பலராம  அவதாரம்
சாந்திப்பிரியா 

இராமாயண யுத்தம் முடிந்து ராமரும் சீதையும் லஷ்மணர் சமேதியாக அயோத்திக்குத் திரும்பினார்கள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடந்தன. ராமரும் லஷ்மணரும் அவரவர் அவதாராம் முடிந்து அடுத்த அவதாரம் எடுக்கச் சென்று விட்டனர். அப்போது கடைசி கட்டத்தில் ராமரைப் பார்த்து தம்பி லஷ்மணர் கேட்டார் ” அண்ணா எனக்கு ஒரு ஆசை. நான் இதுவரை நீங்கள் கூறியபடியேதான் நடந்து வந்துள்ளேன். ஆனால் என்னால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய் விட்டது. ஆகவே நான் அடுத்த ஜென்மத்திலாவது, அது என்ன பிறப்பாக இருந்தாலும், நானாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அந்த அவதாரத்திலும் உங்களுக்குத் துணையாக இருக்கவே விரும்புகிறேன்” எனக் கேட்டார். ராமர் சிரித்து விட்டு ‘அப்படி ஆகட்டும்’ என்று கூறி விட்டு சென்றப் பின் சில நாட்களிலேயே இருவரும் தாம் எடுத்த அவதாரங்களை முடித்துக் கொண்டார்கள். அடுத்த அவதாரத்தில் ராமர் கிருஷ்ணராகவும், லஷ்மணர் பலராமனாகவும் அவதாரம் எடுத்தார்கள்.

ஆனால் பாலராமரின் பிறப்பு சில காரணங்களினால், தேவகி மற்றும் ரோஹிணி என்ற இரு தாயார்களின் வயிற்றில் வளர்ந்து பிறப்பு எடுக்கும் நிலையில் நிகழ்ந்தது. அதனால்தான் அவரை சம்கர்ஷன் அதாவது இரு கருவில் வளர்ந்தவர் என்ற பெயரிலும் அழைத்தார்கள். லஷ்மணர் ஏன் பலராம அவதாரம் எடுத்தார்? அதற்கும் ஒரு பிண்ணனி கதை உண்டு. ராம அவதாரம் முடிந்தப் பின் அடுத்த அவதாரத்தை எடுக்க வேண்டி இருந்த விஷ்ணு லஷ்மணரை பாலராமராகவும், தன்னை கிருஷ்ணராகவும் -அண்ணன் தம்பிகளாக – அவதாரம் எடுக்க முடிவு செய்தார். வேடிக்கை என்ன என்றால் சம காலத்தில் விஷ்ணு பகவான் இரண்டு அவதாரங்களில் காட்சி அளிக்க வேண்டியதாயிற்று.

முதலில் கீழே உள்ள கதையைப் படியுங்கள்.

ஒரு நாள் ஆதிசேஷன் மீது அமைதியாகப் படுத்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானிடம் சென்ற நாரத முனிவர் அவரிடம் கேட்டார் ‘ ஐயனே நீங்கள் உங்களது எட்டாவது அவதாரத்தில் பாலராமராகவும், ஒன்பதாவது அவதாரத்தில் கிருஷ்ணராகவும் பிறந்து உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இரண்டுமே துவாபர யுகத்தில்தான் நடந்துள்ளது. உங்களால் எப்படி இரண்டு பிறப்புக்களை சம காலத்தில் எடுக்க முடிந்தது? அது சாத்தியமா?  மேலும் அப்படி சம காலத்தில் எடுத்த அவதாரத்தின் தத்துவாத்தம் என்ன?

விஷ்ணு பகவான் கூறினார் , ‘நாரதா உன் சந்தேகம் வலுவானதுதான். என்ன செய்வது? சில காரணங்களினால்  சிலவற்றை நடத்திக் காட்டும் பொறுப்பை நான் ஏற்று உள்ளேன்.  அவற்றில் ஒன்றே பலராம அவதாரமும். நான் ஒரு  அவதாரத்தில் ராமனாகப் பிறந்து இருந்தபோது, என்னுடைய தம்பியாக லஷ்மணன்  இருந்தார். அந்த லஷ்மணன் யார்? என்னுடைய படுக்கையான ஆதிசேஷனே லஷ்மணனாக பிறப்பை எடுத்து இருந்தது.  அடுத்து  கிருஷ்ணருக்கு உதவியாக இருக்கப் பிறந்த  பலராமன் யார்? ஆதிசேஷனே பலராமனும். உங்களின் அவதாரம் பலராமர் என்றால், அவர் எப்படி ஆதிஷேஷனுடைய அவதாரமாக இருக்க முடியும் என்று யோசனை செய்கிறாயா?

நாரதா….கவனமாகக் கேள்………. என்னால் பல அவதாரங்களை ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் அனைவரினாலும் அவற்றை செய்ய முடியாது.  நான் தசாவதாரம் எடுத்து சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற நியதி இருந்ததினால் என்னையும் படைத்த பரப்பிரும்மன் எனக்கு சில விசேஷ சக்திகளை அளித்து உள்ளார். அதில் ஒன்றுதான் பல ரூபங்களை ஒரே நேரத்தில் எடுக்கும் நிலை.  நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தை (விஷ்ணு) களங்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தின் துணை எனக்குத் தேவை எனக் கருதியதினால் , என்னுடைய சக்தியில் ஒரு பாகத்தை கொண்டு ஆதிசேஷனை படைத்து அதில் என்னை வைத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு அவதாரத்திலும்  எனக்குத் துணையாக ஆதிஷேஷனுக்குள் உள்ள என் சக்தியும் ஒரு உரு எடுத்து என்னுடன் துணையாக வர வேண்டும் என்று எண்ணியே  அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தேன்.  அதில் வந்துள்ளதே பலராம அவதாரமும். அதாவது என் மாயையான ஆதிசேஷனின்  மூலம் வெளிவந்த அவதாரமும்.

ராம அவதாரம் எடுத்தபோது நான் என்னுடைய விஷ்ணு அவதாரத்தை துறந்திருன்தேனா?  எனக்குள் உக்ள்ள பல சக்திகளில் ஒன்றான ஒரு சக்தியின் ஆதிசேஷனே  லஷ்மணராகவும், பாலராமராகவும் அவதாரங்களை எடுத்தபோது கூட விஷ்ணுவாக நான் இருந்தபோது எனக்கு படுக்கையாகவும் இருந்து வந்தார். ஆதிசேஷன் என்பது என்னால் படைக்கப்பட்ட ஒரு மாயையான உருவமே. ஆகவே ஆதிசேஷன் பாலராமராகவும், லஷ்மணராக அவதாரத்தை எடுத்ததாக சொல்லப்பட்டாலும், இருவருமே என் மாய ரூபங்களே.

நான் ராம அவதாரத்தில் இருந்தபோது என்னை வேண்டித் துதித்த பலரும், பல நன்மைகளை அடைந்தார்கள். ஆனால் என்னுடன் எப்போதும் இருந்த, என் கால்களில் தினமும் விழுந்து வணங்கி வந்த தம்பி லக்ஷ்மணன் மட்டும் என்னுடன் சேர்ந்து பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தான். ஆகவேதான் ஒரு அவதாரத்திலாவது லஷ்மணனை எனக்கு மூத்தவராக அவதரிக்கக் எண்ணினேன். அப்போதுதானே என்னுடைய நன்றிக் கடனை தீர்க்க அவருடையக் காலில் நான் விழுந்து வணங்க முடியும்?  இதுவே நான் எடுத்த எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரங்களின் பலராம- கிருஷ்ணனின்- ரகசியங்கள்” என்று கூறியதும் நாரதர் முகத்தில் வெளியாகிக் கொண்டு இருந்த  இன்னொரு சந்தேகத்தை விஷ்ணு பகவான் கண்டு கொண்டார். ஆகவே மீண்டும் நாரதரிடம் அவர் என்ன தயங்குகிறார் என்று விஷ்ணு கேட்க,  நாரதரும், ஒரே நேரத்தில் எப்படி பல ரூபங்களை அதாவது அவதாரங்களை விஷ்ணுவால் எடுக்க முடியும் என்பதை நேரில்  பார்த்தல் ஒழிய யாரும்  நம்பமாட்டார்களே என்று யோசிப்பதாகக் கூற விஷ்ணு கூறினார் ” நாரதா உன் சந்தேகம் உண்மையில் இந்த உலகத்துக்கு நன்மை பயக்கும். ஆகவே தக்க சமயத்தில் நான் யார் என்பதையும், எனக்குள் அடங்கி உள்ள ரூபங்களையும் உலகறியச் செய்வேன். அதுவரை சற்று பொறுமையாக இரு” என்று கூறி விட்டு மறைந்து விட்டார். அதன் காரணமாகவே விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது, அர்ஜுனனுடைய சந்தேகத்தின் மூலம் உலகறியச் செய்யும் விதமாக விஸ்வரூபக் காட்சியைத் தந்து தனக்குள்  அடங்கி இருந்த அனைத்து ரூபங்களையும் வெளிப்படுத்தினார்.

இதில் ஒரு சிறிய குழப்பம் உள்ளது. அதை நீக்குவதற்காக இந்த விளக்கம் தரப்பட வேண்டி உள்ளது. விஷ்ணு எடுத்த அவதாரம் பத்து அவதாரங்களே என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த அவதாரங்கள் சில யுகங்களில் ஒரு குறிப்பிட்ட காரியங்களை முடிக்க எடுக்கப்பட்ட அவதாரம். ஆனால் வேறு சிலர் விஷ்ணு பகவான் எடுத்த அவதாரம் இருபத்தி இரண்டு என்று கூறி அதற்கு ஆதாரமாக ஸ்ரீமத் பாகவதம் ஒன்றினை சுட்டிக் காட்டுகிறார்கள். அதைப் பற்றிய விவரங்களைப் படிக்க இங்குள்ள இங்குள்ள வலை தளத்தின் http://ancientindians.wordpress.com/2009/09/24/the-avatars-of-vishnu/ மீது கிளிக் செய்யவும். இது குழப்பத்தை தரவில்லையா என்று சிலர் கேட்கலாம். குழப்பமே இதில் தேவை இல்லை. விஷ்ணு எடுத்த அவதாரங்கள் பத்து மட்டுமே. அந்த அவதாரங்களை எடுத்து  சில முக்கியமான நிகழ்ச்சிகளில் அவர் நேரடியாக ஈடுபட்டு அவற்றை நிவர்த்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த பத்து அவதாரங்களிலும் நேரடியாக ஈடுபட்டு இருந்த அவருக்கு மறைமுக உதவி செய்ய மேலும் சிலர் தேவையாக இருந்ததினால் அந்த யுகங்களில் அவரே மேலும் சில துணை  அவதாரங்களை எடுத்தார்.

பலராம அவதாரத்தை எடுத்தபோது அவர்  துரியோதனன் மற்றும், பீமனுக்கு கதையைக் கொண்டு யுத்தம் செய்யும் கலையைக்  கற்றுக் கொடுத்தார். ஆனால் மகாபாரத யுத்தம் நடந்தபோது இருவருமே அவரிடம் சென்று அவருடைய துணையை நாடினார்கள். பலராமர் கூறினார் ‘ நான் உங்கள் இருவரையுமே இரண்டு கண்களாக பாவித்தே அந்தக் கலையை உங்கள் இருவருக்கும் சமனாக கற்றுக் கொடுத்தேன். உங்கள் இருவரில் நான் யாருக்குமே எந்த பேதத்தையும்  காட்டவில்லை. ஆகவே நான் உங்கள் இருவரில் யாராவது ஒருவருடைய பக்கத்தில்  சேர்ந்தால், அது நான் என் மனசாட்சிக்கு செய்யும் துரோகம் ஆகும்’  என்று கூறி விட்டு அவர்கள் இருவருக்கும் உதவ மறுத்து விட்டார். ஆனால் யுத்தத்தில், கிருஷ்ணரின் யோசனைப்படி துரியோதனனின் தொடையைப் பிளந்து அவனை பீமன் கொன்ற போது, தான் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த யுத்த நேர்மை என்பதை பீமன் உடைத்து விட்டான் என்று கோபமுற்ற பரசுராமர் பீமனைக் கொல்லச் சென்றார். அப்போது அவரை தடுத்து நிறுத்தினார் கிருஷ்ணர். பலராமனிடம் தம் இருவரின் அவதாரக் கதையையும் நினைவு கூறி,  இந்த அவதாரத்தில் தனக்கு உதவியாக இருக்கவே  அவரும் படைக்கப்பட்டு உள்ளதாகக் கூறிவிட்டு  அவருடைய கோபத்தை தணித்து அனுப்பினார்.

மகாபாரத யுத்தமும் முடிந்தப் பின் கிருஷ்ணரும், பலராமரும் தமது ராஜ்யத்திர்க்குச் சென்றுவிட்டார்கள்.  அப்போது ஒருமுறை கிருஷ்ணரின் மகனான சாம்பவான திருமணத்தின்போது சாம்பவானை ஹஸ்தினாபுரத்தை ஆண்டவ ஒரு மன்னன்  சிறைப் பிடித்துக் கொண்டு கடலுக்குள் சென்றுவிட, சம்பவானை மீட்பதற்காக பலராமர் தனது கலப்பையின் நுனியினால் ஹஸ்தினாபுரத்து பூமியையை குத்தி, அதை இழுத்து வந்து சம்பவானை மீட்டார்.

வாழ்க்கையில் நாம் தெரிந்தோ தெரியாமலோ பலவித பாபங்களைச் செய்திருக்கலாம். அந்தந்த பாபங்களுக்கேற்ப அவரவர் கர்ம பலனை அனுபவித்து ஆகவேண்டும். செய்த பாபங்களுக்கு பரிகாரம் செய்து கர்ம வினைப் பலனைக் குறைத்துக் கொள்ள முடியும்.அவ்வளவே. ஆனால் செய்த பாவத்திற்கு சிறிதளவாவது துன்பத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது தெய்வ நீதி.  இந்நிலையில் ஒருமுறை  விஷ்ணுவின் அவதாரமான  ஸ்ரீ பலராமரே தனது தோஷங்களையும் பாபங்களையும் போக்கிக் கொள்ள தான தர்மங்கள், க்ஷேத்திராடனங்களுக்கு தீர்த்த யாத்திரை,பித்ரு கர்மா போன்றவற்றை   செய்துள்ளார் என்று  ஸ்ரீமத் பாகவதத்தின் தசமஸ்கந்தம் என்ற பிரிவில் கூறப்பட்டு உள்ளதாம். அப்படிப்பட்ட பாவத்தை பலராமர் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஒரு சமயம்  நைமிஷாரண்யா வனத்தில் ஒரு பெரிய யாகத்தை ரிஷி முனிவர்கள் செய்து கொண்டு இருந்தார்கள். அப்போது  அங்கு சென்று அந்த யாக சாலைக்குள் பலராமர்  நுழைந்ததும் அனைத்து முனிவர்களும் எழுந்து நின்று  பலராமரைக் கரம் கூப்பி  வணங்கி மரியாதை செய்தனர். ஆனால் வியாசரின் சிஷ்யரான ரோமஹர்ஷணர்  என்ற முனிவர் மட்டும் தனது இருப்பிடத்தை விட்டு எழுந்திருக்காமல் யாக காரியத்தில் மூழ்கி இருந்தார். அவர், தன்னைச் சிறிதும் மதிக்காமல் அமர்ந்திருந்ததைக் கண்டு கோபமுற்ற பலராமர் சற்றும் யோசனை செய்யாமல் அந்த ரிஷியைக் கொன்று விட்டார்.

அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற முனிவர்கள் பெரிதும் வருந்தி,  பலராமருக்கு ஒரு பிராமணரைக் கொண்டதற்காக பிரும்மஹத்தி தோஷம் பிடிக்கட்டும் என்று சாபமிட்டு விட்டார்கள்.   பலராமரும் தன் தவறை உணர்ந்து  ஆத்திரத்தில் நிதானமிழந்து அந்த முனிவரைக்  கொன்று விட்ட தான் அதற்க்கு மிகவும் வருந்துவதாக கூறிவிட்டு அதைக் களைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என அவர்களிடம் கைகூப்பிக் கேட்டார். அவர்களும் அதற்கு பிராயசித்தமாக, அந்த யாகத்தை நடக்க விடாமல் ஒரு கொடிய அரக்கன் பல்வேறு கேடுகெட்ட செயல்களை செய்வதாகவும், ஆகவே பலராமர் அந்த யாகம் நடந்து முடிய உதவியப் பின் தீர்த்த யாத்திரையை மேற்கொண்டால் பிராமணரைக் கொன்ற பாபம் விலகும் என்று கூறினார்கள்.  அவர்களது வேண்டுகோளை ஏற்று  அந்த யாகத்தைக் தடுத்து வந்த அரக்கனை பலராமர் கொன்றார். யாகம் இனிதே நடந்தேறியது. அதன் பின் அந்த மா முனிவர்கள் கூறியபடி  தனது பாபங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொள்ள பல ஷேத்ரங்களுக்கும் சென்றும், பல தீர்த்த யாத்திரையையும்  மேற்கொண்டப் பின், பல தெய்வங்களையும் வழிபட்டுக் கொண்டு வந்த பலராமர் தம்முடைய தோஷத்தைக் களைந்து கொண்டார். அதை எதற்காக செய்தார் என்றால் தனது அவதார புருஷரான பலராமன் மூலம் விஷ்ணுவானவர், பூமியில் ஜனித்த யாருமே செய்த பாவங்களுக்கு தக்க பரிகாரங்களை செய்ய வேண்டும் என்ற தத்துவத்தை உலகறியச் செய்யவே அதை மேற்கொண்டார். அதற்குப் பிறகு நடந்த பல நிகழ்ச்சிகளின் முடிவில் கிருஷ்ணர்  தனது அவதாரத்தை துறந்துவிட , அந்த துயர்ரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் போன பலராமனும், தனது உயிரை தானே விளக்கிக் கொண்டார். அப்போது அவர் தலையில் இருந்து ஆதிசேஷன் வெளியேறி அந்த அவதாரத்தை முடித்து வைத்தது  என்று ஒரு கதை உண்டு.