத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தட்ஷா யாகத்தின்போது தற்கொலை செய்து கொள்ள அவளை தூக்கிக் கொண்டு அனைத்து இடங்களிலும் சென்ற சிவபெருமானின் தோளில் இருந்தவளை விஷ்ணு துண்டு துண்டமாக வெட்டித் தள்ளி சிவனின் கோபத்தை அழித்தாராம். அப்போது அவள் உடல் விழுந்த இடங்களில் எல்லாம் ஒரு சக்தி ஆலயம் எழுந்ததாம். அதில் அவளுடைய முட்டி எலும்பு விழுந்த இடமே உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதா ஆலயம் ஆயிற்றாம். இரண்டு ஆலயங்களுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாம்.

இன்னொரு கதை என்ன எனில் சாந்த் மற்றும் பிரசாந்த் என்ற இரு அசுரர்கள் தேவலோகத்தில் அட்டகாசம் செய்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தியபடி இருந்தனர். சிவனும் பார்வதியும் தாயக்கட்டை ஆடிக்கொண்டு இருந்த இடத்துக்குப் போய் அவர்களையும் தொந்தரவு செய்ய அவனுக்கு தானே கொடுத்த வரத்தினால் அவளை அடக்க முடியாமல் போன சிவன் பார்வதியிடம் அவனை அழிக்குமாறு வேண்டிக்கொள்ள அவள் விஷ்ணுவும் காளியும் சேர்ந்த உருவை எடுத்து அவர்களை அழிக்க, அவள் அனைத்து தீமைகளை அழிக்கும் சக்தி வாய்ந்த தேவி ( ஹர்சித்தி) என்ற பெயர் பெற்று உஜ்ஜயினியில் ஹர்சித்தி மாதாவாக அமர்ந்தாளாம்.அப்படிப்பட்ட அவள் குஜராத்திலும் ஒரு ஆலயத்தில் ஹர்ஷ  மாதாவாக உள்ளாள். குஜராத்தில் போர்பந்தர் அருகில் உள்ள காலா என்ற மலையில் உள்ள அந்த ஆலயத்துக்கு ஜாம் நகரில் இருந்து செல்லலாம். ஆலயத்துக்கு செல்ல 2000 படிகளை ஏற வேண்டும்.

 உஜ்ஜயினியில் ஹர்சித்தி அம்மன், ஆலயம்

அங்கு அவளுடைய ஆலயம் வந்த கதை என்ன எனில் அந்த ஆலயம் உள்ள இடத்தில் முன்னர் ஒரு சிறு கல்லையே ஒரு சக்தியாக வணங்கி வந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி தினமும் அங்கு சென்று தன் ஆடு மாடுகளை மேய்த்துவிட்டு அந்த தேவியை (கல்லை) வணங்கிவிட்டு வருவாராம். ஒரு முறை மழை இல்லை. பயிர்கள் வாடின. மக்கள் பஞ்சத்தினால் மடிந்தனர். அந்த கிராமவாசி தேவியிடம் சென்று தம்மை அவள் ஏன் காப்பாற்றக் கூடாது என தனக்குத் தானே கேட்டுக் கொண்டானாம். அப்போது ஒரு ஆசிரி கூறியதாம் ‘ எனக்கு ஒவ்வொரு படியிலும் ஒன்றாக, 2000 பலி தந்தால் அனைத்தும் சரியாகிவிடும்’. அதைக் கேட்டவன் என்ன செய்வது என புரியாமல் முழித்தான். அடுத்த நாள் முதல் தன்னிடம் இருந்த ஆடுகள், மாடுகள், மற்ற பறவைகள், வழியில் கிடைத்த பிராணிகள், சிறு மிருகங்கள் என தினமும் ஒரு பலி தந்தான். கடைசியாக தன்னுடைய மனைவி, குடும்பத்தையும் பலி தந்த பின் கடைசி படிக்கு தன்னையே பலி தந்தான். அவ்வளவுதான், அடுத்தகணம் அந்த தேவி அங்கு தோன்றி ஒவ்வொரு படியாக இறங்கத் துவங்க இறந்து கிடந்த அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். அங்கு அவளுக்கு ஆலயம் எழுந்தது.

 குஜராத்தில் உள்ள ஹர்ஷா மாதா ஆலய தேவி 

இன்னொரு கதை என்ன எனில் அந்த ஆலயம் இருந்த இடத்தில் ஒரு அரசன் இருந்தான். ஒரு முறை நவராத்திரி பண்டிகையின்போது அவன் தன் ஏழு மனைவிகளுடனும் அங்கு நடனம் (கர்பா) ஆடிக்கொண்டு இருந்தான். அப்போது அந்த மலையில் இருந்த ஜகதாம்பா தேவியும் மறு உருவில் வந்து அதில் கலந்து கொள்ள அவள் அழகில் மயங்கிய அரசன் அவளை பின் தொடர்ந்து செல்ல கோபம் அடைந்த அவள் அவனை தான் தினமும் அந்த இடத்தில் வரவழைத்து வறுத்துத் தின்பேன் எனக் கூறினாள். அதைக் கேட்டவன் அவளிடம் மன்னிப்புக் கேட்க அவளும் அவனை வரவழைத்து வறுத்து சிறிது சதையை தின்றுடன் மீண்டும் உயிர் தருவேன் என உறுதி கூறினாள். அதற்கேற்ப தினமும் அவன் அந்த மலைக்கு செல்ல வேண்டியதாயிற்று. அவள் அவனை கதறக் கதற வறுத்து சிறிது சதையை தின்றதும் உயிர் பிழைக்க வைத்து அனுப்புவாள். அதனால் அவன் உடல் நலம் குன்றியது. அதைக் கேட்ட அவன் உறவினரான விக்ரமாதித்ய மன்னன் உஜ்ஜயினியில் இருந்து வந்தான். அங்கு வந்து அவளை துதித்து இரண்டு வரங்களைப் பெற்றான். அதன்படி அவள் விக்ரமாதித்ய மன்னனுடன் உஜ்ஜயினிக்கு சென்று சிலகாலம் தங்குவாள். ஆனால் அவன் அவன் பின்னால் நடக்கும் தன்னை திரும்பிப் பார்த்து விட்டால் எந்த இடத்தில் அவன் பார்த்தானோ அங்கேயே தங்கி விடுவாள். அவன் அங்கு அவளுக்கு ஆலயம் எழுப்பி வழிபட வேண்டும். அது போலவே உஜ்ஜயினி சென்றதும் மன்னன் அவளை திருபிப் பார்க்க அவள் அங்கேயே தங்கிவிட அவளுக்கு ஹர்சித்தி ஆலயத்தை அங்கு அமைத்தான்.

ஹர்சித்தி ஆலயங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை மந்திர தந்திர சக்திகளை உள் அடக்கி கட்டப்பட்டு உள்ளன. ஆகவே அங்கு சென்று முறைப்படி வேண்டிகொண்டால் நினைத்த காரியங்கள் நடை பெறுமாம். ஆகவேதான் உஜ்ஜயினி மற்றும் குஜராத்தில்உள்ள ஹர்ஷா மாதா அல்லது ஹர்சித்தி மாதாவின் ஆலயங்கள் புகழ் பெற்று விளங்குகின்றன.