சாந்திப்பிரியா
– 5 –
……..ஸ்ரீ பைத்யநாத் மகாதேவ் ஆலயம்
மார்டின் அனுப்பி இருந்த அந்த செய்தியில் ஒரு முறை ஆப்கான் ராணுவப் படையினரால் தான் நான்கு பக்கமும் சூழப்பட்டு தனது உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கையில் தலைமுடி தோள்வரை தொங்கிக் கொண்டு இருந்த ஒரு யோகி போன்ற தோற்றத்தில் எங்கிருந்தோ வந்தவர் யுத்தத்தின் நடுவில் வந்து ஆப்கான் நாட்டுப் படையினரை தனது சூலத்தால் மூர்கமாகத் தாக்கத் துவங்க அவரை எதிர்த்த பெரும் எண்ணிக்கையிலான ஆப்கான் படையினர் இறந்து விழ அதை சற்றும் எதிர்பாராத ஆப்கான் படையினர் வெலவெலத்து போய் உயிர் தப்ப முயன்று ஓடினார்கள் என்றும், ஆனால் அந்த யோகியை எவராலுமே நெருங்க முடியவில்லை எனவும், தப்பி ஓடத் துவங்கிய ஆப்கானியரை ஆங்கிலேயப் படையினர் துரத்திச் சென்று யுத்தத்தில் வெற்றி பெற்றார்கள் என்றும் கூறி இருந்தார். ஆனால் அதன் பின்னால் அந்த யோகியைக் காணவே முடியவில்லை என்றும், அவர் யார், எங்கிருந்து வந்து எதற்க்காக தன்னுடைய உயிரை காத்தார் என்று விளங்கவும் இல்லை எனக் கூறி இருந்தார். அன்று இரவு சிவபெருமான் மார்டினின் மனைவியின் கனவில் வந்து அவள் தன்னை வேண்டிக் கொண்டதினால் தான் யுத்தத்துக்குச் சென்று மார்டினின் உயிரைக் காத்ததாகக் கூறி விட்டு மறைந்தார்.
அவர் செய்தியில் விளக்கி இருந்த யோகியின் தோற்றம் மார்டினின் மனைவியின் கனவில் வந்த சிவபெருமானின் தோற்றத்தை போலவே இருந்ததாம். அந்த செய்தியைப் பெற்ற மார்டினின் மனைவி அந்த ஆலயத்துக்கு ஓடிப் போய் சிவனை கண்ணீர் பெருக வணங்கி துதித்தாளாம் . யுத்தம் முடிந்து ஆப்கானில் இருந்து அவளுடைய கணவர் திரும்பி வந்ததும் மார்டினின் மனைவி நடந்தது அனைத்தையும் அவருக்குக் கூற மார்ட்டினும் வியந்து போய் அந்த ஆலயத்துக்கு சென்று அங்கிருந்த சிவனை வணங்கித் துதித்தாராம். அது முதல் அவர்கள் இருவருமே சிவபக்தர்கள் ஆகி விட்டார்கள். தனது மனைவி ஆலய பண்டிதர்களிடம் கூறி இருந்தது போலவே அந்த ஆலயத்தை புதிதாகக் கட்ட மார்டின் பெரும் தொகையை கொடுத்து 1883 ஆம் ஆண்டு ஆலயத்தைக் கட்டி உள்ளார். இந்தக் கதை சிறு அளவில் ஆலயத்து சுவற்றில் ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஆங்கிலேயர் கட்டி உள்ள ஒரே ஒரு ஆலயம் இதுவாக உள்ளது என்பதும் வரலாற்றுச் செய்தி.
அதுபோலவே இன்னொரு மகிமையும் அங்கு நடந்துள்ளது. அந்த ஊரில் இருந்த ஒரு வக்கீல் ஒரு முறை தான் எடுத்துக் கொண்டு வாதாடிய வழக்கில் பல சிக்கல்கள் இருந்ததைக் கண்டார். அந்த வழக்கு அவருக்கு ஒரு பெரிய மானப் பிரச்சனையாக இருந்தது. ஆகவே அதில் எப்படி மேற்கொண்டு வாதாடுவது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தவர் வேறு வழி இன்றி ஒருநாள் காலை வழக்கு மன்றத்தில் அந்த வழக்கில் விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது வழக்கு மன்றத்துக்குச் செல்லாமல் கவலையுடன் இந்த ஆலயத்தில் வந்து பைஜியனாத்திடம் வேண்டிக் கொண்டு அமர்ந்து இருந்தார். அந்த வக்கீல் இந்த ஆலயத்தின் சிவபக்தர். அதே நேரத்தில் வழக்கு மன்றத்தில் இவரைப் போன்ற தோற்றத்தில் யாரோ சென்று வாதாடி எதிரிகளின் வாதத்தை தூள் தூளாக்கி வழக்கில் வெற்றி பெற வைத்துள்ளார். மதியம் சோகமாக வழக்கு மன்றம் சென்ற வக்கீலுக்கு அங்கு நடந்தது அனைத்தையும் கேட்டு ஒரே திகைப்பாகி விட்டது. தான் ஆலயத்தில் அமர்ந்து இருக்கையில் வழக்கு மன்றத்துக்கு சென்று வாதாடியது யார் எனக் குழம்பினார்?
அதன் பின்னரே அவர் ஒரு உண்மையை தெரிந்து கொண்டார். அவர் ஆலயத்தில் ஸ்ரீ பைஜியனாத்தை வேண்டிக் கொண்டிருந்த வேளையில் சிவபெருமானே தன் சார்பில் தன் உருவில் சென்று வழக்கில் வாதாடி வெற்றியை அளித்து இருக்கிறார் என்பதை உணர்ந்தவர் மறு நாள் தனது தொழிலை விட்டு விலகி ஆலயத்துக்கு வந்து ஒரு சன்யாசியாகி விட்டாராம். நாளடைவில் அவர் பெரும் மகானாகி அங்கேயே ஆலயத்தில் தொண்டு செய்து கொண்டு ஆலயத்தை வளர்த்து அங்கு தொண்டு செய்தவண்ணம் இருந்து உள்ளார். ஆகவே அவர் சிலையை ஆலயத்தில் பெரிய அளவில் வைத்து இருக்கிறார்கள்.




அகண்ட ராமாயணம் இங்கு படிக்கப்பட்டு
வருவதாகவும் அகண்ட ஜோதி எரிவதாகவும்
சுவற்றில் எழுதி வைக்கப்பட்டு உள்ள வாசகம்
