நாகம்மா நாராயணசுவாமி 
ஜெயலஷ்மி அம்மா குருஸ்தானம்
சாந்திப்பிரியா

ஆந்திரப்பிரதேசத்தின் செகந்திராபாத்தின் திருமலகிரியில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஜெயலஷ்மி அம்மாள் குருஸ்தானம் என்பது நாக தேவதைக்காக அமைக்கப்பட்டு உள்ள ஆலயம். அந்த ஆலயத்தை அமைத்தவர் ஜெயலஷ்மி அம்மா என்று போற்றி வணங்கப்படும் ஒரு தெய்வீகத் தாய். அவர் கட்டி உள்ள அந்த ஆலய வரலாறு சுவையாக உள்ளது. புற்றுக்குள் நாகமாக அமர்ந்து இருந்த நாகதேவதையின் புற்றை இடித்து தரைமட்டமாக்கிய போது அதே இடத்தில் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடச் செய்தார் நாக தேவதை.   தனக்கு அதே இடத்தில் ஆலயத்தை அமைத்துக் கொள்ள நாகம்மா எனும் நாக தேவதை  தேர்தெடுத்த குடும்பமே ஜெயலஷ்மி அம்மாவின் குடும்பம்.

பூர்வக் கதை 
அப்போது இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது. திருச்சியில் ஆங்கிலேயப் படையினர் தங்கி இருந்தார்கள். அப்போது இந்த ஆலயம் உள்ள இடம் வெற்று இடமாக இருந்தது. அங்கு ஒரு புற்றுக்குள் வாழும் நாகம் வாழ்ந்து வந்தது. அந்தப் புற்றின் அருகில்  சிறிய ஆலயத்தைக் கட்டி அந்த நாகதேவதையை அங்கிருந்த மக்கள் தெய்வமாகப் போற்றி வணங்கி வந்தார்கள். ஆங்கிலேய அதிகாரிகள் அந்த வழியாகத்தான் குதிரை மீது ஏறிச் செல்வார்கள். அந்தப் புற்று ஆலயத்தின் அருகில் செல்லும்போது சற்று ஒதுங்கிச் செல்ல வேண்டி இருந்தது. ஆகவே தனது போக்குவரத்துக்கு அந்த புற்று ஆலயம் இடையூறாக உள்ளது எனக் கருதிய ஆங்கிலேய அதிகாரி  ஒரு நாள் அந்த ஆலயத்தை இடிக்குமாறு ஒரு  கட்டளையிட ஆலயம் இடிக்கப்பட்டது . அரைகுறையாக இடிக்கப்பட்ட அந்த ஆலயம் வழியே அடுத்த வெள்ளிக் கிழமை குதிரை மீதேறி தனது நாயுடன் சென்று கொண்டு இருந்த அதே ஆங்கிலேய அதிகாரி, அவர் குதிரை மற்றும் அவருடைய நாய் என மூவரும் அந்த ஸ்தலத்திலேயே மரணம் அடைந்து கிடந்தார்கள். அவர்கள் எப்படி இறந்தார் என்பது எவருக்கும் இன்றுவரை  விளங்கவில்லை.


அம்மாவின் பூர்வீகப் பின்னணி

இப்படிப்பட்ட பின்னணியில்தான் திருச்சி  நகரமே ஆங்கிலேயர்களின் அட்டகாசத்தில்  இருந்தது .  திரு சின்னப்பா என்பவர் ஆச்சாரமான வைஷ்ணவக் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் குடும்பமும் திருச்சியில் இருந்தது. சின்னப்பாவின் பாட்டனார் சிறு வயதானவர். அந்த காலத்தில் யானை மீது ஆங்கிலேயர் மது வகைகளை பீப்பாய்களில் எடுத்துச் செல்வார்கள். அவற்றை சாலையில் உள்ள சிறுவர்கள் சில நேரத்தில் சீண்டுவார்கள்.  கல் எறிந்து விட்டு ஓடுவார்கள். சிப்பையளிடம் பிடிபட்டால் சரியான அடி உதை கிடைக்கும் . ஒரு நாள் சின்னப்பாவின் பாட்டனார் அப்படி பீப்பாய்களை எடுத்துக் கொண்டு சென்ற யானை மீது கற்களை வீசினார். அதைக் கண்டு கோபமுற்ற ஆங்கிலேயப் படையினர் அவரைப் பிடிக்க துரத்திக் கொண்டு வந்தார்கள். அவர்கள் கையில் சிக்கினால் கடுமையாக தண்டனை கிடைக்கும் என்பதினால் அந்த சிறுவர்கள் ஓடினார்கள். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டு இருந்த ஒரு ரயிலில் ஏறி தப்பினார்கள்.
ரயில் விஜயவாடாவை அடைந்தது. கீழே இறங்கி நகருக்குள் சென்றார்கள். ஊரும் புதிது. கையில் காசும் இல்லை. பட்டினியால் துடித்தவர்களை ஒரு வியாபாரி பார்த்து கருணைக் கொண்டார். அவர்களின் கதையைக் கேட்டு தனது நிறுவனத்தில் பணி புரிய அழைத்துச் சென்றார். பணியில் அமைந்து வேலை செய்யத் துவங்கிய  சின்னப்பாவின் பாட்டனார் தனது தலை முடியை மாற்றிக் கொண்டார். அய்யங்காராக இருந்ததினால் முதலில் குடுமி வைத்து இருந்தார். ஆசாரமான குடும்பம் ஆயிற்றே.  வேலைக்கு சேர்ந்து விட்டதினால் குடுமியை எடுத்துவிட்டு கிராப் செய்து கொண்டார். சில மாதங்கள் கழிந்தன. தனது பெற்றோர்களைப் பார்க்க ஆசை வந்து விட திருச்சிக்குச் சென்றார். அவர் வந்த கோலத்தைக் கண்ட ஆசாரக் குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் விட சம்மதிக்கவில்லை. வீட்டுத் திண்ணையிலேயே அமர்ந்து கொள்ளுமாறு கூறினார்கள். ஆனால் அவரால் அந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி இவர்கள் உறவே தேவை இல்லை எனக் கருதியவர் மீண்டும் தான் வேலைப் பார்த்துவந்த கோத்தகூடம் என்ற ஊருக்கு சென்று விட்டார். நாளடைவில் அங்கு ஒரு தெலுங்கு பிராமணப் பெண்ணை மணந்து கொண்டு வாழ்கையை நடத்தினார்.

 
தெய்வீக அம்மா பிறந்தக் கதை

அவருக்கு 16 குழந்தைகள் பிறந்தன. அவர்களில் 14 குழந்தைகள் மரணம் அடைந்து விட  மிஞ்சி இருந்த இருவரில் ஒரு நாள் பத்து வயதே ஆன அவருடைய பெண் காணாமல் போய் விட்டாள். அவளுடைய சகோதரர் பல இடங்களிலும் தங்கையைத் தேடி அலைந்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பெற்றோர்களும் மரணம் அடைந்து விட அவர் ஒரு முதலியார் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழத் துவங்கினார். அவர்களுக்குப் பிறந்தவரே சின்னப்பா. சின்னப்பாவிற்கும் வயது வந்ததும் குப்பம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் மூலமே தெய்வீக அன்னையான, நாகம்மனின் சபதத்தை நிறைவற்ற ஜெயலஷ்மி அம்மாள் 1942 ஆம் ஆண்டு பிறந்தார். பிறந்த குழந்தையான ஜெயலஷ்மி அம்மாவிற்கு காலில் ஸ்ரீ சக்கர வடிவ ரேகை இருந்தது. அப்போதே அவர் தெய்வீக பிறவி என்பது தெரிந்தது.

 
ஜெயலஷ்மி அம்மாவின் இளம் பருவம்

சிறு குழந்தையான ஜெயலஷ்மி அம்மாள் சீரும் சிறப்புமாக வளர்ந்தார். சிறுமி சக்தி தேவதையை வணங்கித் துதிப்பார். பலமுறை அந்த சிறுவி ஆலயத்துக்குச் செல்லும்போது ராஜ நாகத்தை வழியில் காண்பது உண்டு. ஒரு நாள் அவள் பின்னால் சென்று கொண்டு இருந்த ராஜ நாகத்தை பார்த்த ஒருவன் அந்த சிறுமிக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்பதினால் அதை அடித்துக் கொன்று விட்டான். அதப் பார்த்த சிறுமி பயந்து விட்டாள். அது முதல் பாம்பை பார்த்து விட்டால் பயந்து ஓடி ஒளிவாள், அலறுவாள். ஆனால் அந்த சிறுமி ஏதாவது கூறினால் அது நடந்து வந்ததும் ஒரு விசித்திரமாக இருந்தது.

ஜெயலஷ்மி அம்மாவின் திருமணம்

சிறுமி ஜெயலஷ்மிக்கு வயது பதினொன்று ஆகியது. அந்த காலத்தில் சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து விடுவார்கள் என்பதினால் அவளுக்கு தேவராஜ சுப்பிரமணியம் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார்கள். ஜெயலஷ்மி அம்மா புகுந்த வீட்டினர் நாகம்மாவின் பக்தர்கள். நாக தேவதையை வழிபாட்டு பூஜிப்பவர்கள். ஆனால் ஜெயலஷ்மிக்கோ பாம்பு என்றால் பயம், வெறுப்பு . அவர்கள் வழக்கப்படி பூஜை செய்ய விரும்பாதவளினால் வீட்டில் சர்ச்சை ஏற்பட வேறு வழி இன்றி தேவராஜ சுப்பிரமணியன் மனைவியுடன் தனிக் குடுத்தனம் செய்யப் போய் விட்டார். ஆனாலும் ஜெயலஷ்மி அம்மா எங்கு சென்று வாழ்ந்தாலும் அவள் பாம்புகளைக் பார்க்க வேண்டி இருந்தது. நாகம்மாவே அவளை பின்தொடர்ந்து சென்று இருந்து இருக்கின்றாள் என்பது அவளுக்கு எப்படித் தெரியும் ?

தெய்வீக பிள்ளை பிறந்தது

சில மாதங்களில் ஜெயலஷ்மி அம்மாளும் 1956 ஆம் ஆண்டு கருவுற்று ஒரு அழகிய பிள்ளையைப் பெற்று எடுத்தாள். அவனுக்கு நாராயணன் எனப் பெயர் சூட்டினார்கள். பிறந்தக் குழந்தையும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருந்தது. அந்த சிறுவனும் எதைக் கூறினாலும் அது நடந்தன. தாயைப் போலவே பிள்ளையும் இருந்தான். அந்தக் குழந்தையை காரணமாக வைத்துக் கொண்டே அதன் மூலம்  நாகம்மா எனும் நாக தேவதை  தனக்கு ஆலயத்தை அமைத்துக் கொள்ள முடிவு செய்து இருந்தால் போலும். சிறுவனாக இருந்தாலும் மிகவும் பக்தி பூர்வமாகவே நாராயணன் வளர்ந்தார் . பூஜைகள் போன்றவற்றையும் செய்து வந்தார். 1965 ஆம் ஆண்டு. பள்ளியில் இருந்து வந்தப் பிள்ளை உடல் நலமின்றிப் போனான். தாயின் மடியிலேயே படுத்துக் கிடந்து பரலோகப் பிராத்தி அடைந்தான். அதுவே ஜெயலஷ்மி அம்மாவின் வாழ்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தக் கட்டம்.  நாகம்மா எனும் நாக தேவதை தனக்கு ஆலயம் கட்டிக் கொள்ள நடத்திய நாடகத்தின் முதல் கட்டம்.

நாராயணா…நாராயணா

மகனை இழந்தத் தாயார் பைத்தியம் பிடித்தவள் போல ஆனாள். நாராயணா,  நாராயணா என இரவும் பகலும் கதறி அழுதாள். அவளை எவராலும் தேற்ற முடியவில்லை. அதுதான் இரண்டாவது முக்கியக் கட்டம். அப்போது  ஒரு நாள் ஜெயலஷ்மி அம்மாவின் கனவில் நாகம்மா எனும் நாக தேவதை தோன்றினாள். ஆனால் நாகம்மாவாக தோற்றம் தரவில்லை. காரணம் அதை ஜெயலஷ்மி அம்மாள் விரும்ப மாட்டாள்.  நாகம்மா எனும் நாக தேவதை  ஒரு வயதான மூதாட்டி உருவில் வந்து அவளை தேற்றினாள். ‘உனக்கு என்ன வேண்டும்’ என மூதாட்டி கேட்க ஜெயலஷ்மியோ ‘தனக்கு தன்னுடைய மகன் வேண்டும், அவனை தான் காண வேண்டும்’ என்றாள். ‘சரி, அப்படியென்றால் மறுநாள் உன் மகன் உன்னைக் காண வருவான்’ எனக் கூறி விட்டு மறைந்து விட்டாள் நாகம்மா எனும் நாக தேவதை.

மகனைக் கண்டாள்

மறுநாள் காலை குளித்துவிட்டு சமையல் அறையில் இருந்தாள் ஜெயலஷ்மி அம்மாள். வாயிலில் யாரோ தன்னை அழைக்கும் குரல் கேட்டது. வாயிலில் நின்று இருந்த சிறுவனோ  மறைந்து போன நாராயணன் ஜாடையிலேயே இருந்தான் . அங்கிருந்தவர்கள் ஆச்சர்யம் அடைந்து உள்ளே சென்று ஜெயலஷ்மியிடம் அந்த சிறுவனைப் பற்றிக் கூறியும் அவள் வெளியே வர மறுத்தாள். பையனும் போகவில்லை. கையில் ஒரு சிவப்பு துண்டை பிரித்து வைத்துக் கொண்டு உணவு கேட்டுக் கொண்டே நின்று கொண்டு இருந்தான். சுமார் மூன்று மணிநேரம் கடந்தது. வந்துள்ள சிறுவன் போகவில்லை என்பதினால் மீதி இருந்த அன்னத்தை எடுத்துக் கொண்டு போய் அந்த சிறுவனின் கையில் இருந்த துணியில் போட்டப் பின் அவனை நிமிர்ந்து நோக்கியவள் திடுக்கிட்டாள். நாராயணா எனக் கதறினாள் . சிறுவன் போய் விட்டான். அவனைக் காணவில்லை. வந்தது என் நாராயணனே எனக் கதறினாள். கூடி இருந்தவர்கள் சிறுவனை இழந்து விட்டதினால் அவள் பித்து பிடித்துக் கத்துகிறாள் என நினைத்தார்கள்.

புதிய திருப்பம்

அதுவே நல்ல தருமணம் என நினைத்த நாகம்மா மீண்டும் அவள் கனவில் வந்தாள். ஆறுதல் கூறினாள். தன்னுடன்தான் நாராயணனும் இருக்கின்றான் என்று கூறிவிட்டு அவனுடன் சேர்ந்து தரிசனம் தந்தாள். மேலும் ஒரு இடத்தைக் காட்டி ‘நாங்கள் ஏழுபேர் இந்த இடத்தில் உள்ளோம். நீ எங்கள் ஏழுபேர் மற்றும் நாராயனனுக்காக அங்கு தீப விளக்கு ஏற்று’ எனக் கூறி விட்டு மறைந்தாள்.

மறுநாள் எழுந்த ஜெயலஷ்மி மனதில் ஒரு மாறுதல் ஏற்பட கனவில் நாகம்மா காட்டிய இடத்தை தேடிக் கண்டு பிடித்தாள். நாகம்மா கூறிய இடத்தில் இருந்த பாம்பு புற்றின் எதிரில் விளக்கை ஏற்றி வைத்தாள். என்ன அதிசயம் அந்த விளக்கை அவள் ஏற்றி வைத்தவுடன் அவள் முன்னால் அங்கு ஒரு நாகம் தோன்றியது. அவள் முன் தோன்றிய நாகம் அப்படியே திரும்பிக் கொள்ள அவள் ஏற்றி வைத்திருந்த விளக்கும் திசை திரும்பியது. வெட்ட வெளி. காற்று வேகமாக வீசிக் கொண்டு இருந்தது. விளக்கும் அணையவில்லை. அதை பார்த்துக் கொண்டே இருந்தவள் விளக்கு அணைந்ததும் வீடு திரும்பினாள். மனதில் அசாத்தியமான அமைதி இருந்தது. அன்று முதல் பாம்புகளைக் கண்டால் பயப்படுவது நின்றது. நாகம்மாவை பூஜிக்கத் துவங்கினாள். மகனின் மரண துக்கம் முற்றிலும் விலகியது.

எங்களுக்கு ஒரு ஆலயம் வேண்டும் -நாகம்மா

அடிக்கடி நாகம்மா ஜெயலஷ்மி அம்மாவின் கனவில் வந்தாள். ஒரு நாள் அவள் கனவில் வந்தவள் புற்றுக்கு பக்கத்தில் விளக்கு ஏற்றி வைத்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்றாள். ஆனால் அதே இடத்தில்தான் முன்னர் ஒரு காலத்தில் பாம்பு புற்று ஆலயம் இருந்ததும், அதை ஆங்கிலேய அதிகாரி இடித்து தரைமட்டம் ஆக்கியதும் அம்மாவுக்குத் தெரியாது. கனவில் தோன்றி தனக்கு ஆலயம் அமைக்குமாறு நாகம்மா மீண்டும் மீண்டும் கூறியதினால் ஆலயம் அமைக்க முடிவு செய்தாள்.  அதற்கு அவளுடைய கணவரும் ஒப்புதல் தந்தார்.

இடைஞ்சல்கள்

எந்த இடத்தில் அம்மா நாகம்மாவிற்கு ஆலயம் அமைக்க எண்ணினாரோ அந்த இடம் ராணுவத்திற்கு சொந்தமானது என்பதினால் ஆலயம் அமைகப்படத் துவங்கியதும் பெரும் தொல்லைகள் ஏற்பட்டன. அம்மா ஆலயத்துப் பணிகளைத் துவக்க அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு அங்கேயே ஒரு கல்லை நட்டு பூஜைகளை செய்யத் துவங்கினார். ராணுவத்தினர் அங்கு வந்து அங்கு பூஜையும் செய்யக் கூடாது, ஆலயமும் அமைக்கக் கூடாது என தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அம்மா அது பற்றிக் கவலைப் படாமல் தனது வேலையை துவக்கினார். அவர் சுத்தம் செய்து விட்டுச் சென்றதும் லாரியில் மணலை ஏற்றி வந்து ராணுவத்தினர் அங்கு வந்து அந்த இடத்தில் மணலைக் கொட்டிவிட்டுச் செல்வார்கள். அம்மா மனம் தளரமாட்டார். அவற்றை அகற்றி விட்டு தினமும் அங்கு சென்று நாகம்மாவிற்கு பூஜை செய்தாள். தனியாகவே அவருடைய இப்படிப்பட்ட போராட்டம் தொடர்ந்தது. அவர்கள் அந்த பகுதியை சுற்றி வேலி போட்டார்கள். ஆனால் வேலியையும் தாண்டிச் சென்று ஆலய வேலையை துவக்கினார். ஆகவே அவரை உள்ளே விடக் கூடாது என்பதற்காக இரவும் பகலும் காவலாளியை நியமித்தார்கள். மறு நாள் இரவு அந்தக் காவலாளிகள் அங்கு படமெடுத்து ஆடிய பெரிய நாகம்மாவைக் கண்டு மிரண்டு போனார்கள். அதை அடிக்கவோ, சுடவோ தைரியம் வரவில்லை. மறுநாள் காலையில் எப்போதும் போல பூஜைக்கு வந்த அம்மாவிடம் அந்தக் காவலாளிகள் மன்னிப்புக் கேட்டு விட்டு இனி தாங்கள் அவளை தடுக்க மாட்டோம் என சத்தியம் செய்து விட்டுப் அங்கிருந்து சென்று விட்டார்கள்.

ஆகவே அவளும் நான்கு சுவர்களை எழுப்பி மேல் கூறையை போட ஏற்பாடும் செய்து விட்டாள். அதுவரை அந்த இடம் காவலில் உள்ளது என்று எண்ணிக் கொண்டு இருந்த ஆங்கிலேய அதிகாரி ஒரு நாள் அங்கு ஆலயம் எழுந்து உள்ளது என்பதைக் கேள்விப்பட்டு அங்கு வந்தான். ‘யாரைக் கேட்டு இங்கு நாகம்மாவிற்கு ஆலயம் அமைத்தாய்’ எனக் கேட்க அம்மாவும் அது ‘நாகம்மாவின் கட்டளை’ என்றாள். அவனும் சளைக்காமல் அப்படி என்றால் தனக்கு அந்த நாகம்மாவின் ஆலயத்தை தரைமட்டமாக உத்தரவு வந்துள்ளது என தலை கனத்துடன் கூறினான்.
அலுவலகம் திரும்பியவன் உடனே அவளை கைது செய்து நாகம்மாவிற்கு கட்டப்பட்டு வரும் ஆலயத்தை இடிக்க உத்தரவு போடும் கடிதத்தை எழுதத் துவங்கினான். பாதி கடிதம் எழுதும் முன்னரே அப்படியே மயக்கம் வந்து விழுந்தான். ஆகவே அவரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். வீட்டில் சென்று அமர்ந்தவர் சட்டைப் பையில் இருந்து சிறிய நாகப்பாம்பு வெளியில் வந்து விழுந்தது.  அதிர்ந்து போனவர்கள் அதை அடிக்க முயல அது இங்கும் அங்கும் பாய்ந்து சென்று அமரத்  துவங்கியது.  எப்படி அதை அடிக்க முயன்றும்  அடிக்க முடியாமல் போனவர்கள் பயந்து விட்டார்கள் . அதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை. அதைக் கண்டு பதற்றம் அடைந்த அவரது மனைவி ஒரு நாகம் எப்படி அவர் சட்டையில் வந்தது? எங்கு போனீர்கள் எனக் கேட்டபோது அவர் நடந்த விவரத்தைக் கூற அவள் கோபம் அடைந்தாள். மறுநாள் நாக பஞ்சமி, ‘நான் நாகம்மாவிற்கு பூஜை செய்ய இடம் தேடிக் கொண்டு இருக்கையில் நீங்கள் எப்படி அந்த தகாத காரியத்தை செய்யத் துணிந்தீர்கள்’ எனக் கடிந்துகொண்டு உடனே பூஜை அறைக்குச் சென்று நாகம்மாவை வேண்டிக் கொண்டு மாவு தூவி விளக்கேற்றி வழிபட ஒளிந்து இருந்த நாகம் வெளியில் வந்து அனைவர் முன்னாலும் வெளியில் சென்று மறைந்தது. அது தெய்வக் குற்றமே என உணர்ந்தவள் அவளது கணவரை அழைத்துக் கொண்டு அம்மாவிடம் சென்று தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்க வைத்தாள்.

சிறு துளி பெறு வெள்ளம்

ஜெயலஷ்மி அம்மாவின் கணவர் தன்னுடைய வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில் ஆலயம் அமைக்க அவளுக்கு பணம் தந்தார். அம்மாவும் பல வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கத் துவங்கினாள். புடவைகளை மொத்தமாக வாங்கி அதை விற்று பணம்  சம்பாதித்தாள். மளிகைக் கடை நடத்தி பணம் சேர்த்தார். சீட்டு வியாபாரம் ஆரம்பித்து அதன் மூலம் பணம் சேர்த்தார். தன்னிடம் இருந்த அனைத்து நகைகளையும் விற்று விட்டார். ஆலயம் அமைக்க இப்படியெல்லாம் பணம் சேர்க்கத் துவங்கியவள் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. அவளுடைய உறவினர்கள் அவளுக்கு உதவ முன்வரவில்லை. அனாவசியமாக பணத்தை பாழடைக்கின்றாய் என ஏசினார்கள். அம்மாவிற்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தன. அவர்களையும் கவனிக்க நேரம் இன்றி இருந்தார். தனது முழு நேரத்தையும் ஆலயம் அமைக்கவே செலவிட்டபடி இருந்தார். வேலையாட்கள் கிடப்பதே பெரும்பாடாக இருந்தது. ஆனாலும் தானே அவர்களை தேடிப் போய் அழைத்து வந்தார். அவர்களுடன் தானும் ஒரு கட்டிட வேலைக்காரியாகவே இருந்து கொண்டு வேலைகளை செய்தார். ஆலயம் கட்டப்பட்டு வந்தாலும் அம்மா அங்கு பூஜைகளையும் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தார். பலமுறை நாகம்மா அவர் கனவில் வந்தும் நேரில் காட்சி தந்தும் அவளுக்கு தைரியம் ஊட்டினார். தான் அவளுடன் துணையாக இருப்பதை எடுத்துக் காட்டிய வண்ணமே இருந்தாள். சிறிய அளவில் ஆலயம் கட்டும் பணி 1967 ஆம் ஆண்டு துவங்கியது.

நாத்திக பஜ்ரங்பாய் சிஷ்யர் ஆன கதை 

அம்மா ஆலயம் கட்ட பல பொருட்களையும் வாங்கி வர வேண்டி இருந்தது. அப்போதுதான் பெரும் நாத்தீகராக இருந்த பஜ்ராங்க்பாய் என்பவர் கடையில் அம்மா ஆலயத்திற்கான சாமான்கள் வாங்கும்போது அவருடன் நல்ல தொடர்ப்பு ஏற்பட்டது. அவருக்கு பல பிரச்சனைகள் இருந்தன. ஆலயத்துக்கான சாமான்களை வாங்கினாலும் அவர் பணத்தைக் குறைக்க மாட்டார். காரணம் அவர் தெய்வ நம்பிக்கை இல்லாதவர் . ஆனால் அவள் கட்டும் ஆலயத்தைப் பற்றி அவளிடம் கேட்டு அறிந்து கொண்டவர் ஒரு நாள் எதோ மனதில் தோன்றி பதினோரு ரூபாய் தானம் செய்து தனக்காக பூஜை செய்து தொழிலில் உள்ள எதிரிகளின் தொல்லையை ஒழிக்க முடியுமா எனக் கேட்டார். அம்மாவும் அவர் கொடுத்த பணத்தில் பூசைப் பொருட்களை வாங்கி நாகம்மாவிடம் அவருக்காக வேண்டிக் கொண்டு பூஜைகளை செய்து விட்டு பிரசாதத்தை அவருக்குக் கொடுத்தாள். அன்று முதல் அவர் தொல்லைகள் மாயம் போல மறைந்தன. ஆஹா…அம்மா கட்டும் ஆலயம் சாதாரண ஆலயம் அல்ல, மிக சக்தி வாய்ந்த ஆலயம் என்பதை உணர்ந்து அம்மாவின் பரம பக்தரும் சிஷ்யருமாக மாறினார். அவர் அந்த கடை வீதியின் தலைவராக இருந்ததினால் அவர் சொல்லைக் கேட்டு பலரும் ஆலயம் அமைக்க பண உதவிகள் செய்தார்கள். ஆலயம் வேகமாக வளர்ந்தது. அவரவர் அவரவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அம்மாவிடம் கூறி பரிகாரம் பெற்றுச் சென்றார்கள். இப்படியாக அம்மாவின் தெய்வீகத் தன்மை வெளியில் தெரியத் துவங்கி அம்மா புகழ் பெறலானார்.

ஆலயப் பணி

ஆலயம் கட்டத் துவங்கினாலும் அம்மா தனது குடும்பத்தையும் கவனிக்க வேண்டி இருந்தது. வீட்டில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஆலயப் பணிகளை செய்து வந்தார். தனது குழந்தைகளை படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்தார். ஆண்டுகள் கடந்தன. 1981 ஆம் ஆண்டு முதல் அம்மா ஆலயத்தின் வளாகத்துக்குள்ளேயே தங்கி ஆலய வேலைகளையும் பூஜைகளையும் செய்து வந்தார். அவரைத் தேடி வந்த பக்தர்களின் குறைகளையும் நாகம்மாவின் துணையுடன் நீக்கி வந்தார். அது மட்டும் அல்ல அவர் சாதிபேதமும் பார்க்கவில்லை. வந்தவர் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களின் குறைகளை தீர்த்து வந்தார். நாகம்மாவே மனிதப் பிறவி எடுத்து ஜெயலஷ்மி அம்மா உருவில் வந்து இருந்தாள்.

பஜ்ரங்பாயின் மறைவு

பஜ்ராங்பாய் அம்மாவின் ஆலயப் பணிக்கு பெரும் துணையாக இருந்து அம்மாவிற்குப் பல விதத்திலும் உதவி வந்தார். ஆலயம் பெரியதாக கட்டப்படத் துவங்கியது. இப்படியாக அனைத்தும் நல்ல முறையில் சென்று கொண்டு இருந்தபோது அம்மாவிற்கு பெருத்த இடி போல 1992 ஆம் ஆண்டு பஜ்ராங்பாய் மறைந்தார். தனது ஒரு கையையே இழந்து விட்டதாக அம்மா கூறினார்.

அன்னமிட்ட கை ஓயவில்லை

ஆலயத்துக்கு வருபவர்கள் காலி வயிற்றுடன் செல்லக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார் அம்மா. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமிடத் துவங்கினார். அப்படி அன்னபூர்ணியாக  செயல்படத் துவங்கியர் ஆலயத்தில் இன்றும் தொடர்ந்து அன்னதானம் தினமும் நடைபெறுகின்றது என்பது வியப்பு இல்லை. காரணம் பக்தர்கள் எண்ணிக்கை உயர உயர ஆலய வருமானமும் பெருகியது. அனைத்தையுமே ஆலயத்துக்காகவே செலவு செய்தார்கள். நாகம்மா கருணை மிக்கவள் அல்லவா.

 
அம்மா சமாதி அடைந்தக் கதை

காலம் ஓடிக் கொண்டே இருந்தது. ஆலயப் பணியும், பூஜைகளும் அன்னதானமும் தொடர்ந்து கொண்டே இருக்க 1992 ஆம் ஆண்டு அம்மா ஜீவ சமாதி அடைய முடிவு செய்தார். ஆனால் அதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பஜ்ரான்பாயுடன் அம்மாவிடம் பர சீடராக ஆனவர் காளிசரண் என்பவர். தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து கஷ்ட திசையில் இருந்தவர் அம்மாவின் அருளினால் வியாபாரம் செய்யத் துவங்கி பெரும் செல்வந்தர் ஆனார். அவர் அம்மாவை சமாதி அடைய விரும்பவில்லை. சமாதி அடைய வேண்டும் என்றால் தன்னுடைய தலையை வெட்டி வைத்தப் பின் அதன் மீது சமாதி அடையுமாறு  அம்மாவை நிர்பந்தத்தினால் அம்மாவினால் அவர் அன்புக்குக் கட்டுப்பட வேண்டியதாயிற்று. சிலர் வாழ்கையில் சிலர் தடையாக இருப்பார்கள். ஆகவே எப்போதும் தன்னை சுற்றி சுற்றியே வந்து கொண்டு இருந்த காளிசரண் தன்னுடன் இருக்கும்வரை தன்னால் சமாதி அடைய முடியாது என்பதை உணர்ந்த அம்மா அவர் தன்னை விட்டு விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள். வேண்டும் என்றே ஒரு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி அவரை கோவிலுக்கு வர விடாமல் செய்து விட்டார்.

1996 ஆம் ஆண்டு அம்மா யாருக்கும் தெரியாமல் சத்தியத்தை பெற்றுக் கொண்டு ஆலயப் பணிகளை கவனித்து வரும் கண்ணாயிரம் என்பவரை அழைத்து தியான மண்டபத்தில் சமாதிக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டார். உணவு உண்பதை மெல்ல மெல்லக் குறைத்துக் கொண்டார். உடல் நலிவுற்றது. எந்த சிகிச்சையும் பலன் தரவில்லை. தனது பெரும்பாலான பகுதியை ஆலய தியான மண்டபத்திலேயே கழித்தார். தன்னுடைய பெரிய மகளை அழைத்து தனக்கு அடுத்த வாரிசாக மெல்ல மெல்ல உருவாக்கி வந்தார். 1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று தியான மண்டபத்தில் அமர்ந்து இருந்தவர் மூச்சு மெல்ல மெல்ல பிரிந்தது. பெரும் திரளாக கூடி இருந்த பக்தர்கள் கண்ணீர் விட்டுக் கதறினார்கள். அம்மாவை பக்தர்கள் தரிசனத்துக்காக மூன்று நாட்கள் அங்கேயே அமர வைத்த நிலையில் வைத்து இருந்தார்கள். அப்போது அந்த மூன்று நாட்களிலும் அவர் சிலருக்கு விழிகளை அசைத்தும், அவ்வப்போது புன்முறுவல் காட்டியும் , கைகளை அசைத்து ஆசி கூறியும் காட்சி தந்துள்ளார். அதன் பின் அவரை அங்கேயே அடக்கம் செய்தார்கள்.

அதிசய சம்பவம்

அம்மா உயிருடன் இருந்த காலத்தில் ஆலயத்தில் பல வேலைகளையும் ஒரு இளைஞன் செய்து வந்தார். அம்மா சித்தியடைந்த பதினோராம் நாளன்று ஆவேசம் வந்தவர் போல தியான அறைக்குள் ஓடிச் சென்றார். பதினோரு நாட்கள் அந்த அறைக்குள் இருந்தவாறு அம்மாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்தார். அம்மாவை நேரிலே பார்ப்பது போலவே இருந்தது அந்த சிலை.அப்படி ஒரு சிலையை அமைப்பது மிகக் கடினம் என்பதும், அதை பதினோரு நாளிலேயே செய்து உள்ளார் என்பதும் அம்மாவின் மகிமைக்கு எடுத்துக் காட்டு. அம்மா இன்று உயிருடன் இல்லை என யாரும் நினைக்கவில்லை. அந்த ஆலயத்துக்குள் ஜெயலஷ்மி அம்மாவே நாகம்மாவாக இருக்கின்றாள்.

ஆலய மகிமை

இந்த ஆலயத்தில் சென்று பிரார்த்தனை செய்தாலும், அன்னதானம் செய்தாலும் நாக தோஷங்கள் விலகுகின்றன, திருமண வாழ்வில் ஒற்றுமை இன்மை, அலுவலகப் பிரச்சனைகள் போன்றவை விலகும், வியாபாரம் விருத்தி அடையும் என்பது போன்ற அதிசயங்கள் நடக்கின்றன என்கிறார்கள். அனைத்திற்கும் நம்பிக்கையே, ஆலய மகிமையே, வாழும் நாக தேவதையே காரணம். ஒரு முறை நீங்களும் அந்த ஆலயத்துக்கு சென்றுதான் பாருங்களேன் என்கிறார்கள் பக்தர்கள். அது மட்டும் அல்ல ஐந்து வெள்ளிக் கிழமைகளில் அம்மாவின் சரித்திரத்தைப் படிப்பவர்கள் மனக் குறைகள், மனக் குழப்பங்கள் நீங்கி அமைதியான வாழ்வை பெறுவார்கள், அவர்களின் பிரச்சனைகளுக்கு நல்ல வழி கிடைக்கும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆலய விலாசம்
SREE NAGADEVATHA SREE NARAYANASWAMY
Sreela Sree Jayalakshmi Amma Gurusthanam
Thirumalagiri, Secunderabad – 500 015. AP. (INDIA)