
திருநெல்வேலி மற்றும் பாளயம்கோட்டைக்கு இடையில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளதே கல்லிடைக்குறிச்சி என்ற சிறு கிராமம். கிராமம் சிறியது என்றாலும் அங்கு பல புராதானமான ஆலயங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஆலயம் லஷ்மி வராஹா ஆலயம். அங்குள்ள விஷ்ணு, வராஹா அவதாரத்தில் லஷ்மி தேவியை மடியில் அமர்த்தி வைத்தவாறு காட்சி தருகின்றார். ஆலயம் 1478 ஆம் ஆண்டை சேர்ந்தது என்கிறார்கள். ஆலய வரலாறு என்ன? அங்கு கூறப்படும் கதை இது.
அந்த புராணக் கதையின்படி இந்த ஆலயம் உள்ள இடத்தில் ஆட்சி செய்து கொண்டு இருந்தவர் கிருஷ்ண பகவானின் தேவலோகத்து பக்தர். அந்த தேவலோகத்து மன்னன் அடிக்கடி பல யாகங்களையும் வேள்விகளையும் செய்து வந்தானாம். அப்போது அவன் ஒரு முறை அஸ்வமேத யாகம் செய்தான். அந்த யாகத்தைப் பார்க்க சிவன், பிரும்மா மற்றும் குபேரன் போன்ற பலரும் வந்தனர். அவர்களைத் தவிர பல தேவர்களும் தேவேந்திரனுடன் வந்தனர். ஆனால் விஷ்ணு மட்டும் வரவில்லை. ஆகவே அந்த யாகத்தில் பங்கேற்ற ரிஷி முனிவர்கள் அந்தக் குறையைத் தீர்க்க அந்த இடத்தில் விஷ்ணுவும் வந்து தரிசனம் கொடுக்க வேண்டும் என வேண்டினர். அதை ஏற்றுக் கொண்ட விஷ்ணுவும் அங்கு அனைவர் முன்னாலும் வராக அவதார உருவில் தனது மனைவியான மகாலஷ்மியை மடியில் வைத்தவாறு தோன்றினார். அனைத்து தேவர்கள், முனிவர்கள், அங்கிருந்த கடவுட்கள் என அனைவரும் சிவனார் உட்பட அவர்களை வணங்கினார்கள்.

அதன் பின் மீண்டும் குபேரன் ஒரு சாப விமோசனத்துக்காக தாமரபரணி ஆற்றுப்பக்கம் அதே மன்னன் ஆட்சியில் அங்கு வந்தபோது வராக அவதார உருவில் விஷ்ணுவின் சிலையை அமைத்து வழிபட அந்த மன்னனும் அவர் விட்டுச் சென்ற சிலையை தொடர்ந்து வழிபட்டு வந்தானாம். காலப்போக்கில் மறைந்து விட்டிருந்த அந்த சிலையையே ஒரு பக்தர் தமது கனவில் தோன்றியபடி தாமிரபரணி ஆற்று கரையில் தேடி எடுத்து வந்து அந்த ஊர் மன்னன் மூலம் ஆலயம் அமைத்தாராம். முத்துசாமி தீக்ஷதர் என்ற புகழ் பெற்ற சங்கீத மேதை அந்த ஆலயம் வந்தபோது இயற்றிய பாடல் புகழ் பெற்றது.
இந்த ஆலயத்துக்கு திருமணத் தடை விலகவும், நல்ல மணம் அமையவும் வேண்டிக் கொண்டு வருகிறார்கள். இந்த ஆலயத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி என்ற இருவரும் தனித்தனி சன்னதியில் உள்ளனர். மேலும் இங்குதான் அதிக அளவு கருட சேவை விழாக்கள் நடைபெறுகின்றன.