17 ஆம் நூற்றாண்டில் நேபாளத்தை பிரதாப் மல்லா என்ற மன்னன் ஆண்டு வந்தாராம் . அவன் தெய்வ பக்தி மிகுந்தவர். அதுவும் தலிஜூ பவானி மீது அதிக பக்தி கொண்டவர் என்பதினால் அந்த தேவி பிரசன்னம் ஆகி அவருடன் தாயக்கட்டை போன்ற விளையாட்டில் பயன்படுத்தப்படும் பகடைக்காய் விளையாட்டை (சூதாட்டம்) விளையாடுவாளாம். ஒரு நாள் அந்த மன்னன் அவள் அழகைக் கண்டு மனதில் சிற்றின்ப ஆசை கொண்டாராம். அடுத்த கணம் அவள் அங்கிருந்து மறைந்து விட்டாள் . மன்னன் தனது செயலுக்கு அவமானம் அடைந்து அவளிடம் மனதார மன்னிப்புக் கேட்டார். ஒரு நாள் அவர் கனவில் தோன்றியவள் இனி தன்னைப் போல அவதாரப் பெண்ணை தேர்ந்தெடுத்து அவளை வணங்கி வந்தால் மட்டுமே அவர்கள் ஆட்சி தழைக்கும் என்றாளாம். இன்னொரு கதையின்படி, அந்த மன்னன் ஒருநாள் தாயம் விளையாடிக் கொண்டு இருந்த அழகிய சிறு பெண் ஒருவளைக் கண்டார். அவள் அழகில் மயங்கியவர் அவளை அடைய முயற்சித்தார். அதன் பின்னரே அந்தப் பெண் காளியின் அவதாரமென்று அந்த மன்னனுக்குத் தெரியவர அவளிடம் மன்னிப்புக் கேட்டாராம். அதன் பின் அவள் அவர் எதிரிலேயே மறைந்து விட்டாளாம். அதற்கேற்ப அந்த நாட்டில் ஒரு கன்னிப் பெண்ணை தேர்ந்து எடுத்து அவளை குமாரி தேவி எனும் பெயரில் தலிஜூ பவானியாகப் போற்றி வணங்குவது துவங்கியதாம்.
புத்தர்களின் சாக்யா பிரிவை சேர்ந்த குடும்பத்தினர்களில் இருந்துதான் குமாரி தேவி தேர்ந்து எடுக்கப்படுவார். 4 முதல் 7 வயதான பெண்களின் 32 அங்க லக்ஷணங்களைப் பார்த்தே அவளை தேர்ந்து எடுப்பார்கள். அந்த 32 லக்ஷணங்களில் வாயின் பற்கள், குரல், கண் விழியின் நிறம், தொடைகளின் லஷணம், புருவம், ஜாதகம் போன்ற பலவும் அலசப்படுகின்றன. அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களில் முன்னரே நிர்ணயிக்கப்பட்டு உள்ள அனைத்து லக்ஷணமும் பொருந்தி தேர்ந்தெடுக்கப்பட்ட சிறியப் பெண் தெய்வாம்சம் பொருந்தியவளாகவே இருப்பாளாம்.
அந்த சிறிய பெண்ணை இருட்டு அறையில் கடவுளைக் காண அனுப்புவார்கள். அங்கு புதிதாக அறுக்கப்பட்ட மாடுகளின் தலைகள், பிசாசுகளின் உருவங்களுடன் ஆட்கள், நெஞ்சை பிளக்கும் ஓலங்கள் என அனைத்தும் இருக்குமாம். அதைத் தொடர்ந்து அந்த அறையில் மந்திரங்கள் ஓதப்படும். ஆனாலும் அவற்றை எல்லாம் பொறுமையாக, அமைதியாக தாங்கிக் கொள்ளும் பெண்ணை அவர்களால் ஏற்கப்படும் தெய்வமாகும். உண்மையான தெய்வப் பிறவி அங்கு அமைதியாக அமர்ந்து இருப்பாளாம். அதற்குப் பிறகு நடைபெறும் சடங்கில் அந்தப் பெண்ணின் உடலில் தலிஜூ பவானியின் ஆவி அவள் உடலில் புகுந்து கொள்ளுமாம். அதுமுதல் அவளை அனைவரும் தெய்வமாக வணங்கி துதிப்பார்கள். அவளே ராஜ்ய மன்னர்களின் தெய்வமாக இருப்பவள்.
அந்த சிறியப் பெண் எதுவரை தெய்வமாக பூஜிக்கப்படுவாள் ? அவளுக்கு முதல் மாதவிடாய் வந்த உடனேயோ, அல்லது அவள் உடம்பில் ஏதாவது காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தாலும் உடனடியாக அவள் அந்த தெய்வீகத்தை துறக்க வேண்டும். அவள் தனது தெய்வீக பதவியை அடுத்தப் பெண்ணிடம் ஒப்படைத்து விடுவாளாம். இப்படியாக நேபாளத்தில் பல இடங்களிலும் பதினோரு தேவ குமாரிகள் பூஜிப்பட்டு வருவதாகவும், ஆனால் காத்மாண்டு ஆலயத்தில் உள்ள தேவ குமாரி தேவியே அனைவராலும் ஏற்கப்பட்ட தெய்வம் என்றும் கூறுகிறார்கள். 1922 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14 தேவ குமாரிகள் வழிபடப்பட்டு வந்துள்ளார்களாம்.