மஹாவித்யா – (2)
தாரா தேவி
சாந்திப்பிரியா
கல்கத்தாவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாராபீத் என்ற ஊரில் உள்ள தாரா தேவியின் ஆலயத்தில் சிவபெருமான் தாராவின் மடியில் குழந்தைப் போல படுத்துள்ள உருவச் சிலை உள்ளதாம். அங்கு தாரா தேவியை 5000 வருடங்களுக்கு முதலே வழிபாட்டு வந்துள்ளனர் என நம்புகிறார்கள்.
அது போல முன்னர் இருந்த பெங்காலை ( இன்று மேற்கு வங்காளம் ) ஆண்டு வந்த ஒரு மன்னன் தன் நாட்டில் இருந்து ஹிமாசலப் பிரதேசத்தில் வேட்டைக்குப் போனபோது , அங்கு அசதியால் ஒரு காட்டில் உறங்கிவிட்டார். அப்போது அவர் கனவில் பைரவர், ஹனுமான் மற்றும் தாரா தேவி தோன்றி தாரா தேவிக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆலயம் அமைக்குமாறு கூற அவர் அவளுக்கு அங்கு ஆலயம் அமைத்தாராம். ஆக அந்த இரண்டு ஆலயங்களுமே அதாவது மேற்கு வங்கம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தாரா தேவியின் ஆலயங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
தாரா தேவிக்கு நிலா தார தந்திரா எனும் வித்தையின் அனைத்து மர்மங்களையும், மந்திரங்களையும், தந்திரங்களையும் மகாகால பைரவரே போதித்தாராம். அந்த தந்திர வித்தையின் மந்திரங்களை உள்ளடக்கியதே மகா வித்யாவின் ஒரு யந்திரம். தாரா தேவிக்கு நான்கு கைகள். ஒரு கையில் வாள், இன்னொன்றில் தாமரைப் பூ, மூன்றாவதில் கத்தரி மற்றும் நான்காவதில் கமண்டலம் உள்ள கோலத்தில் காட்சி தருகிறாள். காலடியில் ஒருவன் கிடக்க அது தன்னிடம் சரண் அடைந்தவர்களின் மனத்தைக் கட்டுப்படுத்தி தன் அடியில் அடக்கி வைப்பதை குறிப்பது என்கிறார்கள்.
பார்ப்பதற்கு தாரா தேவி எத்தனை கோபமானவளாகத் தெரிகிறாளோ அத்தனை கருணை மிக்கவள். ஞானத்தைத் தருபவள். அவள் அனைத்து கிரகங்களுக்கும் தலைவரான பிரஹஸ்பதியின் குருவாம். அவளுக்கு நான்கு உருவங்கள் உண்டாம். அவை :
1) லஷ்மியாக பூஜிக்கப்படும் தேவி
2) உக்ர தாரா
3) மகா உக்ர தாரா மற்றும்
4) நீல சரஸ்வதி.