வரதட்ஷணையாக மணப்பெண்ணுடன்  பஞ்சாப்பிற்கு  வந்த சக்தி தேவி
சண்டிகர்  ஜெயந்தி தேவி ஆலய வரலாறு
சாந்திப்பிரியா
பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் நகரில் இருந்து சுமார் பதிமூன்று கிலோ தொலைவில் ஒரு மலைக் குன்றின் மீது ஒரு சக்தி தேவியின் ஆலயம் உள்ளது. சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டு உள்ள அந்த ஜெயந்தி தேவியின் ஆலயம் உள்ள இடத்தின் பெயர் மைரியன் என்பது. உண்மையில் அந்த ஆலயம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்தது. அது பஞ்சாப்பில் வரக் காரணம் அந்த தேவியை வரதட்ஷணையாக ஒரு மன்னன் தந்ததுதான். அதன் கதை என்ன?
சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்னால் சண்டிகரின் பெயர் ஹத்னாவூர் என்பதே. அந்த நாட்டை ஆண்டுவந்த மன்னனுக்கு இருபத்தி இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்த ஒரு மன்னனின் மகளை மணமுடித்தனர். அந்த மனப் பெண்ணோ சிறுவயது முதலேயே அங்கிருந்த ஜெயந்தி தேவியின் பக்தையாம். தினமும் அந்த ஆலயத்துக்குச் செல்லாமல் அவள் உணவு அருந்த மாட்டாள். அப்படி இருந்தவளுக்கு பஞ்சாபில் இருந்த தன்னுடைய புகுந்த வீடு செல்ல வேண்டும் என்றதும் துக்கமாகி விட்டது. அந்த தேவியிடம் அவளும் தன்னுடன் வர வேண்டும் என வேண்டினாள். அவள் கனவில் தோன்றிய தேவி அவள் எந்த இடத்துக்குச் சென்றாலும் தான் ஆவலுடன் செல்வேன் என வாக்கு தந்தாள்.
 ஆலயத்  தோற்றம் 
மறுநாள் அவளை ஒரு பல்லக்கில் ஏற்றி மாமனார் வீட்டுக்கு அவளுடைய தந்தை அனுப்பினார். ஆனால் அந்த பல்லக்கை தூக்கிச் சென்றவர்களால் ஒரு இடத்துக்கு மேல் அதைத் தூக்க முடியவில்லை. பல்லக்கை கீழே இறக்கி வைக்க வேண்டி இருந்தது. அவர்களால் மீண்டும் பல்லக்கை தூக்க முடியவில்லை. என்ன ஆகிவிட்டது எனக் கவலையுடன் மன்னன் தனது மகளிடம் கேட்க அவள் தனது கனவைப் பற்றிக் கூறினால். மன்னனுக்குப் புரிந்தது அந்த தேவியும் ஆவலுடன் செல்ல விரும்புகிறாள் என. ஆகவே இன்னொரு பல்லக்கை வரவழைத்து அந்த தேவியின் சிலையை அதில் வைத்து அந்த ஆலய பண்டிதர்களையும் அதனுடன் அனுப்பி வைக்க மன்னனின் மகள் அமர்ந்து இருந்த பல்லக்கு எடை குறைந்தது. பஞ்சாப்பிற்கு அந்த தேவி மணப்பெண்ணுடன் வந்ததைக் கண்ட அந்த நட்டு மன்னன் மனம் மகிழ்ந்து போய் அந்த தேவிக்கு ஆலயம் இன்றுள்ள இடத்தில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயத்தை ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து அந்த தேவியுடன் வந்த பதிநூறாவது தலைமுறை பூசாரிகளே  பராமரித்து பூஜைகளை செய்கிறார்களாம் . ஆலயத்தில் நடக்கும் விழாவில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகிறார்களாம். ஆலயத்து தேவி கருணை மிக்கவளாம்.
 ஆலயத்துக்குள் செல்ல வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்