காஷ்மீரத்தில் ஜம்மூவில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சந்தானி என்ற ஊரில் உள்ள மலையில் சுத் மகாதேவ் என்ற சிவ பெருமான் ஆலயம் உள்ளதாம். பட்னிடோப் என்ற மழைப் பகுதியில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு மேல் மலை உச்சியில் உள்ள பதினாறு அல்லது பதினைந்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கூறப்படும் அந்த ஆலயம் குறித்து கூறப்படும் சுவையான கதை இது.
ஆலயம் சுமார் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது அந்த இடத்தில் சுத் என்ற அசுரனும் வாழ்ந்து வந்தானாம். அவன் சிவ பக்தன். அவரிடம் இருந்து அறிய வரங்களைப் பெற்றவன். மாபெரும் உடலைப் பெற்றவன். அவன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அந்த நேரத்தில் ஒரு சமயம் சிவபெருமான் அந்த மலையில் தவத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அவனால் பாதிக்கப்பட்ட தேவர்கள் வந்து சிவபெருமானிடம் அந்த அசுரன் செய்த கொடுமைகளைக் கூறி தம்மை அவன் கொடுமைகளில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள். ஆகவே கோபம் அடைந்த சிவன் தனது கையில் இருந்த திரிசூலத்தை அவன் வந்து கொண்டு இருந்த திசையை நோக்கி எரிய அது அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்றது. அவன் உடலில் புகுந்த அந்த திரிசூலம் பாதாளம்வரை பாய்ந்து நின்றதாம். சுமார் அரை அடி அகலமான அந்த சூலம் இன்றும் அந்த இடத்தில் பூமிக்கு மேலே ஆறு அடி உயரத்தில் தெரியுமாறு பூமியில் புதைந்து உள்ளதாம். அந்த இடத்தில் சிறிய ஆலயம் அமைத்து சிவனை வழிபட்டு வந்தனர். என்ன இருந்தாலும் தன் உண்மையான பக்தனாக இருந்தவன் என்பதினால் சுத்திற்கு அருள் பாலிக்க சிவ பெருமான் அந்தஆலயத்தில் தன் பெயரை சுத் மகாதேவ் என வைக்குமாறு கூறினாராம்.
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு ஆலயம் உள்ள பகுதியையும் உள்ளடக்கிய சநேனி என்ற நாட்டை (அன்றைய பஞ்சாப் மாநிலம்) ஆண்டு வந்த ராம்சந்த் என்ற மன்னன் அந்தக் கதையைக் கேட்டான். அந்த கதை உண்மையானதுதானா, அது நடந்து இருக்குமா, அந்த சூலம் உண்மையிலேயே அத்தனை ஆழமாக புதைந்து உள்ளதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம் என எண்ணி அந்த சூலத்தை தோண்டி எடுக்குமாறு உத்தரவு இட்டான். ஆனால் தோண்டத் தோண்ட அதன் அடியே தெரியவில்லையாம். மூன்றாம் நாள் அந்த மன்னானின் கனவில் சிவபெருமான் தோன்றி மறுநாள் அந்த சூலத்தில் இருந்து ஒரு பகுதி உடைந்து விழும் எனவும், அதை எடுத்து ஒரு வாளாக செய்து கொண்டால் அது அவனுக்கு போர்களில் வெற்றித் தோல்விகளை முன் கூட்டியே ஜோதிடரைப் போலவே காட்டும் என்றார். அது மட்டும் அல்ல அந்த இடத்தில் ஒரு சிலை கிடைக்கும் எனவும், அதையும் எடுத்து தமக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
கனவில் வந்தது போலவே அடுத்த நாள் அந்த சூலத்தின் மேல் பகுதியில் இருந்து ஒரு துண்டு கீழே விழுந்தது. அங்கு பூமியை தோண்டிக் கொண்டு இருந்த ஒருவனுக்கு ஒரு சிலை கிடைத்தது. சூலத்தில் இருந்து விழுந்த துண்டை வாளாக மாற்றிக் கொண்டான் மன்னன். அந்த சிலையை அங்கேயே வைத்து சிவனுக்கு ஆலயம் அமைத்தார்.
ஆலயத்தில் நல்ல கருப்பு நிற கருங்கல்லில் சிவ லிங்கமும், இயற்கையாகவே இருந்த திரிசூலமும், பாண்டவ சகோதரர்களில் ஒருவரான பீமனின் கதை ஒன்றும் உள்ளதாம். ஆலயத்தின் அருகில் பார்வதி தங்கி இருந்த குகை ஒன்றும் உள்ளது. அந்த ஆலயத்தில் உள்ள குளத்தில் நிராடினால் அனைத்து பாபங்களும் விலகும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.