கோரவனஹல்லி
மஹாலஷ்மி ஆலயம்
சாந்திப்பிரியா  
பெங்களூரில் மகாலஷ்மி ஆலயங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. நகர மத்தியில் பனசங்கரிக்கு அருகில் சுமார் 8 அல்லது 10 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டு உள்ள மகாலஷ்மி ஆலயம் (ரிங் ரோடு சாலையில் JP நகரில் இருந்து மைசூர் செல்லும் பாதையை நோக்கி சென்றால் பெரிய Tax Payers  அலுவலகம் வரும். அதன் பக்கத்து சாலையின் கோடியில் ஆலயம் உள்ளது  ) மிக சிறப்பாக உள்ளது என்றாலும் தும்கூர் தாலுக்கா கோரவனஹல்லி  கிராமத்தில்  உள்ள மகாலஷ்மி தாயார் ஆலயம் மிகவும் பழமையானது. மகிமை வாய்ந்தது.

அந்த ஆலய வரலாறு இது.

1880 -90 ஆம் ஆண்டு வாக்கில்  கோரவனஹல்லி கிராமத்தில் அபையா என்ற பால் வியாபாரம் செய்பவர் இருந்தாராம். அவர் தினமும் தனது பசு மாட்டை வயல்வெளிக்கு கொண்டு சென்று புல் மேயவிட்டு வருவார். அருகில் இருந்த குளத்தருகில் அமர்ந்து உணவு அருந்துவார். ஒரு நாள் அவர் உணவு அருந்திக் கொண்டு இருந்தபோது  ஆசிரியாக ஒரு குரல் கேட்டது.’ என்னையும் உன்னுடன் அழைத்துச் செல்கிறாயா’. எதோ மனப்பிரமை என உதாசீனப் படுத்திவிட்டு வீடு சென்று விட்டார். ஆனால் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் அதே குரல் அதே இடத்தில் கேட்கவே பேயோ  பிசாசோ தன்னை துரத்துகிறது என பயந்துகொண்டு வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். அடுத்த  நாள் அவர் கனவில் லஷ்மி தேவி தோன்றி அவரை குரல் கொடுத்து அழைத்தது தான்தான் எனவும், தான் அங்கு மறைந்துள்ள இடத்தில்  இருந்து தன்னை எடுத்து வந்து வீட்டில் வைத்து பூஜித்தால் அவர் வாழ்வு வளம் பெரும் என்று கூறிவிட்டு, தான் இருந்த இடத்தையும் கூறினாளாம். மறுநாள் கனவில் லஷ்மி தேவி காட்டிய இடத்தில் சென்று பார்க்க அவருக்கு அங்கு மகாலஷ்மியின் சிலை ஒன்று கிடைத்ததாம். அதை வீட்டிற்கு எடுத்து வந்து வணங்கி வந்தார்.

நாளடைவில் அவர் வியாபாரம் செழித்தது. நிலபுலன்களை வாங்கி செல்வந்தர் ஆனார். ஆனால் மகாலஷ்மியை விடாமல் பூஜித்து வந்தார். ஒரு நாள் அவர் கனவில் மீண்டும் தோன்றிய மகாலஷ்மி தனக்கு ஒரு ஆலயம் அமைத்து பூஜைகளை செய்யுமாறு கட்டளையிட, தான் இந்த நல்ல நிலைக்கு ஆளானது மகாலஷ்மியின் அருளினால்தான் என்பதை உணர்ந்தவர்  சிறிய தனியார் ஆலயம் ஒன்றை அமைத்து பூஜைகளை செய்யத் துவங்கினார். கிராம ஆலயம் என்பது பெரிதாக இருக்காது. நாலு சுவற்றுக்குள் இருக்கும்.  தன்னால் முடிந்த அளவு கிராமத்தில் தான தருமங்கள் செய்து வந்தார். கிராமமோ சிறியது. அதனால் அதிக அளவு மக்கள் இல்லாத நிலையில் அந்த கிராமத்து மக்களே அங்கு வந்தார்கள். ஆலயம் பற்றி வெளியில் தெரியவில்லை. அபையா மறைந்தப் பின்னர் அவருடைய சகோதரர் அவர் விட்டப் பணிகளை தொடர்ந்தார். சில காலத்துக்குப் பின்னால் அவரும் மறைந்துவிட அந்த ஆலயத்தை நிரவாகிக்க எவரும் இல்லாமல் ஆலயம் நலிந்தது.

1925 ஆம் ஆண்டு வாக்கில் அந்த கிராமத்தை சேர்ந்தவரும் வெளியூரில் தங்கி இருந்தவருமான கமலம்மா என்பவர் சொந்த கிராமமான கோரவனஹல்லிக்கு வந்தபோது அந்த ஆலயம் தோன்றிய கேட்டறிந்தார்.  தன் கிராமத்தில் உள்ள மகாலஷ்மியை நலியவிடகூடாது என எண்ணி  உடனே தானே அங்கு மீண்டும் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். மீண்டும் ஆலயம் அனைவரும் செல்லும் இடம் ஆயிற்று. சில ஆண்டுகளில் மீண்டும் வெளியூருக்கு அவர் சென்று விட  கவனிப்பார் இல்லாமல் மீண்டும் ஆலயம் கேட்பார் அற்றுச் கிடந்தது .  வெளியூருக்கு  சென்றுவிட்டு சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தரமாக கிராமத்தில் தங்குவதற்கு கமலம்மா மீண்டும் வந்தார். மீண்டும் ஆலயம் கேட்பார் அற்றுக் கிடந்ததைக் கண்டு மனம் வருந்தினார். இனி அதை அப்படி விடக்கூடாது எனக் கருதியவர் ஆலயத்தை புனரமைத்தார். பூஜைகள் துவங்கின. அந்த ஆலயத்துக்கு வரத் துவங்கியவர்கள் அற்புத அனுபவங்களைப் பெற்றார்கள். வாய்மொழி வாய்மொழியாக ஆலய மகிமை பக்கத்து கிராமம், நகரம் எனப் பரவியது. அங்கு வந்து பிரார்த்தனைகளை செய்து கொண்டவர்களின்  வாழ்வில் வசந்தம் பெறத் துவங்கின. ஆலயத்தில் கூட்டம் பெருகியது. செய்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும். நீண்ட வரிசையில் நிற்க வேண்டுமாம்.  கார்த்திகை மாதங்களில் லட்ஷ தீப விழா விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. இன்று அந்த ஆலயம் புகழ் பெற்று விளங்குகின்றது. அங்கு சென்று வேண்டிக் கொண்டால் செல்வத்திற்கு குறைவு வருவதில்லையாம், மகாலஷ்மியே வீட்டில் வந்து அமர்ந்து உள்ளதைப் போல வளம் பெருகுமாம்.

ஆலயத்துக்கு செல்லும் வழி

ஆலயம் பெங்களூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஜலஹல்லி, நீலமங்களா, மகிமாபுரா போன்றவை வழியே N4 பாதையில் சென்றால்  கோரவனஹல்லியை அடையலாம். கேம்பகோவ்டா பஸ் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் இங்கு செல்ல KSRTC பஸ் வசதி உள்ளது.

ஆலயம் செல்லும் வழி:-

மெஜெஸ்டிக் பஸ் நிலையம் – யஷ்வந்த்பூர்- நீலமங்களா- தும்கூர் சாலை-  தும்கூர் தோல்கேட் – தப்பாஸ்பெட்  – ஷெட்டார் பாலா -கோரவனஹல்லி

இங்கு செல்லும் பாதையைக் காண கீழே உள்ள 
படத்தின் மீது  கிளிக் செய்யவும்
 
 
ஆலய விலாசம் :
Sri Mahalakshmi Temple
Goravanahalli
Theeta Post
Koratagere(T)
Tumkur(D)
Karnataka
India.
Ph No: 
+91 8138-237509